ரமலான் சிந்தனைகள் 29: வேதத்தையுடையோரே...
யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் குறிக்கும் “வேதத்தை உடையவர்கள்” " (ahl al-kitab) என்ற வார்த்தை குர்-ஆனில் குறைந்தது 25 இடங்களில் வருகிறது. வேதத்தை உடையவர்களில் நிராகரிப்பாளர்களை (குர்-ஆனை ஏற்றுக் கொள்ளாதவர்களை) பற்றிக் கூற ஸூரா 98 முழுமையும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அரேபியாவில் வாழ்ந்த மற்றவர்களைப் போலல்லாது, யூதர்களிடமும், கிறிஸ்தவர்களிடமும் இறைவனிடம் இருந்து வந்த வேதம் இருப்பதால் அவர்கள் வேதத்தை உடையவர்கள் என குர்-ஆன் கூறுகிறது. யூதர்களிடம் மோசேயின் மூலமாகக் கொடுக்கப்பட்ட தவ்ராத்தும், கிறிஸ்தவர்களிடம் ஈஸா மூலமாகக் கொடுக்கப்பட்ட இன்ஜீலும் இருந்ததாக குர்-ஆன் கூறுகிறது. குர்-ஆனும் அது போல இறைவனிடம் இருந்து வந்த ஒரு புத்தகம் என குர்-ஆன் 5:15ல் வாசிக்கிறோம். யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு சாதகமான ஒரு சில வசனங்கள் குர்-ஆனில் இருந்தாலும், இது முந்தைய வேதங்களை உறுதிப்படுத்தும் புத்தகம் என்று சொல்லும் குர்-ஆனில் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது குற்றச்சாட்டே பிரதானமான வைக்கப்படுகிறது. அல்லாஹ்வின் தூதரையும், குர்-ஆனையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான் அவர்கள் மேல் வைக்கப்படும் பிரதானமான குற்றச்சாட்டு. அல்லாஹ்வின் இறைத்தூதர் மேல் கொண்ட எதிர்ப்பை நியாயப்படுத்துவதற்காக, வேண்டுமென்றே வேதங்களில் உள்ளவற்றை “மறைத்து”, வேதத்தை “புரட்டி”, வசனங்களை இடம் மாற்றி வைத்து விட்டனர் என குர்-ஆன் 2:174; 4:46; 5:13, 41 யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது குற்றம் சாட்டுகிறது. ”வேதத்தை உடையோர்கள்” என்று குறிப்பிடும் வசனங்களில் பெரும்பாலானவை, யூத மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குவதைக் காணலாம். குறிப்பாக, கிறிஸ்தவர்கள் மூன்று கடவுள்களை தொழுது பல தெய்வ வணக்கத்திற்குள் சென்று விட்டதாக குர்-ஆன் 4:171; 9:30,31 கூறுகிறது. ஆயினும், யூதர்கள், கிறிஸ்தவர்கள் என பொதுவாகக் குர்-ஆன் குறிப்பிட்டாலும், அவர்களைப் பற்றி, அவர்கள் என்ன வகையானவர்கள் என்பது பற்றிய் அறிய தெளிவான குறிப்புகள் எதுவும் இல்லை.
நாம் இதுவரை பார்த்தபடி, குர்-ஆனில் வருகிற வேதாகம நபர்களின் கதைகளைப் போன்றவை அனைத்தும் பரிசுத்த வேதாகமத்தில் உள்ளவை அல்ல, மாறாக பெரும்பாலும் தள்ளுபடியாகமங்களில் இருக்கும் சம்பவங்களுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. மேலும், அரேபியாவில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களைப் பற்றி நாம் ஆராயும்போது, அவர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாரம்பரிய கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும், கள்ள உபதேசத்தை உடையவர்கள் என கருதப்படுகிற Monophysites, Nestorians, and Melkites என்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என அறிஞர்கள் கூறுகின்றனர். இதுவரை, குர்-ஆன் சொல்கிற செய்தியும், அல்லாஹ்வும் வேதாகமம் சொல்வதற்கு முற்றிலும் எதிரானது என்று நாம் பார்த்தோம். குர்-ஆனில் வருகிற வேதாகம நபர்களை வைத்து என்ன செய்வது என்பதிலும், அதை கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளப் பயன்படுத்துவதிலும் கிறிஸ்தவர்களிடையே பல முரணாக கருத்துக்கள் நிலவுகின்றன. குர்-ஆனில் வேதாகமத்திற்கு ஒத்ததாகவும் முரணானதாகவும் காணப்படுகிற விஷயங்களை வைத்து முஸ்லீம்களுடனான உரையாடலை எளிதில் துவங்கி, வேதாகமம் கூறும் இயேசுவை நோக்கி அவர்களைக் கொண்டு வருவதுதான் நம் முன் இருக்கும் மிகப்பெரிய சவால். குர்-ஆனில் கிறிஸ்தவர்களைப் பற்றி வரும் வசனங்கள் இயேசுவின் தன்மை மற்றும் தெய்வீகத்தைக் கேள்விக்குள்ளாக்கி, கிறிஸ்தவர்களிடம் இருந்து (இஸ்லாமை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ) ஒரு பதிலை எதிர்பார்ப்பதை நாம் காணலாம். சாத்தானுடனான சோதனையில் வேத வசனங்களைப் பயன்படுத்தின ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தன்னிடம் சிக்கலான கேள்விகேட்டவர்களுக்கு சொன்ன பதில்கள் பெரும்பாலும் கேள்விகளாகவே இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். விவாதத்தில் ஜெயிப்பது அல்ல நம் நோக்கம், முஸ்லீம்கள் கிறிஸ்துவின் அன்பைப் பற்றி தெரிந்து கொள்ள இயேசுவை அறிவிப்பதும், அறியச் செய்வதுமே நம் நோக்கமாக இருக்க வேண்டும்.
குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமான கர்த்தருடைய வேதமானது (சங்கீதம் 19:7), “இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும்” (எபிரேயர் 4:12) இருக்கிற படியால் நாம் தேவ அன்புடன் இயேசுவைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளும் நற்செய்தி கேட்கிறவர்களிடையே பெரிய மாற்றங்களை உண்டாக்கும் என்று விசுவாசிப்போம். இந்நற்செய்தியை பெரிய மேடையில் இருந்துதான் பேசவேண்டுமென்று இல்லை, உங்கள் அன்றாட வாழ்வில் காபி கடையிலும், காய்கறிக் கடையிலும் ஆரம்பிக்கும் உரையாடலில் இருந்தே நீங்கள் ஆரம்பிக்கலாம். அன்புடனும், ஜெபத்துடனும் செய்ய தேவன் கிருபை செய்வாராக.
- அற்புதராஜ் சாமுவேல்
தேதி: 22nd May 2020