மத்தேயு 10:34ல் உள்ள பட்டயத்தைப் பற்றி ஒரு சுருக்கமான விளக்கம்

ஜேம்ஸ் அர்லண்ட்சன்

இயேசு கூறிய ஒரு குறிப்பிட்ட‌ வசனத்தைக் குறித்து கிறிஸ்தவர்கள் பெருமைபட்டுக் கொள்ளக் கூடாது என்று நான் அடிக்கடி வாசிக்கிறேன். அந்த வசனம் இப்படிச் சொல்லுகிறது:

"பூமியின் மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தை அல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்."

இவ்வசனத்தை மேலோட்டமாக படிக்கும் போது உண்மையில் ஒரு நியாயமான வன்முறையை இயேசு ஆதரிப்பதாகவும் தன்னுடைய சீடர்களை அதற்கு பயிற்றுவிப்பது போலவும் தெரியும். ஆனால் “வெளித்தோற்றம்” ஏமாற்றக்கூடியதாக இருக்கிறது. ஒரு வசனத்தை அதன் சரித்திர மற்றும் வசன பின்னணியின்றி படிக்கும்போது, அதன் அர்த்தம் முழுவதுமாக மாறிவிடுகிறது, இதனை ஆங்கிலத்தில் இவ்விதமாக கூறுவார்கள் “A text without a context often becomes a pretext”. எனவே இந்த வசனத்தை சரித்திர மற்றும் வசன பின்னணியோடு படிக்கும்போது இதன் பொருள் சிறப்பாக மாறிவிடுகிறது.

இவ்வசனம் பற்றிய சரியான விளக்கத்திற்குள் இப்போது நாம் கடந்துச் செல்வோம்.

நாம் மேலே கண்ட வசனம் கூறப்பட்ட காலம், சரித்திர அமைப்பில், அது யூத கலாச்சாரம் என்பதையும், இயேசு தன்னுடைய மக்களுக்கு ஊழியம் செய்துக்கொண்டு இருந்தார் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். தன்னுடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு சந்திக்கப்படவிருக்கிற புறஜாதிகளிடத்தில் அனுப்பாமல் “காணமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் மக்களிடத்திற்கே" முதலாவது தன்னுடைய பன்னிரண்டு சீடர்களையும் இயேசு அனுப்புகிறார். சரித்திரப் பூர்வமாக சொன்னால், அவர் தன்னுடைய வார்த்தைகளை யூத மக்களாகிய த‌ன் சீடர்களைக் கொண்டு பரப்பினார் என்பதில் எந்த ஆச்சரியமுமில்லை. இரண்டாவதாக, தன் சீடர்களை சில பட்டணங்களின் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும், அதன் அதிகாரிகள் அவர்களை விசாரணைக்கு ஒப்புக்கொடுத்து சாட்டையால் அடிப்பார்கள் என்றும் முன்னுரைத்தார். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் கால்களில் உள்ள தூசியை உதறிவிட்டு, அந்த பட்டணத்தை விட்டு வேறு இடத்திற்கு போய் விட வேண்டும், அவர்களுக்காக ஜெபம்பண்ண வேண்டும் என்று கூறினார். மூன்றாவதாக, முதலாம் நூற்றாண்டு யூதர்கள் இயற்கையாகவே இந்த புதிய பிரிவை அல்லது “இயேசு இயக்கத்தை" எதிர்த்தார்கள் (சில புதிய ஏற்பாட்டு சமூகவியலர் "இயேசு இயக்கம்" என்று கூறுவார்கள்). இப்படி இயேசுவின் சீடர்களுக்கு எதிர்ப்பு இருந்ததினால், இயேசு தன்னுடயை சக யூதர்களுக்கு எதிராக ஒரு சரீரப்பிரகாரமான‌ இராணுவ பட்டயங்களோடு கூடிய ஒரு புனிதப் போருக்கு தயாராகும் படி தன் சீடர்களுக்கு அழைப்புக் கொடுக்கிறார் என்று மேலே கண்ட வசனத்திற்கு பொருள் கொள்ளமுடியுமா? முக்கியமாக, தன் இனத்தார்களே, “இவருக்கு பையித்தியம் பிடித்திருக்கிறது” என்றுச் சொல்லி, இவரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைக்க விரும்பியவர்களுக்கு எதிராக புனிதப்போரை புரியுங்கள் என்று இயேசு சொல்வதாக இந்த வசனத்திற்கு பொருள் கொள்ளமுடியுமா? (மாற்கு 3:21).

அடுத்ததாக, அந்த கலாச்சார சம்பவங்கள் குடும்ப‌ நபர்களுக்கு மத்தியில் இருக்கும் பிரிவினைகளைப் பற்றி தெளிவாக காண்பிக்கின்றது. மத்தேயு 10:34 ல் உள்ள "பட்டயம்" என்பதின் அர்த்தத்தை விளக்குவதற்கு, அவ்வசனத்தின் முன்பின் வசனங்கள் முழுவதுமாக‌ விளக்கப்பட வேண்டும்.

32. மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்.

33. மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.

34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.

35. எப்படியெனில்,

மகனுக்கும் தகப்பனுக்கும்,

மகளுக்கும் தாய்க்கும்,

மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.

36. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.

37. தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

38. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

39. தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.

இந்த நீண்ட வேதப் பகுதியில் ஒரு முக்கியமான ஆதார வார்த்தை "பட்டயம்" என்பதாகும், அதன் அர்த்தம் இப்போது தெளிவாக விளங்கியிருக்கும். ஒரு யூதன் இயேசுவின் சீடனாக மாறுவதினால், தன் சொந்த யூத குடும்பத்தில் "சமாதானம்" அல்ல, பிளவு தான் ஏற்படும். இந்த “பிரிவினை அல்லது பிளவைத்” தான் இயேசு "பட்டயம்" என்று உருவகப்படுத்தி கூறியுள்ளார். அதற்கு அவருடைய சீடர்கள் தயாரா? இந்த கண்ணுக்குத் தெரியாத‌ ஆவிக்குரிய பட்டயமானது ஒரு மனிதனை அவன் தகப்பனிடத்திலிருந்தும், மகளை தாயினிடத்திலிருந்தும் அப்படி பல உறவுகளை (மீகா 7:6) துண்டித்து விடுகிறது. துவக்கத்தில் இயேசுவின் சொந்த குடும்பமும் எதிர்த்தனர், பிறகு இணைந்தனர். இதனால் தான் “ ஒருவன் என்னைப் பின்பற்ற விரும்பினால், என்ன நடந்தாலும் சரி, ஒருவேளை தன்னுடைய குடும்பத்தை இழக்க நேரிட்டாலும் சரி என்னை இறுதிவரைப் பின்பற்ற வேண்டும்” என்று இயேசு சொல்லியிருப்பது இயற்கையானது. ஆனால் இது, ஒரு குடும்பத்தினர் புதிதாக இயேசுவை ஏற்றுக்கொண்ட‌வரை வெறுத்து ஒதுக்கும் போது மட்டுமே பொருந்தும், அவருடைய புதிய நம்பிக்கையில் அவரை ஏற்றுக்கொள்ளும் போது அந்த குடும்பத்தை அவர் வெறுத்து ஒதுக்கக்கூடாது. ஏனென்றால் இயேசு வந்ததின் முழு நோக்கமே எவ்வளவுக்கு அதிகமான மக்களை ஜெயித்து அவர் பக்கமாய் சேர்க்க முடியுமோ சேர்க்க வேண்டும், ஒருவேளை அது உலகமே இரண்டாக பிரிந்தாலும் பரவாயில்லை, ஆனால் வன்முறை இல்லாமல் செய்யப்படவேண்டும்.

இன்னும் கூட நாம் இதற்கான நீண்ட வசன‌ பின்னணியை மத்தேயு சுவிசேஷத்திலிருந்து குறிப்பிடலாம். கெத்சமனே தோட்டத்தில் இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்படும் வேளையில், பேதுரு தன்னுடைய ஆண்டவரை காப்பாற்றுவதற்காக பிராதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டுகிறான். ஆனால் இயேசு அவனை நிறுத்தச் சொல்லுகிறார்.

மத்தேயு 26:52-53 சொல்லுகிறது:

52. அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.

53. நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?

இறைவனுயை விருப்பத்தை நிறைவேற்ற வன்முறை தான் வழி என்பதை இயேசு மறுக்கிறார்- இறைவனின் விருப்பத்தை வன்முறையை பின் பற்றியாவது நிறைவேற்ற பேதுரு நினைத்திருந்திருப்பார். பின்னர், தன் கட்டளைக்காக பன்னிரண்டு பெரும் இராணுவத்திற்கும் அதிகமாக தூதர்கள் காத்திருக்கிறார்கள் என்று இயேசு கூறுகிறார். அவர் ரோம ராஜ்ஜியத்தை தவிடு பொடியாக்க வரவில்லை மாறாக தன்னுடைய ஜீவனை கொடுத்து உலக மக்களின் பாவங்களுக்காக மரிக்க வந்தார். இந்த உலகம் அந்த அற்புதமான பரிசை ஏற்றுக் கொள்ளுமா?

இப்பொழுது நாம் இன்னும் பெரிய வாக்கிய பின்னணியத்தைப் பார்ப்போம். லூக்கா சுவிசேஷத்திலுள்ள ஒரு இணை பகுதி பட்டயம் உருவகமாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது.

லூக்கா 12:49-53 கூறுகிறது:

49. பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.

50. ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.

51. நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

52. எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.

53. தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.

மத்தேயு மற்றும் லூக்கா சுவிசேஷத்தில் உள்ள இரண்டு ஒரே மாதிரியான பகுதிகளும் இரண்டு வெவ்வேறான சூழ்நிலைகளை பிரதிபலிக்கிறது எனலாம். நானும் கூட ஒரு தலைப்பை இரண்டு வகுப்புகளில் கற்றுக் கொடுக்கும்போது, நான் கற்றுக்கொடுக்கப்போகும் தலைப்பில் சில வார்த்தைகளை மாற்றுவதுண்டு. வகுப்பில் யாருக்கும் அந்த சிறிய மாற்றம் தெரியப்போவதில்லை, அது ஒரு பொருட்டல்ல ஏனென்றால் தலைப்பின் அர்த்தம் மாறுவதில்லை. அதைப் போலவே, இயேசு கற்றுக் கொடுத்த இந்த மூன்று வருடங்களில் அவர் இஸ்ரவேலர்களுக்கு போதிக்கும் போது வெவ்வேறான‌ பார்வையாளர்களுக்கு அவர் அநேக முறை (சுவிசேஷகங்களில் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டிருந்த போதும்) இந்த அர்ப்பணிப்பின் அழைப்பைக் மீண்டும் மீண்டுமாக கொடுத்துள்ளதாக அறியலாம். தன் போதனையை கேட்பவர்களிடம், அவர்களுடைய சிலுவையை எடுத்துக் கொண்டு தன்னைப் பின்பற்றி வரவேண்டும் என்ற தீவிரமான அழைப்பை அடிக்கடிக் கொடுத்திருக்கிறார். (மத் 16: 24, மாற்கு 8:34, லூக்கா 9:23, 14:27). எது எப்படியிருந்தாலும், வேத வாக்கியங்களுக்கு விளக்கம் கொடுக்கும் சரியான முறை என்பது வசனங்களே வசனங்களை தெளிவுபடுத்துவதற்கு விட்டு விடுவதாகும், அதிலும் குறிப்பாக ஒரே மாதிரியான வேத பகுதிகளை ஆராயவேண்டும். இப்பொழுது லூக்கா 12: 49-53 நம்முடைய மத்தேயு 10:34 விளக்கத்தை உறுதிபடுத்துகிறது. இயேசு ஒருவருடைய சொந்த குடும்பத்திற்கு விரோதமான சரீர வன்முறையை ஆதரிக்கவில்லை மாறாக குடும்பத்தில் பிரிவினைகள் உண்டாவதற்கான வாய்ப்புகளைப் பற்றி அவர் எச்சரிக்கிறார் (Jesus did not endorse physical violence against one’s own family, but he warns people about possible family division).

மேலே விவரிக்கப்பட்ட அனைத்து விவரங்களிலிருந்து நாம் அறிந்துக்கொள்வது என்ன?

இயேசு ஒருபோதும் எந்த ஒரு மனிதன் மீதும் பட்டயத்தை உபயோகிக்கவில்லை என்பதை சரித்திரம் நமக்கு தெளிவாக சித்தரிக்கிறது. மேலும் மத்தேயு 10:34 ம் வசனத்தில் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு யார் மீதும் பட்டயத்தை சுழற்றுவதற்கோ எந்தக் காரணத்திற்காகவும், குடும்பத்தில் தம்மை எதிர்ப்பவர்களை கொல்லுவதற்கோ அவர் கட்டளையிடவில்லை. ஆனால் ஒரு உண்மையான சீடன் இயேசுவை பூரணமாக பின்பற்றும் போது எதிர்ப்பு நிறைந்த குடும்பத்திலிருந்து வரும் போது தன்னுடைய சிலுவை சுமக்கும் (சீடனுக்ககான அழைப்பில் மற்றொரு உருவகம்) அளவுக்கு எல்லாவித எதிர்ப்புகளிலிருந்து தன்னை துண்டித்துக் கொள்வதற்கு விரும்பி ஆன்மீக பட்டயத்தை (சரீரப் பிரகாரமான உண்மை பட்டயத்தை அல்ல) உபயோகிக்க வேண்டும். இயேசு இந்த உலகத்தை இரண்டு பிரிவாக பிரிக்கிறார் என்பது உண்மையே, அவரைப் பின்பற்றுபவர்கள் அவரைப் பின்பற்றாதவர்கள், வெளிச்சத்தில் உள்ளவர்கள் இருளில் உள்ளவர்கள். இருந்தபோதும் தன்னுடைய சீடர்களிடத்தில் எல்லார் மீதும் போர் தொடுங்கள் குறிப்பாக ஒருவனுடைய குடும்பத்தின் மீது மீதும் போர் தொடுங்கள் என்று நிச்சயமாகக் கூறவில்லை.

ரோமப் பேரரசர் கான்ஸ்டான்டைன், மத்திய படையெடுப்பாளர்கள், புரட்டஸ்டன்ட்கள் மற்றும் கத்தோலிக்கர்கள் அவிசுவாசிகள் மீதும் மற்றவர்கள் மீதும் பட்டயத்தை உபயோகித்தார்கள் என்பது உண்மை தான். இருந்தாலும் அவர்களில் ஒருவரேனும் கிறிஸ்தவத்திற்கு அஸ்திபாரம் கிடையாது, இயேசு மட்டுமே கிறிஸ்தவத்திற்கு அஸ்திபாரம். அவர் ஒருபோதும் தன்னுடைய செய்தியை பரப்புவதற்கு பட்டயத்தை ஆதரிக்கவில்லை. மேலும் கிறிஸ்தவம் ஒரு மறுமலர்ச்சிக்குள் பிரவேசித்தது (கி.பி 1400-1600). மேலும் ஞானஉபதேசத்தின் அழுத்தத்தில் கிறிஸ்தவம் விடப்பட்டது (கி.பி 1600-1800) அது சமாதானத்தை கோரியது. இவைகள் ஒருபக்கமிருக்க‌, இயேசு ஒருபோதும் ஒரு இராணுவப் புனிதப் போரை அறிவிக்கவில்லை, அவர் தன்னுடைய இயக்கத்திற்கு ஒழுக்க நெறிகளை மட்டுமே நியமித்தார்.

புதிய ஏற்பாட்டிலே சுவிசேஷத்தைப் பரப்புவதற்கோ, சபைகளை நாட்டுவதற்கோ அல்லது வேறு எதையும் சாதிப்பதற்கோ சபையானது பட்டயத்தை உபயோகிக்க வேண்டும் என்று ஒரு வசனம் கூட இல்லை. மாறாக புதிய ஏற்பாடு பட்டயத்தை ஆளுகையிடம் அரசாங்கத்திடம் கொடுக்கிறது (ரோமர் 13:1-6). எந்த விதத்திலும் சரீரப் பிரகாரமான பட்டயத்தை அல்ல ஆவிக்குரிய பட்டயத்தை எடுக்க இயேசு கூறுகிறார், ஒருவேளை குடும்ப உறவுகளைத் துண்டிக்க நேர்ந்தாலும் சீடர்கள் அதற்கு தயாராக இருக்கவேண்டும்.

ஆங்கில மூலம்: A Brief Explanation of the Sword in Matthew 10:34

ஜேம்ஸ் அர்லண்ட்சன் அவர்களின் கட்டுரைகள்