ஒரு சவால்

The Challenge

ஈஸா நபியின் செய்தி மனித சமுதாயத்திற்கு எக்காலத்துக்கும் ஒரு சவாலாக உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவரின் செய்தி ஒரு தனிப்பட்ட சவாலாக உள்ளது. ஒரு தூதுவரிடமிருந்து அவரது தூதை நாம் வேறு படுத்தமுடியாது. எனவே, இந்த முக்கியமான கேள்வியை நாம் கேட்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்: இந்த தூதுவரையும், அவரது தூதையும் நாம் "இறைவனிடமிருந்து வந்த வெளிப்பாடு" என்று ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோமா?

ஆனால், இது அனேக யூதர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பெயரளவு கிறிஸ்தவர்களுக்கு ஒரு பிரச்சனையாகவே உள்ளது. இருந்தபோதிலும், "உண்மை" என்பது சொந்த கருத்துக்கள், பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் போன்றவற்றிக்கு சம்மந்தப்பட்டது அல்ல. உதாரணத்திற்கு கூறவேண்டுமென்றால், ஒரு சாரார் "இயேசு சிலுவையில் அறையப்பட்டார், மற்றும் நம்முடைய பாவங்களுக்காக அவர் கிருபாதார பலியாக மாறினார்" என்று கூறுகின்றனர், இன்னொரு சாரார், இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, கொல்லப்படவில்லை என்று கூறுகின்றனர், ஆனால், இந்த இரு சாராரின் கூற்றுகள் இரண்டும் உண்மையாக இருக்காது. அதாவது, ஒரு கூற்று உண்மையாக இருக்கும்பட்சத்தில், அடுத்த கூற்று தவறானதாக இருக்கும்.

மேற்கண்ட கேள்விக்கான சரியான பதில் நம்முடைய வாழ்வில் நாம் காணும் பிரச்சனைகளை கவனித்தால் புரிந்துவிடும். இது நம்முடைய நித்திய இலக்கை பாதிக்கிறது, ஆகையால், இவ்வுலகில் நாம் எப்படி வாழுகிறோம் என்பதைப் பொருத்து இது அமையும். நாம் வாழும் சமுதாயம் மற்றும் மத கலாச்சாரம் சொல்வதை அப்படியே கண்மூடித்தனமாக நாம் ஏற்கக்கூடாது என்று நமக்கு அறிவுரை தரப்படுகிறது. நம்முடைய ஆசா பாசங்கள், எண்ணக்கள் மற்றும் மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களை அப்படியே நாம் ஏற்கவேண்டியதில்லை.

சான்று

நாம் மேலே கண்ட விவரங்களை சரி பார்த்து அலசுவதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா? மனிதர்களாகிய நாம் உண்மையை கண்டுபிடித்து அதை பின்பற்றவேண்டும் என்று இறைவன் விரும்பினால், அவரைப் போலவே நாமும் "எது உண்மையான வெளிப்பாடு", "எது பொய்யான வெளிப்பாடு" என்பதை பிரித்து அறிவதற்கான வழிமுறைகளையும் இறைவன் கொடுக்கவேண்டும் என்று எதிர்ப்பார்ப்போம்.

நாம் ஒரு சரியான முடிவை எடுக்கவேண்டுமானால், நமக்கு சில அடிப்படை அறிவு தேவைப்படுகிறது, மற்றும் அந்த அடிப்படை அறிவை நேர்மையுடன் ஞானத்துடன் நாம் பயன்படுத்தினால், சரியான முடிவு எடுப்பது சாத்தியமாகும். எது உண்மை எது பொய் என்பதை கண்டறிய "ஏற்கனவே மூளைச்சலவை செய்யப்பட்ட கருத்துக்களை நம் மனதில் கொண்டு இருப்பது" என்பது சரியான கருவியாக இருக்காது.

தேவன் தன்னுடைய உண்மையை மக்கள் கண்டறிய வழி வகுத்து இருப்பதினால், அவருக்கு நான் நன்றியை செலுத்துகிறேன். சத்தியத்தை அறிய மனது உடையவர்கள் அதனை கண்டறியமுடியும். " உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். " (எரேமியா 29:13). இது தான் தேவன் நமக்கு கொடுத்து இருக்கின்ற வாக்குறுதி, இதனை அறைமனதுடன் அல்லாமல் நாம் முழுமனதுடன் தேடினால், நாம் கண்டுக்கொள்ளலாம்.

தேவன் மோசேயுடன் பேசும் போதும் (உபாகமம் 18:21,22), மற்றும் இதர தீர்க்கதரிசிகளுடன் பேசும் போதும் (ஏசாயா 41:21, ஆமோஸ் 3:7, எரேமியா 28:9 ...) எந்த ஒரு மனிதனாலும் செய்யமுடியாத ஒரு ஆதாரத்தை/சான்றை கொடுத்தார்: அதாவது நீண்ட காலத்திற்கு பிறகு நடக்கவிருக்கும் காரியங்களைக் குறித்து முன்னுறைத்தார் மற்றும் அவைகள் எப்படி நிறைவேறும் என்றும் கூறினார். எதிர்கால‌த்தில் யூகிக்க‌முடியாத‌ ச‌ரித்திர‌ நிக‌ழ்வுக‌ளை துள்ளியமாக ஒரு புத்த‌க‌த்தில் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து, அந்த‌ புத்த‌க‌ம் பைபிள் ஆகும். அந்த‌ நிக‌ழ்வுக‌ள் நிகழ்ந்த போது பைபிளின் தெய்வீக‌த்த‌ன்மை நிருபிக்க‌ப்ப‌ட்ட‌து. மோசே, தாவீது, ஏசாயா ம‌ற்றும் இத‌ர‌ தீர்க்க‌த‌ரிசிகளும், இயேசுக் கிறிஸ்துவின் வ‌ருகை, வாழ்வு போன்ற‌வைக‌ள் ப‌ற்றி 750, 1000 ஆண்டுக‌ள் ம‌ற்றும் அவைக‌ளுக்கு அதிக‌மான‌ ஆண்டுக‌ளுக்கு முன்பே மிக‌வும் விவ‌ர‌மாக‌ முன்னுறைத்துள்ளனர். தேவ‌ன் ஒரு அடையாள‌த்தை கொடுத்தார். அந்த‌ அடையாள‌ம் என்ன‌ என்ப‌தை தெரிந்துக்கொள்வ‌தும், தெரிந்துக்கொள்ளாம‌ல் இருப்ப‌தும் ந‌ம்முடைய‌ விருப்ப‌ம்.

அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.

துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார். அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று. என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.

நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள். என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.

இயேசுவில் நிறைவேறிய அனேக தீர்க்கதரிசனங்களில், மேற்கண்டவைகள் ஒரு சில வசனங்களே. பைபிளின் நம்பகத்தன்மையை நிருபிப்பதற்கு இந்த தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல் சான்றாகும். இவைகளில் ஒரு இறைச்செய்தி உள்ளது. இவைகளில் தேவன் தம்மையும், தம்முடைய அன்பையும் நமக்காக வெளிப்படுத்தியுள்ளார். இவைகளுக்கு நாம் ஏதோ ஒருவகையில் பதில் சொல்லவேண்டும். உங்களின் பதில் இவ்வசனங்களுக்கு எதிராகவோ அல்லது அங்கீகரிக்கும் வகையிலோ இருக்கலாம். ஆனால், அன்புடன் நாம் அவர் பக்கம் திரும்ப‌ இயேசுவின் செய்தி உதவும்.

இயேசு கூறியதை நினைவில் வைக்கவும்:

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். (வெளிப்படுத்தின விசேஷம் 3:20)

அவர் உங்கள் உள்ளத்தில் வர நீங்கள் அனுமதிப்பீர்களா?

ஆங்கில மூலம்: The Challenge

"ஒரு தூது"  இதர கட்டுரைகள்