”பைபிள் மாற்றப்பட்டுவிட்டது” என்ற இஸ்லாமியர்களின் வாதம்

கிறிஸ்தவர்கள் தங்கள் பரிசுத்த எழுத்துக்களாகிய யூத மற்றும் கிறிஸ்தவ வேதத்தை மாற்றிவிட்டார்கள் என்று எந்த ஒரு இடத்திலும் குர்-ஆன் கிறிஸ்தவர்களை குற்றப்படுத்தவில்லை. குர்-ஆன் வேதங்களுடையவர்களை குற்றப்படுத்துவதெல்லாம் ”தஹரிஃப் (taharif)” என்பது பற்றியதாகும். அதாவது தங்கள் நாவுகளால் வேத எழுத்துக்களின் பொருளை மாற்றி அல்லது மறைத்து கூறுவதாகும். 

நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் -. . . . ஸூரதுல் ஆலஇம்ரான் (3):78

வேத எழுத்துக்கள் மாற்றப்பட்டுவிட்டது என்று வாதிக்கும் இஸ்லாமியர்களுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது, அது என்னவென்றால், வேதம் மாற்றப்படுவதற்கு முன்பாக எப்படி இருந்தது? என்ற ஆதாரத்தை அவர்கள் கொண்டு வரவேண்டும், அப்போது தான் எந்த வசனங்கள் மாற்றப்பட்டது என்பதை நாம் ஒப்பிடமுடியும். இந்த கேள்விக்கு இஸ்லாமியர்களின் பொதுவான பதில் என்னவென்றால், “பர்னபாஸ் சுவிசேஷம்” ஆகும்.  எனினும் ”பர்னபாஸ் சுவிசேஷம்” இஸ்லாமியர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது, ஏனென்றால், குர்-ஆனுக்கு  முரண்படும் அனேக விஷயங்கள் இந்த பர்னபாஸ் சுவிசேஷ நூலில் இருப்பது தான். பைபிளின் பழைய மூல பிரதிகளில் சில எழுத்து வித்தியாசங்கள் இருந்தாலும், அவைகள் வேண்டுமென்றே செய்யப்பட்ட மாற்றங்கள் அல்ல, மேலும் அவைகள் பைபிளின் அடிப்படை கோட்பாடுகளை மாற்றவில்லை.  மூல கைப்பிரதிகளில் காணப்படும் வித்தியாசங்கள் குர்-ஆனுக்கும் உண்டு. இதைப் பற்றி யூசுப் அலி அவர்கள் “குர்-ஆனின் அறிமுகம்” என்ற தலைப்பில் தன் புத்தகத்தின் இரண்டாவது பதிப்பில் (1977), 36வது பக்கத்தில், கீழ்கண்டவாறு கூறுகிறார்:

மேற்கண்ட சரித்திர விவரங்களின் படி, குர்-ஆன் பல வகைகளில் (வித்தியாசமான வார்த்தைகளைக் கொண்டு – variations) ஓதப்பட்டு இருப்பது மிகத் தெளிவாக தெரியவருகிறது.  இந்த விதமாகத் தான் நம் பரிசுத்த இறைத்தூதரும் ஓதினார் மற்றும் கற்றுக் கொடுத்துள்ளார். மேலும் குர்-ஆனை ஓதும் குர்ரா(Qurra) என்ற இஸ்லாமிய அறிஞர்களும், கீழ்கண்ட வகையில் ஒத்துப்போகிற ”ஓதும் முறை” தான் சரியானது என்று ஒட்டுமொத்தமாக சந்தேகத்திற்கு இடமின்றி அங்கீகரித்துள்ளனர். அதாவது a) குர்-ஆன் ஹஜ்ரத் உஸ்மான் அவர்கள் வெளியிட்ட குர்-ஆன் பிரதியில் உள்ளது போல ஓதப்படவேண்டும் b) அரபி மொழியின் இலக்கணம் மற்றும் அகராதியின்படி ஓதப்படவேண்டும் c) மூன்றாவதாக எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஓதும் முறையானது சரியான சங்கிலித்தொடருடன், பரிசுத்த இறைத்தூதர் வரை செல்லக்கூடிய ஆதாரப் பூர்வமானதாக இருக்கவேண்டும்.  இதனால் சில வழிமுறைகளில்(Few Variations) குர்-ஆன் ஓதும் முறை உள்ளது, மேலும் முரண்பாடு இல்லாமல், குர்-ஆன் வசனங்களின் பொருள் இன்னும் மேருகேரும் வகையில் இருக்கிறது. இன்று நம்மத்தியில் நிலவும் பல வகையான குர்-ஆன் ஓதும் முறையில் தான் இறைத்தூதர் அவர்களும் ஓதினார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இப்படி ஓதுவதினால் வசனங்களின் பொருள் சொறிவும் அதிகமாக இருக்கிறது.

உதாரணத்திற்கு: இரண்டு அதிகார பூர்வமான ஓதும் முறை எடுத்துக்காட்டுகளை இப்போது காண்போம். அ) அல்பாத்திஹா அத்தியாயத்தின் மூன்றாம் வசனம். ஆ) அல்மாயிதா அத்தியாயத்தின் ஆறாம் வசனம். 

முதலாவது வகை குர்-ஆன் ஓதும் முறையில், குர்-ஆன் 1:3ம் வசனத்தில் வரும் அரபி வார்த்தையின் அர்த்தம் “நியாயத்தீர்ப்பு நாளின் எஜமானன்” என்று உள்ளது, இன்னொரு வகை குர்-ஆன் ஓதும் முறையில், அந்த வார்த்தையின் அர்த்தம் ”நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதி” என்று உள்ளது.  இந்த இரண்டு வகையான ஓதும் முறையில் இவ்வசனத்தை படிக்கும் போது, அர்த்தம் இன்னும் தெளிவாக புரிகிறது. 

மேலும், குர்-ஆன் 5:6ம் வசனத்தில் வரும் அரபி வார்த்தையின் பொருள் உங்கள் முகத்தையும்… உங்கள் கால்களையும் கழுவுங்கள்” என்பதாகும். அதாவது வெறுங்கால்களுடன் உலூ செய்வதாகும். இதே வசனத்தை வேறு ஒரு வகையான குர்-ஆன் ஓதும் முறையில் கவனித்தால், “உங்கள் முகங்களை கழுவுங்கள், ஈரமாக கரங்களால் உங்கள் தலையை துடையுங்கள் மற்றும் கால்களையும் துடையுங்கள்” என்ற பொருள் வருகிறது.

Reproduction from Yusuf Ali's "The Holy Qur'an Translation and Commentary," 2nd Edition, 1977

மேலே குர்-ஆனில் காண்பது போலவே, பைபிளிலும் மாற்றங்கள் உண்டு என்று இஸ்லாமியர்கள் சொல்வார்களானால், அவர்களிடம் கீழ்கண்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன.

கேள்வி 1 . . . யார் பரிசுத்த எழுத்துக்களை மாற்றியது?

இஸ்லாம் பரவுவதை தடுக்க யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றாக சேர்ந்து தங்கள் பரிசுத்த வேதங்களை மாற்றிவிட்டார்கள் என்று இஸ்லாமியர்கள் அடிக்கடி குற்றம்சாட்டுகிறார்கள்.  ஆனால், உண்மையில் இது சாத்தியமில்லாத ஒன்றாகும். ஏனென்றால், யூதர்களும் கிறிஸ்தவர்களும் அவர்களுக்குள் அனேக வித்தியாச கண்ணோட்டங்கள் கொண்ட மக்களாக இருக்கிறார்கள்.

யூதர்கள் கூறுகிறார்கள்; 'கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்; 'யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்) . . ..  (ஸூரதுல் பகரா 2:113)

அடிப்படை சத்தியங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்திருக்குமானால், இதற்கு கடும் எதிர்ப்பு உண்டாகி இருந்திருக்கும், ஏனென்றால் யூத மற்றும் கிறிஸ்தவ மார்க்கத்தில் அனேக பிரிவுகள் இருக்கிறது, ஆகையால் இவர்கள் மாற்றங்களை அங்கீகரித்து இருக்கமாட்டார்கள். சபை சரித்திரத்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. வேத வார்த்தைகளை மாற்றப்பட்டதாக எந்த ஒரு குற்றச்சாட்டும் எழும்பினதில்லை. ஆனால், வசனங்களுக்கு பல வகையாக வியாக்கீனம் கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு.

இயேசு கூட யூதர்கள் தங்கள் வேதங்களை மாற்றிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டவில்லை, அதற்கு பதிலாக வேத வசனங்களின் உண்மை அர்த்தத்திற்கு திரும்புங்கள் என்று அவர்களை உற்சாகப்படுத்தினார். யூதர்கள் வேத எழுத்துக்களை மாற்றி இருந்திருந்தால், அவர்களின் அந்த குற்றத்தை அவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருந்திருப்பார்.

முஹம்மதுவின் காலத்தில் வாழ்ந்த மற்றும் முஸ்லிம்களோடு நல்ல நட்புறவுடன் இருந்த உண்மையான கிறிஸ்தவர்கள் (அபிசீனியாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள்), இப்படிப்பட்ட ஏதாவது மாற்றங்கள் யூதர்களால் வேதத்தில் செய்யப்பட்டு இருந்திருந்தால் அதனை இவர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருப்பார்கள்.

 . . .. "நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம்" என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர். ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.  (ஸூரதுல் மாயிதா 5:82)

 கேள்வி 2: எப்போது வேதம் மாற்றப்பட்டு இருக்கலாம்?

ஒருவேளை யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றாக சேர்ந்து முஹம்மதுவின் மரணத்திற்கு முன்பு தங்கள் வேதங்களை மாற்றியிருந்திருந்தால், நிச்சயமாக கீழ்கண்ட வசனங்களை இறக்கி,  இறைவன் முஹம்மதுவிற்கு அறிவுரை கூறியிருக்கமாட்டான்.

. . . ; இன்னும், "அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; …" என்றும் கூறுவீராக.  ( ஸூரதுல் அஷ்ஷூரா (42):15)

 (முஃமின்களே!)"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக.   ( ஸூரதுல் பகரா 2:136)

"வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்;ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை" என்று கூறும்;. ….  (ஸூரதுல் அல் மாயிதா (5):68)

 (ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்;. ....  (ஸூரதுல் அல் மாயிதா (5):47)

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.  (ஸூரதுல் அல் மாயிதா (5):46)

(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொளிவீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக நிச்சயமாக …..  (ஸூரா யூனுஸ் (10):94)

அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. …  …, "எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்" என்று கூறுகிறார்கள்; அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. ….  அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, ….  (2:89, 91, 101)

மெய்ப்பிக்கும்படியாக” என்ற சொற்றொடரை கவனிக்கவும்.  இந்த வசனங்கள் அனைத்தும் சொல்லும் குர்-ஆனின் தெளிவான போதனை என்னவென்றால், “முந்தைய வேதங்களைக் மெய்ப்பிக்க குர்-ஆன் இறக்கப்பட்டதாகும்”. அதாவது முஸ்லிம்கள் கருதுவதுபோல, முந்தைய வேதங்களை சரிப்படுத்தவோ, அல்லது தள்ளுபடி செய்யவோ குர்-ஆன் வரவில்லை என்பதாகும். குர்-ஆனில் எந்த ஒரு இடத்திலும், “திருத்தப்பட்ட முந்தைய வேதங்களிலிருந்து, தொலைந்துவிட்ட முந்தைய வேதங்களிலிருந்து மக்களை காக்கவே குர்-ஆன் இறக்கப்பட்டது” என்று கூறவில்லை. அதாவது தௌராத் மற்றும் இஞ்சில் திருத்தப்பட்டது அவைகளிலிருந்து காக்க குர்-ஆன் வந்தது என்று எந்த ஒரு வசனத்தையும் குர்-ஆனில் காட்டமுடியாது.

பரிசுத்த வேதமானவது, முஹம்மதுவின் மரணத்திற்கு பின்பு மாற்றப்பட்டது என்று குற்றம் சாட்டுவதும் சாத்தியமில்லாதது என்பதை கீழ்கண்ட விவரங்கள் மூலம் அறியலாம்.

கி.பி. 600 காலகட்ட வரையிலும், கிறிஸ்தவமானது ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் பரவிவிட்டது. உலக அளவில், இந்த மூன்று கட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும், பரிசுத்த வேதத்தை மாற்றுவதற்கு ஒரு குழுவாக ஒரு இடத்தில் சேர்ந்தார்கள் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் உலகில் இல்லை.

முஸ்லிம்கள் பரிசுத்த வேதங்களை மதிக்கிறார்கள். யூத மற்றும் கிறிஸ்தவத்திலிருந்து முஸ்லிம்களாக மாறியவர்களும் தங்களிடம் இருந்த முந்தைய வேதங்களை அப்படியே பாதுகாத்து தங்களிடம் வைத்திருந்திருப்பார்கள். எனினும், இந்த இஸ்லாமியர்கள் பாதுகாத்த வேதங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. 

கி.பி. நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இன்னும் நம்மிடம் பாதுகாக்கப்பட்டுள்ளது (முஹம்மது ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தார்). இந்த கையெழுத்துப் பிரதிகள் தற்கால மொழியாக்கங்களோடு ஒப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவைகள் தற்கால வேதத்தோடு ஒத்து இருப்பதை காணமுடிகிறது.

கேள்வி 3: வேதங்கள் எப்படி மாற்றப்பட்டது?

யூத மார்க்கவும், கிறிஸ்தவ மார்க்கவும் உலகம் முழுவதும் பரவியிருப்பதினால்,  இவ்விரு பிரிவினரிடம் உள்ள அனைத்து வேதங்களையும், கையெழுத்துப் பிரதிகளையும், இதர எழுத்துக்களையும், வேத மேற்கோள்கள் காட்டப்பட்ட மூல ஆவணங்களையும் சேகரிப்பது என்பது முடியாத காரியமாகும். மேலும், உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளில், யூத சினகாக் ஆலயங்களில், நூலகங்களில் பள்ளிகளில் மேலும் வீடுகளில் உள்ள அனைத்து வேதங்களையும், ஆவணங்களையும் சேகரித்து அவைகளில் மாற்றம் செய்துவிட்டு, உலகில் யாருக்குமே தெரியாமல் அவைகள் இருந்த இடங்களிலேயே மறுபடியும் அவைகளை  திருப்பி வைப்பது என்பது நிச்சயமாக செய்ய முடியாத ஒரு செயலாகும். 

குர்-ஆன் கூட இறைவனின் வார்த்தையை மாற்றமுடியாது என்று கூறுகிறது:

மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையாகிவிட்டது - அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை - . . . .  (ஸூரதுல் அன்ஆம் (6):115)

. . .; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - . . .  (ஸூரதுல் யூனுஸ் (10):64)

ஒரு வேளை மேற்கண்ட வசனங்களை கண்டு, ‘அல்லாஹ் எங்கள் குர்-ஆனை திருத்தப்படுதலிலிருந்து காக்க வல்லவர்” என்று முஸ்லிம்கள் கூறுவார்களானால், அதே சர்வ வல்ல இறைவன் தன்னுடைய முந்தைய வேதங்களையும் காக்க வல்லவர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

ஆங்கில மூலம்:  The Claim that the Scriptures of the Bible have been Changed

முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்