பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்

(பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் குற்றச்சாட்டிற்கு, ஈஸா குர்‍ஆனின் பதில்)

முன்னுரை: 

தமிழ் நாட்டில் மிகவும் புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன்(P.J. or பி.ஜே) அவர்கள்,  "இயேசு இறைமகனா?" என்ற புத்தகம் எழுதினார்கள். அதில் அவர் பைபிளைப் பற்றி பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். இந்த புத்தகத்தில் அவர் "அப்போஸ்தலர் பவுலைப் பற்றி கீழ் கண்டவாறு " எழுதுகிறார்.

பவுல் வாக்கு மூலம்

இயேசுவுக்குப் பின் முக்கடவுள் கொள்கையை உருவாக்கி கிறித்தவ மார்க்கத்தில் நுழைந்தவர் பவுலடிகள் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இயேசு கிறிஸ்துவின் தூய மார்க்கத்தைச் சுயமாக மாற்றியமைத்தவர் இவரே".

கர்த்தருக்கு சித்தமானால், "இயேசு இறைமகனா" என்ற புத்தகத்தில் பி.ஜே அவர்களது எல்லா கிறிஸ்தவ சம்மந்தப்பட்ட கருத்துக்களுக்கும் பதில் அளிக்க முயற்சி செய்வேன். முதலாவதாக, பவுல் பற்றி பி.ஜே அவர்கள் சொல்லும் கருத்துக்கு என் பதிலை இக்கட்டுரையில் தருகிறேன். 

பி.ஜே அவர்கள் பவுல் மீது வைக்கும் குற்றச்சாட்டு:

இயேசுவிற்கு பிறகு, முக்கடவுள் (Trinity – திரித்துவ) கொள்கையை உருவாக்கி கிறிஸ்தவத்தில் நுழைத்தவர் “ 

“திரித்துவ கொள்கையை உருவாக்கியது” பவுல் என்ற முஸ்லீம்களின் வாதம், தவறானது மற்றும் ஆதாரமற்றது . 

இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே பல வித்தியாசங்கள் உண்டு. அடிப்படை கோட்பாடுகளிலேயே இவ்விரண்டும் வேறுபடுகின்றன. 

ஆனால், இஸ்லாமியர்கள் கீழ் கண்ட கருத்தை உடையவர்களாக இருக்கிறார்கள்:

1. இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி மட்டுமே. 

2. இயேசுவின் போதனைக்கும் முகமதுவின் போதனைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இருவரும் ஒரே செய்தியைத் தான் போதித்தார்கள்.

3. அப்போஸ்தலர் பவுல் கிறிஸ்தவத்தை கெடுக்க‌ இயேசு சொல்லாத‌, பைபிளில் இல்லாத "திரித்துவ கொள்கையை" உருவாக்கி கிறிஸ்தவத்தில் நுழைத்தார்.

இயேசுவின் போதனையும், முகமதுவின் போதனையும் ஒன்றல்ல என்பதை கீழ் கண்ட கட்டுரையை படிப்பவர்கள் அறிந்துக்கொள்ளலாம். 

இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி

திரித்துவ கொள்கை பைபிளின் உயிராகும், அது பவுலின் கற்பனை அல்ல‌ 

இக்கட்டுரையில் "திரித்துவ கொள்கை" என்றால் என்ன என்று நாம் பார்க்கப்போவதில்லை. புதிய ஏற்பாடு திரித்துவத்தைப் பற்றி என்ன சொல்கிறது, இயேசு என்ன சொன்னார், இயேசுவின் சீடர்கள் என்ன சொல்கிறார்கள், கடைசியாக பவுல் என்ன சொல்கிறார் என்று பார்க்கப்போகிறோம். பவுல் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லையானாலும், இயேசுவும், அவர் சீடர்களும் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தாலே போதும், பி.ஜே அவர்கள்(இஸ்லாமும்) பவுலின் மீது சாற்றும் குற்றம் ஆதாரமற்றது என்பது விளங்கும் . 

[பழைய ஏற்பாட்டில் திரித்துவம்: பழைய ஏற்பாடு திரித்துவத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை தனி கட்டுரையில் காணலாம். இப்போதைக்கு, பழைய ஏற்பாட்டில் இதைப் பற்றி அறிய கீழ்கண்ட கட்டுரைகள் உதவும். 

An Explanation of the Trinity for Muslims 

THE TRINITY - From Biblical Reason and from the Old Testament

Trinity in the Old Testament and Dialogue with Jews and Muslims 

The Trinity – More than 50 Articles 

புதிய ஏற்பாட்டில் திரித்துவத்தைப் பற்றி மிகவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது, இயேசுவும் ஆணித்தரமாக சொல்லியுள்ளார். 

1. புதிய ஏற்பாட்டில் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர்: 

புதிய ஏற்பாட்டில் பிதா, குமாரன் மற்றும் பரித்தஆவியானவர் என்று பல வசனங்கள் வருவதை பார்க்கலாம். இயேசுவும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறார், இயேசுவின் சீடர்களும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். கடைசியாக பவுல் இதைப் பற்றி எழுதுகிறார். 

ஆனால், முஸ்லீம்கள், இயேசு சொல்வதையும், பவுல் அல்லாத மற்ற சீடர்கள் சொல்வதையும் காற்றிலே விட்டுவிட்டு, பவுல் தான் இக்கொள்கையை உருவாக்கி கிறிஸ்தவத்தில் நுழைத்தார் என்று தவறான மற்றும் ஆதாரமற்ற கருத்தையும் உடையவர்களாக இருக்கிறார்கள். 

1.1 நற்செய்தி நூல்களில் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் விவரங்கள்: 

முஸ்லீம்களின் கருத்து தவறான கருத்தாகும். இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியது அப்போஸ்தலன் பவுல் அல்ல, அதை எழுதியவர்கள் இயேசுவின் சீடர்கள் ஆவார்கள். 

மூன்று நற்செய்தி நூல்களில் பிதாவும், குமாரனும், பரிசுத்த ஆவியானவரும் ஒரே இடத்தில் இடைபடும் நிகழ்ச்சி சொல்லப்பட்டுள்ளது. இயேசு ஞானஸ்நானம் பெற்று கரையிலிருந்து ஏறிவரும் போது பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல அவர் மீது இறங்குகிறார், மற்றும் வானத்திலிருந்து பிதாவாகிய தேவன் "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன்" என்றுச் சொல்லும் சத்தம் வானத்திலிருந்து வருகிறது. 

இந்நிகழ்ச்சி மத்தேயு (3:16-17), மாற்கு(1:10-11) மற்றும் லூக்கா(3:21-22) என்ற நற்செய்தி நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இவைகளை பவுல் எழுதவில்லை என்பதை முஸ்லீம்கள் நம்பவேண்டும். வேண்டுமானால், முஸ்லீம்களின் வழக்கமான பதிலாக சொல்லப்படும் "ஆரம்ப காலத்தில் இந்நிகழ்ச்சி நற்செய்தி நூல்களில் இல்லை, பின்னாட்களில் இந்நிகழ்ச்சியை கிறிஸ்தவர்கள் சேர்த்து எழுதினார்கள்" என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

மத்தேயு 3:16 இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். 

மத்தேயு 3:17 அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

1.2 இயேசுவின் வார்த்தைகளில் திரித்துவம்: 

இயேசு பல முறை பிதா என்றும், பரிசுத்த ஆவியானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். தானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என்று சொல்லியுள்ளார். 

யோவான்: 14:8. பிலிப்பு அவரை நோக்கி, ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப்போதும் என்றான்.9. அதற்கு இயேசு, பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னைஅறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவைஎங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்? 

யோவான்: 10:30. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். 

இயேசு சென்ற பிறகு பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளனை அனுப்புவதாகவும் சொல்லியுள்ளார். கீழ் கண்ட வசனத்தில் இயேசு, பிதாவைப் பற்றியும், பரிசுத்த ஆவியானவரைப் பற்றியும் குறிப்பிடுவதை காணலாம். 

யோவான்: 14:16. நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அபொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூடஇருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத்தந்தருளுவார். 

இது போல பல சந்தர்பங்களில் இயேசு பிதா என்றும், ஆவியானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை முதல் நான்கு நற்செய்தி நூல்களை படித்தால், தெரிந்துக்கொள்ளலாம். 

[ஒன்றுக்குள் ஒன்று(யோவான் 10:30) என்றால் கடவுள் எனப் பொருளா? என்ற பி.ஜே அவர்களின் கருத்திற்கு தனி கட்டுரையில் பதில் அளிக்கிறேன்]  

1.3 இயேசுவின் கட்டளை: பிதா, குமாரன், ஆவியானவரின் பெயரில் ஞானஸ்நானம் 

இயேசு தன் சீடர்களுக்கு கடைசியாக கொடுத்த கட்டளையில் மிகவும் அழகாக திரித்துவத்தின் மூன்று நபர்களை குறிப்பிடுகிறார். அதுவும், முஸ்லீம்கள் நம்புவது போல, குமாரனாகிய இயேசு ஒரு தீர்க்கதரிசி என்று மட்டும் தான் என்ற வாதம் ஆட்டம் காணும் அளவிற்கு குமாரன், பிதா மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்று மூவரையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து பேசுகிறார்.

மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 

மத்தேயு 28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார், ஆமென். 

இந்த கட்டளையை தங்கள் இதயங்கள் சுமந்தவாறு இயேசுவின் சீடர்கள் பல நாடுகளுக்குச் சென்று, இயேசுவின் மூலம் வரும் இரட்சிப்பை சொல்லி, எல்லா நாட்டு மக்களையும் சீடராக்கினார்கள். 

எனவே, இன்று நான் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களை அழைக்கிறேன், இயேசுவின் அன்பின் செய்தியை உங்கள் இதயத்தில் ஏற்று, பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் பெற்று, திருமண உறவுகள், உடலுறவுகள் இல்லாத, மதுபானம் இல்லாத பரலோகத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன். 

பவுல் எழுத்துக்களுக்கு முன்பாகவே, பல ஆண்டுகளுக்கு முன்பு இயேசு இக்கட்டளையை தம் சீடர்களுக்கு கொடுத்து சென்றுள்ளார் என்பதை முஸ்லீம்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

1.4 இயேசுவின் சீடன் போதுருவின் வார்த்தைகளில் திரித்துவம்: 

இயேசுவோடு கூட இருந்தவர், இயேசுவின் பல முக்கிய அற்புதங்களில் அவரோடு கூடவே இருந்தவர் இந்த சீடர் பேதுரு. தனக்கு பிறகு தன் ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை இவரை நம்பி இவரிடம் கொடுத்தார், இவருக்கு தலைமை பொறுப்பு அதிகாரம் கொடுத்தார். இயேசுவை எனக்கு தெரியாது என்று மூன்று முறை மறுதலித்தாலும், இவரை இயேசு மறுபடியும் தன்னிடம் சேர்த்துக்கொண்டு, எருசலேமின் ஆரம்ப கால சபைக்கு தலைவராக இருக்கும்படி இவரை உட்சாகப்படுத்தினார். 

ஆரம்ப கால சபை விசுவாசிகள் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு பற்பல பாஷைகளை பேசும் போது, மக்களுக்கு ஒரு அருமையான பிரசங்கம் செய்து, 3000 பேரை தன் மந்தையில் சேர்த்தவர் இவரே. அவர் செய்த முதல் பிரசங்கத்திலேயே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்றுச் சொல்லி, பழைய ஏற்பாட்டு வசனங்களை ஆதாரமாக காட்டி மக்களை நல்வழிப்படுத்தினார். 

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:32. இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.33. அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். 

இவர் எழுதிய ஒரு கடிதத்தில் "திரித்துவத்தைப் பற்றி" சொல்வதை கீழ் கண்ட வசனத்தில் காணலாம்.

1 பேதுரு: 1: 2. பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது, கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது. 

மேலே உள்ள வசனத்தில் மூன்று வேலைகளைப்(நபர்களைப்) பற்றி சொல்கிறார், பிதா, இயேசு, பரிசுத்த ஆவியானவர்.

1. பிதாவின் முன்னறிவிப்பு

2. ஆவியானவரின் பரிசுத்த மாக்குதல்

3. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்படுதல்.

எனவே, பி.ஜே அவர்களும் மற்ற இஸ்லாமியர்களும் சொல்வது போல, திரித்துவ கொள்கையின் நாயகன் பவுல் அல்ல என்பது இப்போது விளங்கும். 

1.5 இயேசுவிற்கு பிரியமான சீடன் யோவான் வார்த்தைகளில் திரித்துவம்: 

இயேசுவிற்கு பிரியமான‌ சீடன் யோவான் ஆவார். இவர் இயேசுவின் மார்ப்பில் சாய்ந்து இளைப்பாரும் அளவிற்கு இயேசு இவர் மீது அன்பாக இருந்தார். இவர் தான் புதிய ஏற்பாட்டில் நான்காவது நற்செய்தி நூலாகிய "யோவான் நற்செய்தி" நூலை எழுதியவர், மற்றும் புதிய ஏற்பாட்டில் கடைசி புத்தகமாகிய "வெளிப்படுத்தின விசேஷம்" எழுத இயேசு இவருக்கு தரிசனத்தின் மூலம் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பல விவரங்களை வெளிப்படுத்தினார். இவர் சபைகளுக்கு மூன்று தனி கடிதங்களையும் எழுதியுள்ளார். 

இவரும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைப் பற்றி என்ன சொல்கிறார் என்று கீழ் கண்ட வசனத்தில் காணலாம். 

1 யோவான்: 5: 7. பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; 

இவ்வசனத்தில் வார்த்தை என்பது இயேசுவை குறிக்கும் என்று எல்லாருக்கும் தெரியும். 

இவருக்கு வெளிப்படுத்தப்பட்ட தரிசனத்தில் கூட பல முறை "ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை, காதுள்ளவன் கேட்கக்கடவன்" என்று பல முறை எழுதுகிறார். 

வெளி 2:29 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது. (இதே போல இந்த வசங்களிலும், 2:7, 2:11, 2:17, 3:6, 3:13, 3:22) 

மற்றும் சிங்காசனத்தில் தேவன் உட்கார்ந்துள்ளார், வலது பாரிசத்தில் ஆட்டுக்குட்டியானவர் இயேசுவும் உட்கார்ந்துள்ளார் என்று பல வசனங்கள் வருகின்றன. 

வெளி 5:7 அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார். 

வெளி 5:13 அப்பொழுது, வானத்திலும் பூயிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன். 

வெளி 7:10 அவர்கள் மகா சத்தமிட்டு, இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். 

வெளி 21:23 நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. 

இப்படி வசனங்களை சொல்லிக்கொண்டுப் போகலாம்.

1.6 கடைசியாக பவுலின் வார்த்தைகளில் திரித்துவம்: 

இவைகள் பவுலின் வார்த்தைகள்.

2 கொரிந்தியர்: 13:14. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. 

1.7 சில கேள்விகள்: 

நாம் இதுவரைக்கும் பவுலுக்கு முன்பாகவும், பவுல் அல்லாத மற்ற சீடர்களும், இயேசுக் கிறிஸ்துவும் திரித்துவ கொள்கையைப்பற்றி என்ன சொல்லியுள்ளார்கள் என்பதை கண்டோம். திரித்துவம் என்றால் என்ன? பைபிளில் எங்கெங்கே இதைப் பற்றி விவரங்கள் கிடக்கின்றன என்று நாம் பார்க்கவில்லை. அதைப் பற்றி தனி கட்டுரைகளில் பார்க்கலாம். 

பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சொல்வது போல, பவுல் திரித்துவ கொள்கையை உருவாக்கவில்லை, அதை பயன்படுத்தி கிறிஸ்தவத்திற்குள் நுழையவும் இல்லை. இது இஸ்லாமியர்களின் கற்பனையே ஒழிய வேறில்லை. 

இஸ்லாமியர்களின் இக்கூற்று ஆதாரமற்றது என்பதை தெரிந்துக்கொள்ள சில கேள்விகள் அல்லது விவரங்கள்: 

1. பவுல் கிறிஸ்தவத்திற்கு வருவதற்கு முன்பே, எருசலேமில் பல ஆயிரபேர் பேதுருவின் பிரசங்கங்களினால் இயேசுவை ஏற்றுக்கொண்டு சபையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பேதுருவினாலும், யோவானாலும் மற்ற சீடர்களாலும் பல அற்புதங்கள் செய்யப்பட்டுள்ளது, அவர்களுக்கு பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் பெயரிலே ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் பவுல் இயேசுவின் சீடர்களோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

2. விசுவாசிகள் அதிகமாகிறதினால், அனேகர் கைது செய்யப்பட்டு (தேவதூஷணம் குற்றத்திற்காக, இயேசு தேவகுமாரன் என்று சொன்னதற்காக)ஸ்தேவான் என்பவர் கல்லெரியப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சமயத்தில் கல்லெரிபவர்களின் கூட்டத்தில் இருந்தவர், இந்த பவுலே. 

3. இயேசு தேவ குமாரன் அல்ல, அவர் ஒரு தீர்க்கதரிசி மட்டும் தான் அல்லது நல்லவர், அவர் மரிக்கவில்லை மறுபடியும் எழுந்திருக்கவில்லை என்று பேதுருவும், மற்ற சீடர்களும் சொல்லியிருப்பார்களானால், ஏன் யூத ஆசாரியர்களும், பவுலும் இவர்கள் மீது "தேவதூஷணம்" குற்றம் சுமத்தி, கொல்ல முயற்சி செய்வார்கள்? முஸ்லீம்கள் சிந்திக்கவேண்டும். ஒரு பொய்யைச் சொல்லி ஏன் இயேசுவின் சீடர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்தை வருவித்துக்கொள்ளப்போகிறார்கள். 

4. இயேசு பரமேறிச் சென்ற 40வது நாளிலேயே 3000 பேர், பேதுருவின் பிரசங்கம் கேட்டு சபையில் விசுவாசிகள் ஆனார்கள். இந்த 3000 பேருக்கு "பேதுரு" என்ன சொல்லியிருப்பார் என்று எண்ணுகிறீர்கள் நீங்கள்? 

5. இயேசு தேவன் கிடையாது, அவர் மரிக்கவில்லை, அவர் சிலுவையில் அறையப்படவில்லை, அல்லா தான் இறைவன் என்று சொல்லியிருப்பார்களா சீடர்கள்? 

6. இப்படி சொல்லியிருந்தால், இவர்கள் ஏன் கொல்லப்படுவார்கள், ஏன் உலகமெல்லாம் சுற்றி நற்செய்தியை சொல்லி கஷ்டப்பட்டிருப்பார்கள்? 

7. இத்தனை ஆயிரம் பேர் இருக்கும் போது, திடீரென்று பவுல் வந்து "தேவன், இயேசு, பரிசுத்த ஆவியானவர்" இவர்கள் மூவரும் ஒரே இறைவன் தான் என்று சொல்லியிருந்தால், இத்தனை ஆயிரம் பேர் ஏற்றுக்கொள்வார்களா? 

8. ஒருவரை இருவரை ஏமாற்றலாம், அல்லது சிலரை ஏமாற்றலாம், இத்தனை ஆயிரம் பேரையா திடீரென்று ஏமாற்ற முடியும்? தங்கள் கொள்கைகளை விட்டு புது கொள்கைக்கு மாற்ற முடியும்? 

இது இஸ்லாமியர்களின் கற்பனையே தவிர வேறில்லை. 

முடிவுரை: 

கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடுகள் அல்லது அஸ்திபாரம் போடுவதில், புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு நற்செய்தி நூல்களும், அப்போஸ்தலர் நடபடிகளும், மற்றும் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷம் ஆகிய 6 புத்தகங்கள் தான் முக்கியமான பங்கை வகிக்கின்றன. மற்றபடி பவுல் எழுதிய இதர கடிதங்கள் இந்த அஸ்திபாரத்தின் மீது கட்டப்பட்ட மாளிகைகளே தவிர வேறில்லை. 

ஒரு உதாரணம்: 

இயேசு போட்டது அஸ்திபாரம்: …. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார்(மத்தேயு 19:19). 

பவுல் கடிதங்களில் எழுதியது, இயேசு போட்ட அஸ்திபாரத்தின் மீது எழுப்பிய மாளிகை: ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்(ரோமர் 13:8). 

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது(1 கொரிந்தியர் 13:4). 

இது ஒரு உதாரணம் தான், இயேசு சொன்னதற்கு முரணாக ஒரு கருத்தையும் நாம் பவுலுடைய எழுத்துக்களில் காணமுடியாது. ஏனென்றால், பவுல் ஒரு எழுத்தாணி மட்டும் தான், எழுதியது ஆவியானவர். எனவே, தான் எந்த முரண்பாடும் காணமுடியாது. 

இயேசுவின் பிறப்பு, அற்புதங்கள், மரணம், உயிர்த்தெழுதல், இரண்டாம் வருகை இவை அனைத்தையும் விளங்கிக்கொள்ள, அல்லது இவைகள் பற்றி தெரிந்துக்கொள்ள நாம் தேடவேண்டியது, பவுல் எழுதிய கடிதங்களில் அல்ல, அதற்கு மாறாக நான் மேலே சொன்ன 6 புதிய ஏற்பாட்டு புத்தகங்களிலேயே. இந்த 6 புத்தகங்கள், கிறிஸ்தவத்திற்கு அஸ்திபாரம் போடுமானால், பவுலும், மற்றவர்களும் எழுதிய கடிதங்கள், சபை, விசுவாசிகள் சந்திக்கும் அன்றாட‌ பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள தேவையான பதிலைச் சொல்கின்றன. எனவே, புதிய ஏற்பாட்டின் இந்த இரண்டு வகையான புத்தகங்களும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள், இவைகளில் முரண்பாட்டை கண்டுபிடிக்க யாராலும் முடியாது. 

பவுலை காரணம் கட்டி, கிறிஸ்தவர்களை வெளிச்சத்திலிருந்து இருட்டிற்கு திசை திருப்ப யாராலும் முடியாது. 

கிறிஸ்தவர்களுக்கு சில வேத எச்சரிக்கைகள்: 

நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்(பேதுரு 1:16 ). 

இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல், (தீத்து 1:13 ) 

வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,(1 தீமோத்தேயு 1:3 ) 

சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு(1 தீமோத்தேயு 4:7 ). 

மூலம்


பீஜே அவர்களுக்கு கொடுத்த இதர பதில்கள்

உமரின் இதர கட்டுரைகள் / மறுப்புக்கள்