குர்ஆன் இறைவனால் அருளப்பட்டு முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கருதமுடியாது? - ஏன்?
Why the Quran cannot be considered completely preserved and inspired
ஆசிரியர்: கொர்நெலியு
அன்பான இஸ்லாமிய நண்பனுக்கு,
நம்முடைய சமகால இஸ்லாமிய நூல்கள்/பத்திரிக்கைகள் இரண்டு விவரங்களைக் குறித்து பெருமைப்பட்டுக் கொள்கின்றன, அவைகள்:
1. அன்று முஹம்மது ஓதிய அதே குர்ஆன் தான் இன்று அவரக்ளிடம் எழுத்துக்கு எழுத்து மாற்றமடையாமல் இருக்கின்றது.
2. குர்ஆன் இறைவனால் அருளப்பட்டுள்ளது, தெய்வீகமானது, அது இறைவேதமாகும்.
மேலே கூறிய வாதங்களை நாம் கீழ்கண்ட இஸ்லாமியர்களின் மேற்கோள்கள் மூலமாக அறியலாம்
"பரிசுத்த குர்ஆன் என்பது ஒரு வாழும் அற்புதமாகும், இதனை அல்லாஹ் தம்முடைய நபிக்கு கொடுத்தார். பரிசுத்த ஆவியின் (காபிரியேல் தூதன்) மூலமாக இந்த அல்லாஹ்வின் புத்தகம் முஹம்மது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டது. இன்று வரை கணக்கிட்டால் 1400 ஆண்டுகள் கடந்துவிட்டது, இந்த குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தையும் ஒருவராலும் மாற்றமுடியவில்லை அல்லது குர்ஆன் கூறுவது போல இதற்கு இணையாக வேறு ஒரு வேதமும் மனிதர்களால் உருவாக்கமுடியவில்லை (ஸூரா ஹிஜ்ர் 15:9) [1]
"இறைவனின் நேரடி வார்த்தைகள் தான் குர்ஆன் ஆகும். காபிரியேல் தூதன் மூலமாக அல்லாஹ் முஹம்மது நபிக்கு இந்த குர்ஆனை வெளிப்படுத்தினார். முஹம்மது குர்ஆனை மனனம் செய்துக்கொண்டு, பிறகு அதனை தன் தோழர்களுக்கு ஒப்புவிப்பார். அதனை அவர்கள் மனனம் செய்து, அதனை எழுதி வைப்பார்கள், பிறகு அதனை முஹம்மதுவிற்கு வாசித்துக்காட்டி தாங்கள் எழுதியதில் ஏதாவது தவறுகள் இருந்தால் அதனை சரிப் படுத்திக்கொள்வார்கள். இது மாத்திரமல்ல, முஹம்மது நபி அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் காபிரியேல் தூதன் மூலமாக குர்ஆனை சரிப்பார்த்துக்கொள்வார்கள். தம்முடைய கடைசி ஆண்டில் குர்ஆனை இரண்டு முறை காபிரியேல் தூதன் மூலமாக வாசித்து சரி பார்த்துக்கொண்டார்கள். குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட அந்த நாளிலிருந்து இன்று வரை கணக்கிலடங்கா இஸ்லாமியர்கள் குர்ஆனை மனனம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள், எழுத்துக்கு எழுத்து அவர்கள் மனனம் செய்துள்ளார்கள். இஸ்லாமியர்களில் அனேகர் முழு குர்ஆனையும் தங்களுடைய 10வது வயதிலேயே மனனம் செய்துள்ளார்கள். நூற்றாண்டுகளாக குர்ஆனின் ஒரு எழுத்தும் மாற்றமடையாமல் அப்படியே இருக்கிறது. [2]
இஸ்லாமியர்களின் இந்த வாதங்கள் குர்ஆனிலிருந்தே வந்துள்ளது:
1. குர்ஆன் பாதுக்காக்கப்பட்டுள்ளது என்ற வாதம் குர்ஆன் 15:9ம் வசனத்தில் காணலாம்:
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். (குர்ஆன் 15:9 - பீஜே தமிழாக்கம்)
2. குர்ஆனில் உள்ள ஒரு அத்தியாயம் போல ஒரு அத்தியாயத்தை ஒருவராலும் உருவாக்க முடியாது என்று பெருமைப்படுகிறார்கள். ஒரு தற்கால இஸ்லாமியரின் கூற்றுப்படி, குர்ஆன் தெய்வீகமானது என்ற சான்று குர்ஆனே ஆகும்.
நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்! (குர்ஆன் 2:23 - பீஜே தமிழாக்கம்)
முழு குர்ஆனையும் பின்பற்றவேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் முக்கியமான கடமையாகும். எந்த ஒரு முஸ்லிமாவது குர்ஆனின் ஒரு "வசனத்தை" அல்லது "ஆயத்"ஐ மறுத்தால்,குர்ஆனின் படி அவர் தம்மீது ஒரு பயங்கரமான சாபத்தை வருவித்துக் கொள்வார்.
(முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை அவன் உமக்கு அருளினான். இது தமக்கு முன் சென்றவற்றை உண்மைப்படுத்துகிறது. இதற்கு முன் மனிதர்களுக்கு நேர் வழிக்காட்ட தவ்ராத்தையும், இஞ்சீலையும் அவன் அருளினான். (பொய்யை விட்டு உண்மையப்) பிரித்துக் காட்டும் வழி முறையையும் அவன் அருளினான். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன். (குர்ஆன் 3:3,4 - பீஜே தமிழாக்கம்)
மேற்கண்ட வசனங்களில் "வெளிப்படுத்தினான்/அருளினான்" என்பது "பையதி (بِـَٔايَـٰتِ)" என்ற அரபி வார்த்தையின் தமிழாக்கமாகும், இதனை நாம் "அல்லாஹ்வின் வசனங்களில்" என்று புரிந்துக்கொள்ள முடியும்.
குர்ஆனின் படி, தற்கால இஸ்லாமியர்களுக்கு தண்டனை காத்திருக்கிறது, இதனை கீழ்கண்ட மேற்கோளில் காணலாம். ஏனென்றால், தற்கால இஸ்லாமியர்கள் குர்ஆனின் ஒரு சில வசனங்களை புறக்கணிக்க வில்லை, அவர்கள் இரண்டு முழு குர்ஆன் அத்தியாயங்களை (ஸூராக்களை) புறக்கணித்துள்ளார்கள்.
தற்காலத்தில் நம்மிடமுள்ள குர்ஆனை விட வித்தியாசமான ஒரு குர்ஆனை (தொகுப்பை) உபை இப்னு கஅப் தொகுத்து இருந்தார் என்ற விவரம் எல்லா இஸ்லாமிய அறிஞர்கள் அறிந்த விஷயமாகும். தற்கால குர்ஆன் “ஸைத் இப்னு ஸாபித்” என்வரின் தொகுப்பிலிருந்து வந்ததாகும். ஜையத் மற்றும் உபை தொகுத்த குர்ஆன்களுக்கு இடையே இருக்கும் அனேக வித்தியாசங்களில் மிகவும் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், உபையின் குர்ஆனில் இரண்டு அதிகபடியான அத்தியாயங்கள் (ஸூராக்கள்) இருந்தன என்பதாகும், அவைகள் அல்-ஹப்த் மற்றும் அல்-கஹ்ல் என்ற அத்தியாயங்களாகும். (இதைப் பற்றி மேலும் அறிய "அஸ் சுயுதி, அல் இத்கான் ஃபீ உலூம் அல்-குர்ஆன்” என்ற புத்தகத்தை படிக்கவும் அல்லது கிள்கிறைஸ் அவர்களின் புத்தகத்தை படிக்கவும் "ஜம் அல்-குர்ஆன், அத்தியாயம் 3 , பக்கம் 72-78". தற்கால குர்ஆனில் விடுபட்ட இரண்டு ஸூராக்களை இந்த கட்டுரையில் படிக்கவும்: ஸூரத் அல்-ஹப்த் மற்றும் அல்-க்ஹல்)
இந்த விவரத்தை உமர் அங்கீகரித்துள்ளார் இதனை ஹதீஸில் நாம் காணலாம். சஹி புகாரி ஹதீஸ் பாகம் 5, அத்தியாயம் 66, எண் 5005ல், குர்ஆனை நன்கு ஓதத்தெரிந்தவர்களில் உபை சிறந்தவர் என்று முஹம்மதுவினால் புகழப்பட்டுள்ளார். உபையின் குர்ஆன் தொகுப்பில் இருந்த இரண்டு முழு அத்தியாயங்கள், ஸைத்வுடைய குர்ஆன் தொகுப்பில் இல்லை. இந்த வித்தியாசத்தை உமர் கண்டபிறகு அதனை சரி செய்ய அவர் கீழ்கண்ட விளக்கத்தை கூறியுள்ளார். இதனை கீழ்கண்ட புகாரி ஹதீஸில் நாம் காண்போம்.
பாகம் 5, அத்தியாயம் 66, எண் 5005
உமர்(ரலி) கூறினார்
எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார். நாங்கள் உபை(ரலி) அவர்களின் சொற்களில் சிலவற்றைவிட்டுவிடுவோம். ஏனெனில் அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன்' என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, 'எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அது போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம்' என்று கூறியுள்ளான்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். Source
உபை இப்னு கஅப் என்பவரின் குர்ஆனில் இருந்த இரண்டு அத்தியாயங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு உமர் கூறிய பதில் அல்லது காரணங்கள் ஏற்கத்தக்கது அல்ல. இந்த இரண்டு அத்தியாயங்கள் இரத்து செய்யப்பட்டது என்று உமர் கூறிய காரணம் அனேக பிரச்சனைகளை உருவாக்குகிறது. அவைகளை இப்போது காண்போம்:
1. அந்த இரண்டு அத்தியாயங்கள் இரத்து செய்யப்பட்டுவிட்டது என்று உமர் கூறியதிலிருந்து , அந்த இரண்டு ஸூராக்கள் அதற்கு முன் குர்ஆனின் ஒரு பகுதியாக இருந்தது என்று அவர் அங்கீகரிக்கிறார்.
2. இந்த இரண்டு ஸூராக்கள் "தொலைந்துவிட்டன" அல்லது "மறக்கப்பட்டுவிட்டன" என்று யாரும் கூறமுடியாது . ஏனென்றால், உபையும், உமரும் மற்றும் இதர நபித்தோழர்களும் அவைகளை அறிந்து இருந்தனர், இவர்கள் மறக்கவில்லை. ஸைத் என்பவரின் குர்ஆன் தொகுப்பை அதிகார பூர்வமான ஒரு பிரதியாக உஸ்மான் பிரகடனம் படுத்தியதற்கு முன்பு மற்றும் இதற்கு வித்தியாசமானதாக இருக்கும் இரத குர்ஆன்களை எரித்துவிடுங்கள் என்று உஸ்மான் கட்டளை பிறப்பிப்பதற்கு முன்பு வரை, உபை என்பவரின் குர்ஆன் சிரியா நாட்டில் அதிகாரபூர்வமாக கற்றுக்கொடுக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. இன்றும் அனேகர் உபையின் அந்த இரண்டு குர்ஆன் அத்தியாயங்களை அறிந்துவைத்துள்ளனர். இந்த இரண்டு அத்தியாயங்கள் தொலைந்துப் போகவில்லை, அவைகள் இஸ்லாமிய தலைவர்களால் "ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளன". குர்ஆன் 3:3-4 என்ற வசனங்களின் படி, இந்த இஸ்லாமிய தலைவர்கள் தங்கள் மீதும், அவர்களின் சொற்களை கேட்டு நடக்கும் இதர இஸ்லாமியர்கள் மீதும் மிகப்பெரிய தண்டனையை வருவித்துக்கொண்டு உள்ளார்கள்.
3. அந்த இரண்டு குர்ஆன் அத்தியாயங்கள் அல்லாஹ்வினால் இரத்து செய்யப்படவில்லை , அவைகள் ஸைத் என்பவரால் இரத்து செய்யப்பட்டுள்ளது மற்றும் இவரின் குர்ஆன் தொகுப்பை பின்பற்ற விரும்பியவர்களால் (உஸ்மான், உமர் போன்றவர்களால்) இரத்து செய்யப்பட்டுள்ளது.
4.இரத்து செய்யப்படும் அல்லது மறக்கப்படும் குர்ஆன் வசனங்களுக்கு இணையாக அல்லது அவைகளை விட சிறப்பான வேறு குர்ஆன் வெளிப்பாடுகளை அல்லாஹ் இறக்குவார் என்று குர்ஆன் உறுதியளிக்கிறது (குர்ஆன் 2:106). முஹம்மதுவிற்கு பிறகு இரத்து எப்படி செய்யமுடியும்? அவைகளுக்கு பதிலாக அல்லாஹ் எப்படி முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு வசனங்களை கொண்டுவரமுடியும்?
5. உபையின் குர்ஆனில் காணப்பட்ட அதிகபடியான ஸூராக்கள் அவருடைய தொகுப்பில் மட்டுமே காணப்பட்டு இருந்தாலும் அவைகளை ஸைத் மற்றும் அவருடைய கூட்டணி ஏற்றுக்கொண்டு இருக்கவேண்டும். ஏனென்றால் இதே போன்று "குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ" என்பவரின் பிரதியில் மட்டுமே இருந்த குர்ஆன் பகுதியை ஸைத் மற்றும் அவருடைய கூட்டணி ஏற்றுக்கொண்டு இருக்கிறது (Bukhari, Vol. VI, #509, #510). உபையின் சிறப்பு (நம்பகத்தன்மை) இந்த "குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ" என்பவரை விட உயர்ந்ததாகும்.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது போல் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள்.
எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸ¤பைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
நான் திருக்குர்ஆனைப் பல ஏடுகளில் பிரதியெடுத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்த, 'அல்அஹ்ஸாப்' அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று (அதில்) இல்லாதிருப்பதைக் கண்டேன். நான் அதை குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ(ரலி) அவர்களிடம் தான் பெற்றேன். அந்த இறைவசனம் இதுதான்: “அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் மரணமடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்றத் தருணம்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்”. (திருக்குர்ஆன் 33:23)
எந்த ஒரு இஸ்லாமியராவது, "உபையின் குர்ஆனில் காணப்பட்ட இந்த அதிகபடியான அத்தியாயங்கள், குர்ஆனுடையது இல்லை" என்று சொல்வாரானால், குர்ஆன் இறைவனிடமிருந்து வந்தது என்ற வாதம் பொய்யானதாகிவிடும். ஏனென்றால், குர்ஆனில் இருக்கும் அத்தியாயங்களைப் போலவே, இரண்டு குர்ஆன் அத்தியாயங்கள் இருக்கின்றன ஆனால் அவைகள் இன்றைய குர்ஆனில் காணப்படுவதில்லை என்று ஆகிவிடும்.
குர்ஆனை ஓதுபவர்களில் சிறப்பானவரும், அல்லாஹ்வே முஹம்மதுவிடம் குர்ஆனை "உபையிடம்" ஓதிக்காட்டு என்றுச் சொல்லும் அளவிற்கு சிறப்பு மிகுந்தவர் "உபை இப்னு கஅப்" என்பவராவார். குர்ஆனில் இருக்கும் இதர ஸூராக்களைப் போலவே இந்த இரண்டு ஸூராக்கள் இருப்பதினால், இந்த இரண்டு ஸூராக்கள் "உபை இப்னு கஅப் என்ற சிறப்புமிக்கவரை ஏமாற்றி முட்டாளாக்கியுள்ளது".
சஹீ முஸ்லிம் புத்தகம் 31, எண் 6031 அனஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம், 'உங்களுக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்' என்று கூறினார்கள். உபை(ரலி), 'அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(ஆம்), அல்லாஹ் உங்கள் பெயரைக் குறிப்பிட்டான்' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உபை(ரலி), (ஆனந்த மேலீட்டால்) அழலானார்கள்.
உபை இப்னு கஅப் என்பவரின் குர்ஆனில் காணப்பட்ட அந்த இரண்டு ஸூராக்கள் குர்ஆனின் இதர ஸூராக்கள் போல் காணப்படவில்லை என்று உபைக்கு சவால் விடும் அளவிற்கு அவரை விட சிறப்பு வாய்ந்த ஒரு இஸ்லாமிய அறிஞரை இஸ்லாமிய சமுதாயம் உருவாக்க முடியுமா?
சஹீ புகாரி தொகுப்பு 6, ஹதீஸ் எண் 527ல் உமர் "குர்ஆனை ஓதுபவர்களில் சிறந்தவர்" என்று உபையை குறித்துச் சொல்லும் வரிகளை நாம் ஞாபகப்படுத்திக் கொள்வோம். கில்கிறைஸ்ட் தம்முடைய "ஜம் அல் குர்ஆன்" என்ற புத்தகத்தில், 67 லிருந்து 72 வரையிலான பக்கங்களில் இந்த விவரம் குறித்து இன்னும் அதிகபடியான விவரங்களைத் தருகிறார். மேலும் கீழ்கண்ட மேற்கோளை அவர் தருகிறார், இந்த மேற்கோளில் முஹம்மது "உபையை" குர்ஆன் ஓதுபவர்களில் சிறந்தவர் என்று கூறுகிறார்.
அஃபன் இப்னு முஸ்லிம் நமக்கு அறிவித்ததாவது, ... அனஸ் இப்னு மாலிக் என்பவரின் அதிகார பூர்வமான ஹதீஸ் மற்றும் அவருக்கு இறைத்தூதர் (அவர் மீது சாந்தி உண்டாவதாக) மூலமாக கிடைத்த விவரமாவது, "இறைத்தூதர் கூறினார்: என் மக்களில் மிகவும் சிறப்பாக குர்ஆனை ஓதுபவர் உபை இப்னு கஅப் என்பவராவார்" (இப்னு ஸைத், கிதாப் அல் தபாகத் அல் கபீர், தொகுப்பு 2, பக்கம் 441)
முஹம்மதுவும் உமரும் "குர்ஆனை ஓதுபவர்களில் சிறப்பு மிகுந்தவர் என்று புகழாரம் சூட்டிய உபையை விட எங்களுக்கு நன்றாக குர்ஆனை ஓதத்தெரியும்" என்று யாராவது வாதம் புரிந்தால், அவர்கள் முஹம்மதுவையும், உமரையும் பொய்யர்கள் என்று கூறுகிறார்கள் என்று பொருள்.
இந்த இரண்டு ஸூராக்கள் குர்ஆனின் ஒரு பாகமாக இருந்ததில்லை என்றுச் சொல்வதற்கு உமருக்கும் தைரியமில்லை. அப்படி அவர் கூறுவாரானால் முஹம்மது ஒரு பொய்யர் என்று உமர் கூறுவதாக ஆகிவிடும், மட்டுமல்ல குர்ஆனின் தெய்வீகத்தன்மைக்கும் பங்கம் விளைந்துவிடும், கடைசியாக, குர்ஆன் 2:23ம் வசனத்தில் கொடுக்கப்பட்ட சவாலும் சந்தித்துவிட்டது போலாகிவிடும். எனவே, உமர் இவைகள் குர்ஆனி பாகமில்லை என்று கூறவில்லை.
இப்போது நாம் எடுக்கவேண்டிய முடிவுகள் தெளிவாக இருக்கின்றன.
முதலாவதாக, ஸைத் என்பவரின் குர்ஆன் முழுமையற்றது என்று ஒதுக்கிவிட்டு, உபையின் குர்ஆனில் காணப்பட்ட அதிகபடியான ஸூராக்களை மறுபடியும் இன்றைய குர்ஆனில் சேர்க்கவேண்டும். இப்படி செய்தால், இந்நாள் வரை உபையின் குர்ஆனை புறக்கணித்துவிட்டு மரித்த இஸ்லாமியர்கள் அனைவருக்கும் அல்லாஹ்விடமிருந்து வேதனையான தண்டணை காத்திருக்கிறது என்று அங்கீகரித்ததுபோல் ஆகிவிடும். இந்நாள் வரை குர்ஆன் முழுமையானது என்றுச் சொல்லி உங்களுக்கு பிரச்சாரம் செய்த இஸ்லாமிய அறிஞர்களுக்கு குர்ஆன் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்று அர்த்தமாகிவிடும், அல்லது அவர்கள் உங்களிடம் பொய் கூறியுள்ளார்கள் மற்றும் அவர்கள் உங்களையும் மிகப்பெரிய ஆபத்தில் தள்ளியுள்ளார்கள் என்று அர்த்தமாகிவிடும். இந்த இஸ்லாமிய அறிஞர்கள் அறியாமையில் இப்படி செய்து இருக்கலாம் அல்லது மிகப்பெரிய பொய்யர்களாக இருந்திருக்கலாம். இதனால் அவர்கள் உங்களுக்கு அறிவுரைச் சொல்ல (இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய) தகுதியற்றவர்களாகி விடுவார்கள்.
இரண்டாவதாக, இப்போது செய்துக்கொண்டு இருப்பதுபோலவே, ஸைத்வுடைய குர்ஆனை நம்பிக்கொண்டு இருப்பதாகும், ஆனால், இந்த குர்ஆனும் இறைவனுடைய வேதமல்ல அதற்கு இறைத்தன்மையல்ல என்று நம்பவேண்டும். ஏனென்றால், உபையுடைய இரண்டு குர்ஆன் அத்தியாயங்கள் "குர்ஆனைப் போலவே" இருப்பதினால், குர்ஆனை ஓதுபவர்களில் சிறந்தவராகிய உபையை முட்டாளாக்க போதுமானதாக அவ்விரு அத்தியாயங்கள் இருந்துள்ளது. குர்ஆன் இறைவனிடமிருந்து வரவில்லை என்று அங்கீகரித்தால், இனி உங்கள் வாழ்க்கையை ஆளுவதற்கு குர்ஆனுக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் போகிறது.
மூன்றாவதாக, ஸைத் உடைய குர்ஆனை நம்பிக்கொண்டு இருக்கவேண்டும், மற்றும் உபை உடைய ஸூராக்கள் குர்ஆனின் ஒரு பாகமாக இருக்கவில்லை என்று நம்பவேண்டும். இப்படி நம்புவதினால், நீங்கள் மற்றும் உங்களைப்போல நம்பும் இன்றைய இஸ்லாமியர்களும் "உபையை விட சிறப்பாக குர்ஆனை ஓதுபவர்கள்" என்று சொல்வதாக ஆகிவிடும். இதன் பலனாக, நீங்கள் உங்கள் முஹம்மதுவையும், உமரையும் பொய்யர்கள் என்ற முத்திரையை குத்திவிடுகின்றீர்கள். இப்படி "முஹம்மது பொய்யர்" என்ற முத்திரையை குத்துவதினால், அவர் எல்லா இஸ்லாமியர்களுக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்ற நிலையிலிருந்து அவரை தள்ளிவிடுகின்றீர்கள். ஏனென்றால், ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்ட் அவருடைய வார்த்தைகள் பொய்யானவை என்று அங்கீகரிக்கிறீர்கள் .
குர்ஆன் தொகுக்கப்பட்ட விவரங்களை நீங்கள் ஹதீஸ்களிலும், இதர இஸ்லாமிய நூல்களிலும் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். இவைகளை நீங்கள் படிக்கும் போது ஆரம்பத்திலிருந்தே குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்பதை அறிந்துக்கொள்வீர்கள். குர்ஆனின் சில பகுதிகள் நீக்கப்பட்டும், இன்னும் சில பகுதிகள் தொலைந்தும் போய் இருக்கின்றன என்பதை அறிந்துக்கொள்வீர்கள். சிந்துத்து உணருங்கள், அதாவது முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு தொலைந்துப்போன குர்ஆன் பகுதிகளுக்கு பதிலாக வேறு குர்ஆன் வசனங்கள் இறக்கப்படவில்லை. இதன் படி பார்த்தால், அல்லாஹ் ஒரு பொய்யர் என்பது விளங்கும் அதாவது, குர்ஆன் 2:106ன் படி மறந்துப்போன குர்ஆன் வசனங்களுக்கு பதிலாக அவைகளை விட சிறந்ததையோ அல்லது சமமானதையோ கொடுப்போம் என்ற வாக்குறுதியை அல்லாஹ் நிறைவேற்றவில்லை. அல்லாஹ் ஒரு "கைரு அல் மகீரீன்" (வஞ்சிப்பதில் சிறந்தவர்) என்பதை அறிந்துக்கொள்ளுங்கள் (குர்ஆன் 3:54 மற்றும் 8:30). அல்லாஹ்வின் வஞ்சனையிலிருந்து (மக்ரா) நீங்கள் தப்பிக்கவே முடியாது (குர்ஆன் 7:99). தோராவின் மற்றும் நற்செய்தியின் இறைவனிடத்திற்கும், பொய் சொல்லாத இறைவனிடத்திற்கும் திரும்புங்கள்.
அன்பான நண்பர்களே, நாம் அனைவரும் தீயவர்கள் தான், நாம் இறைவன் தரும் தண்டனைக்கு தகுதியானவர்கள் தான், ஆனால், இயேசுவின் மூலமாக உங்களுக்கு மன்னிப்பு உண்டு. இன்ஜிலில் இயேசு கூறுகிறார் " வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத்தேயு 11:28,29). மறுபடியும் அவர் இவ்விதமாக கூறுகிறார் "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை " (யோவான் 6:37) .இந்த மிகப்பெரிய இரட்சிப்பை புறக்கணிக்கவேண்டாம்.
பின் குறிப்புகள்:
1 The Miracles of the Prophet Muhammad, p. vi of the introduction to The Translation of the Meanings of Sahih Al-Bukhari, Vol. I, by Dr. Muhammad Muhsin Khan. Published by Dar AHYA Us-Sunnah Al Nabawiya.
2 A Brief Illustrated Guide To Understanding Islam by I. A. Ibrahim, Second Edition. Published by Darussalam Publishers and Distributors P.O. Box 22743, Riyadh 11416 K. S. A., p. 5; also available in the U.S.A. from Darussalam Houston P.0. Box 79194, Houston, Tx 77279.
ஆங்கில மூலம்: Why the Quran cannot be considered completely preserved and inspired?