மதசார்பற்ற நாட்டுக்காக ஏங்கும் முஸ்லிம் சமுதாயமும், பிஜே அவர்களும்

முன்னுரை: ”இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை” என்ற தலைப்பில் பிஜே அவர்கள் ஒரு உரையை நிகழ்த்தினார்கள். 

இந்த உரையை ஒலிவடிவில் கேட்க இங்கு சொடுக்கவும்.

இதன் சுருக்கத்தை படிக்க இங்கு சொடுக்கவும்.

வாசகர்கள் பிஜேயின் உரையை முழுவதுமாக ஒலி வடிவில் கேட்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இதில் பிஜே அவர்கள் பல விஷயங்களை கூறியுள்ளார்கள். ”இந்தியாவில் மதசார்பற்ற நிலைப் பற்றி” அவர் கூறியவைகளை நாம் ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் அதே மதசார்ப்பற்ற நிலைப் பற்றி அவரிடம் சில கேள்விகள் கேட்கவேண்டியுள்ளது, அவைகளை இக்கட்டுரையின் பிற்பகுதியில் பாகம் 2ல் கேட்டுள்ளேன். 

பாகம் 1: பிஜே அவர்களின் உரையில் காணப்பட்ட நிறைகள் 

அ) முதல் பந்தையும் கடைசி பந்தையும் ஆறு ரன்களுக்கு  அடித்த பிஜே அவர்கள்:

பிஜே அவர்கள் தம் உரையை ஆரம்பித்த உடனே ஒரு அருமையான விவரத்தை எடுத்துக்காட்டாகச் சொன்னார். அதை கேட்டவுடன் எனக்கு உடலெல்லாம் சிலிர்த்துவிட்டது. அமெரிக்காவின் முன்னாள் அதிபரைக் கூட ஒரு முஸ்லிம் அறிஞர் உதாரணமாக காட்டுவாரா? ஆச்சரியமாக உள்ளதே!

உரையின் ஆரம்பம்: 

மதசார்பற்ற நாட்டின் அதிபர் என்றால் கென்னடி மாதிரி அல்லவா இருக்கவேண்டும்! என்று பிஜே அவர்கள் கூறினார்கள். மாஷா அல்லாஹ்!!! 

”உரையின் துவக்கமாக மதச்சார்பற்ற நாட்டை ஆளக்கூடிய ஆட்சியாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்னாள் அமெரிக்க அதினர் கென்னடி கூறிய செய்திகளை மேற்கோள்காட்டி பீஜே பேசினார். அதாவது கிறித்தவ மத்த்திலுள்ள  ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த கென்னடி அவர்கள் தான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றவுடன் ஒரு பிரகடனத்தைச் செய்தார். ரோமன் கத்தோலிக்கப் பிரிவினரின் தலைமையிடமாக உள்ள வாடிகனுக்குச் சென்று தான் ஒவ்வொரு முறையும் அங்குள்ள மதத்தலைவரான போப் ஆண்டவரிடத்தில் ஆசி வாங்கி வருவதை வழக்கமாக வைத்திருப்பதாகவும், ஆனால் தற்போது நான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ளதால் இங்குள்ள அனைத்து பிரிவு மக்களுக்கும் நான் அதிபராக ஆகியுள்ளதால் இனிமேல் போப் ஆண்டவரிடத்தில் ஆசி வாங்க செல்லமாட்டேன் என்று அறிவிப்புச் செய்தார். மதச்சார்பற்ற நாட்டில் ஆட்சியாளர்களாக இருப்பவர்கள் இப்படி ஒருசார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.” [1]

உரையின் முடிவுரை:

முன்னுரையைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கவேண்டாம் வாசகர்களே, முடிவுரையையும் சிறிது படித்துவிடுங்கள், அப்படியே ஸ்தம்பித்துவிடுவீர்கள். 

பிஜேயின் உரையின் முடிவுரை:

“அப்சல் குருவை அநியாயமாக தூக்கிலிட்டு கொலை செய்தது ஏன்?

உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பினார். இந்த அநியாயத்திற்கெல்லாம் படைத்த இறைவனிடம் முறையிடுங்கள், அவன் நமக்கு தீர்ப்பு வழங்குவான். இந்த அநியாயக்காரர்களுக்கு இங்கும் மறுமையில் அல்லாஹ் இழிவை வழங்குவான் என்று ஆக்ரோசமான முறையில் பேசி முடித்தார். “[1]

தங்களுக்கு அநியாயம் நடந்தால் முஸ்லிம்கள் அதற்கு பதிலடி  கொடுக்காமல், அல்லாஹ்விடம் அந்த தீயவர்கள் பற்றி முறையிடவேண்டும், பழிக்கு பழி வாங்கக்கூடாது, அல்லாஹ் அவர்களை பார்த்துக்கொள்வான் என்று பிஜே அவர்கள் முடித்த முடிவுரை என்னை கவர்ந்து விட்டது. நான் பிஜே அவர்களின் ஃபேன் ஆகிவிட்டேன் (பேன் என்று நான் சொல்லவில்லை). 

இயேசுவின் போதனையை எப்போது இவர் பின்பற்ற தொடங்கினார்? இப்படியும் முஸ்லிம் அறிஞர்கள் முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறுவார்களா? பாலைவனத்திலும் தாமரை மலருமா? பிஜே அவர்களின் இவ்வார்த்தைகளில் உண்மையுள்ளதா? என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் ஆங்காங்கே காணப்போகிறோம்.

மேற்கண்ட முன்னுரை மற்றும் முடிவுரைக்கு மத்தியில் அனேக விஷயங்களை பிஜே அவர்கள் சொன்னார்கள். அவைகளில் சிலவற்றை நாம் ஆமோதிக்கலாம், சிலவற்றோடு மோதத்தான் வேண்டும்.  முதலில் அவர் உரையில் நாம் ஆமோதிக்கும் விவரங்கள் என்னவென்பதை காண்போம்.

ஆ) இந்தியா மதசார்பற்ற நாடு என்றால், ஏன் அரசு அலுவலகங்களில், ஒரு மதத்தின் பூஜைகள், படங்கள் போன்றவைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன?

இந்த உரையில், மதசார்ப்பற்ற நாடு எப்படி இருக்கவேண்டும்? என்று பிஜே கோடிட்டு காட்டுகிறார். அமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடியை மெச்சிக்கொள்கிறார். ஒரு மதசார்ப்பற்ற நாட்டின் அதிபர் என்றால் இவரைப்போன்று அல்லவா இருக்கவேண்டும்! என்று ஆச்சரியப்படுகிறார். இவரது முழு உரையை ஒலிவடியில் நாம் கேட்டால், இவர் ஜனநாயக மதசார்ப்பற்ற அரசாட்சியை மெச்சிக்கொள்வது போல தெரிகின்றது. மதசார்ப்பற்ற நாடுகளில் உண்மையாகவே “மதசார்பின்மையை” பின்பற்றினால், சிறும்பான்மையினருக்கு அதிக நன்மைகள் கிடைக்குமே! என்று ஏங்குகிறார். 

”இந்தியா” ஒரு மதசார்ப்பற்ற நாடு என்று சொல்லிக் கொண்டாலும்,  அரசியல் சாசனம் இதனை ஆமோதித்தாலும், உண்மையில் அப்படி தெரியவில்லையே! என்று இவர் அங்கலாய்க்கிறார். இவர் சொன்ன கீழ்கண்ட எடுத்துக் காட்டுகளை நாம் ஒரு மனதோடு ஆமோதிக்கலாம்:

1) மதச்சார்பற்ற நாட்டில் அரசு அலுவலகங்களில் கடவுள் சிலைகளையும், கோவில்களையும் வைத்து வழிபாடு நடத்துவது மதச்சார்பின்ன்மையா?

2) தமிழக அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் சின்னத்தை வைத்திருப்பது மதச்சார்பின்ன்மையா?

3) பொங்கல் இனாம் கொடுக்கும் அரசாங்கம், ரமலான் பரிசு வழங்காமல் பாரபட்சம் காட்டுவது சரியா?

4) இராமாயணத்தை ஒளிபரப்பிவிட்டு, திப்பு சுல்தானின் வீர வரலாற்றை ஒளிபரப்பும் போது இது கற்பனை கதை என்று மத்திய அரசு அறிவித்த்தே இதுதான் மதச்சார்பற்ற தன்மையா? (இது உண்மையா என்று நான் சரி பார்த்ததில்லை, இப்படி மத்திய அரசு செய்திருந்தால், இது தவறு தான்).

5) நீதி தேவதை கண்ணைக் கட்டியிருப்பது போல காட்டிவிட்டு முஸ்லிம் என்றால் மட்டும் மத துவேஷத்தோடு தீர்ப்பளிப்பது தான் மதச்சார்பற்ற தன்மையா?

6) தாடி வைப்பது தாலிஃபானிசம்; தாடி வைக்க அனுமதி கேட்பது பாகிஸ்தானிசம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்களே! இது சரியா?

7) குர்பானி கொடுக்க தடை போட்டு மத துவேஷத்தை தங்களது தீர்ப்பில் காட்டியது, பகவத் கீதையை மேற்கோள் காட்டி தீர்ப்பளித்த்து சரியா? [1]

இப்படி பல உதாரணங்களை பிஜே அவர்கள் முன்வைத்தார்கள். இவைகள் அனைத்தும் நியாயமான கேள்விகளாக நமக்கு தென்படுகின்றது. ஆகவே, மேற்கண்ட விஷயங்களோடு நாம் அவரோடு ஒருமித்துப் போகலாம்.

ஒரு அரசு அலுவலகத்தில், இப்படி சாமி படங்கள் மாட்டிவைத்தால், மாற்று மத மக்கள் அங்கு ஒரு நீதிக்காகச் சென்றால், அங்கு இருக்கும் அதிகாரிகளிடமிருந்து தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்புவது? என்று கேள்வி எழுப்புகிறார். பெரும்பான்மையான அதிகாரிகள் உண்மையாகவும் நீதியாகவும் நடந்துக் கொள்வதால், மாற்று மத மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நாம் நம்பலாம். ஆனால், சில இடங்களில் தன் இனத்தான், மதத்தான் என்ற உணர்வு சிறிது மேலோங்கி காணப்படுவதால், மதத்தின் பெயரில் அநியாயம் நடக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இவரது கேள்விகள் நியாயமானதே.   

மதசார்பற்ற இந்தியாவின் நீதித்துறையும் சில வேளைகளில் “முஸ்லிம்களுக்கென்று தனிப்பட்ட முறையில், வேண்டுமென்றே அநியாயமான தீர்ப்பு வழங்கியதாக” இவர் சில உதாரணங்களை முன்வைத்தார். 

நான் மேலே சொன்னவைகளை நாம் மதசார்ப்பற்ற நிலையில் உற்று நோக்கினால், பிஜே அவர்கள் சொன்னவைகளில் நியாயம் இருக்கிறது என்பதை கவனிக்கமுடியும். 

இஸ்லாமியரல்லாத வாசகர்கள் இதுவரை என்னோடு கூட சேர்ந்து பிஜேவை ஆமோதித்ததற்காக என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.   இனி நீங்கள் இந்த கட்டுரையின் மீதமுள்ள விவரங்களை படிக்க வேண்டிய அவசியமில்லை, நீங்கள் விரும்பினால் இப்போதே இக்கட்டுரையை விட்டு வெளியே சென்றுவிடலாம்.  ஏனென்றால், நான் தனிப்பட்ட முறையில் பிஜே அவர்களிடம் ”இஸ்லாம் பற்றிய” சில கேள்விகளை கேட்கவேண்டியுள்ளது. 

ஒரு முஸ்லிமாக இருந்துக் கொண்டு, குர்-ஆனையும், முஹம்மதுவையும் பின்பற்றிக்கொண்டு, அதனை போதனை செய்துக் கொண்டு, இஸ்லாமிய ஷரியா சட்டம் தான் உலகில் சிறந்த சட்டம் என்று நம்பும்  பிஜே போன்றவர்களுக்கு மேற்கண்ட விதமாக மதசார்பின்மைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? என்று நான் பல கேள்விகளை கேட்கவேண்டியுள்ளது. 

இந்தியாவில் முஸ்லிம்கள் சிறும்பான்மையாக இருப்பதினால், இப்படி மதசார்பின்மையை சரியாக பேணாமல் இருப்பதைப் பார்த்து கொதித்து எழும் பிஜே அவர்கள், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இஸ்லாமிய நாடுகளில் சிறும்பான்மையினருக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களை பார்த்து மௌனமாக இருப்பது ஏன்? 

முஸ்லிம்கள் சிறும்பான்மையென்றால் ஒரு நியாயம், முஸ்லிம்கள் பெரும்பான்மையென்றால் இன்னொரு நியாயமோ? என்று பல கேள்விகள் கேட்கவேண்டியுள்ளது.

பாகம் 2: பிஜே அவர்கள் உரையின் அபத்தங்கள் 

பிஜே அவர்களே, உங்களுடைய உரையை முழுவதுமாக நான் ஒலி வடியில் கேட்டேன். இவைகளை கேட்டபோது என் உள்ளத்தில் தோன்றிய எண்ணம் என்னவென்றால், “இவர் நடிக்கிறாரா? ஒரு முஸ்லிமாக இருந்துக் கொண்டு, இஸ்லாமை மறந்துவிட்டு, இப்படி வார்த்தைகளை அள்ளி வீசுகிறாரே! உண்மையாகவே இவர் ஒரு முஸ்லிம் தானா!” என்ற சந்தேகம் எனக்கு வந்தது. உங்களிடம் இதைப் பற்றி பல கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது.

1) பிஜே அவர்கள் முழுமனதோடு ஆதரிப்பது மதசார்ப்பற்ற அரசையா அல்லது மத சார்புள்ள இஸ்லாமிய அரசையா?

பிஜே தம்முடைய உரையில் மதசார்ப்பற்ற நாடு எப்படி இருக்கவேண்டும் என்ற இலக்கணத்தை கூறினார். சிறும்பான்மையினர் மதசார்ப்பற்ற நாட்டில் தான் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் அதுவும் அரசு மதசார்ப்பற்ற தன்மையை முழுவதுமாக பின்பற்றினால், உண்மையாகவே மாற்று மத சிறும்பான்மையினர் நிம்மதியாக இருக்கலாம் என்பது தான் அவரது உரையின் சாராம்சமாக தெரிகிறது.

இதிலிருந்து பீஜே அவர்கள் மதசார்ப்பற்ற அரசைத் தான் விரும்புகிறார் என்று நாம் அறிந்துக் கொள்ளலாம். ஏனென்றால், அவரது கருத்தின் படி, இப்படிப்பட்ட நாட்டில் தான் சிறும்பான்மையினரின் மனது புண்படாது, அவர்களுக்கு அதிகாரிகள் மீது நம்பிக்கை வரும், மதத்தின் அடிப்படையில் மற்றவர்கள் (பெரும்பான்மையினர்) இவர்களை துன்புறுத்தமாட்டார்கள். எனவே, மதசார்ப்பற்ற அரசு தான் சிறந்தது, அதன் ஆட்சி தான் எல்லா மக்களுக்கு ஏற்ற ஆட்சியாக இருக்கமுடியும் என்பதை பல உதாரணங்களை முன்வைத்து பேசினார். இந்தியா மதசார்ப்பற்ற நாடு என்றுச் சொல்லிக்கொண்டும், அதனை முழுவதுமாக பின்பற்றாததினால் தான் “முஸ்லிம்களாகிய” நாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறோம் என்று தன் மனவேதனையை கொட்டினார். இது உண்மையும் கூட, மதசார்ப்பற்ற நாட்டில் தான் (முழுவதுமாக அதனை அரசு கடைபிடித்தால்), அனைத்து தரப்பினருக்கும் நியாயம் கிடைக்கும். 

பீஜே அவர்களுக்கு கேள்விகள்:

  • ஒரு முஸ்லிமாக இருந்துக் கொண்டு, இஸ்லாமிய முறையில் ஆட்சி அமைக்கும் படி கட்டளையிடும் வேதமாகிய குர்-ஆனையும், ஹதீஸ்களையும் வைத்துக் கொண்டு, உலகம் அனைத்தும் ஒரே ”மதத்தை அடிப்படையாக கொண்ட அரசின் கீழ்வரவேண்டும்”, அதுவும் இஸ்லாமிய அரசாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்ற பீஜே அவர்களே, மதசார்பின்மையைப் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
  • குர்-ஆன் இறைவேதம் என்று நம்பும் அந்த நிமிடமே, மதசார்பின்மையைப் பற்றி பேசக்கூடிய தகுதியை நீங்கள் இழக்கிறீர்கள். ஒவ்வொரு முஸ்லிமும் இழக்கிறான். 
  • இஸ்லாமிய ஷரியா சட்டமும், இஸ்லாமிய அரசும் தான் சிறந்தது என்றுச் சொல்லும் அந்த நிமிடமே, மதசார்பின்மையைப் பற்றி பேசக்கூடிய தகுதியை நீங்கள் இழக்கிறீர்கள்.
  • இஸ்லாமை சார்ந்துக் கொண்டு அரசை நடத்திய உங்கள் முஹம்மதுவை பின்பற்றுகின்ற நீங்கள், மதசார்ப்பற்ற நாடு பற்றி பேச எப்படி தைரியம் கொள்கிறீர்கள்?
  • இஸ்லாமிய ஆட்சி செய்யும் நாட்டில் சிறும்பான்மையினர் வேறு மதத்தை சார்ந்து இருப்பதினால், மதத்தின் அடிப்படையில் அவர்களிடம் தனிப்பட்ட ஜிஸ்யா வரி வாங்குவது சரியா தவறா? இன்றும் இஸ்லாமிய நாடுகளில் சிறும்பான்மை கிறிஸ்தவர்கள் படும் பாடுகளை அளவிடமுடியாதது. 
  • இஸ்லாம் அங்கீகரிக்கும் “இஸ்லாமிய ஆட்சி” சிறந்ததா? அல்லது காஃபிர்களின் “மதசார்ப்பற்ற ஆட்சி” சிறந்ததா?
  • இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள் 100% மதசார்ப்பற்றதாக காணப்படவில்லை என்பது தான் உங்களின் குற்றச்சாட்டு. இதன் அடிப்படையில் பார்த்தால், மதசார்ப்பற்ற அரசுக்குத் தான் உங்கள் ஓட்டு என்று நாம் கருதலாமா? அல்லது இந்தியாவில் சிறும்பான்மையாக முஸ்லிம்கள் இருப்பதினால், “மதசார்ப்பற்ற அரசினால்” அதிக நன்மை உண்டாகும் என்பதால், இப்படி மேடைகளில் உண்மையை மறைத்து பேசுகிறீர்களா?
  • மதத்தை சார்ந்து நடத்தும் ஆட்சியாகிய இஸ்லாமிய ஆட்சியைவிட, மதசார்ப்பற்ற அரசையே தவ்ஹித் ஜமாத் ஏற்றுக் கொள்ளும் என்று உங்களால் பொது மேடைகளில் பேசமுடியுமா?
  • மதத்தை சார்ந்து நடக்கும் இஸ்லாமிய ஆட்சிகள் அமுலில் இருக்கும் “இஸ்லாமிய நாடுகளில்” சிறும்பான்மையினருக்கு நியாயம் கிடைப்பதில்லை என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியுமா? 

மதசார்ப்பற்ற நாடு என்று அரசியல் சாசனம் சொல்லிவிட்டபிறகும், இந்தியா போன்ற நாட்டில் பெரும்பான்மையினரால், சிறும்பான்மையினருக்கு “அனேக தீமைகள் நடக்குமென்றால்”, இஸ்லாமிய நாட்டில் பெரும்பான்மையானவர்களாக முஸ்லிம்கள் இருப்பதினால், அதுவும் இஸ்லாமிய ஜாதியின் அரசியல் சாசனம் அமுலில் இருப்பதினால் அங்கு சிறும்பான்மையினருக்கு எவ்வளவு தீமைகள் விளையும்? சிந்தித்து பார்த்து இருக்கின்றீர்களா? மூளை என்று ஒன்று இருந்து, அது சரியாக வேலை செய்கிறது என்று சொல்பவர்கள் சிந்திக்கட்டும்.

இந்தியாவில் நடக்கும் அட்டூழியங்களுக்கு நான் வக்காளத்து வாங்கவில்லை, ஆனால், ”மதசார்ப்பற்ற ஆட்சியைப் பற்றிப் பேச” உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? என்று கேட்கிறேன் அவ்வளவு தான். 

முஸ்லிம்களுக்கு ஒரு அநியாயம் நடந்துவிட்டால், இப்படி மேடைபோட்டு கூச்சல் போடும் நீங்கள் இஸ்லாமிய நாடுகளில் சிறும்பான்மையினருக்கு நடக்கும்  தீமைகளை பார்த்துக் கொள்ளாமல் இருப்பது ஏன்? ஒரு நாடு என்றால், அது மதத்தை சார்ந்து இருக்கக்கூடாது என்று உங்களால் சொல்லமுடியுமா? உங்களுடைய உரையின் படி, இஸ்லாமிய ஆட்சியை நீங்கள் வேறுக்கிறீர்கள் என்றும், அதில் வேற்று மத மக்களுக்கு நன்மையை விட தீமை தான் அதிகம் விளையும் என்றும் நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

உங்கள் முஹம்மது விரும்பும் அரசு எது? மதசார்ப்பற்ற அரசையா? அல்லது மத சார்புள்ள அரசையா? முஹம்மதுவும், கலிஃபாக்களும் செய்த ஆட்சி எப்படிப்பட்டது?  உங்கள் முஹம்மதுவும், கலிஃபாக்களும் எல்லா மதத்திற்கு சம உரிமை கொடுத்து ஆட்சி புரிந்தார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா? 

2) ஒரு இஸ்லாமிய தீவிரவாதிக்காக தொழுகை நடத்தி, துவா கேட்பவர்கள் உலகிற்கு எதனை சொல்ல விரும்புகிறார்கள்?

உங்கள் உரையில் ”ஒரு முஸ்லிம் தீவிரவாதியாக இருந்து சட்டத்தினால் தண்டிக்கப்பட்டாலும், அவன் முஸ்லிமாக இருந்ததால், மத அடிப்படையில் நாங்கள் அவனுக்காக தொழுகை நடத்தினால் என்ன தவறு?” என்று கேட்டீர்கள்.

மேலும் கீழ்கண்ட ஒரு உதாரணத்தையும் சொன்னீர்கள். 

ஒரு மதசார்ப்பற்ற நாட்டில், ஒரு அரசு அலுவலகத்தில் ஒரு இந்து சாமியின் படம் மாட்டியிருந்தால், அந்த அலுவலகத்துக்கு நியாயம் கேட்டுச் செல்லும் ஒரு முஸ்லிம் என்ன நினைப்பான்? அந்த அதிகாரி தன் மதத்தையும், தான் ஒரு இந்து என்பதையும் வெளிப்படையாக காட்டிவிட்டார். இவரிடம் நீதி கேட்டுச் சென்றால் நிச்சயமாக நியாயம் கிடைக்காது, இவர் என் எதிராளியாகிய அந்த இந்துவுக்குத் தான் நியாயம் செய்வார் என்று நினைப்பார் அல்லவா? அரசு அலுவலகங்களில் இப்படி ஒரு மதத்தின் படங்களை மாட்டியிருந்தால், உலகிற்கு  அவர்கள் எதனை வெளிப்படுத்துகிறார்கள்? நாங்கள் இந்துக்களுக்குத் தான் நியாயம் செய்வோம் என்று சொல்வது போல ஆகுமல்லவா? என்று ஒரு எடுத்துக்காட்டைச் சொன்னீர்கள்.

உங்களின் இந்த வரிகளில் நியாயம் இருக்கிறது. ஆனால், மேலே ஒரு தீவிரவாதிக்காக மதத்தின் அடிப்படையில் தொழுகை நடத்தியது மட்டும் எப்படி நியாயம்?

தூக்கிலிடப்பட்ட தீவிரவாதிகளுக்காக முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் போது உலகிற்கு எதனை நீங்கள் சொல்லவருகிறீர்கள்? 

1. இந்திய அரசே, மாற்று மத அன்பர்களே! நீங்கள் தூக்கில் போட்ட நபர் ஒரு முஸ்லிம் ஆவார். அவரை உங்கள் சட்டம் தூக்கில்போட்டது. அவருக்காக நாங்கள் அல்லாஹ்விடம் தொழுகை நடத்தி, அவருக்காக வேண்டுதல் செய்கிறோம்.

2. அவரின் தீவிரவாத செயலினால், பல ஆயிர மக்கள் மரித்து இருந்தாலும், நாங்கள் அவருக்காக தொழுகை நடத்துவோம், வேண்டிக்கொள்வோம், ஏனென்றால் அவர் என் ஜாதிக்காரர்.

3. அவர் உங்கள் சகோதரிகளை விதவைகளாக்கினார், அனேக குழந்தைகளை அனாதைகளாக்கியிருக்கினார், பிஞ்சு குழைந்தைகளை பஞ்சு பஞ்சாக சிதறும்படி செய்தார், பல ஆயிர கோடி பொருளாதாரத்தை சேதமாக்கியிருக்கிறார், இரத்த ஆறு ஓடவைத்திருக்கிறார்.  இருந்தபோதிலும் அவர் என் ஜாதி, அவர் ஒரு முஸ்லிம் என்பதால், அவருக்காக நாங்கள் தொழுகை நடத்துவோம். 

4. உங்கள் பிள்ளைகள் அனாதைகளானால் எங்களுக்கென்ன? உங்கள் பெற்றோர்கள் கொல்லப்பட்டால் எங்களுக்கு என்ன? உங்கள் சகோதரிகள் விதவைகளானால் எங்களுக்கு என்ன?  அவர் என்னதான் செய்தாலும், அவர் ஒரு முஸ்லிம் எனவே, எங்கள் மத அடிப்படையில் அவருக்கு கொடுக்கவேண்டிய “மரியாதையை” நாங்கள் கொடுப்போம், அவருக்கு சொர்க்கம் கொடுக்கும் படி அல்லாஹ்விடம் வேண்டுதல் செய்வோம்.

5. ஒரு தீவிரவாதிக்காக தொழுகை நடத்தும் போது, மேற்கண்ட விதமாக நீங்கள் உலகிற்கு சொல்கிறீர்கள் அப்படித்தானே! ”இல்லை, இல்லை, நாங்கள் அப்படி நினைக்கவிலலை? ஒரு மத சடங்கிற்காகச் தான் செய்கிறோம்” என்று சொல்வீர்களானால், உங்கள் செயலை உலக மக்கள் வேறு எப்படி எடுத்துக் கொள்வார்கள்? இதர இந்தியர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை வருமா? அல்லது கோபம் வருமா?

6. ஒரு கொடூரனுக்காக, சண்டாளனுக்காக, மக்களின் இரத்தத்தை குடித்தவனுக்காக, ஜாதி அடிப்படையில் அவனுக்கு மரியாதை செய்தால், அதன் பிறகும் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் நன்மையாக பேச யாருக்கு மனம் வரும்? நேசித்தவர்களை பலிகொடுத்த மக்களின் புண்ணில் வேல்  பாய்ச்சும் செயல் தானே, தீவிரவாதிகளுக்காக தொழுகை நடத்துவது? உங்களின் இந்த செயல் உலகிற்கு எதனை வெளிக்காட்டுகிறது? முஸ்லிம்கள் நல்லவர்கள் என்றா இது வெளிப்படுத்தும்?  

7. எங்கள் குடும்பங்களை அழித்தவனுக்காக வேண்டுதல் செய்யும் இந்த மனிதர்கள் யார்? இவர்கள் எந்த கிரகத்திலிருந்து வந்தவர்கள்? இவர்கள்  பின்பற்றும் இஸ்லாம் எப்படிப்பட்டது? எவ்வளவு திமிரு இருந்தால், வெடிகுண்டு வைத்தவனுக்காக அல்லாஹ்விடம் தொழுகை நடத்துவார்கள் இவர்கள்? என்று சராசரி மனிதன் நினைக்கமாட்டான்? காது உள்ளவன் கேட்கக்கடவன், மூளை உள்ளவன் சிந்திக்கக்கடவன். மனிதனாக தன்னை காட்டிக்கொள்பவன் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளக்கடவன்.

அலுவலகங்களில் சாமிபடம் மாட்டியவர்களின் செயல், தீவிரவாதிகளுக்காக தொழுபவர்களின் செயலைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு மேலானது. 

இந்தியா போன்ற மதசார்ப்பற்ற நாட்டில் அரசு சம்மந்தப்பட்ட பொதுவான இடங்களில் ஒரு பிரிவினரின் சாமி படங்கள் இருப்பது எப்படி தவறோ, அதைவிட, ஒரு தீவிரவாதிக்காக  தொழுகை நடத்தி, வேண்டுதல் செய்வதும் ஆயிரமடங்கு தவறாகும். 

முஸ்லிம்களே! உங்கள் செயல்களுக்கு பின்னால் இருக்கும் அர்த்தத்தை புரிந்துக் கொள்ளக்கூடாத நிலையில் இக்கால இஸ்லாமியரல்லாத மக்கள் இல்லை. உங்கள் ஒவ்வொரு அசைவையும், வார்த்தையையும் மக்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை மனதில் வைக்கவும். 

ஒருவனை அநியாயமாகக் கொன்றால், அவன் மனித இனத்தை கொன்றவனாவான் என்று வாய்கிழிய மேடைகளில் பேசுவது மட்டும் போதாது, அதனை செயலில் காட்டவேண்டும். உண்மையாக தீவிரவாத செயலில் ஈடுபட்டு, சட்டத்தினால் தண்டிக்கப்பட்டவனுக்கு ஜாதி அடிப்படையில் வக்காளத்து வாங்கி, அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்வது, மனித இனத்துக்கு செய்யும் துரோகமாகும். 

இவன் ஒரு தீவிரவாதி, இவன் அனேகரை கொன்று இருக்கிறான், இவனுக்காக நாம் தொழுகை நடத்தக்கூடாது. இவனுக்காக நாம் தொழுகை நடத்தினால், மற்ற மக்கள் நம் இஸ்லாம் பற்றி என்ன நினைப்பார்கள்? ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயம் தீவிரவாதத்துக்கு வக்காளத்து வாங்குகிறது என்று முஸ்லிமல்லாதவர்கள் நினைக்கமாட்டார்களா? என்று முஸ்லிம்கள் சிந்திக்கவேண்டும். இப்படி செய்வதை விட்டுவிட்டு, ஒரு ஜனநாயக நாட்டில், மாற்று மத மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் மேடையில் நின்றுக்கொண்டு வெட்கமில்லாமல் ”நாங்கள் தீவிரவாதிகளுக்காக தொழுகை நடத்துவோம்” என்றுச் சொல்வது கேவலமானது, இது கண்டிக்கத்தக்கது.  இன்று மேடையில் நின்றுக்கொண்டு பயமில்லாமல், தீவிரவாதிகளுக்காக நாங்கள் தொழுகை நடத்துவோம் என்றுச் சொல்பவர்கள், அப்படிப்பட்ட தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக உதவமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? இந்திய அரசு இப்படிப்பட்டவர்கள் மீது ஒரு கண் வைக்கவேண்டும்! 

3) இஸ்லாமிய நாடுகளின் அரசு அலுவலகங்களில் இஸ்லாமிய சின்னங்களை, குர்-ஆன் வசனங்களை, படங்களை நீக்கவேண்டும் என்று நீங்கள் பரிந்துரைப்பீர்களா?

இந்திய அரசு அலுவலகங்களில் ஒரு மதத்தை சம்மந்தப்பட்ட படங்கள், சின்னங்கள் இருப்பதை குற்றம் சாட்டினீர்கள், அது சரியானதே. ஆனால், இஸ்லாமிய நாடுகளில் உள்ள அரசு அலுவலகங்களில் காணப்படும் இஸ்லாம் சம்மந்தப்பட்ட அனைத்து படங்களையும், குர்-ஆன் வசன படங்களையும், சின்னங்களையும் நீக்க நீங்கள் விரும்புவீர்களா?

4) இந்தியாவில் முஸ்லிம்களாக இருக்கும் அரசு அதிகாரிகள், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்களை மதசார்ப்பற்ற முறையில் காட்டிக் கொள்ளவேண்டும் என்று நீங்கள் சொல்வீர்களா? 

ஒரு அரசு அலுவலகத்தில் சாமி படம் வைக்கப்பட்டால், அங்கு வரும் முஸ்லிமுக்கு நம்பிக்கை அற்றுப்போகுமென்றால், இதே நாட்டில் அரசு அலுவலகங்களில் வேலை செய்யும் முஸ்லிம் அதிகாரிகள், ஊழியர்கள் தொப்பி அணியாமல், தாடி வைக்காமல், ஒரு முஸ்லிமுக்கான எந்த அடையாளத்தையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க பிஜே அவர்கள்  பரிந்துரை செய்வீர்களா?

பிஜே அவர்கள் கீழ்கண்டவாறு ஒரு அறிக்கையை வெளியிடவேண்டும் என்று ஒட்டுமொத்த காஃபிர்கள் (முஸ்லிமல்லாதவர்கள்) அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

”தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. நமது சகோதரர் பிஜே அவர்கள் கொடுத்த உரையின் அடிப்படையில், கீழ்கண்ட விதமாக TNTJவுடன் இணைந்துள்ள முஸ்லிம்கள் நடந்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

அரசு அலுவலகங்களில் அல்லது எல்லா மத மக்களும் ஒன்று கூடும் ”பொது இடங்களில் வேலை செய்யும் முஸ்லிம்கள்” உயர்ந்த பதவிகளை வகிப்பவர்கள், இனி தாங்கள் இஸ்லாமியர்கள் என்று வெளிக்காட்டும் எதனையும் செய்யக்கூடாது. உதாரணத்திற்கு, தொப்பி அணியவேண்டாம், தாடி வையுங்கள் ஆனால், அது முஸ்லிம் தாடியாக இருக்கக்கூடாது (அது என்ன முஸ்லிம் தாடி?). அதிகமாக தொழுவதினால் நெற்றியில் உண்டான வடுவை எப்படியாவது மறைத்துவிடுங்கள். இனி பேண்ட் தைக்கும் போது கனுக்கால் அனைத்தும் மறையும் படி அணியுங்கள். உங்கள் அறையில் மற்றவர்கள் பார்க்கும் படி அலமாரியில் குர்-ஆன் இருக்குமானால், அதனை எடுத்து மறைத்துவிடுங்கள். தொழுகை நேரம் வந்தால், ”நான் தொழுதுவிட்டு வருகிறேன் என்றுச் சொல்லாமல், வேறு ஒரு சாக்குபோக்கு சொல்லிவிட்டுச் செல்லுங்கள்”. இப்படியெல்லாம் நீங்கள்  செய்தால், இஸ்லாமியரல்லாதவர்கள் உங்களிடம் நியாயம் நீதி கேட்க வந்தால், அவர்களுக்கு எந்த ஒரு சந்தேகமும் வராது. இது தான் உண்மையான மதசார்ப்பற்ற நாட்டில் வாழும் மக்களுக்கு (முஸ்லிம்களுக்கு) அழகு. இதனை நாம் மற்றவர்களிடம் எதிர்ப்பார்த்தது போதும், முதலாவதாக நாமே இதனை கடைபிடிப்போம், மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக் காட்டாக வாழ்வோம். நம்மைக் கண்டு, மற்றவர்கள் திருந்தட்டும்.”.

5) கென்னடியின் செயலை மெச்சிக்கொள்ளும் நீங்கள், இஸ்லாமிய அதிகாரிகள்/சட்டமன்ற/பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியில் இருக்கும் வரை மக்காவில் ஹஜ் செய்யமாட்டேன் என்று சொல்லவேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களா?

பிஜே அவர்கள் தன் உரையை தொடங்கியவுடன், முதல் பந்திலேயே சிக்சர் அடிச்சார். ஆறு பந்துகளிலும் சிக்சர் அடித்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை பார்த்து இருப்போம், ஆனால், பீஜே அவர்கள், முதல் ஆறு பந்துகளையும், ஆட்டத்தின் கடைசி ஆறு பந்துகளையும் சிக்சருக்கு அடிச்சது தான் ஆச்சரியம். 

அமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடி, இனி தான் வாடிகன் செல்லமாட்டேன், போப்பிடம் ஆசி வாங்கமாட்டேன், என்னை கிறிஸ்தவனாக காட்டுகின்ற இந்த செயலை செய்யமாட்டேன், நான் ஒரு மதசார்ப்பற்ற நாட்டின் அதிபர், அனைத்து மக்களுக்கும் அதிபர் எனவே இந்த முடிவை நான் எடுத்தேன் என்றுச் சொன்னதை மேற்கோள் காட்டி பீஜே அவர்கள் “இதுவல்லவா மதசார்பின்மை!!!” என்று ஆச்சரியப்படுகிறார். 

இப்படி எந்த ஒரு இஸ்லாமிய நாட்டின் அதிபராவது “நான் எல்லா மக்களுக்கும் அதிபர், எனவே, இனி நான் மக்காவிற்குச் சென்று ஹஜ் செய்யமாட்டேன், நான் ஒரு முஸ்லிம் என்று காட்டுகின்ற, ஹஜ், உம்ரா போன்றவைகளை செய்யமாட்டேன்” என்றுச் சொல்வாரா? இப்படி செய்யும் படி, முதலாவது பாகிஸ்தானின் அதிபருக்கு பிஜே அவர்கள் பரிந்துரை கடிதம் அனுப்புவாரா?

இஸ்லாமிய நாடுகளை விடுங்கள், இந்தியாவையே எடுத்துக் கொள்வோம். கென்னடி சொன்னது போல, இந்தியாவில் அரசு அதிகாரிகளாக, சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களாக, மந்திரிகளாக இருக்கும் முஸ்லிம்கள் சொல்வார்களா? நான் ஆட்சியில் இருக்கும் இந்த ஐந்து ஆண்டுகளில் ”ஹஜ் செய்யமாட்டேன்” என்று சொல்லவேண்டும் என்று பிஜே அவர்கள் முஸ்லிம்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுவாரா? 

கென்னடி போன்றவர்களைக் கண்டு முஸ்லிம்கள் ஆச்சரியப்படுவார்களே தவிர, முஸ்லிம்களை கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்பட வாய்ப்பே இல்லை. யார் யாருக்கு என்ன கொடுப்பனை உள்ளதோ, அது தானே கிடைக்கும்! 

6) ஒருவேளை, இந்தியாவில் 80% முஸ்லிம்கள் இருந்து, இந்துக்கள் 17%, கிறிஸ்தவர்கள் 3% இருந்தால், அரசு அலுவலகங்களில் இஸ்லாமிய சின்னங்கள், மத விஷயங்கள் ஒன்றும் இருக்காதா? அல்லது மக்கா/மதினா படங்களோடு கூட, சாமி படங்களும், இயேசுவின் படமும், புத்தரின் படமும் இருக்குமா?

இந்த கேள்விக்கு பீஜே அவர்கள் பதில் சொல்லட்டும். அதற்கு முன்பாக, ஒருவேளை தற்போது, அரசு அலுவலகங்களில் அனைவருக்கும் சம உரிமை என்ற பெயரில் எல்லா மத சின்னங்கள்/படங்கள் வைத்தால் நிலைமை எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். கட்டுரை மிகவும் சீரியஸாக செல்வதால், கொஞ்சம் வேடிக்கையாக சிந்திக்க ஒரு கற்பனை உரையாடல். 

இடம்: இந்தியா, தமிழ்நாடு, ஒரு அரசு அலுவலகம்

பிஜே அவர்களின் உரையைக் கேட்டு, மெச்சிக்கொண்ட ஒரு இந்து அரசு அதிகாரி, தன் அலுவலகத்தில் உள்ள அனைத்து மத அன்பர்களை அழைத்து, உரையாடுகிறார்.

அரசு அதிகாரி (இந்து): நம் நாடு ஒரு மதசார்ப்பற்ற நாடு. இந்த அலுவலகத்தில் எந்த ஒரு மதத்தின் சின்னமும்/படமும் இருக்கக்கூடாது அல்லது எல்லாருக்கும் சம உரிமை இருப்பதினால், எல்லாருடைய சாமிகளின் படங்கள் வைக்க உரிமை உள்ளது. நான் இந்துக்களின் பிரதிநிதியாக “முருகரின்” படத்தை வைக்கிறேன்.

[ஒவ்வொரு ஊழியரும் தன் மதத்துக்கு சம்மந்தப்பட்ட படங்களை வைக்க முன்வந்தனர்.]

முஸ்லிம் ஊழியர்: நான் குர்-ஆன் வசனம் மற்றும் மக்கா மதினா உள்ள ஒரு போட்டோவை வைக்கிறேன். 

கிறிஸ்தவன்: நான் பைபிளின் வசனமும், இயேசு தன் இரண்டு கைகளை நீட்டி அழைப்பது போல இருக்கின்ற படத்தை வைக்கிறேன்.

புத்தமத அன்பர்: நான் தியானத்தில் இருக்கின்ற புத்தரின் படத்தை வைக்கிறேன்.

அரசு அதிகாரி (இந்து): எல்லாருடைய விருப்பமும் நிறைவேறிவிட்டதா! ரொம்ப நல்லது. இனிமேல் தான் இந்தியா உண்மையான மதசார்ப்பற்ற நாடாக மாறப்போகிறது! இப்போது கூட்டத்தை முடித்துவிடலாமா?

கூட்டத்திலிருந்து ஒரு சத்தம் வருகிறது:  “ஹலோ சார், இருங்க, இன்னும் என்னுடைய விருப்பத்தை நீங்க கேட்கவே இல்லையே!”

அரசு அதிகாரி (இந்து): யாரப்பா நீ? எல்லாரும் தங்கள் சாமியின் படங்களை வைப்பதாக சொல்லிவிட்டார்களே! நீ யார்? இந்துவா? முஸ்லிமா? கிறிஸ்தவனா? அல்லது புத்தமதமா?

அந்த நபர்: சார், நான் நாத்தீகன். நான் என்ன படம் வைக்க?

[எல்லாரும் ஆச்சரியத்தில் முழ்கி விட்டார்கள்…..]

அரசு அதிகாரி (இந்து): நீங்க எந்த படமும் வைக்கமுடியாது தம்பி! உங்களுக்குத் தான் நம்பிக்கையே இல்லையே!

நாத்தீகர்: சாரி சார், நாங்களும் நம்புகிறோம், எங்களுக்கும் நம்பிக்கை உள்ளது.

அரசு அதிகாரி (இந்து): ஆச்சரியமாக இருக்கிறதே! நீங்க எந்த இறைவனை நம்புகிறீங்க?

நாத்தீகர்: ”எந்த இறைவனும் இல்லை” என்பதை நம்புகிறோம். இதுவும் ஒரு நம்பிக்கைத் தானே.  

”இறைவன் இருக்கிறார்” என்று நம்புவது உங்கள் நம்பிக்கை, 

“இறைவன் இல்லை” என்று நம்புவது எங்கள் நம்பிக்கை. 

ஆக, உங்களுக்கும் நம்பிக்கை உண்டு, எங்களுக்கும் நம்பிக்கை உண்டு. எல்லாருக்கும் சம உரிமை என்றால் எனக்கும் உரிமை தரனும். 

அரசு அதிகாரி (இந்து):முருகா! எப்படிப்பட்ட பிரச்சனையில் என்னை மாட்டவைத்துவிட்டாய்! சரி, நீங்க என்ன படம் மாட்டப்போகிறீங்க அதைச் சொல்லுங்க.

நாத்தீகர்: எங்களுக்கு எந்த படமும் இல்லை. எப்படிப்பட்ட படம் மாட்டலாம் என்று நீங்க எல்லாரும் சேர்ந்து எனக்கு ஐடியா சொல்லுங்க.

அரசு அதிகாரி (இந்து): ஒரு நாத்தீகனின் ”இறைவன் இல்லை” என்ற கோட்பாட்டை நிலை நாட்ட, ஒரு ஆத்தீகன் ஐடியா தரணுமா? நல்ல இருக்கு தம்பி உங்க கேள்வி?

[ஒரு முஸ்லிமுக்கு ஒரு ஐடியா வருகிறது….]

முஸ்லிம் ஊழியர்: ஒன்று செய்யலாம், ஒரு வெள்ளை காகிதத்தை அப்படியே பிரேம் போட்டு மாட்டுவோம். அது நாத்தீகத்துக்கு சரியாக இருக்கும்.

[எல்லாரும் ஆச்சரியத்தோடு அந்த முஸ்லிமின் பக்கம் பார்க்கிறார்கள்… இதுவும் சரியான ஐடியாவாக இருக்கிறதே என்று சிலர் சிந்திக்கிறார்கள்]. 

நாத்தீகர்:  வேண்டாம் வேண்டாம்!  ஒன்றுமே இல்லாத படத்தை மாட்டினால், இறைவனை நம்பும் உங்களைப்போல ஆத்தீகர்கள், அந்த வெள்ளைப்படத்தேயே உற்றுப்பார்த்து, ஏதோ உருவம் தெரிகிறது என்றுச் சொல்லி, கதை விடுவார்கள். இந்த ஐடியாவினால் ஆத்தீகனுக்கு புதிய ஐடியா வர நான் அனுமதிக்கமாட்டேன். இந்த ஐடியா சரியாக இல்லை.

புத்தமத அன்பர்: அப்படியானால், கருப்பு காகிதத்தை பிரேம் போட்டு மாட்டுவோமா? அதில் ஒன்றும் தெரியாதே! நீங்களும் கருப்பு உடை தான் அணிகிறீங்க தானே!

[கிறிஸ்தவன் சும்மா  இருப்பானா….உடனே அவன் எழுந்து…]

கிறிஸ்தவன்: வேண்டாம்.. கருப்பு படம் மாட்டினால், அது சாத்தானை குறிக்கும். சிலர் இந்த படத்தைப் பார்த்து சாத்தானை வணங்குபவர்கள் இங்கு இருப்பதாக நினைத்துவிடுவார்கள், இது சரிபட்டு வராது.

அரசு அதிகாரி (இந்து): எந்த ஒரு வண்ணத்தை எடுத்தாலும் பிரச்சனையாக இருக்கிறது. இப்போது என்ன தான் செய்வது?

[அந்த முஸ்லிமுக்கு இன்னொரு ஐடியா வருகிறது….]

முஸ்லிம் ஊழியர்: இது சரியாக இருக்கும். தமிழ் நாட்டில் நாத்தீகம் என்றால் நமக்கு ஞாபகம் வருவது “பெரியார் தான்” எனவே அவரது போட்டோவை வைத்துவிடுவோம். எப்படி ஐடியா?

அரசு அதிகாரி (இந்து): ஐடியா நல்லா இருக்கு, ஆனால், தமிழ் நாட்டில், திமுக, முதற்கொண்டு பெரும்பான்மையான கட்சிகள்  “பெரியாரின்” படத்தை வைத்து தான் கட்சி நடத்துகிறார்கள். சிலர் நம் அலுவலகத்தை பார்த்து ”கட்சி அலுவலகம்” என்று நினைத்துவிடுவார்கள். உடனே வேறு ஒருவன் ”அண்ணாவின்” போட்டோவும் வைக்கவேண்டும் என்றுச் சொல்லுவான். இது சரிப்பட்டு வராது.

நாத்தீகன்:  ஒன்று செய்வோம், நாத்தீகர்களுக்கு சம உரிமை கொடுத்து திருப்தி படுத்த, உங்கள் படங்கள் அனைத்தும் நீக்கிவிடுங்க. அது சரியாக இருக்கும்.

[அனைவரும்….. சத்தமாக…..]

இது முடியாது, ஒரு போட்டோவும் இல்லையானால், அது நாத்தீகம் மட்டும் இருப்பதாக ஆகிவிடுமே! இதனை நாங்கள் ஒப்புக் கொள்ளமுடியாது.

இந்த பிரச்சனையை தீர்ப்பதெப்படி….. எனக்குத் தெரியாது. ஐடியா இருப்பவர்கள் சொல்லலாம்…..

வாழ்க்கையை ரொம்பவும் சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனவே தான் மேற்கண்ட உரையாடல்… 

சரி பீஜே அவர்களின் முடிவுரைக்கு போவோமா….?

7) மேடையில் நீங்கள் முடிவுரையில் சொன்ன “விஷயம்” வெறும் மேடைப்பேச்சுக்காகவா அல்லது தனிப்பட்ட முறையிலும் முஸ்லிம்களுக்கு இதே போதனையை செய்வீர்களா?

இஸ்லாமிய நாடுகளில் வாழும் முஸ்லிம் அறிஞர்களின் மேடைப்பேச்சுக்களை கேட்கும் போது, அவர்கள் மக்கள் வன்முறையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் படி பேசுகிறார்கள். ஆனால், நம் தமிழ் நாட்டின் இஸ்லாமிய அறிஞர் பிஜே அவர்கள் முஸ்லிம்களுக்கு “நம் எதிரிகள் பற்றி அல்லாஹ்விடம் முறையிடுங்கள், நியாயம் கிடைக்கும்படி கெஞ்சுங்கள், அவன் பார்த்துக் கொள்வான், நீங்கள் வன்முறையில் ஈடுபடவேண்டாம்” என்று சொன்னது, ஆச்சரியமான விஷயம். ஆனால், மேடையில் மட்டும் இப்படி சொல்கிறாரா? அல்லது இவரது தனிப்பட்ட உரையாடல்களிலும் முஸ்லிம்களுக்கு இப்படியே அறிவுரை கூறுகிறாரா? என்பது தான் சந்தேகம். 

இவரைப்போலவே, உலக முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் தங்கள் மார்க்க மக்களுக்கு போதனை செய்திருந்தால், செய்துக் கொண்டு இருந்தால், இனி செய்தால், “இஸ்லாம் அமைதி மார்க்கமல்ல” என்று சொல்லக்கூடிய தைரியம் யாருக்கு வரும்?

பிஜே அவர்களே வாழ்க! 

கடைசியாக, அந்த கட்டுரை கீழ்கண்ட விதமாக முடிகிறது:

“முஸ்லிம்களின் கோபத்தை கொபளிப்பதாகவும், ரணமாக வேதனை பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களின் உள்ளத்திற்கு ஆறுதலாகவும், இஸ்லாமியர்களிடத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சியை பறைசாற்றும் விதமாகவும் இந்த பொதுக்கூட்டம் ஒரு மாநாட்டைப் போல மக்கள் திரளால் நிரம்பி வழிந்தது.”[1]

இந்த உரையை கேட்ட ஒவ்வொரு முஸ்லிமும் ஆறுதல் அடைந்தார் என்று சொல்வது ஏற்கத்தக்கது அல்ல, ஏனென்றால், இவரது உரையை கேட்ட ஒவ்வொரு முஸ்லிமுடைய உள்ளத்தில் ”இன்னும் பயம் அதிகரித்து இருந்திருக்கும்”, இந்தியாவில் இப்படியாக நம்மை அநியாயமாக நடத்துகிறார்களா? என்ற கேள்வி எழும், மேலும், “இந்திய நீதித்துறை மீதும், சட்ட ஒழுங்கு மீதும், அரசியல் சாசனம் மீதும் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இவரது உரையை கேட்ட முஸ்லிம்களுக்கு இனி இருக்காது”.

ஒரு நாட்டின் நீதித்துறை மீது, சட்டத்தின் மீது, அரசின் மீது ஒரு குடிமகன் நம்பிக்கையை இழப்பானானால், அவனை சில தீய சக்திகள் தவறாக பயன்படுத்திக் கொண்டு, பல தீய செயல்கள் நாட்டில் நடக்கும் படி செய்துவிடுவார்களோ” என்ற பயம் எனக்குள்ளது.  பிஜே அவர்களின் இப்படிப்பட்ட உரையாடல் ”முஸ்லிம்களில் இருக்கும் வாலிபர்களில்  சிலர் தீவிரவாதத்தை நோக்கிச் செல்ல மறைமுகமாக வழி வகுத்துவிடும் அபாயம் உள்ளது”.  எழுச்சி பொங்க பேசுவதில் தவறு இல்லை, ஆனால், எதைப் பற்றி “இப்படி எழுச்சி பொங்க பேசுகிறோம்” என்பது தான் கவனிக்கத்தக்கது. 

  • நாட்டு மக்களே! எச்சரிக்கையாக இருங்கள். 
  • முஸ்லிம்களே! உங்கள் அறியாமையை சில தீய சக்திகள் தவறாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காதிருங்கள். 
  • இந்திய நாட்டு அரசங்கமே! மதசார்பின்மையை ஏட்டில் மட்டுமல்ல, செயலிலும் காட்ட முயற்சி எடு.
  • பிஜே அவர்களே! உங்கள் உரையை தயாரிக்கும் போது, பல முறை சிந்தித்து தயாரியுங்கள், உங்கள் முஸ்லிம் சமுதாயத்தில்  அனேகர் அறியாமையில் இருக்கிறார்கள். சில இஸ்லாமிய விஷமிகள் அவர்களின் அறியாமையில் குளிர் காய அனுமதிக்காதீர்கள். இதனை எப்படி தடுப்பீர்கள்? முதல் வழி, இந்திய அரசாங்கத்தில் உள்ள ஓட்டைகளை மக்களுக்கு போதிக்கும் போது, பல விளைவுகளை கவனத்தில் கொண்டு போதியுங்கள். இந்தியாவை நேசிக்காதவன், அதற்கு தீமை செய்ய சீக்கிரம் தன் கையை ஓங்குவான். முஸ்லிம்கள் இந்தியாவை நேசிக்கிறார்கள் என்று நம்புகிறேன்! என் நம்பிக்கையில் மண்ணைவாரி போட்டுவிடாதீர்கள். 

அடிக்குறிப்புகள்:

[1] http://www.onlinepj.com/unarvuweekly/erimalaiyaay_vediththa_tnagar_pothukkootam/#.VhEfSOyqqko

பிஜே அவர்களுக்கு அளித்த மறுப்புக்கள்/பதில்கள்

உமரின் மறுப்புக்கள்/கட்டுரைகள் பக்கம்