"பைபிளை தள்ளுபடி செய்யவே குர்ஆன் வந்தது" என்ற இஸ்லாமியர்களின் வாதம்
"இஸ்லாமின் பரிசுத்த வேதமாகிய குர்ஆன் வந்ததின் முக்கிய நோக்கம், யூத மற்றும் கிறிஸ்தவர்களின் பரிசுத்த வேதத்தை தள்ளுபடி செய்யவே தான்" என்றுச் சொல்லிக்கொண்டு அனேக இஸ்லாமியர்கள் திருப்தி அடைகின்றனர். இவர்கள் இப்படி எண்ணுவதற்கு காரணம், "பைபிள் திருத்தப்பட்டு விட்டது அல்லது பைபிளின் போதனை காலம் கடந்துவிட்டது அல்லது உண்மையான பைபிள் தொலைந்துவிட்டது" என்று இஸ்லாமியர்கள் நம்புவதாகும். ஆனால், இஸ்லாமியர்கள் கருதுவது போல் குர்ஆன் சொல்வதில்லை. இதற்கு பதிலாக, முந்தைய வெளிப்பாடுகளை உறுதிப்படுத்தவே குர்ஆன் இறக்கப்பட்டது என்று குர்ஆன் கூறுகிறது. இங்கு ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ளவேண்டும், அதாவது குர்-ஆன் ஒரு காரியத்தை உறுதிப்படுத்த வருமானால், அந்த காரியம் அதி முக்கியமானதாகத் தானே இருக்கவேண்டும். அதாவது இறைவனே உறுதிப்படுத்துகின்றான் என்றுச் சொன்னால், அது முக்கியமில்லாத ஒன்றாக இருக்குமா? நிச்சயமாக இல்லை.
இப்போது கீழ்கண்ட வசனங்களை பாருங்கள். இந்த வசனங்களின் படி, பைபிளை மாற்றவோ, தள்ளுபடி செய்யவோ அல்லாமல், பைபிளை உறுதிப்படுத்தவே குர்ஆன் இறங்கியது என்றுச் சொல்கிறது.
இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது ..... ஸூரத்துல் பகரா(2):41
அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது; இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் மூலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள்.... ஸூரத்துல் பகரா(2):89
......அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. ஸூரத்துல் பகரா(2):91
அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது.... ஸூரத்துல் பகரா(2):101
இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது; (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. ஸூரத்துல் அஹ்காஃப்(46):12
இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம் ; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.) எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள். ஸூரத்துல் அன்ஆம்(6):92
மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது . ஸூரத்துல் மாயிதா(5):48
முந்தைய வேதங்களில் அப்படி என்ன முக்கியமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது? முந்தைய வேதங்களை உறுதிப்படுத்தவும், பாதுகாக்கவும் தாம் வந்துள்ளதாக ஏன் குர்ஆன் சொல்லவேண்டும்? இந்த கேள்விகளுக்கு குர்ஆனே பதில் சொல்கிறது. குர்ஆன் சொல்கிறது, "மனித குலத்திற்கு வழிகாட்டவும், சீர்திருத்தவும், ஞானம் புகட்டவும், அருளாகவும் முந்தைய வேதங்கள் அனுப்பப்பட்டது”. மேலும், மனித குலத்திற்கு ஒளியாக வேதங்கள் அனுப்பப்பட்டது என்று கூறுகிறது, இந்த ஒளி மட்டும் தான் மக்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது, தண்டனையிலிருந்து தப்பவைத்து மனிதனுக்கு இரட்சிப்பை தந்து நித்திய வாழ்வை அளிக்கிறது. இதோ குர்ஆன் சொல்லும் சாட்சியத்தை நீங்களே படியுங்கள்.
(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான் . ஸூரத்துல்ஆல இம்ரான்(3):3
நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன . ஸூரத்துல் மாயிதா(5):44
இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன . ஸூரத்துல் மாயிதா(5):46
இன்னும், முந்தைய தலைமுறையார்களை நாம் அழித்தபின் திடனாக மூஸாவுக்கு(த் தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம் - மனிதர் (சிந்தித்து) உபதேசம் பெறும் பொருட்டு அவர்களுக்கு ஞானப்பிரகாசங்களாகவும், நேர்வழி காட்டியாகவும் அருட் கொடையாகவும் (அது இருந்தது). ஸூரத்துல் கஸஸ்(28):43
மேலே முந்தைய வெளிப்பாடுகள் என்று சொல்லப்பட்டவைகள் பைபிளைக் குறிக்கும் என்பதை இஸ்லாமியர்கள் அறிய வேண்டும். அவைகள் இறைவனிடமிருந்து வந்த ஆயத்துக்கள் (அடையாளங்கள்), அவைகளை நம்பவேண்டும். இந்த விஷயத்தைப் பொருத்தமட்டில், குர்ஆன் தெளிவாக கீழ்கண்ட வசனங்களை சொல்லியுள்ளது, என்பதை இஸ்லாமியர்கள் கவனிக்கவேண்டும்.
ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ; அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனையுண்டு; அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், (தீயோரைப்) பழி வாங்குபவனாகவும் இருக்கின்றான். ஸூரத்துல்ஆல இம்ரான்(3):4
எவர் இவ்வேதத்தையும், நம்முடைய (மற்ற) தூதர்கள் கொண்டு வந்ததையும் பொய்ப்பிக்கிறார்களோ அவர்கள் விரைவிலேயே (உண்மையை) அறிவார்கள்.அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க்கட்டைகள் வரை அரிகண்டங்களுடன் விலங்குகளுடனும் இழுத்துக் கொண்டு வரப்பட்டு;கொதிக்கும் நீரிலும், பிறகு (நரக)த் தீயிலும் கரிக்கப்படுவார்கள் ஸூரத்துல் முஃமின்(40):70-72
ஆங்கில மூலம்: The Claim that the Qur'an Came to Replace the Bible
முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்