பலதாரமணம் - குர்-ஆனிலும் பைபிளிலும்

ஈமெயில் உரையாடல்கள்

தேதி: 7 அக்டோபர் 2004

பொருள்:  பலதாரமணம் கட்டுரைப் பற்றியது

அஸ்ஸலாமு அலைக்கும்:

உங்களது தளத்திற்காக நன்றி. எப்போதெல்லாம் கிறிஸ்தவர்கள் இஸ்லாமுக்கு பதில் அளிக்கிறார்களோ, அப்போதெல்லாம் ஒரு முஸ்லிமாக, நான் இஸ்லாமை மெச்சிக்கொள்கிறேன். ஏனென்றால், இப்படிப்பட்ட கேள்வி பதில்கள் மற்றும் உரையாடல்கள் நம்மை ஆய்வு செய்வதற்கு காரணமாக இருக்கின்றன. இந்த ஆய்வுகள் நம்மை உண்மையான இஸ்லாமிடம் கொண்டுச் செல்லும், அதே நேரத்தில் கிறிஸ்தவத்தின் பொய் முகத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிடும்.

இப்போது உங்கள் பலதாரமணம் தொடுப்பு மற்றும் கட்டுரைப் பற்றி பார்ப்போம். பல நாடுகளில் ஆண்களின் ஜனத்தொகை பெண்களின் ஜனத்தொகை எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதில்லை என்று நீங்கள் சொல்லியுள்ளீர்கள். மற்றும் CIA என்ற ஸ்தாபனத்தின் கணக்கெடுப்பு மேற்கோளையும் காட்டியுள்ளீர்கள். இதே CIA ஸ்தாபனம் தான் ஈராக்கில் அதிபயங்கர ஆயுதங்கள் உள்ளன என்றுச் சொன்னது என்று நான் நினைக்கிறேன்.

சென்சஸ் பீரோ தளத்தை நோட்டமிட்டால், நீங்கள் மேற்கோள் காட்டிய  சிஐஎ ஸ்தாபனம் சொன்ன கணக்கெடுப்புக்கு எதிரான கணக்கெடுப்பு அங்கு காணமுடியும். அதாவது, அமெரிக்காவிலே ஆண்களை விட பெண்கள் அதிகமாக மாறும் வயது வரம்பு 35 லிருந்து 39 ஆண்டுகள் வரை உள்ளது.

நீங்கள் தவறான தகவல்களைச் சொல்கிறீர்கள். மேலும் குர்-ஆன் சொல்லும் ஒரு முக்கியமான விவரத்தை பார்க்க தவறுகிறீர்கள், அதாவது “நீங்கள் ஒருவரையே திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்று குர்-ஆன் சொல்கிறது. பலதாரமணம் என்பது “அனாதைகளிடம் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும்” என்ற விவரம் பற்றி பேசும் போது தான் குர்-ஆன் குறிப்பிடுகின்றது. ஆக, ஒரு பெண் தன் வயதுக்கு ஏற்ற ஒருவனை திருமணம் செய்யும் அளவிற்கு அதே எண்ணிக்கையில் ஆண்கள் இருப்பார்களானால், பலதார மணத்திற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

மேலும், நாங்கள் பலதாரமணம் பற்றி பரிந்து பேசவேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால், உங்கள் பைபிளில் வரும் அனைத்து தீர்க்கதரிசிகளும் ஒரு மனைவிக்கு மேலாக திருமணம் செய்தவர்கள் தான். ஒரு எடுத்துக்காட்டுக்கு இவர்களைப் பாருங்கள்: ஆபிரகாம், மோசே, தாவீது மற்றும் சாலொமோன். கிறிஸ்தவ நாடுகள் என்றுச் சொல்லக்கூடிய மேற்கத்திய நாடுகளில், திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அதிகமாக உள்ளார்கள். மேலும் கிறிஸ்தவ நாடுகளில் தான் அதிகமாக விபச்சாரமும் இதர கேவலமான செயல்களும் அதிகமாக நடப்பதை காணமுடியும்.

ஆக, பலதாரமணம்  என்பது ஒரு தீயச்செயல் என்று நீங்கள் சொல்வதாக இருந்தால், உங்கள் இறைவனின் தீர்க்கதரிசிகளும் அதனை செய்தவர்கள் ஆகிறார்கள். ஆனால், “தேவன் திடீரென்று தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, சட்டத்தை மாற்றிவிட்டார்” என்று நீங்கள் சொன்னால், இது இன்னொரு பொய்யாகும்.

இன்னும் நான் உங்கள் தளத்தின் கட்டுரைகளை அதிகமாக படிப்பேன். அதற்குள்ளாக, சிஐஎ கொடுத்த கணக்கெடுப்பு, சென்சஸ் பீரோ கொடுத்த கணக்கெடுப்பிற்கு முரண்படுகின்றது என்று நான் சொன்ன விவரத்தை ஆய்வு செய்யவும். அதாவது பெண்கள் தங்கள் 35 வயதில் தான் ஆண்களை விட அதிகமாக இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பைப் பார்க்கவும். அமெரிக்கவில் சிஐஎ கணக்கும், சென்சஸ் பீரோ கணக்கும் இந்த ஒரு விஷயத்தில் முரண்படுவதைக் காணுங்கள்.


எங்களுடைய பதில்:

உங்களுக்கு எங்கள் அன்பான வாழ்த்துதல்கள்.

இஸ்லாமும் கிறிஸ்தவமும் வித்தியாசப்படும் ஒரு முக்கியமான தலைப்பு பற்றி எழுத நீங்கள் நேரத்தை ஒதுக்கியதற்காக உங்களுக்கு நன்றி செலுத்துகிறோம். நீங்கள் ஒரு முதிர்ச்சி அடைந்த இஸ்லாமியர் என்பதில் சந்தேகமில்லை. மேலும் மனித இனம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் கேள்விகளுக்கும் இஸ்லாமிடம் பதில் உள்ளது என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்று தெரிகிறது. இது மட்டுமல்லாமல், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமுக்கு இடையே அடிப்படை வித்தியாசங்கள் இருப்பதை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.

உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்வதற்கு நான் இன்னும் அதிகமாக ஆய்வு செய்யவேண்டியுள்ளது. இருந்த போதிலும், இஸ்லாமை நன்கு கற்றுத்தேர்ந்துள்ள சிலரிடம் நான் இதைப் பற்றி ஆலோசனை பெற்றுள்ளேன். அவர்கள் இஸ்லாமிய சட்டத்தின் (Islamic jurisprudence (Fiqh) viewpoint) அடிப்படையில் முன்வைக்கும் விவாத கேள்விகள், நீங்கள் முன்வைத்த கேள்விகளைக் காட்டிலும் வலுவானதாக  உள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும் போது, நம் விவாதத்திற்கு குர்-ஆன் 4:3ம் வசனம் மையப்புள்ளி வசனமாக உள்ளது.

குர்-ஆன் 4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (முஹம்மது ஜான் தமிழாக்கம்).  

பலதாரமணத்தை மேற்கண்ட தெய்வீக வசனத்தின் மூலமாக அல்லாஹ் அனுமதித்ததற்கு காரணம், ”சமுதாய நீதிக்காகத் தான்” என்று இஸ்லாமிய அறிஞர்கள் ஏகமனதுடன் சொல்கிறார்கள். அதாவது ஒரு சமுதாயத்தில் வாழும் ”ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பாதுகாவலன்” தேவை என்ற நல்ல நோக்கத்திற்காகத் தான் பலதாரமணம் அதிமதிக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள். ஒரு பெண்ணுடைய கணவன் மரித்துவிட்டால், அவளது பிள்ளைகள் அனாதைகள் ஆகிவிடுவார்கள். இந்த நேரத்தில் வேறு ஒரு ஆண் அப்பெண்ணை (விதவையை) திருமணம் செய்துக்கொண்டால், தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் சமுதாயத்தில் ஒரு பாதுகாப்பு கிடைக்கும். இதனால் தான் அல்லாஹ் பலதாரமணத்தை அனுமதித்தார் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றார்கள். 

மேலும், இஸ்லாமின் ஒரு முக்கியமான அம்சம், ”முஹம்மதுவின் சுன்னா” என்று சொல்லக்கூடிய ஹதீஸ்களை பின்பற்றுவதாகும் (முஹம்மதுவின் சொல்லும் செயலும் அடங்கிய நூல்கள்  ஹதீஸ்கள் எனப்படுகின்றன). முஹம்மது நான்கிற்கும் அதிகமான திருமணங்களை புரிந்துள்ளார் என்றும், பெரும்பான்மையான அவரது திருமணங்கள், ஆட்சி அரசியல் காரணங்களுக்காக செய்யப்பட்டது என்றும் முஸ்லிம்களால் சொல்லப்படுகின்றது. இஸ்லாமில் திருமணம் என்பது எவ்வளவு முக்கியமானது என்றால், ”ஒருவர் சன்னியாசியாக வாழ்வதை” முஹம்மது  தடுத்துள்ளார் என்பதிலிருந்து அறியலாம் (இஸ்லாமில் சன்னியாச மடங்களை கட்டாதீர்கள் என்பது அவரது கட்டளை, இது ஹதீஸ்களில் உள்ளது). தான் கொண்டுவந்த மார்க்கத்தை பின்பற்றுபவர்களைப் பார்த்து, முஹம்மது திருமணம் செய்துக்கொள்ளுங்கள், ஏனென்றால், இஸ்லாம்  மதமானது திருமணமத்தின் (திருமணத்தை அனுமதிக்கும்) மதமாக உள்ளது (அரபியில்: Al-Islaam deen-u-nnikaah) என்று கூறியுள்ளார்.

திருமணங்கள் செய்யப்பட்ட மனைவிகளுக்கு இடையே பாகுபாடு காட்டக்கூடாது என்றும் சொல்கிறார்கள், ஆனால் நடைமுறையில் பார்க்கும்  போது, தங்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய உரிமைகளை கொடுங்கள் என்று மனைவிகள் சண்டைகள் போட்டுக்கொள்வதை காணமுடியும்.  ஏனென்றால், ஏதாவது ஒரு மனைவிக்கு இதர மனைவிகளைக் காட்டிலும் அதிகமான உரிமையும், சலுகையையும் கணவன் கொடுத்திருப்பதினால், அவர்களிடையே சண்டைகள் உண்டாகின்றன. இப்படி ஏன் நடக்கிறது? இப்படி  நடக்க வாய்ப்பு உள்ளதா? என்று கேள்வி கேட்டால், ஆம் வாய்ப்பு உள்ளது என்பது தான் பதில். அதாவது ஒரு மனைவிக்கு வயது 50 இருக்கும், இன்னொரு மனைவிக்கு வயது 20 இருக்கும் அல்லது 20க்குள்ளாகவும் இருக்கும். இதனால், கணவன் பொதுவாக இளமையாக இருக்கும், அதாவது 16-18 வயது இருக்கும் மனைவியைச் சார்ந்து தான் இருப்பான், 50வயது மனைவியிடம் அதிக நேரம் செலவழிக்க பொரும்பான்மையாக விரும்பமாட்டான், இதனை ஒப்புக்கொள்கிறீர்களா நீங்கள்?  இஸ்லாமிய பெண்களுக்கு ஒரு நற்செய்தி என்னவென்றால், பெரும்பான்மையான முஸ்லிம் நாடுகளில் இன்று பலதாரமணம் அதிகமாக செய்யப்படுவதில்லை என்பதாகும். இதை விடுத்து, எந்த குடும்பங்களில் பலதாரமணம் உள்ளதோ, அக்குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் நிச்சயமாக இருக்கும்.

எனக்கு தெரிந்த பல முஸ்லிம்களிடம் நான் உரையாடும் போது, அவர்கள் கூறுவது இது தான் “பலதாரமணம் என்பது புத்தகங்களில் உள்ளது, அது குறைந்துக்கொண்டே வருகிறது, இது கடந்த கால பழக்கவழக்கமாக தற்கால மக்களால் பார்க்கப்படுகின்றது” என்பதாகும். எனக்கு மெயில் மூலமாக கேள்விகள் கேட்ட சகோதரரிடம் ஒரு சிறிய தனிப்பட்ட கேள்வி: உங்களுக்கு ஒன்றைவிட அதிகமான மனைவிகள் உள்ளார்களா? அல்லது எதிர்காலத்தில் பலதாரமணத்தில் ஈடுபடும் விருப்பம் உள்ளதா?

அடுத்ததாக, பைபிளில் வரும் நபிகளின் பலதாரமணம் பற்றி நீங்கள் எழுதிய விமர்சனத்திற்கு என் பதிலைத் தருகிறேன். உண்மையாகவே, பழைய ஏற்பாட்டு காலத்தின் நபிகளில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை பெற்று இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. மேலும், மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்ட சட்டத்திலும் பலதாரமணம் தடுக்கப்படவில்லை என்பதும் உண்மையே. மேலும், ஒட்டு மொத்த நபிமார்களை கவனித்தால், சிறும்பான்மையானவர்கள் மட்டுமே பலதாரமணத்தை புரிந்திருந்தார்கள், மற்றவர்கள் அனைவரும் ஒரே மனைவியுடன் தான் வாழ்ந்துள்ளார்கள் என்பது விளங்கும்.

அடுத்ததாக, உங்களின் ஆபிரகாம் மற்றும் மோசே பற்றிய விமர்சனத்திற்கு வருவோம். இவ்விருவரும் பலதாரமணம் புரிந்துள்ளார்கள் என்று நீங்கள் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். பைபிளில் எந்த வசனத்தில், இவ்விருவர் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனைவிகளை திருமணம் செய்திருந்தார்கள் என்றுச் சொல்கிறது? உங்களால் வசன ஆதாரத்தைக் காட்டமுடியுமா? 

முதலாவதாக, ஆபிராகாமின் வாழ்வில், அவருக்கு ஒரே ஒரு மனைவி மட்டுமே இருந்தார், அது சாராள் ஆவார். இதே சாராள் தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரோடு உடலுறவு கொண்டு நமக்கு அதன் மூலம் பிள்ளை பிறக்கட்டும் என்று ஆபிரகாமிடம் சொன்னார் என்பது உண்மை தான். ஆனால், ஆகார் ஆபிரகாமின் மனைவியாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.

இரண்டாவதாக, கேதுராள் என்ற பெண்ணை ஆபிரகாம் திருமணம் செய்துக்கொண்டது, சாராள் மரித்துவிட்டப்பிறகு தான். விஷயம் இப்படி இருக்க, எல்லா தீர்க்கதிரிசிகளும் பலதாரமணம் புரிந்தவர்கள் என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்? (ஒருமனைவி உயிரோடு இருக்கும் பொது, இன்னொரு பெண்ணை திருமணம் செய்வது தான் பலதாரமணமாகும், மனைவி இறந்த பிறகு திருமணம் செய்வது பலதாரமணம் ஆகாது).

நீங்கள் பைபிளின் வசனங்களை படிக்கும் படி வேண்டிக்கொள்கிறேன். எந்தெந்த தீர்க்கதரிசிகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்தார்கள் என்ற ஒரு பட்டியலை பைபிளைப் படித்து, தயார் செய்யுங்கள். ஒரு மனைவியுடைய தீர்க்கதரிசிகளின் பெயர்களை உங்களுக்கு பயன்படும் என்று நான் இங்கு தருகிறேன்: ஆதாம், ஏனோக்கு, நோவா, யோசேப்பு, சாமுவேல், ஏசாயா, எரேமியா, ஆமோஸ், எலியா, யோனா, ஓசியா, சகரியா போன்றவர்களைச் சொல்லலாம். தாவிதுக்கும், சாலொமோனுக்கும் பல மனைவிகள் இருந்ததாக, குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இந்த திருமணங்கள் பெரும்பான்மையாக அவர்கள் அரசர்களாக இருந்தபடியினால் செய்தார்கள் என்றுச் சொல்லலாமே தவிர, அவர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்ததால் தான் பல மனைவிகளை திருமணம் செய்து இருந்தார்கள் என்று சொல்லமுடியாது. இதுதவிர இஸ்ரேலை ஆண்ட இதர ராஜாக்களுக்கு கூட பல மனைவிகள் இருந்தார்கள், ஆனால் அவர்கள் தீர்ககதரிசிகளாக இருந்தவர்கள் அல்ல. ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், முதன்முதலாக பலதாரமணம் செய்த ஒரு நபரைப்  பற்றி பைபிள் சொல்லும் போது, அதோடு கூட அவன் ஒரு கொலையும் செய்திருக்கிறான் என்றும் சொல்கிறது (ஆதியாகமம் 4:19-24).

மேலும் பைபிளை படிக்கும் ஒவ்வொருவரும் கவனிக்கும் ஒரு முக்கியமான விவரம், திருமணம் பற்றி இயேசு கூறிய விவரமாகும். அதாவது உலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே  திருமணம் பற்றி தேவனின் திட்டம் ”ஒருவனுக்கு ஒருத்தி” என்பதாகும், இதனை இயேசு தெளிவுப்படுத்தினார் ( மத்தேயு 19:1-10). இந்த சத்தியத்தை புதிய ஏற்பாடு அழுத்தம்திருத்தமாக கூறுகிறது, மேலும் திருமண பந்தத்தில் மூவர் இடம் பெறுவதாக, கூறுகிறது: கணவன்,மனைவி மற்றும் இவர்களின் உறவுகளுக்கு பாளமாக இருக்கும் தேவன். தேவனைப் பொறுத்தமட்டில் திருமணம் என்பது இருநபர்களின் நெருங்கிய நட்பு மற்றும் உறவின் வெளிப்பாடு ஆகும்.  இதைப் போலவே தேவனும் மக்களோடு நட்புடன் இருக்கவிரும்புகிறார் (எபேசியர் 5:22-23).

கிறிஸ்தவம் என்பது தேவனின் ஆதிகால வாக்குறுதிகளின் நிறைவேறுதலும்,  மற்றும் மனிதனைப் பற்றிய  தேவனின் திட்டம் வெளிப்பட்ட காலமாகும். தேவனின் இந்த திட்டத்தில்  பழைய ஏற்பாட்டிலிருந்து தொடர்ந்து வந்துக்கொண்டு இருக்கும் திருமணமும் ஒரு அம்சமாகும். இதனால் தான் பழைய  மற்றும் புதிய ஏற்பாட்டை ஒரே புத்தகமாக கிறிஸ்தவர்கள் பைபிள் என்ற பெயரில் பயன்படுத்துகிறார்கள். முதல் நூற்றாண்டில் தோன்றிய கிறிஸ்தவத்தினால், பழைய ஏற்பாட்டு தேவனின் எந்த திட்டங்கள் மாறிவிட்டனா?

இதைப் பற்றி ஆய்வு செய்ய, நாம் இயேசுவின் மலைப் பிரசங்கத்தை கவனிக்கவேண்டும். இந்த மலைப்பிரசங்கத்தில் இயேசு கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

17. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

18. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

19. ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.

20. வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 5:17-20)

மேற்கண்ட வசனங்களில்  கிறிஸ்து இரத்தினச் சுருக்கமாக சொன்னது “மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்ட சட்டங்கள் மனிதன் தேவனோடு ஒன்று இணைவதில் நிறைவேறுகிறது” என்பதாகும். மோசேயின் சட்டம் ஒரு பாரமாக மனிதனுக்கு இருந்தது, ஏனென்றால், எல்லா கட்டளைகளையும் பரிபூரணமாக நிறைவேற்ற முடியாமல், மனிதன் தடுமாறிக்கொண்டு இருந்தான். இச்சட்டங்களின்  ஒரு நோக்கமே, மனிதன் எவ்வளவு முயற்சி எடுத்தாலும் சரி, அவனால் தேவன் எதிர்ப்பார்க்கும் அளவிற்கு பரிசுத்தமும், நீதியும் செய்யமுடியாது என்பதாகும். மேசியாவாகிய இயேசு கொண்டு வந்த பரிபூரணம் என்பது ஒட்டு மொத்த மனித இனத்துக்கு கிடைத்த நற்செய்தியாகும், மேலும் இதுவே நம்முடைய வாழ்விற்கும், இரட்சிப்பிற்கும் அர்தத்தை கொடுக்கின்றதாக உள்ளது. இதன் மூலமாக அனைத்தையும் நோக்கினால், திருமணம் பந்தங்கள் உட்பட, மனிதர்கள் மத்தியில் இருக்கும் உறவு முறைகளை சரியாக புரிந்துக்கொள்ளமுடியும். மேலும் திருமணம் பற்றிய சரியான புதிய உண்மைகள் நமக்கு புரியும். திருமணம் பற்றிய அனைத்து விவரங்களையும் இந்த சிறிய கடிதத்தில் எழுதமுடியாது,  ஆனால், திருமணம் பற்றிய ஒரு புதிய அர்தத்தை புரிந்துக்கொள்ள, இது தொடக்கமாக இருக்கும்.

ஆண் பெண்களின் விகிதாச்சாரம் இப்படி இருப்பதினால், இத்தனை திருமணம் செய்யலாம், அல்லது கணக்கு வேறுமாதிரியாக இருந்தால், ஒரே திருமணம் செய்யலாம் என்பதெல்லாம் கிறிஸ்தவத்தை பொறுத்தமட்டில் தேவையில்லாத ஒன்றாகும்*. ஆண்கள் மற்றும் பெண்களின் விகிதாச்சாரம் எப்படி இருந்தாலும், சரித்திரத்தை திரும்பிப் பார்த்தால், கிறிஸ்தவ பெண்கள் தங்கள் திருமணங்களை சரியான நிலையிலேயே நிர்வகித்துள்ளார்கள் என்பதை அறியலாம் (இங்கு நான் பெயரளவு கிறிஸ்தவர்களைக் குறிப்பிடவில்லை, உண்மையாக இயேசுவின் போதனைகளின் படி வாழும் பெண்களைக் குறிப்பிடுகிறேன்).

உங்கள் கடித்ததில் கிழ்கண்டவாறு குறிப்பிட்டு இருந்தீர்கள்:

//கிறிஸ்தவ நாடுகளில் தான் அதிகமாக விபச்சாரமும் இதர கேவலமான செயல்களும் அதிகமாக நடப்பதை காணமுடியும்//

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மக்களின் கீழ்தரமான சிற்றின்ப  வாழ்க்கையைப் பார்க்கும் போது, இயேசுவை உண்மையாக நேசித்து அவர் வழிகளில் நடக்கும் கிறிஸ்தவர்கள் இரத்தக்கண்ணிர் வடிக்கிறார்கள் என்ற உண்மையை உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன். இன்னொன்றையும் சொல்லிக் கொள்கிறேன், மேற்கத்திய நாடுகளில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலும் இந்த சிற்றின்ப தவறுகளினால் சமுதாயங்கள் கெட்டுவிடுகின்றன என்பதையும் காணமுடியும். இந்த விஷயத்துக்கு வந்தால், இஸ்லாமிய நாடுகளில் கூட இதே நிலை தான் உள்ளது. 

கடைசியாக, உங்கள் கேள்விக்கு இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தின் அடிப்படையில் பதில்கொடுக்க நான் முயன்றுள்ளேன்.  இந்த கடித உரையாடல் மூலமாக, நீங்கள் உண்மையை அறிந்துக்கொள்ளவேண்டும் என்று நான் தேவனிடம் வேண்டிக்கொள்கிறேன். இதைப் பற்றி நீங்கள் பதில் எழுதினால், முக்கியமாக உங்கள் வாதங்களுக்கு இஸ்லாமிய மேற்கோள்களை காட்டும் படி கேட்டுக்கொள்கிறேன் (குர்-ஆனின் வசனங்கள்,  ஹதீஸ்களின் எண்கள் போன்றவை). அதே போன்று, நீங்கள் பைபிள் பற்றி எழுதும் போது, பைபிளின் வசன மேற்கோள்களை கொடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். 

இப்படிக்கு

அன்புடன் 

தாமஸ்.

*அடிக்குறிப்பு: I don't see this point as being relevant to the discussion, but if you look at the site: www.census.gov/popest/archives/EST90INTERCENSAL/US-EST90INT-01.html the Census Bureau lists the US national population between 1990 and 2000, regardless of age. A rough average of the ratio between the two sexes works out to 1.038 females to one male, or 1038 females to 1000 males. This means that for every 1000 couples, there are 38 women remaining. It doesn't seem that a ratio of 1.038 is sufficient to justify more than one wife per man. If polygamy was instituted in the United States, very few men could have even 2 wives, much less 3 or 4. Any way you slice it, the ratio of men to women, no matter age or location, is too close to justify polygamy.

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Emails/polygamy.htm


இதர ஈமெயில் உரையாடல்கள்