பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? - பாகம் - 1

பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தில், "அற்புதம் நிகழ்த்தியது எப்படி?" என்ற தலைப்பில் கீழ் கண்ட விவரங்களைச் சொல்கிறார்.

பிஜே அவர்கள் சொல்லவந்த செய்தியின் சுருக்கம் இது தான்: 

1. மக்கள் சில நேரங்களில் அதிக அற்புதங்களை இயேசுவிடம் எதிர்பார்த்தும், அவைகளைச் செய்துக்காட்டி, தன்னை கடவுளாக இயேசு நிருபித்துக்கொள்ளவில்லை. ஆகையால் தான் மக்கள் அவர் மீது அவிசுவாசம் கொண்டனர். 

2. இயேசு ஒரு கடவுள் இல்லை என்பதை இதன் மூலம் நாம் அறிந்துக்கொள்ளலாம். 

ஈஸா குர்ஆன் பதில்: நான் பாகம் 1 ல், மேலே கேட்கப்பட்ட பொதுவான கேள்விக்கு பதிலை கொடுத்துவிட்டு, பிறகு பாகம் 2ல் பிஜே அவர்கள் இந்த தலைப்பின் கீழ் எழுதிய‌ எல்லா வரிகளுக்கும் பதிலைத் தருகிறேன். 

பாகம் - 1

பிஜே அவர்களின் கேள்வி: ஏன் இயேசு சில நேரங்களில் அற்புதங்கள் செய்யவில்லை?

இந்த பதிலில், பிஜே அவர்கள் பைபிள் வசனங்களை எப்படி புரிந்துக்கொண்டு இருக்கிறார் என்பதையும், இல்லாத ஒன்றை எப்படி அவர் மிகவும் அழகாக இருப்பதாக‌ கற்பனை செய்துக்கொண்டு புத்தகம் எழுதுகிறார் என்பதையும் முதலாவது விளக்குகிறேன். 

1. பிஜே அவர்களின் கற்பனை – 1 

பிஜே அவர்கள் எழுதியதை கூர்ந்து கவனியுங்கள், "மக்கள் இயேசுவிடம் அதிக எண்ணிக்கையில் அற்புதங்கள் செய்யும்படி எதிர்பார்த்தார்களாம். ஆனால், இயேசு செய்யவில்லையாம் ". 

பிஜே அவர்கள் எழுதியது: 

அங்கே அவர் சில நோயாளிகளின்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறொரு அற்புதமும் செய்யக்கூடாமல், அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு; கிராமங்களிலேசுற்றித்திரிந்து, உபதேசம்பண்ணினார். (மாற்கு: 6:5,6) 

இதிலிருந்து தெரிய வருவதென்ன? மக்கள் இதை விடவும் அநேக அற்புதங்களை இயேசுவிடம் எதிர்பார்த்துள்ளனர். அவருக்கோ சில நோயாளிகளைக் குணப்படுத்தியது தவிர வேறோன்றும் செய்ய இயலவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் அவிசுவாசம் (நம்பிக்கையின்மை) கொண்டனர். 

பிஜே அவர்களே, சிறிது அந்த வசனங்களை (மாற்கு: 6:5,6) மறுபடியும் படித்துப்பாருங்கள்.

1. இந்த வசனத்தில் மக்கள் இயேசுவிடம் அதிகமாக அற்புதங்கள் செய்யுங்கள் என்று கேட்டதாக அல்லது எதிர்பார்த்ததாக ஏதாவது வரிகள் எழுதப்பட்டுள்ளதா? 

2. உங்களுக்கு எங்கேயிருந்து இந்த விவரம் தெரிந்தது? 

3. மக்கள் அவர் மீது விசுவாசம் வைக்கவில்லை என்ற காரணத்தினால் அவர் அற்புதம் செய்யவில்லையா? அல்லது இயேசு அற்புதம் செய்யவில்லை என்ற காரணத்தினால் மக்கள் அவிசுவாசம் கொண்டார்களா? 

4. இயேசு அற்புதம் செய்வதற்கு முதலாவது அம்மக்கள் அவரை விசுவாசிக்கவேண்டும், அவர்கள் அற்புதத்தை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கவேண்டும், அதன் பிறகு தான் இயேசு அற்புதம் செய்வார். இந்த வசனத்தில் " அவர்களின் அவிசுவாசத்தினால் தான் இயேசு அற்புதம் செய்யவில்லையென்று மிகவும் தெளிவாக சொல்லியிருந்தும் " இப்படி நீர் எழுதுவது, மிகவும் மனதிற்கு சங்கடமாக உள்ளது. 

5. ஒரு வசனத்திற்கு (புதிய) பொருள் கூறுவதற்கு முன்பாக, மற்றவர்களுடைய வேதத்தின் வசனத்தை கையாளுவதற்கு முன்பாக அவ்வசனத்தின் முந்தைய பிந்தைய வசனத்தை படிக்கவேண்டும் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும். 

6. நீங்கள் குறிப்பிட்ட அதே மாற்கு 6ம் அதிகாரத்தின் 2ம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது, "இயேசுவின் மூலம் செய்யப்பட்ட பலத்த செய்கைகளினால், அம்மக்கள் ஆச்சரியப்பட்டார்கள் என்று ". இதை நீர் கவனிக்கவில்லையா?

மாற்கு: 6:2. ஓய்வுநாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத் தொடங்கினார்.அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கே இருந்துவந்தது? இவன் கைகளினால் இப்படிபட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?

7. ஆகையினால், இப்படி பல அற்புதங்களை கண்டும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை என்று தான் இயேசு அற்புதம் செய்யவில்லை என்பது தெளிவாக புரிகிறது, ஆனால் பிஜே அவர்களுக்கு எப்படி புரியாமல் போனது என்பது தான் புதிராக உள்ளது.

2. பிஜே அவர்களின் கற்பனை – 2

பிஜே அவர்கள் எழுதியது: 

அவர்கள் எதிர்பார்த்தது இது மட்டும் தான் என்றால் அவர்கள் அவிசுவாசம் கொள்ள மாட்டார்கள். அதிக விசுவாசம் கொள்வார்கள். 

ஆக அவர்கள் கேட்ட பல அற்புதங்களில் ஒன்றே ஒன்றை மட்டும் இயேசு செய்துள்ளதால் அற்புதம் நிகழ்த்துவது அவரது சுய அதிகாரத்தில் இல்லை என்பது தெளிவு.

பிஜே அவர்களே, யூதர்கள் அவிசுவாசம் கொண்டதற்கு காரணம், தெரிந்துக் கொள்ளவேண்டுமானால், நீங்கள் குறிப்பிட்ட மாற்கு 6ம் அதிகாரம் முதல் வசனத்திலிருந்து படிக்கவேண்டும். 

அவர்கள் அவிசுவாசம் கொண்டதற்கும், இயேசு அங்கு அற்புதங்கள் செய்யாமல் இருந்ததற்கும் காரணங்கள்:

1. இது இயேசு வளர்ந்த ஊர் , அதாவது அவர் முப்பது ஆண்டுகள் வாழ்ந்த ஊர். (மாற்கு 6:1) 

2. சொந்த ஊராக இருந்தும், அங்கு அவர் அற்புதங்கள், (பலத்த செய்கைகள் – Mighty Works) செய்துள்ளார் . (மாற்கு 6:2) 

3. இவருடைய ஞானம், பலத்த அற்புதங்கள் கண்டு (கவனிக்கவும் பிஜே அவர்களே) தேவாலயத்தில் உள்ளவர்கள் அனைவரும் பிரமித்தார்கள், ஆச்சரியப்பட்டார்கள். (மாற்கு 6:2) 

4. இருந்தாலும் சொந்த ஊர் என்பதால், இவர்களால் அதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை , எனவே இவரது முழு குடும்ப சரித்திரத்தை சொல்கிறார்கள், இவரது தொழில் பற்றிச் சொல்கிறார்கள். (மாற்கு 6:3) 

5. கண்களால் அற்புதங்களைக் கண்டும் இவர்கள் இவர் மீது விசுவாசம் வைக்கவில்லை, எனவே தான் இயேசு "ஒரு தீர்க்கதரிசிக்கு தன் சொந்த ஊரில் தான் அதிக அவமானம் அல்லது கனவீனம் நடக்கும் என்றுச் சொன்னார்." (மாற்கு 6:3-4) 

6. இவ்வளவு விவரங்கள், நிகழ்வுகள் நடந்தபின்பு தான் நீங்கள் குறிப்பிட்ட வசனம் வருகிறது , அதாவது, இவர்கள் இயேசுவின் அற்புதங்கள் கண்டும், ஆச்சரியப்பட்டும் கூட நம்பிக்கை கொள்ளாததினால் தான் அவர் சிலரை சுகமாக்கி, இவர்களின் அவிசுவாசத்தைப்பற்றி ஆச்சரியப்பட்டு, அவ்விடத்திலிருந்து புறப்பட்டு வேறு இடங்களில் பிரசங்கித்தார் என்று வசனம் சொல்கிறது.

3. அற்புதம் பெற்றுக்கொள்ள முதலாவது நம்பிக்கை வேண்டும்:   

இயேசு அற்புதங்களை தேவையில்லாமல் செய்ததில்லை. அதாவது: 

1. தேவையுள்ளவர்கள் அவரிடம் கேட்கும் போதும், ”தங்களுக்கு விசுவாசம் உள்ளதென்று” அவர்கள் தங்கள் வாயால் சொல்லும் போதும், அவர் அற்புதம் செய்துள்ளார்.

2. தான் கிறிஸ்துவாகிய மேசியா என்பதை நிலை நாட்ட அற்புதம் செய்தார் 

3. சில நேரங்களில் மக்களின் அவல நிலையை பார்த்து கேட்காமலேயே அற்புதம் செய்துள்ளார்.

ஆனால், உம்மை நம்பமாட்டேன் விசுவாசிக்க மாட்டேன் என்று சொல்கிறவர்களுக்கு அவர் அற்புதம் செய்யவில்லை. 

ஒரு முறை, ஒரு குருடன் "இயேசுவே தாவீதின் குமாரனே" என்று அழைக்கிறான், சீடர்கள் அவனை அதட்டுகிறார்கள், இயேசு அவனை அழைத்து என்ன வேண்டும் என்று கேட்கிறார்? அவன் சொல்கிறான் எனக்கு பார்வை வேண்டும். பிறகு அவனுக்கு பார்வை தருகிறார் இயேசு. ஒரு குருடனுக்கு என்ன வேண்டும் என்று இயேசுவிற்கு தெரியாதா? இருந்தாலும், அவன் விசுவாசம் என்ன என்று கேட்கிறார் , அவன் வாயாலேயே ”நான் நம்புகிறேன்” என்று சொன்னபிறகு இயேசு அற்புதம் செய்கிறார். அந்த குருடன் நம்பிக்கை உண்டு என்று சொல்வதை அங்குள்ள மக்கள் அனைவரும் கேட்கிறார்கள். 

வியாதியோடு இருந்தும், இயேசுவிடம் வந்து சுகத்தை கேட்கவில்லையானால் எப்படி இயேசு அற்புதம் செய்வார், தேவை யாருக்கு? இயேசுவிற்கா  (அ) மனிதனுக்கா? எனவே, சுகத்தை பெற்றுக்கொள்ள மனிதர்கள் தயாராக இல்லை என்றுச் சொன்னால், இயேசு அற்புதம் செய்யப்போவதில்லை. அவர் சுகமாக்குவார் என்று நம்பவேண்டும், விசுவாசம் வைக்கவேண்டும், அப்போது தான் அவர் செய்வார். அற்புதங்களானாலும் சரி, நற்செய்தியானாலும் சரி கட்டாயத்தின் பேரில், வேண்டாமென்றுச் சொன்னால், யார் கழுத்திலும் கத்தியை வைத்து இயேசு கட்டாயப்படுத்தமாட்டார். அவரிடம் கேட்டால் தான் அற்புதம், நற்செய்தி - வேண்டாமென்றால், அந்த இடத்தை விட்டு சென்றுவிடுவார், அப்படி சென்றுவிடுங்கள் என்று தன் சீடர்களுக்கும் சொல்லியுள்ளார், இஸ்லாம் போல கட்டாயமாக எற்றுக்கொள்ளவேண்டும், இல்லையானால், யுத்தம் செய்து நாட்டை பிடிப்பேன் என்று முஹம்மது மற்ற நாட்டு மன்னர்களுக்கு கடிதம் அனுப்புவது போல கட்டாயப்படுத்த மாட்டார் சமாதானத்தின் பிரபு இயேசு கிறிஸ்து. 

பல முறை "எனக்கு சுகமாக்க அதிகாரம் உண்டென்று நம்புகிறாயா?" என்று இயேசு கேட்கிறார், ஒரு முறை பல நண்பர்கள் ஒருவனை வீட்டின் கூறையிலிருந்து இறக்கும் போது, அந்த நண்பர்களின் விசுவாசத்தை கண்டு இயேசு சுகம் தருகிறார். ஒரு முறை, "இயேசுவே என் வீட்டிற்கு வருவதற்கு நான் தகுதியில்லாதவன், எனவே, ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்" என்று கேட்கும் போது, "சரி உன் விசுவாசத்தின் படி உனக்கு ஆகட்டும்" என்றுச் சொல்கிறார். இப்படி இயேசு பல முறை, நம்பிக்கை உள்ளவர்களுக்கே அற்புதம் செய்துள்ளார். 

எனவே, அவிசுவாசம் உள்ளவர்களுக்கு அற்புதம் செய்யமாட்டார், அவர் அற்புதம் செய்ய தயார் தான், ஆனால், அற்புதத்தை பெற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லையே, பின் எப்படி அவர் அற்புதம் செய்வார்? 

4. அவர்களின் அவிசுவாசம் குறித்து இயேசு ஏன் ஆச்சரியப்பட்டார்: 

பிஜே அவர்கள் அருமையாக‌ வசனங்களுக்கு பொருள் கூறுகிறார்கள். அதாவது, மிகப்பெரிய அற்புதங்கள் கண்டும் மக்கள் விசுவாசம் வைக்கவில்லை, ஏனென்றால், ஆசாரியர்கள் "இவன் எங்கள் ஊர் தானே, இவன் ஒரு தச்சன் தானே" என்று ஆச்சரியப்பட்டார்களே தவிர, அவர் மீது விசுவாசம் வைக்கவில்லை. இதனால் தான் அவர் ஆச்சரியப்பட்டார், "தேவை" அங்கு இல்லை, மக்கள் அவரை விசுவாசிக்கவில்லை என்பதால் அற்புதங்கள் அதிகமாக செய்யவில்லை.  

ஆனால், ”இயேசு அனேக அற்புதங்கள் செய்யவில்லை, ஒரு அற்புதம் தான் செய்தார், எனவே, அவர்கள் விசுவாசம் கொள்ளவில்லை” என்று பிஜே சொல்கிறார். 

பிஜே அவர்கள் சொல்வது உண்மையானால், இயேசு ஏன் அவர்களின் "அவிசுவாசம்" குறித்து ஆச்சரியப்படவேண்டும்? இயேசு என்ன முஹம்மதுவைப் போலவா? ஒரு அற்புதமும் செய்யாமல் , என்னையும், நான் கொண்டு வந்த செய்தியையும் நம்பவில்லையானால், நான் போர் செய்து உங்களை அடிமைகளாக மாற்றுவேன், அல்லது கொன்றுவிடுவேன், அல்லது நீங்கள் எனக்கு வரி கட்டவேண்டும் என்று சொல்வதற்கு? 

ஆனால், இவ்வளவு திரளான அற்புதங்களை அவர்கள் கண்டும் ஏன் விசுவாசம் கொள்ளவில்லை என்று இயேசு ஆச்சரியப்படுகிறார், இது நியாயம், நடைமுறைக்கு பொருந்தக்கூடியதாக உள்ளது. ஆனால், பிஜே அவர்கள் சொல்வது தவறான கருத்தாகும். இது அவருடைய கற்பனையே தவிர வேறில்லை.  

ஒருவர் எப்போது ஆச்சரியப்படுவார்? 

இயற்கையாக நடக்கக்கூடிய ஒன்று நடக்காமல் இருந்தால் ஆச்சரியப்படலாம். 

அல்லது 

இயற்கையாக நடப்பது நடக்காமல், இயற்கைக்கு அப்பாற்பட்டது நடந்தாலும் ஆச்சரியப்படுவார்கள். 

அதிகமாக அற்புதங்கள் நடப்பதை மக்கள் கண்டால், ஆச்சரியப்படுவார்கள், இது இயற்கை, ஆனால், இங்கு இயேசு வளர்ந்த ஊர் என்பதால், மக்கள் பல அற்புதங்களை கண்டும், அவர் மீது விசுவாசம் கொள்ளவில்லை. அதனால், அவர்களது " அவிசுவாசம் பற்றி " இயேசு ஆச்சரியப்பட்டார் என்று பைபிள் தெளிவாக கூறுகிறது. 

இதை பிஜே மாற்றிச் சொல்கிறார், அதாவது இயேசு அனேக அற்புதங்கள் செய்யவில்லையாம், அதனால் மக்கள் அவிசுவாசம் கொண்டார்களாம். பிஜே அவர்கள் ஒரு முறை மாற்கு 6ம் அதிகாரம் முதல் வசனத்திலிருந்து படித்துப்பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன், முக்கியமாக மாற்கு 6:2ம் வசனத்தில் வரும் "பலத்த செய்கைகள் - MIGHTY WORKS" என்றால் என்ன என்பதை அறிந்துக்கொள்ள அவரை கேட்டுக்கொள்கிறேன். 

ஒரு எடுத்துக்காட்டு - குர்ஆனின் வசனம்: 

குர்ஆன் 2:6 (ஏக இறைவனை) மறுப்போரை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். 

குர்ஆன் 2:7 அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு. 

மூலம்: பிஜே அவர்களின் குர்‍ஆன் மொழிபெயர்ப்பு

பிஜே அவர்களே, இந்த குர்ஆன் வசனங்களை பாருங்கள், இதை ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று முன்வைக்கிறேன். இதற்கு நான் புது பொருளை கொடுக்கவில்லை. 

1. முஹம்மதுவின் செய்தியை ஏற்றுக்கொள்ளாததினால் தான் அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் முத்திரையை போட்டானா? அல்லது 

2. அல்லாஹ் முத்திரை போட்டதினால் தான் அவர்கள் முஹம்மதுவின் செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லையா? 

இவ்வசனங்களில் எது முந்தியது, அல்லாவின் முத்திரையா? அல்லது இஸ்லாமின் மீது மக்களின் அவிசுவாசமா? இவ்வசனங்களின் உண்மை பொருளை நீங்கள் தான் சொல்லவேண்டும். ஆனால், பைபிள் வசனங்களின் உண்மை பொருள் நீங்கள் சொல்வது தவறு, அதிக அற்புதங்களை கண்டும், மக்கள் அவிசுவாசம் கொண்டதினால் இயேசு ஆச்சரியப்பட்டு, அங்கு அற்புதங்கள் பெற்றுக்கொள்ள அம்மக்கள் தயாராக இல்லாததினால், இயேசு அற்புதம் செய்யவில்லை. 

நீங்கள் சொல்வது எப்படி உள்ளது என்றால், இயேசு செல்லும் இடத்திலே ஏதோ ஒரு வியாதி உள்ளவன் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம், அவன் இயேசுவின் பல அற்புதங்கள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறான், பார்த்தும் இருக்கிறான், இயேசு அவ்வழியே வரும் போது மற்றவர்கள் அவனிடம் இதோ இயேசு வருகிறார் என்றுச் சொல்கிறார்கள், இருந்தும் அவன், "இயேசு மூலமாக எனக்கு சுகம் தேவையில்லை, நான் அவரை விசுவாசிக்கமாட்டேன்" என்றுச் சொல்கிறான், அந்த நேரத்தில் இயேசு அவனிடத்தில் வந்து, அவன் தலை மீது கைவைத்து சுகப்படுத்த முயற்சி செய்யும் போது, அதை தடுத்து எனக்கு சுகம் வேண்டாம் என்றுச் சொல்லி, இயேசுவின் கையை தள்ளிவிடுகிறான் என்று நினைத்துக்கொள்ளுங்கள். அவன் அவிசுவாசம் கொள்ளவில்லையானாலும், சுகம் வேண்டாமென்றுச் சொன்னாலும், இயேசு அற்புதம் செய்தாக வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள், பிஜே அவர்களே. விருப்பமில்லாத இடத்திலிருந்து தன் காலில் ஒட்டியுள்ள அவர்கள் ஊரின் தூசியைக் கூட‌ துடைத்துப் போட்டு அவ்விடம் விட்டு சென்று விடுங்கள் என்று இயேசு தன் சீடர்களுக்கும் கட்டளையிட்டுள்ளார்

ஒரு ஊழியர் "சுவிசேஷம் (நற்செய்தி) இலவசம் தான், ஆனால், அது மலிவானது அல்ல? Gospel is Free But not Cheap" என்று சொன்னதை இங்கு இஸ்லாமிய உலகத்திற்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இயேசுவின் நற்செய்தி உலகத்திற்கு இலவசமாக கொண்டுசென்று அவர்களுக்கு சொல்லுவோம், அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது வேண்டாமென்று தள்ளிவிடலாம், அது அவர்கள் விருப்பம். இயேசுவின் வசனங்கள் அடங்கிய புத்தகங்கள், கைபிரதிகள் எங்கு பார்த்தாலும் எல்லாரும் பார்க்கலாம், சாலைகளில், குப்பைத் தொட்டிகளில், பெட்டிக்கடைகளில் இன்னும் பல இடங்களில் பார்க்கலாம், அதற்காக, சுவிசேஷம் மலிவானது என்று பொருள் அல்ல. "கேளுங்கள் தரப்படும்" என்பது தான் இயேசுவின் வார்த்தைகள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அற்புதங்கள் கேட்டால் தான் கொடுக்கப்படும், கேட்காமல் திணிக்கப்படாது, காரணமில்லாமல்.  

5. பன்மை (Plural) எப்படி பிஜே அவர்களுக்கு ஒருமையாக (Singular) தென்பட்டது?

1. பிஜே அவர்களே சரியாகச் சொல்லுங்கள் "இயேசு ஒரு அற்புதம் மட்டும் தான் செய்தார்" என்று எழுதுகிறீரே? அதை நீங்கள் எந்த வசனத்திலிருந்து எடுத்தீர்கள்? 

2. மாற்கு 6:2ம் வசனத்தில் அவரது பலத்த செய்கைகளை (அற்புதங்களை) கண்டு மக்கள் பிரமித்தார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது, அதே போல, மாற்கு 6:5ம் வசனத்தில், "சில நோயாளிகளை சுகமாக்கினார்" என்று சொல்லப்பட்டுள்ளது. "பலத்த செய்கைகள்" என்று பன்மையிலும், " சில" என்று இரண்டிற்கும் அதிகமான எண்ணிக்கையில் சொல்லப்பட்டு இருந்தால், உங்களுக்கு "ஒன்றே ஒன்று மட்டும் " என்று எப்படி இவைகளில் தெரிந்தது? 

3. எப்படி இப்படி பைபிள் வசனம் சொல்லாத ஒன்றை கற்பனை செய்துக்கொண்டு எழுதுகிறீர்கள்? கற்பனை அதிகமாக இருந்தால், அதை உங்கள் இஸ்லாமிய கோட்பாடுகளை விவரிக்கும் போது பயன்படுத்திக்கொள்ளுங்கள், அதை ஏன் பைபிளில் பயன்படுத்துகிறீர்கள்?  

6. மரியாதையுடன் வேண்டியும் அற்புதம் செய்ய இயலாதவர்: 

பிஜே அவர்கள் எழுதியது: 

அப்பொழுது வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி, போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. (மத்தேயு: 12:38,39) 

மரியாதையுடன் போதகரே என அழைத்து அவரிடம் அற்புதத்தை வேண்டியும் அவர் கடும் கோபத்துடன் அதை மறுக்கிறார் என்றால் அற்புதம் நிகழ்த்தும் வேலை அவரது அதிகாரத்தில் இல்லை என்பது தானே அதன் பொருள்.

இயேசு அற்புதம் செய்ய மறுத்ததற்கான காரணத்தை அறிந்துக்கொள்ளவேண்டுமானால், ஏதோ ஒரு வசனத்தை படித்தால் புரியாது, அதற்கு முன்புள்ள வசனங்களை பார்த்தால் தான் புரியும். 

பிஜே அவர்கள் குறிப்பிட்ட மத்தேயு 12ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட சில முக்கியமான நிகழ்வுகள்:

1. இயேசு தேவாலயத்தில் ஒரு சூம்பின கையுடைய மனுஷனை சுகமாக்குகிறார், இப்படி ஓய்வு நாளில் சுமப்படுத்துவது சரியல்ல என்று ஆசாரியர்கள் கேட்டார்கள், அப்போது இயேசு ஒரு ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்தால், அதை காப்பாற்றமாட்டீர்களா? என்று கேட்டு, அம்மனிதனை சுகப்படுத்துகிறார். (மத்தேயு 12:9-13) 

2. இதனால், இயேசுவை கொலை செய்யவேண்டும் என்று அவர்கள் ஆலோசனை செய்கிறார்கள். (மத்தேயு 12:14) 

மத்தேயு 12:14அப்பொழுது, பரிசேயர் வெளியேபோய், அவரைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள். 

3. அவர்களுடைய ஆலோசனையை இயேசு அறிந்து அவ்விடம் விட்டு வந்து விடுகிறார், திரளான மக்கள் அவரை பின் தொடர்கிறார்கள், எல்லாரையும் அவர் சுகமாக்குகிறார் (மத்தேயு 12:15-16). 

மத்தேயு 12:15 . இயேசு அதை அறிந்து, அவ்விடம் விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கி , 16. தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.

பிஜே அவர்கள் கவனத்திற்கு: இங்கு திரளான ஜனங்களை இயேசு சுகமாக்கி, தன்னை பிரசித்தம் செய்யாதீர்கள் என்றுச் சொல்கிறார், ஏனென்றால், இப்போது தான் அவர் ஆசாரியர்களின் கைகளிலிருந்து தப்பி வந்தார் என்பதால். "திரளான ஜனங்கள்" மற்றும் "எல்லாரையும் அவர் சுகமாக்கினார்" என்ற வார்த்தைகளை கவனிக்கவும். 

4. அப்பொழுது இயேசு குருடும், ஊமையுமான ஒரு பிசாசு பிடித்தவனை சுகமாக்குகிறார். (மத்தேயு 12:22) 

மத்தேயு 12:22 அப்பொழுது பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார்.

பிஜே அவர்கள் கவனத்திற்கு: இயேசு தேவாலயத்தில் ஒரு அற்புதம் செய்தார், வெளியே வந்து மக்கள் எல்லாரையும் சுகப்படுத்தி அற்புதம் செய்தார், மற்றும் மத்தேயு 12:22 வசனத்தின் படி இன்னொரு அற்புதம் செய்தார், இப்படி இயேசு தொடர்ந்து அற்புதங்களை செய்துக்கொண்டு இருக்கிறார். 

5. ஜனங்கள் ஆச்சரியப்பட்டு, இவர் தான் "தாவீதின் குமாரனா அதாவது வருவார் என்று காத்திருந்த மேசியாவா ( கிறிஸ்துவா ) என்று சொல்லிக்கொண்டார்கள்" (மத்தேயு 12:23) 

6. பரிசேயர்கள் அங்கும் வந்து, ”இல்லை இல்லை, இவர் தாவீதின் குமாரன் மேசியா இல்லை, இவன் பிசாசுகளின் தலைவனால் பிசாசுகளை துரத்துகிறான்” என்று சொல்கிறார்கள். (மத்தேயு 12:23) 

மத்தேயு 12:24 பரிசேயர் அதைக்கேட்டு, இவன் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள். 

பிஜே அவர்கள் கவனத்திற்கு: இங்கு, இயேசு அற்புதங்கள் செய்தார் என்று பரிசேயர்கள் சொல்லும் சாட்சியை காணலாம், அதாவது, இவர் மேசியாவாக இருந்தால், இப்படிப்பட்ட அற்புதங்கள் செய்யலாம், ஆனால், இவர் மேசியா(தாவீதின் குமாரன்) இல்லை, ஆனால், பிசாசுகளின் தலைவனால் பிசாசுகளை துரத்துகிறான் என்றுச் சொல்கிறார்கள். இவர்கள் கண்களால் அற்புதங்களை கண்டு, பிசாசுகள் ஓடுவதை கண்டார்கள், அற்புதங்கள் நடக்கவில்லை (பிசாசுகள் போகவில்லை) என்று இவர்கள் சொல்லவில்லை. மாறாக இவருக்கு சக்தியை பிசாசுகளின் தலைவனிடமிருந்து வந்தது என்றுச் சொல்கிறார்கள். இயேசு செய்த அற்புதங்களை இவர்கள் மறுக்கவில்லை. 

7. இவர்களின் இந்த வார்த்தைகளை இயேசு அறிந்து, அவர்களை கடிந்துக்கொள்கிறார், கெட்ட மரமாக நீங்கள் இருந்தால், நல்ல கனி எப்படி கொடுப்பீர்கள்? பரிசுத்த ஆவிக்கு விரோதமாக சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கணக்கு தரவேண்டும் என்று கடிந்துக்கொள்கிறார் (மத்தேயு 12:25-37).

அடுத்து வரும் உரையாடல் தான் பிஜே அவர்கள் குறிப்பிட்ட வசனம், மத்தேயு 12:38-39 

மத்தேயு 12:38 அப்பொழுது வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி, போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். 39 அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.

மதிப்பிற்குரிய பிஜே அவர்களே இப்போது பதில் சொல்லுங்கள்: 

1. தேவாலயத்தில் சூம்பின கையுடைய மனுஷன் சுகமாவதைக் கண்டார்கள் இவர்கள்.

2. மற்றும் எல்லா மக்களையும் (திரளான ஜனங்களையும்) இயேசு சுகமாக்கும் போது, மக்கள் அவரை புகழுவதையும் கண்டார்கள் இந்த ஆசாரியர்கள். 

3. பிறகு குருடும், ஊமையுமான பிசாசு பிடித்தவனை சுகமாக்கும் போது, அதையும் கண்டு, மக்கள் புகழும் போது, ”இல்லை இல்லை” என்று சொல்லி, பிசாசுகளின் தலைவனின் உதவியால் தான் இவன் இப்படி அற்புதங்கள் செய்கிறார் என்று சொன்னார்கள், அவரை விமர்சித்தார்கள் இந்த ஆசாரியர்கள். 

இவ்வளவு அற்புதங்கள் செய்வதைக் கண்டு, இயேசுவின் தலைவன் பிசாசு என்றுச் சொல்லி, அவரை அவமானப்படுத்தியவர்கள் இப்போது, ஒரு அற்புதத்தை செய்து காட்டும் படி சொல்கிறார்கள். 

பிஜே அவர்கள் எழுதியது: 

மரியாதையுடன் போதகரே என அழைத்து அவரிடம் அற்புதத்தை வேண்டியும் அவர் கடும் கோபத்துடன் அதை மறுக்கிறார் என்றால் அற்புதம் நிகழ்த்தும் வேலை அவரது அதிகாரத்தில் இல்லை என்பது தானே அதன் பொருள்.

இயேசுவை திட்டிவிட்டு, இவ்வளவு செய்தவர்கள், இப்போது "போதகரே" என்று இயேசுவை அழைப்பது, மரியாதையின் காரணமாக, அற்புதங்கள் காணவேண்டும் என்று ஆர்வத்தோடு இருக்குமா? என்று நிதானமாக சிந்தித்துப்பாருங்கள். 

உண்மையில் இவர்கள் அற்புதங்கள் காணவேண்டும் என்று சொல்லவேண்டிய அவசியமே இல்லை, காரணம் இவ்வார்த்தைகள் இவர்கள் சொல்வதற்கு முன்பே இயேசு பல அற்புதங்களை செய்து காட்டியுள்ளார். அவைகளைக் கண்டு நம்பிக்கை கொள்ளாதவர்களா? இப்போது ஒரு அற்புதத்தை கண்டு நம்பப்போகிறார்கள்? 

இன்னொரு அற்புதம் செய்து காட்டினாலும், இதுவும் பிசாசுகளின் தலைவனால் இவன் செய்கிறான் என்று ஏன் சொல்லமாட்டர்கள் இவர்கள்? 

கருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு உலகத்தைப் பார்த்தால், உலகம் இருட்டாகத்தான் தெரியும். 

ஊர் மக்களே இயேசுவின் அற்புதங்களை கண்டு, இவர் கிறிஸ்துவா என்று ஆச்சரியப்படும் போது, அவர்கள் வாயை இவர்கள் மூடிவிட்டு, இன்னொரு அற்புதம் செய்யுங்கள் என்றுச் சொன்னால், அதன் அர்த்தமென்ன? 

இயேசு அங்கு அற்புதம் செய்து இருந்தாலும், அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை, அதை அவர்கள் கேலிகூத்தாக நினைப்பார்கள் எனவே தான் இயேசு செய்யவில்லை. 

பிஜே அவர்களுக்கு ஒரு கேள்விகள்:

பிஜே அவர்களே, நான் உங்கள் வழிக்கே வருகிறேன், யூத குருக்கள் அற்புதத்தை கேட்கும் போது, இயேசு மறுத்தார், காரணம் அற்புதம் செய்யும் அதிகாரம் அவர் கையில் இல்லை, அது இறைவனுடைய கையில் உள்ளது என்று சொல்கிறீர்கள் அல்லவா? 

1. நீங்களே சொல்லுங்கள், யூத குருக்கள் மரியாதையாக கேட்கும் போது, தேவன் (அ) இறைவன் (அ) அல்லாஹ் ஏன் இயேசு மூலம் அற்புதம் செய்து காட்டவில்லை? 

2. யூத‌ குருக்க‌ள், போத‌க‌ரே என்று ம‌ரியாதையுட‌ன் கேட்ட‌து வெறும் வெளிவேஷம் என்று இறைவ‌னுக்கே தெரிந்துவிட்ட‌தோ? 

3. ஏன் ம‌ரியாதையுட‌ம் அவ‌ர்க‌ள் அற்புத‌ம் கேட்ட‌போது, இறைவ‌ன் இயேசு மூலமாக செய்து காட்ட‌வில்லை என்று பிஜே அவ‌ர்க‌ள் தான் இப்போது விள‌க்க‌வேண்டும்? 

4. குறைந்தபட்சம் கற்பனை செய்தாவது, இந்த குறிப்பிட்ட காரணத்தினால் தான் இறைவன் இயேசு மூலமாக இந்த சூழ்நிலையில் அற்புதம் செய்து காட்டவில்லை என்று கிறிஸ்தவத்திற்கு விளக்குங்கள்? நீங்கள் கேள்வி கேட்டீர்கள், எங்களுக்கு தெரிந்த விளக்கத்தை நாங்கள் கொடுத்துவிட்டோம், ஒரு புது கேள்வி(அதே கேள்வி தான்) எழும்பியது, அதை கேட்டுள்ளோம் அதை இப்போது விளக்குவது முதல் கேள்வி கேட்ட உங்களைச் சார்ந்தது. 

இயேசுவிற்கு எப்போது அற்புதங்கள் செய்யவேண்டும் என்று நன்றாகத் தெரியும்: 

இயேசு ஒருபோதும், தன் சுயபெருமைக்காக அற்புதங்கள் செய்யவில்லை. மக்களின் தேவைகளுக்காகவே, மற்றும் தான் ஒரு தேவகுமாரன், மேசியா என்பதை நிருபிப்பதற்காகவே அற்புதங்கள் செய்தார். 

மரியாளின் மீது வைத்த அன்பின் காரணமாக, தன் வேளை இன்னும் வரவில்லை என்று சொன்னாலும் , ஒரு திருமண விருந்தில் அற்புதம் செய்தார் (யோவான் 2:1-11).

யூதர்கள் அல்லாத மக்களிலிருந்து வந்த ஒரு பெண் அதிகமாக வருந்திக்கேட்டுக்கொண்ட போது அற்புதம் செய்தார் (மத்தேயு: 15:21-28). 

அவ்வளவு ஏன், தன்னை பிடிக்கவந்த சேவகனின் காதை ஒரு சீடன் அறுத்தபோது கூட அவனை சுகப்படுத்தினார் (லூக்கா 22:50-51) 

எனவே, நீங்கள் சொல்லும் விவரங்கள் மிகவும் தவறான விவரங்கள், உண்மையை மாற்றி, ஒரு சில வசனங்களை மேலோட்டமாக படித்து கருத்து கூறி இருக்கிறீர்கள். 

குர்ஆனில் இயேசுவின் அற்புதங்கள்: இயேசுவிற்கு சிறுவயது இருக்கும் போது கலிமண்ணினால் ஒரு பறவை செய்து அதற்கு உயிர் கொடுத்ததாக குர்‍ஆன் சொல்கிறது. மரியாளுக்கு உணவை அல்லாஹ் அற்புதமாக கொடுத்த அற்புதம் என்ன மாற்றத்தை யூதர்களிடையே கொண்டுவந்தது, இயேசுவின் பறவை அற்புதம், அல்லாஹ்வின் செய்தியை எவ்வளவு வல்லமையாக பறப்ப உதவியாக இருந்தது? 

குர்‍ஆன் சொல்லும் இயேசுவின் அற்புதங்கள் எல்லாம் வீண் என்று குர்‍ஆனே சாட்சி சொல்லிவிட்டது, அதாவது யூதர்கள் இத்தனை அற்புதங்கள் கண்டும் இயேசுவின் இஸ்லாமிய செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லையே? இயேசு மண் பறவைக்கு உயிர் கொடுத்தது, இயேசு ஒரு உருவாக்குபவர் என்பதை காட்டுகிறதே தவிர அதினால் என்ன பயன் என்று நினைக்கிறீர்கள்? 

இயேசு தன் தனிப்பட்ட குடும்பத்திற்கு சாதகமாக அற்புதம் செய்ததில்லை. தன் வளர்ப்பு தந்தை யோசேப்பு, இயேசுவிற்கு 30 வயது ஆவதற்கு முன்பே மரித்ததாக நாம் அறியலாம். நான்கு நாட்கள் மரித்து நாரிப்போன லாசருவை உயிரோடு எழுப்பிய இயேசு ஏன் தன் வளர்ப்பு தந்தையை உயிரோடு எழுப்பவில்லை? சிந்திக்கவேண்டும், மற்றவர்களுக்கு பிரயோஜனமான அற்புதங்கள், மற்றும் அவர் கொண்டு வந்த செய்தி உண்மை என்பதை நிருபிக்க அற்புதங்கள் செய்தாரே தவிர, தன் சொந்த உலக குடும்பத்திற்காக அல்ல . ஆனால், குர்‍ஆன் கூறும் இயேசுவின் அற்புதங்களினால் ஒரு நன்மையும் இல்லை என்பது தெளிவாக புரிகிறது. தன் வயது சிறுவர்களுக்கு முனபாக பறவை அற்புதம் செய்ததால், என்ன பிரயோஜனம் சொல்லுங்கள். அச்சிறுவர்கள் என்ன இவர் பெரியவரான போது, இவரது இஸ்லாமிய செய்தியை பறப்ப உதவியாக இருந்தார்களா? சொல்லுங்கள். இயேசு என்ன சாலைகளில் மாஜிக் காட்டிக்கொண்டு செல்லும் நபர் என்று நினைத்தீர்களா? ஒரு வேளை இந்த பறவை அற்புதத்தை கேள்விப்பட்டு, யூதர்கள் இவர் மீது விசுவாசம் வைத்தார்களா? இல்லையே? 

இயேசுவின் குர்‍ஆன் அற்புதங்கள் பற்றி தனி கட்டுரையில் காணலாம். 

முடிவுரை: மொத்தத்தில், மற்ற இஸ்லாமிய அறிஞர்கள் போல, பிஜே அவர்களும் செயல்பட்டுள்ளார், அதாவது மேலோட்டமாக பைபிளை படித்து, ஒர் வசனத்தின் முந்தைய பிந்தைய வசனங்களை படிக்காமல், எந்த சூழ் நிலையில் வசனங்கள் சொல்லப்பட்டதென்று தெரிந்துக்கொள்ளாமல் புத்தகம் எழுதியுள்ளார். 

1. இயேசு பல அற்புதங்கள் (ஒரு குறிப்பிட்ட சூழ் நிலையில்) செய்து இருக்கும் போது, இயேசு "ஒரு அற்புதம் தான் செய்துள்ளார்" என்று "பொய்யான " விவரத்தை சொல்லியுள்ளார். 

2. மக்களின் அவிசுவாசத்தினால் தான் இயேசு அற்புதம் செய்யவில்லை என்று பைபிள் சொல்லும் போது, இவர் அதை மாற்றி சொல்கிறார். 

3. ஆசாரியார்கள் பல அற்புதங்கள் கண்டும், இயேசுவை அவமானப்படுத்தும் வார்த்தைகளை சொல்லிய பிறகு திட்டியும், பிறகு அற்புதம் செய்யுங்கள் என்று கெட்டதால் தான் இயேசு செய்யவில்லை என்று பைபிள் சொல்லும் போது, மரியாதையாக ஆசாரியர்கள் கேட்டாலும் இயேசுவால் அற்புதம் செய்யமுடியவில்லை என்று பிஜே அவர்கள் மாற்றிச் சொல்லியுள்ளார்கள். 

எனவே, பிஜே அவர்கள் இனி ஏதாவது பைபிள் பற்றி எழுதும் போது, முந்தைய பிந்தைய வசனங்களை படித்து தெரிந்துக்கொண்டு எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். 

பாகம் 1 முற்றிற்று, பிஜே அவர்களின் "அற்புதம் நிகழ்த்தியது எப்படி?" என்ற தலைப்பின் கீழ் உள்ள மற்ற வரிகளுக்கு இரண்டாம் பாகத்தில் பதில் கர்த்தருக்கு சித்தமானால் பார்க்கலாம்

மூலம்: http://www.isakoran.blogspot.in/2007/12/blog-post.html

பீஜே அவர்களுக்கு அளித்த இதர மறுப்புக்கள்

உமரின் கட்டுரைகள் மற்றும் மறுப்புக்கள்