பாரான் மலையின் அக்னி பிரமாணம் கட்டுரைக்கு மறுப்பு
(பாரான் மலையின் அக்னி பிரமாணம் கட்டுரைக்கு பதில் 4 (Part 4 of 4))
இது தான் இஸ்லாம் தளம் "பாரான் மலையின் அக்னி பிரமாணம்" என்று ஒரு கட்டுரையை எழுதினார்கள். அதில் கீழ் கண்ட வாதங்களை முன் வைத்தார்கள்.
1. பைபிளில் வரும் "பாரான்" என்ற இடம், அரேபியாவின் "மக்கா" ஆகும்.
2. உபாகமம் 33:1-2 வசங்களில் சொல்லப்பட்டவர் முகமது ஆவார்.
3. ஆபகூக் 3:3ல் சொல்லப்பட்ட "பரிசுத்தர்" முகமது ஆவார்.
இஸ்லாமியர்கள் பொதுவாக கொண்டுள்ள இந்த மூன்று தவறான வாதங்களுக்கு பதில் கொடுத்துவிட்டு, கடைசியாக "இது தான் இஸ்லாம்" தள கட்டுரைக்கு பதில் தருகிறேன். எனவே, என் பதிலை(மறுப்பை) கீழ் கண்ட நான்கு தனி கட்டுரைகளாக முன்வைக்கிறேன்.
1. பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல.
2. உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது, "கர்த்தரையா - யேகோவா" அல்லது "முகமதுவையா" ?
3. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடும் "பரிசுத்தர்" யார்?
4. இது தான் இஸ்லாம் கட்டுரை "பாரான் மலையில் அக்னி பிரமாணம்" : ஈஸா குர்-ஆன் பதில் (மறுப்பு)
4. இது தான் இஸ்லாம் கட்டுரை "பாரான் மலையில் அக்னி பிரமாணம்" : ஈஸா குர்-ஆன் பதில் (மறுப்பு)
பாரான் மலையில் அக்னி பிரமாணம் ஜி.என்
இஸ்மவேலை கர்த்தர் ஆசிர்வத்தார் என்பது அவரது சந்ததியில் உருவாகப்போகும் ஒரு உலகப் புரட்சியின் அடையாளத்தைக் குறிக்கும் என்று சொல்லி வருகிறோம்.
அந்த உலகப் புரட்சிக்கு வித்திட்டவர் தான் இஸ்மவேலின் வம்சத்தில் வந்த தீர்க்கதரிசி முஹம்மத் அவர்கள்.
ஈஸா குர்-ஆன்:
முகமது இஸ்மவேல் வம்சத்தில் வரவில்லை என்றும், இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் இபின் இஷாக் மற்றும் ஹதீஸ்கள் சொல்லும் முகமதுவின் வம்ச விவரங்களின் படி இஸ்மவேல் முகமதுவின் மூதாதையர் அல்ல என்பதை கீழ்கண்ட கட்டுரையை படித்தால் தெரிந்துக்கொள்ளலாம்.
1. இஸ்மாயில் வம்சத்தில் முகமது வரவில்லை பாகம்-1
2. இஸ்மாயில் வம்சத்தில் முகமது வரவில்லை பாகம்-2
ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
முஹம்மத் பற்றியத் தகவல்களே அனேக கிறிஸ்த்தவர்களுக்கு எட்டவில்லை. ஓரளவு தெரிந்துள்ளவர்கள் கூட ஊடகங்கள் உருவாக்கி வைத்துள்ள தப்பும் தவறுமான அந்தக் கருத்தையே கொண்டுள்ளார்கள். அதையே பிற மீடியாக்களில் பிரதிபளிக்கின்றார்கள்.
உலகில் எத்துனையோ தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கின்றோம். அந்த மனப்பான்மையில் முஹம்மத் அவர்களின் வரலாற்றைப் படித்தால் கூட போதும். அங்கு அவர்களுக்கு அதீத உண்மைகள் விளங்கி விடும்.
ஈஸா குர்-ஆன்:
உண்மை, இதைத் தான் நானும் சொல்கிறேன். முகமது வாழ்க்கையைப் பற்றி எல்லாம் தெரிந்துக்கொள்ளுங்கள். குர்-ஆன் மூலம் முகமது பற்றி அதிகம் தெரிந்துக்கொள்ளமுடியாது. ஹதீஸ்கள் ஒருவகையில் உதவி செய்யும்.
இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் முக்கியமாக இபின் இஷாக் (ஹதிஸ்களுக்கு முன்பு இவர் முகமதுவின் சரிதையை தொகுத்தார்) தொகுப்பை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். (Read Sirat Rasoul Allah by Ibn Ishaq, Ibn Ishaq and Sirah Rasul Allah at Wikipedia)
இபின் கதிர் உடைய விரிவுரையை (Commentary) இங்கு படிக்கவும்.
முகமதுவின் வாழ்க்கை முழுவதும் அறிந்துக்கொள்ளும்படி ஏதாவது அவரது வாழ்க்கை சரிதையை சொல்லும் புத்தகம் அல்லது தளம் தரமுடியுமா?
இஸ்லாமிய புத்தகமோ அல்லது தளத்திலோ முகமதுவின் வாழ்க்கையைப் பற்றி படித்தால், அங்கு அவரின் ஒரு பக்கம் தான் தெரியும். அதே போல நாத்தீக அல்லது இஸ்லாமல்லாத தளத்தில் முகமதுவின் வாழ்க்கை சரிதையை படித்தால், அங்கு முகமதுவின் இன்னொரு பக்கம் தெரியும்.
எனவே, இந்த கட்டுரையை படிக்கும் அன்பர்கள் யாராக இருந்தாலும் சரி, நான் மேலே சொன்ன இரண்டு வகையாக தளங்களை அல்லது புத்தகங்களை படிக்கும்படி உட்சாகப்படுத்துகிறேன்.
நான் சொன்னது முகமதுவிற்கு மட்டுமல்ல, இயேசுவிற்கும் பொருந்தும். (இயேசுவைப் பற்றிய விமர்சன தளங்களில் இயேசு தெய்வம் இல்லை, அவர் நபி மட்டும் தான் என்று சிலரும், அவர் சாதாரண மனிதர் என்று சிலரும், அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லை என்று சிலரும் சொல்லமுடியுமே தவிர, அவரின் நடத்தையைப் பற்றி கொலைசெய்தார், கொள்ளையடித்தார் என்று யாரும் விரல் நீட்டமுடியாது).
இந்த தொடுப்பில் பல புத்தகங்களை காணலாம் - Islamic Books at Answering Islam
ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
மரியாளைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் குர்ஆன் ஏன் இவ்வளவு விரிவாக பேசுகின்றது என்பதை சிந்திக்கத் துவங்கினால் அருகருகே வாழ்ந்த இஸ்மவேல் - இஸ்ரவேல் சந்ததிகளின் வாழ்க்கையோட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், விளைவுகள், கிறிஸ்த்தவக் கொள்கையை மறுப்பதற்கான காரணங்கள் என்று அனேக ஆய்வுக் களங்கள் அங்குத் தென்படும்.
ஈஸா குர்-ஆன்:
தன்னுடைய முந்தைய கட்டுரைகளில் இஸ்மவேலும் அவர் வம்சமும் மக்காவில் வாழ்ந்ததாக எழுதினார் (குர்-ஆன் படி) நம் இஸ்லாமிய சகோதரர். இப்போது என்னவோ இஸ்ரவேலர்களும், இஸ்மவேலர்களும் (பைபிள் படி) "அருகருகே" வாழ்ந்தார்கள் என்று எழுதுகிறார்.
உண்மையிலேயே இஸ்மவேல் வாழ்ந்த பாரான் வனாந்திர பகுதி பைபிள் சொல்வது போல, இப்போது இவர் சொல்வதுபோல (ஏற்றுக்கொண்டது போல) அருகருகே உள்ளது என்றால், கானானுக்கு 1000 கிலோ மீட்டருக்கு அதிகமாக தூரம் உள்ள மக்காவில் ஆபிரகாமும், இஸ்மவேலும் காபாவை புதுப்பித்ததாக குர்-ஆன் சொல்வதும், ஹதீஸ்கள் சொல்வதும் தவறானது என்று சொல்கிறாரா?
ஏதாவது ஒன்றை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்:
1. ஆபிரகாமும், இஸ்மவேலும் காபாவை கட்டினார்கள், இஸ்மவேல் அங்கேயே வாழ்ந்தார் என்றுச் சொன்னால், பைபிள் சொல்லும் இஸ்மவேல் விவரங்கள் அனைத்தும் தவறு என்று இவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்? (அல்லது)
2. பைபிள் சொல்லும் விவரங்கள்(பாரானில் இஸ்மவேல் அருகருகே வாழ்ந்தார், எகிப்துபெண்ணை திருமணம் செய்தார், ஆபிரகாம் அடக்கத்திற்கு வந்தார் etc…) சரியானது என்று நம்புவீர்களானால், ஆபிரகாமும் இஸ்மவேலும் காபாவை கட்டியதாகச் சொல்லும் விவரங்கள் தவறானது அல்லது ஒரு கட்டுக்கதை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
அந்தப் பயணத்திற்காக அவர்களை அழைக்கின்றோம். அதற்கு வழிகாட்டும் பைபிள் வசனங்களில் இரண்டை உங்கள் பார்வைக்கு வைத்து தொடர்கின்றோம்.
தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையு முன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசிர்வதித்த ஆசிர்வாதமாவது.
கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது. உபாகமம் 33: 1.2
பரிசுத்தர் பாரான் மலையிலிருந்தும் வந்தார். ஆபகூக் 3:3
பைபிளில் குறிப்பிடப்படும் இந்த இரண்டு வசனங்களில் 'பாரான் மலை' ப்பற்றிப் பேசப்படுகின்றது.
'கர்த்தர் பாரான் மலையில் எழுந்தருளி' என்று உபாகாமமும், 'பரிசுத்தர் பாரான் மலையிலிருந்து வந்தார்' என்று ஆபகூக்கும் கூறும் இந்த பாரான் மலைப்பற்றியும், அங்கு தோன்றிய தீர்க்கதரிசிப் பற்றியும் பார்க்க வேண்டும்.
ஈஸா குர்-ஆன்:
உங்களின் இந்த வாதத்திற்காகவே, மூன்று கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது. இந்த கட்டுரைகளை உங்களின் வாதங்களுக்கு மறுப்பாக கீழே கொடுக்கிறேன்.
கட்டுரை-1: பைபிளின் பாரான் அரேபியாவின் மக்கா அல்ல.
கட்டுரை-2: உபாகமம் 33:1-2 குறிப்பிடுவது கர்த்தரை, முகமதுவை அல்ல.
கட்டுரை-3: ஆபகூக் 3:3 குறிப்பிடுவது கர்த்தரை, முகமதுவை அல்ல.
ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
''தேவன் பிள்ளையுடன் இருந்தார். அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து வில்வித்தையிலே வல்லவனானான்.
அவன் பாரான் வராந்தரத்திலே குடியிருக்கையில் அவனுடைய தாய் எகிப்து தேசத்தாலாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம் பண்ணி வைத்தாள்''. (ஆதியாகமம் 21:10 முதல் 21:21வரையுள்ள வசனங்கள்)
பாரான் வனாந்தரத்தில் குடியிருந்த ஆகார் மற்றும் இஸ்மவேல் அவர்களின் வாழ்க்கை இறுதி வரை அதேப் பகுதியில் கழிகின்றது. இஸ்மவேல் அந்தப் பகுதியில் வைத்துதான் எகிப்து தேசத்துப் பெண்ணையும் திருமணம் செய்கின்றார். அவரது சந்ததிகள் அங்குதான் தோன்றுகின்றன.
ஈஸா குர்-ஆன்:
ஒரு நிமிடம் நில்லுங்கள், "பைபிள் சொல்லும் விவரங்கள், அதாவது ஆகார் இஸ்மவேலுக்கு எகிப்து தேசத்து பெண்ணை திருமணம் செய்வித்தார்கள்" என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
அதை நீங்கள் நம்புகிறீர்கள் என்பதை உங்கள் வார்த்தைகள் சொல்கின்றன. அப்படியானால், ஹதீஸ்கள் சொல்லும் விவரங்கள் பொய்யா?
ஹதீஸ் படி ஆகார் இஸ்மவேலுக்கு ஜுர்ஹும் குல பெண்ணை திருமணம் செய்வித்ததாக உள்ளதே! இது தவறான கருத்தா?
கீழே உள்ள புகாரி ஹதீஸ் சொல்கிறது "ஆகார் ஜம்ஜம் தண்ணீர் ஊற்றுப் பக்கத்தில் இருக்கும்போது "ஜுர்ஹும்" குல மக்கள் கூட ஆகாரிடம் அனுமதிகேட்டு, அவர்களுடனே தங்கினார்கள், மறுபடியும் அவர்கள் பெண்ணையே இஸ்மவேல் திருமணம் செய்தார் என்று. இதை பற்றி உம் கருத்து என்ன?
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3365
. . .
உடனே அவர் அந்தத் தண்ணீரைக் குடிக்கலானார். அவரின் பால் அவரின் குழந்தைக்காகச் சுரந்த வண்ணமிருந்தது. அப்போது ஜுர்ஹும் குலத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் பள்ளத்தாக்கின் மையப் பகுதிக்கு வந்தபோது பறவையொன்றைக் கண்டார்கள். அதை அவர்கள் (இதுவரை அப்பகுதியில் இல்லாத) புதுமையான ஒன்றாகக் கருதினார்கள். எனவே, 'பறவை நீர் நிலையின் அருகில் தானே இருக்கும்" என்று பேசிக் கொண்டார்கள். தங்கள் தூதரை அவர்கள் அனுப்பி வைக்க, அவர் சென்று பார்த்தபோது அவர்கள் (இஸ்மாயீல், அவரின் தாயார்) இருவரும் நீர் நிலை அருகே இருக்கக் கண்டார். உடனே, தம் குலத்தாரிடம் வந்து அவர்களுக்கு விஷயத்தைத் தெரிவித்தார். அவர்கள் (அன்னை) ஹாஜர்(அலை) அவர்களிடம் சென்று, 'இஸ்மாயீலின் அன்னையே! நாங்கள் உங்களுடன் இருக்க.. அல்லது உங்களுடன் வசிக்க... எங்களக்கு அனுமதியளிப்பீர்களா? என்று கேட்டார்கள். (அவர்கள் அனுமதியளிக்கவே அங்கேயே வசிக்கலானார்கள்.) ஹாஜருடைய மகன் (இஸ்மாயீல்(அலை) அவர்கள்) பருவ வயதையடைந்தார். ஜுர்ஹும் குலத்தாரிலேயே ஒரு பெண்ணை மணந்தார். . . .
கிறிஸ்தவர்கள் வழியிலேயே சென்று அவர்களுக்கு இஸ்லாமின் செய்தியைச் சொல்லலாம் என்று நினைக்கிறீர்கள்? ஆனால், ஒன்றை கவனிக்கவும். பைபிளின் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் போது, இஸ்லாமின் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றை நீங்கள் மறுதலிக்கிறீர்கள் என்று பொருள்.
ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
இப்போது கவனமாக பாருங்கள்.
'கர்த்தர் சீனாய் மலையில் எழுந்தருளி' என்பது சீனாய் மலையில் வைத்து மோசே அவர்களுக்கு வேதம் வழங்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றது. அதன் பின் கர்த்தர் பாரான் மலையில் பிரகாசித்தார் என்று வருகின்றது.
மோசேக்கு வேதம் (கட்டளைகள்) வழங்கப்பட்ட பிறகு பாரான் மலையில் கர்த்தரின் பிரகாசம் வரவேண்டும். மோசேயின் காலத்திலிருந்து இயேசுவின் காலம் வரை எத்துனையோ தீர்க்கதரிசிகள் தோன்றியுள்ளனர். அவர்களில் ஒருவரும் பாரான் மலையில் தோன்றியதாகக் கூறப்படவில்லை. இஸ்மவேலர்களில் தோன்றியதாகவும் கூறப்படவில்லை. மோசேமுதல் இயேசுவரை வந்த தீர்க்க தரிசிகள் இஸ்ரவேலர்களில் தான் தோன்றியுள்ளனர்.
இயேசுவின் காலம் வரை பாரான் மலையிலிருந்து கர்த்தரின் பிரகாசம் தோன்றவில்லை என்றால் இயேசுவிற்கு பின் வெகு நிச்சயமாக அந்தப் பிரகாசம் தோன்றியாக வேண்டும். இல்லையெனில் மோசேயின் ஆசிர்வாதம் பொய்யாகி விடும்.
ஈஸா குர்-ஆன்:
1. பாரான் என்பது மக்கா அல்ல என்பதை நான் என் கட்டுரையில் விளக்கியுள்ளேன் - (இங்கே படிக்கவும்).
2. மோசே இஸ்ரவேலர்களை ஆசீர்வதிக்கும் போது, எங்கொ உள்ள மக்காவில்(இஸ்லாம் படி) பாரானில் ஒரு நபி தோன்றினால், இஸ்ரவேலர்களுக்கு எப்படி அது ஆசீர்வாதமாக மாறும்?
3. மோசே இந்த வசனத்தில் "வந்தார்" என்று நடந்து முடிந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசுகிறார். "வருவார்" என்று எதிர்காலத்தைப் பற்றி பேசவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.
ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
முஹம்மத் அவர்கள் இஸ்மவேலின் வம்சத்தில் தோன்றியவர்கள். பாரான்மலை (ஹிரா மலை) உள்ள மக்காவில்தான் அவர்கள் பிறந்தார்கள். பாரான் மலையிலிருந்து... என்ற வாசகத்திற்கு ஒப்ப பாரான் - ஹிரா மலையில் இருக்கும் போதுதான் அவர்கள் தீர்க்கதரிசியாக அறிவிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு முன்பும் - பின்பும் இஸ்மவேல் சந்ததிகளில் யாரும் தன்னை தீர்க்கதரிசி என்று வாதிட்டதில்லை என்ற வரலாறை ஊன்றி கவனித்தால் கர்த்தரின் பிரகாசம் பாரான் மலையில் தோன்றியது என்ற மோசேயின் ஆசிர்வாதம் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பே என்பதை சந்தேகமின்றி விளங்கலாம்.
ஈஸா குர்-ஆன்:
இதைத் தான் நாங்களும் கேட்கிறோம். இஸ்மவேல் வம்சத்தில் எப்படி ஒரு தீர்க்கதரிசி என்று?
"கர்த்தரின் பிரகாசம் பாரான் மலையில் தோன்றியது" என்று நீங்கள் குறிப்பிட்ட வார்த்தைகளில் "தோன்றியது" என்ற வார்த்தையை கவனிக்கவும். இது எதிர் காலத்தில் வரும் ஒரு நபியைப் பற்றிச் சொல்லவில்லை. ஏற்கனவே தோன்றிய கர்த்தரின் பிரகாசம் பற்றி பேசுகிறது.
ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
மட்டுமின்ற, அந்த அறிவிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகங்களை இன்னும் ஊன்றி கவனித்தால் முஹம்மத் பற்றிய முன்னறிவிப்பு இன்னும் ஆழமாக விளங்கும்.
கர்த்தரின் பிரகாசம் பாரான் பிரதேசத்தில் தோன்றும் என்று இல்லாமல் பாரான் மலையில் தோன்றும் என்று கூறப்படுகின்றது.
பாரான் மலையில் வைத்தே முஹம்மத் அவர்களுக்கு முதலாவது வேத வசனங்கள் அறிவிக்கப்பட்டன. அந்த வேதத்தின் வாசகங்களில் அறிவு பிரகாசம் இருந்தது.
இன்னும் கவனியுங்கள்.
பரிசுத்தர் பாரான் மலையிலிருந்து வந்தார் என்று ஆபகூக் கூறுகின்றது. முஹம்மத் அவர்கள் பாரான் மலையில் இருந்த போதுதான் கேப்ரீல் (ஜிப்ரீல்) என்ற தேவதூதர் முஹம்மதிடம் வந்து வேத வசனங்களை வெளிபடுத்தினார். கேப்ரீலை இஸ்லாம் பல்வேறு இடங்களில் 'அவர் பரிசுத்தர்' என்று சொல்லிக் காட்டுகின்றது.
பரிசுத்தமான தேவத்தூதரான கேப்ரீல் பிரகாசமான வேத வசனங்களுடன் முஹம்மத் அவர்களை பாரான் மலையில் சந்தித்தார் என்பதை சிந்திக்கும் போது முஹம்மத் பற்றிய முன்னறிவிப்பின் எதார்த்த் தெளிவாக தெரியும்.
ஈஸா குர்-ஆன்:
// ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
...
பரிசுத்தர் பாரான் மலையிலிருந்து வந்தார் என்று ஆபகூக் கூறுகின்றது. முஹம்மத் அவர்கள் பாரான் மலையில் இருந்த போதுதான் கேப்ரீல் (ஜிப்ரீல்) என்ற தேவதூதர் முஹம்மதிடம் வந்து வேத வசனங்களை வெளிபடுத்தினார். கேப்ரீலை இஸ்லாம் பல்வேறு இடங்களில் 'அவர் பரிசுத்தர்' என்று சொல்லிக் காட்டுகின்றது.//
என்ன அருமையாக விளக்கம் தருகிறீர் நண்பரே!
பைபிளில் வரும் "பரிசுத்தர்" என்ற வார்த்தைக்கு, குர்-ஆனில் வரும் "பரிசுத்தர்" என்ற வார்த்தை யாரை குறிக்குமோ அதற்கு ஒப்பிடுகிறீரோ?
ஒப்பிடுவதில் இது சரியான ஒப்பிடும் முறையா? என்று இக்கட்டுரையை படிக்கும் அன்பர்கள் முடிவுசெய்யட்டும்.
இவர் சொல்வது எப்படி உள்ளது என்றால், ஒரு குர்-ஆன் வார்த்தையை எடுத்துக்கொண்டு, அதற்கு என்ன பொருள்? அது யாரை குறிக்கும்? என்று கேட்டால், இராமாயணத்தில் இந்த வார்த்தை வரும் இடத்தில் யாரை குறிப்பிடப்படுமோ அவர் தான் என்றுச் சொல்வதுபோல் உள்ளது.
பைபிளில் அல்லது குர்-ஆனில் ஒரு வார்த்தைக்கு பொருள் கூறவேண்டுமானால்:
1. வார்த்தை எடுத்த அதே வேதத்தில், அந்த வார்த்தை எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது?
2. இந்த வார்த்தை வரும் இதர இடங்கள், அதன் சூழல் என்ன?
3. அந்த வார்த்தைக்கு முந்தைய வசனங்கள் யாரை குறிக்கின்றன என்று பார்க்கவேண்டுமே ஒழிய! இவரைப் போல பைபிளின் வார்த்தைக்கு குர்-ஆனில் பொருள் தேடக்கூடாது?
குர்-ஆனில் வேண்டுமானால், "பரிசுத்தர்" என்றால் "கேப்ரியல்" தூதன் என்று பொருள் வரலாம் தவறில்லை. அதற்காக உலக எல்லா வேதங்களிலும் "பரிசுத்தர்" என்றால் "கேப்ரியல்" தூதன் தான் என்று பொருள் கூறுவது வேடிக்கையானது.
ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
பாரான் மலையிலிருந்து தோன்றும் தீர்க்கதரிசிக்கு அக்கினிமயமான பிரமாணத்தை கர்த்தர் தம் வலக்கையால் வழங்குகிறார்.
அக்கினிமயமான பிரமாணம் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். கிறிஸ்த்தவர்கள் அடிக்கடி சொல்லி வரும் 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு' என்ற கொள்கைக்கு மாற்றமான மனித உரிமைகளை மிக சரியாக பாதுகாக்கும் குற்றவியல் சட்டங்களைக் கொண்ட வேதமே முஹம்மத் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அரசு அமைத்து, அரசியல் சாசன சட்டத்தை வகுத்து குடிமக்களின் அமைதியான வாழ்விற்கு வழிவகுத்தது இஸ்லாம். இஸ்லாத்தின் அரசியல் குற்றவியல் சட்டங்களில் கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல், உயிருக்கு உயிர் என்ற அக்கினி பிரமாணம் இருக்கின்றது. மனித உரிமைக்கு எதிராக ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடினமான தண்டனையை அரசு வழங்க வேண்டும். சம்மந்தப்பட்டவர்கள் (பாதிப்பை ஏற்படுத்தியவரும் - பாதிப்புக்குள்ளானவரும்) சமரசம் செய்துக் கொள்ளாத பட்சத்தில் குற்றவாளிக்கு எவ்வித சலுகையும் அரசு தரப்பிலிருந்து வரக்கூடாது. தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும் போன்ற (குற்றவாளிகளுக்கு கடினமாகவும் - பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாகவும்) உள்ள சட்டங்களையே கேப்ரீல் தேவன் புறத்திலிருந்து முஹம்மதுக்கு வழங்கினார்.
இது அன்றைக்கிருந்த குற்றங்களை இழைத்து பழகிப்போன, அதையே வாழ்க்கையாக கருதிக் கொண்டிருந்தவர்களுக்கு 'அக்கினி'யாகவே தெரிந்தது.
இந்த அளவிற்கு மோசேயின் ஆசிர்வாதம் முஹம்மத் அவர்களாலேயே - கேப்ரீல் - பரிசுத்தர் கொண்டு வந்த - கர்த்தரின் அக்னி பிராணமத்தாலேயே நிறைவேறியது.
ஈஸா குர்-ஆன்:
//ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
. . .
அக்கினிமயமான பிரமாணம் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். கிறிஸ்த்தவர்கள் அடிக்கடி சொல்லி வரும் 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு' என்ற கொள்கைக்கு மாற்றமான மனித உரிமைகளை மிக சரியாக பாதுகாக்கும் குற்றவியல் சட்டங்களைக் கொண்ட வேதமே முஹம்மத் அவர்களுக்கு வழங்கப்பட்டது.//
ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டு என்று மோசே கட்டளையிட்டாரோ? இல்லையே! பின் ஏன் நீர் இயேசு சொன்ன கட்டளைகளை மோசேவோடு சம்மந்தப்படுத்தி சொல்கிறீர்?
இவற்றைப் பற்றி என் கட்டுரையில் தெளிவாக விவரித்துள்ளேன்.
எந்த நாட்டில் நீங்கள் சொல்கிறபடி "குர்-ஆனின்" மனித உரிமைகளை பாதுகாக்கும் சட்டம் அமுலில் உள்ளது என்று இந்த கட்டுரைகளை படிக்கும் அன்பர்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நான் ஏன் இக்கேள்வியை கேட்கிறேன் என்றால், நான் ஒரு இஸ்லாமிய நாட்டை குறிப்பிட்டு அங்கு இப்படி மனித உரிமைகள் சட்டத்தால் மீறப்படுகிறதே என்று சொல்வேனேயாகில், உடனே சொல்வீர்கள் " நீங்கள் சொன்ன நாட்டில் உண்மை குர்-ஆன் சட்டம் அமுலில் இல்லை" என்று.
எனவே, நீங்களே நாட்டை சொல்லிவிட்டால் எல்லாருக்கும் தெளிவாக புரியும் அல்லவா? அதற்காகத்தான் கேட்டேன். இஸ்லாம் சட்டத்தை முழுவதும் பின்பற்றும் ஒரு நாடும் இல்லை என்று சொல்வீர்களானால், ஏன் இஸ்லாமிய நாட்டிலேயே "குர்-ஆன் சட்டம்" நடைமுறையில் இல்லை? நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு சாத்திய கூறுகள் இல்லையா? அல்லது நடைமுறைக்கு ஒத்துவராதா? ஏதாவது ஒரு நாட்டின் பெயரைச் சொல்லுங்கள்? [1]
ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
பைபிளை வேதம் என்று நம்புபவர்கள் அந்த நம்பிக்கையில் உறுதியாக இருந்தால் உபாகபமம் - ஆபகூக் ஆகமங்களின் வசனத்தை சிந்தித்தால் இஸ்மவேலின் வம்சத்தில் - பாரான் வனாந்தரத்தில் தோன்றி - பாரான் மலையிலிருந்த போது கர்த்தரின் வேத வசனங்களைப் பெற்று தீர்க்கதரிசியாகி தேவனுக்காக உழைத்த முஹம்மத் அவர்களின் பக்கமும் அவர்கள் கொண்டு வந்த வேதமாகிய குர்ஆனின் பக்கமும் முகம் திருப்புவார்கள்.
முஹம்மத் அவர்கள் குறித்து இன்னும் பல முன்னறிவிப்புகள் பைபிளில் இருந்தாலும் அவற்றை நாம் இங்கு எழுதப்போவதில்லை. இது இஸ்மவேலின் வரலாற்றை கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்ட அவரையும், ஆப்ரகாம் - இஸ்மவேல் இருவரும் கர்த்தரிடம் வேண்டிக் கொண்ட (குர்ஆன்) படி பாரான் மலையில் வெளிபட்டவற்றையும் எடுத்துக் காட்டவே இந்தக் கட்டுரை.
இயேசுவின் வாழ்க்கை வரலாறு தொடருக்கு அவர்கள் எழுதும் மறுப்பின் நிலவரங்கள் தொடர்ந்து அலசப்படும் தேவன் நாடட்டும்.
.........................................................................
நமக்கு மறுப்பளித்து வரும் சகோதரர் கடந்தக் கட்டுரைக்கு இரண்டு பாகங்களாக மறுப்பு அல்லது பதில் அளித்துள்ளார். அந்தக் கட்டுரைகளுக்கான தொடுப்பை கீழே கொடுத்துள்ளோம். வாசகர்கள் அந்தக் கட்டுரைகளை அவசியம் படிக்க வேண்டும். நமது வாதங்களுக்கு அவர்களின் பதில் எந்த விதத்தில் உள்ளது என்பதை உங்களால் அங்கு கண்டுக் கொள்ள முடியும்.
ஈஸா குர்-ஆன்:
இந்த கட்டுரைக்கு நான் எழுதிய முதல் மூன்று கட்டுரைகள் பாரான் என்பது மக்கா அல்ல, மற்றும் பைபிளின் எந்த வசனத்திலும் "முகமது" பற்றி ஒரு வார்த்தையும் இல்லை என்பதை தெளிவாகச்சொல்கிறது,
பாரான் மலையின் அக்னி பிரமாணம் கட்டுரையை இங்கு படிக்கலாம்
அடிக்குறிப்புகள்:
[1]மனித உரிமைகள் குறைந்தபட்சம் மக்கா உள்ள நாட்டில் பாதுகாக்கப்படுகிறதா என்று தேடும் போது கிடைத்த பதில். சவுதி அரேபியாவில் ஒரு கொலை செய்துவிட்டால், கொலை செய்யப்பட்டவன் என்ன "ஜாதி" என்று பார்த்து தண்டனை கொடுப்படுகிறதாம்.
Saudi Arabia
In Saudi Arabia, when a person has been killed or caused to die by another, the prescribed blood money rates are as follows[7]:
100,000 riyals if the victim is a Muslim man
50,000 riyals if a Muslim woman
50,000 riyals if a Christian man
25,000 riyals if a Christian woman
6,666 riyals if a Hindu man
3,333 riyals if a Hindu woman
Source: en.wikipedia.org/wiki/Diyya
இப்படி கொடுக்கும்படி குர்-ஆனில் இல்லை என்று சொல்வது என் காதில் விழுகிறது. புனித நகரம் என்றும் அல்லாவின் வீடு உள்ள நாட்டில் இப்படிப்பட்ட சட்டங்கள் இருப்பதால், அல்லாவிற்கு கெட்ட பெயர் இல்லையா?
மூலம்: http://isakoran.blogspot.in/2007/09/blog-post.html
தமிழ் முஸ்லிம் தளத்திற்கு அளித்த இதர மறுப்புக்கள்
உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்