குர்‍ஆனின் படி அல்லாஹ் மூஸாவோடு மட்டும் தான் நேரடியாக பேசினானா? இயேசுவோடு பேசவில்லையா?

தம்பி: உமரண்ணா உங்களோடு சில நிமிடங்கள் பேசலாமா?

உமர்: ஓ! பேசலாமே. என்ன திடீரென்று இந்த நேரத்தில்?

தம்பி: நேற்று நீங்கள் பேசும் போது, ஒரு விஷயத்தைச் சொன்னீர்கள், நான் அதை கவனிக்கவில்லை, நாம் பேசி முடித்த பிறகு தான் எனக்கு ஞாபகம் வந்தது. சரி, உங்களிடம் கேட்டுவிடலாம் என்று நினைத்து உங்களை போனில் அழைத்தேன்.

உமர்: சரி சொல்லு, அது என்ன விவரம்?

தம்பி: நேற்று நாம் வேறு ஒரு விவரம் பற்றி பேசும் போது அல்லாஹ் இயேசுவோடு நேரடியாக பேசியுள்ளார் என்றுச் சொன்னீர்கள். நான் இதனை கவனிக்கவில்லை, ஆனால், பிறகு சிந்திக்கும் போது தான் எனக்கு பொறி தட்டியது.

உமர்: ஓ, அந்த விஷயமா? சரி, உன் கேள்வி என்ன?

தம்பி: இஸ்லாமின் படி, அல்லாஹ் நேரடியாக பேசியது நபி மூஸாவோடு மட்டும் தான் (குர்‍ஆன் 4:164). வேறு எந்த ஒரு நபியோடும் அவர் நேரடியாக பேசியதில்லை. நீங்கள் சொன்னது போல, ஈஸாவோடு அல்லாஹ் நேரடியாக பேசியதில்லை. உங்களால் ஏதாவது ஒரு குர்‍ஆன் வசனத்தை இதற்கு ஆதாரமாக‌ காட்டமுடியுமா?

உமர்: உன்னுடைய சந்தேகம் இது தானா! சரி நான் பதில் தருகிறேன் கேள்.

முதலாவதாக, நீ மேற்கோள் காட்டிய வசனத்தில் அல்லாஹ் மூஸாவோடு மட்டும் தான் நேரடியாக பேசினான் என்று சொல்லப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வோம்.

குர்‍ஆன் 4:164ஐ நாம் நான்கு தமிழாக்கங்களில் படிப்போம், கடைசி வாக்கியத்தை கூர்ந்து கவனிக்கவும்:

4:164. (இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

4:164. (இவர்களைப் போல் இன்னும் வேறு) பல நபிமார்களையும் (நாம் அனுப்பி வைத்தோம்.) அவர்களுடைய சரித்திரங்களையும் இதற்கு முன்னர் நாம் உங்களுக்குக் கூறியிருக்கின்றோம். வேறு பல நபிமார்களையும் (நாம் அனுப்பியிருக்கின்றோம். எனினும்) அவர்களுடைய சரித்திரங்களை நாம் உங்களுக்குக் கூறவில்லை. மூஸாவு(க்கு வஹீ அறிவித்தது)டன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான். (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

4:164. மேலும், முன்னரே உம்மிடம் நாம் எந்த இறைத்தூதர்கள் பற்றி எடுத்துரைத்துள்ளோமோ அந்த இறைத்தூதர்களுக்கும் உம்மிடம் எடுத்துரைக்கப்படாத இறைத்தூதர்களுக்கும் (வஹி அறிவித்திருக்கின்றோம்). அல்லாஹ் மூஸாவிடம் நேரடியாகப் பேசியும் இருக்கின்றான். (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

4:164. (முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான். (பீஜே தமிழாக்கம்)

தம்பி: ஆமாம், இந்த வசனத்தில் அல்லாஹ் மூஸாவோடு பேசியதாக வருகிறதே!

உமர்: நன்றாக படித்துப்பார், "அல்லாஹ் மூஸாவோடு மட்டுமே நேரடியாக பேசினார் என்று" உள்ளதா? அல்லது "அல்லாஹ் மூஸாவோடு பேசினார்" என்று உள்ளதா?

'மட்டும்' என்ற வார்த்தை உள்ளதா என்று கவனித்தாயா?

wakallama allahu mūsā taklīman

வகல்லம அல்லாஹூ மூஸா தக்லீமன்

தம்பி: "மட்டும்" என்ற வார்த்தை இவ்வசனத்தில் இல்லை.

உமர்: அப்படியென்றால், இதன் பொருள் என்ன?

  • "அல்லாஹ் மூஸாவோடு பேசினார்" என்று புரிந்துக் கொள்ள வேண்டுமே ஒழிய,
  • "மூஸாவை தவிர்த்து, அல்லாஹ் வேறு யாரோடும் எப்போதும் பேசவில்லை" என்று புரிந்துக் கொள்ளக்கூடாது. 

தம்பி: ம்ம்ம் ஒருவகையில் இது சரியான விளக்கம் தான். ஆனால், மற்றவர்களோடு அல்லாஹ் பேசியதாக எங்கும் சொல்லப்படவில்லையே! அதனால், மூஸாவோடு மட்டும் தான் அல்லாஹ் பேசினார் என்று எடுத்துக்கொள்வது தானே சரியான புரிதல்?

உமர்: முதலாவதாக, குர்‍ஆன் 4:164ன் உண்மையான பொருளை சரியாக புரிந்துக் கொள்ளவேண்டும். இரண்டாவதாக, மற்றவர்களோடு அல்லாஹ் பேசியதாக வேறு எங்கேயாவது சொல்லப்பட்டுள்ளதா என்று நாம் பார்க்கவேண்டும்.

தம்பி: நான் குர்‍ஆனை படித்துள்ளேன், வேறு எங்கும் அல்லாஹ் மற்றவர்களோடு பேசியதாக இல்லை. 

உமர்: நீ கொஞ்சம் கூர்ந்து குர்‍ஆனை படித்திருந்தால் அல்லாஹ் ஒரு நபரோடு (மூஸாவோடு) மட்டுமல்ல, மற்ற மனிதர்களிடமும் பேசியதாக சொல்லப்பட்டுள்ளதை  கவனித்து இருந்திருப்பாய்.

தம்பி: நீங்க என்ன சொல்கிறீர்கள்! வசன ஆதாரத்தைக் காட்டுங்கள் பார்க்கலாம்.

உமர்: தம்பி, குர்‍ஆன் 2:256ம் வசனத்தை படி:

2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

2:253. (நம்மால் அனுப்பப்பட்ட) அத்தூதர்கள் (அனைவரும் ஒரே பதவி உடையவர்களல்லர்.) அவர்களில் சிலரை, சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம். அவர்களில் சிலருடன் அல்லாஹ் (நேரடியாகப்) பேசியிருக்கின்றான். . . .(அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

2:253. (மனித குலத்தை நேர்வழிப்படுத்துவதற்காக) நாம் அனுப்பிய அந்தத் தூதர்களில் சிலரை, சிலரைவிடச் சிறப்புடையோராக்கினோம். அல்லாஹ், நேரடியாகப் பேசிய சிலரும் இவர்களில் உண்டு.. . . (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

2:253. இத்தூதர்களில், சிலரை விடச் சிலரைச் சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான்.. . . (பீஜே தமிழாக்கம்)

இவ்வசனத்தின் இரண்டாவது வாக்கியத்தை கவனி: 

  • அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்
  • அவர்களில் சிலருடன் அல்லாஹ் (நேரடியாகப்) பேசியிருக்கின்றான்.
  • அல்லாஹ், நேரடியாகப் பேசிய சிலரும் இவர்களில் உண்டு
  • அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான்

தம்பி, "சிலர்" என்றால் எத்தனை பேரை குறிக்கலாம் என்று நீ நினைக்கிறாய்?

தம்பி: ஆமாம், இவ்வசனத்தின் படி அல்லாஹ் மூஸாவோடு மட்டுமல்ல, மற்ற நபிமார்களிடமும் பேசியுள்ளான். ஆனால், ஒரு சந்தேகம், அல்லாஹ் அந்த சிலருடன் ஜிப்ரீல் தூதன் மூலமாக பேசியிருக்கலாம் இல்லையா? ஏன் அல்லாஹ் நேரடியாக பேசினான் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்?

உமர்: இல்லை தம்பி, அல்லாஹ் ஜிப்ரீல் மூலமாக நபிகளோடு பேசுவது என்பது பொதுவாக அல்லாஹ்வின் வழிமுறை. எல்லோரிடமும் ஜிப்ரீல் மூலமாக அல்லாஹ்  பேசுகின்றான், ஆனால் சிறப்பித்து 'சிலர்' என்று குறிப்பிடுகின்றான் என்பதை கவனித்தால், நீ சொல்லும் பொருளில் எடுத்துக்கொள்ளமுடியாது.

ஒரு லட்சத்துக்கும் மேலாக (124000) நபிகளை அல்லாஹ் அனுப்பினான் என்று சொல்லப்படுகின்றது, இவர்களில் "சிலர்" என்று அல்லாஹ் சொல்கின்றான் என்றால், அது அல்லாஹ் நேரடியாக பேசும் விதமாகத்தான் இருக்கும்.

நான் கேட்ட கேள்விக்கு நீ இதுவரை பதில் சொல்லவில்லை. 

"சிலர்" என்ற சொல்லுக்கு எத்தனை பேர்? என்று நான் கேட்டேனே!

ஒருவரோடு மட்டுமே அல்லாஹ் நேரடியாக பேசியிருந்தால், அதை குறிப்பிடுவதற்கு "சிலர்" என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கமாட்டான். மொழிகளை படைத்த அல்லாஹ்விற்கு இலக்கணம் தெரியாமல் போகுமா?

தம்பி: சிலர் என்றால் இருவரை குறிப்பதாக இருக்கலாம் அல்லவா?

உமர்: இருவரோடு மட்டுமே அல்லாஹ் பேசியிருந்தால், அவ்விருவரை சிறப்பித்து கூறும் போது, "சிலர்" என்று அல்லாஹ் பயன்படுத்தமாட்டனே! 

தம்பி: ஒருவேளை மூன்று பேராக இருக்குமா?

உமர்: இல்லை தம்பி, மூன்று என்பதை கூட நாம் மூவர் என்று தான் பொதுவாக கூறுகிறோம், அதுவும் சிறப்பான ஒன்றைப்பற்றி பேசும் போது (அல்லாஹ் மனிதர்களோடு பேசுவது என்பது சிறப்பு தானே), ஐந்துக்குள் எண்ணிக்கை இருந்தால், எண்ணை குறிப்பிட்டே சொல்வோம்.

நிச்சயமாக, ஐந்துக்கும் மேலான நபர்களாகத்தான் அல்லாஹ் 'சிலர்' என்று குறிப்பிடுகின்றான் என்பது என் கருத்து.

தம்பி: அல்லாஹ் மூஸாவோடு மட்டுமே பேசினான் என்று நான் நம்பிக்கொண்டு இருந்தேன், இந்த நம்பிக்கை ஆட்டம் காணுகின்றதே!

உமர்: தம்பி, கவலைப்படாதே! நேற்று சரி என்று நம்பிய விவரத்திற்கு, இன்று ஆதாரங்கள் கிடைத்தால், அது தவறு என்று இன்று ஒப்புக்கொள்வது தான் அறிவுடமை. நாளை இன்னொரு விவரம் தான் சரி என்று சொல்லவேண்டியும் வரலாம். 

தம்பி: சரி, நம் விவாத பொருளுக்கு வருவோம். அல்லாஹ் மூஸா அல்லாத வேறு சில நபிகளோடு பேசினார் என்று குர்‍ஆன் சொல்கின்றதே தவிர, ஈஸாவோடு பேசினார் என்று சொல்லப்படவில்லையே! நீங்கள் எதை ஆதாரமாக வைத்துக்கொண்டு  ஈஸாவோடு அல்லாஹ் பேசினான் என்றுச் சொல்கிறீர்கள்?

உமர்: உன் லாஜிக்கிற்கே வருகிறேன். 'சிலர்' என்ற வார்த்தையில் ஏன் ஈஸா அடங்கக்கூடாது? குர்‍ஆன் 2:253 ஈஸாவோடு அல்லாஹ் பேசவில்லை என்று "வெளிப்படையாகச் சொல்கிறதா"? இல்லையே!

அல்லாஹ், சில நபிகளைக் காட்டிலும் சிலரை மேன்மையாக்கினான் என்று அவ்வசனம் சொல்கிறது. அதன் பிறகு, உடனே, ஈஸாவைப் பற்றி மேன்மையாக பேசுகின்றது அவ்வசனம். ஏன் நாம் இயேசுவோடு அல்லாஹ் நேரடியாக பேசினான் என்று கருதக்கூடாது. சிலர் என்ற சொல்லுக்குள், ஈஸா ஏன் இருக்கமுடியாது?

2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

தம்பி: நீங்களும் வசனம் கூறாத ஒன்றை கூறியதாகச் சொல்கிறீர்களே! குர்‍ஆனில் எந்த இடத்திலாவது, அல்லாஹ் ஈஸாவோடு பேசியதாக ஒரு ஆதாரத்தை காட்டமுடியுமா?

உமர்: நீ கேட்டால், ஆதாரம் கொடுக்காமல் இருக்கமுடியுமா என்ன? குர்‍ஆன் 3:55ஐ பார்:

3:55. “ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

3:55. (ஈஸாவை நோக்கி) அல்லாஹ் கூறியதை (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துங்கள்: "ஈஸாவே நிச்சயமாக நான் உங்களுக்கு (உங்களுடைய) ஆயுளை முழுமைபடுத்துவேன். . . .(அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

3:55. (அத்தகையதோர் திட்டத்தை நிறைவேற்றவே) அவன் கூறினான்: “ஈஸாவே! நிச்சயமாக நான் இப்போது உம்மைத் திரும்ப அழைத்துக் கொள்வேன். . . . (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

3:55 "ஈஸாவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும், என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும்,. . . . அவர்களுக்கு எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்.'' என்று அல்லாஹ் கூறியதை நினைவூட்டுவீராக!(பீஜே தமிழாக்கம்)

இந்த வசனத்தில் அல்லாஹ் நேரடியாக ஈஸாவோடு பேசுவதாக வருகிறது என்பதை கவனித்தாயா?

தம்பி: ஜிப்ரீல் தூதன் மூலமாக ஈஸாவுடன் அல்லாஹ் பேசியிருக்கலாம் அல்லவா?

உமர்: ஜிப்ரீல் மூலமாக அல்லாஹ் ஈஸாவோடு பேசினார் என்று இவ்வசனம் சொல்லவில்லையே தம்பி. "அல்லாஹ் கூறினான்" என்று தான் இவ்வசனம் தொடங்குகிறது.

idh qaala allahu yaa isaa

இத் கால அல்லாஹு யா ஈஸா...

மேலும், இன்னொரு வசனத்தை கவனி: குர்‍ஆன் 5:114, 115

5:114. மர்யமுடைய மகன் ஈஸா, “அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக; அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக; நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

5:115. அதற்கு அல்லாஹ், “நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன்; ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், உலகத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்” என்று கூறினான்.

115ம் வசனத்தில் அல்லாஹ் நேரடியாக பேசுவதை காணமுடியும். குர்‍ஆனின் படி, ஈஸா வேண்டுகின்றார், அல்லாஹ் பதில் அளிக்கின்றான், இடையில் ஜிப்ரீல் வந்து அல்லாஹ்வின் பதிலை கொண்டு வந்து ஈஸாவிடம் கொடுத்தார் என்று சொல்லப்படவில்லை. ஜிப்ரீல் இந்த இடத்தில் வரவில்லை, ஜிப்ரீல் இருந்திருந்தால், அதை அல்லாஹ் நிச்சயம் சொல்லியிருப்பான். 

உதாரணத்திற்கு, கீழ்கண்ட ஜகரியா மற்றும் மரியாள் நிகழ்ச்சியின் போது, தூதன் பேசுவதை குர்‍ஆன் தெளிவாக சொல்கிறது.

3:38. அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”

3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: “நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்” எனக் கூறினர்.

3:42. (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்” (என்றும்),

3:43. “மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜுது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக” (என்றும்) கூறினர்.

3:45. மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

ஈஸாவோடு அல்லாஹ் பேசும் போது,  இப்படி மலக்குகள் வந்து அழைத்து பேசினார்கள் என்று சொல்லப்படவில்லை என்பதை கவனிக்கவும்.

இதைப்பற்றி உன் கருத்தென்ன தம்பி?

தம்பி: ம்ம்ம் என்ன சொல்வது, அல்லாஹ் மூஸாவோடு மட்டுமல்ல, இதர நபிகளோடும் நேரடியாக பேசியுள்ளார் என்பது தான் உண்மை போல இருக்கிறது.

உமர்: இன்னொரு விவரத்தையும் சொன்னால் நீ ஆச்சரியப்படுவாய். 

தம்பி: அது என்ன?

உமர்: குர்‍ஆனின் படி, ஈஸாவோடு மட்டுமல்ல, ஆதாமோடும், ஏவாளோடும் அல்லாஹ் நேரடியாக பேசியுள்ளான். ஏதோன் தோட்டத்தில், ஜிப்ரீல் மூலமாகவோ அல்லது வேறு தூதன் மூலமாகவோ அல்லாஹ் ஆதாமோடு பேசியதாக ஏதாவது ஒரு ஆதாரத்தை நீ காட்டமுடியுமா?

குர்‍ஆன் 4:164ல் வரும் 'சிலர்' என்பவர்களில் ஈஸாவும், ஆதாமும் அடங்குவார் என்று உனக்குத் தெரியுமா?

தம்பி: ஆதாம் நபியா? இவ்வசனம் நபிகளிடம் அல்லாஹ் நேரடியாக பேசியதாகத் தானே சொல்கிறது?

உமர்: தம்பி, இஸ்லாமின் படி ஆதாம் கூட நபி தான்.

ஒன்றை சரியாக புரிந்துக்கொள், முஹம்மதுவிடம் ஜிப்ரீல் மூலமாக அல்லாஹ் பேசியதால், எல்லா நபிகளிடமும் (மூஸா தவிர) இப்படித் தான் அல்லாஹ் பேசினான் என்றுச் சொல்வது சரியானதல்ல.

கடைசியாக, இன்னொரு விவரத்தையும் சொல்கிறேன், இஸ்லாமின் படி, முஹம்மது கூட அல்லாஹ்வோடு பேசியுள்ளார், அதுவும் ஜிப்ரீலின் உதவியில்லாமல் பேசியுள்ளார்.

தம்பி: இல்லையே! எல்லா குர்‍ஆன் வசனங்களையும் ஜிப்ரீல் தானே கொண்டு வந்து சேர்த்தார்.

உமர்: ஒரு நாள் இரவு, முஹம்மது ஏழு வானங்களுக்கு மேலே பயணம் செய்து நபிகளைச் சந்தித்து, அதன் பிறகு ஐந்து வேளை தொழுகையை அல்லாஹ்விடமிருந்து பெற்று வந்த ஹதீஸை படித்திருப்பாய் என்று நினைக்கிறேன்.

இந்த ஹதீஸின் படி, முஹம்மது அல்லாஹ்விடம் சென்று, தொழுகை எண்ணிக்கையை குறைக்கச் சொல்லி, 50 லிருந்து 5 வரை எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு வருகிறார். முஹம்மது அல்லாஹ்வோடு பேசும் அந்த நிகழ்ச்சியில் ஜிப்ரீல் முஹம்மதுவிற்கும் அல்லாஹ்விற்கும் இடையே இடைத்தரகராக செயல்படவில்லை. முஹம்மதுவே நேரடியாகச் சென்று பேசுவதாக வருகிறது.

புகாரி நூல் எண் 349

. . . 'அல்லாஹ் என்னுடைய உம்மத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். (அதை ஏற்று) திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மூஸா(அலை) அவர்களின் பக்கமாகச் நான் சென்றபோது 'உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?' என அவர்கள் கேட்டார்கள். ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என மூஸா(அலை) கூறினார்கள். நான் திரும்பச் சென்றபோது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதை ஏற்றுக் கொண்டு) நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு(ம்) சக்தி பெறாது' என்றார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் (இன்னும்) கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தேன். (இன்னும் கொஞ்சம் குறைத்தான் என்றேன்). 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்களின் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என்றார்கள். நாம் திரும்பச் சென்றபோது 'ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்கு சமம்; என்னுடைய சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை' என்று அல்லாஹ் கூறினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தபோது 'உங்களுடைய இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள்' என்றார்கள். இனிமேல் என்னுடைய இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) வெட்கப்படுகிறேன் என்று கூறினேன்.. . .

தம்பி: ஆமாம், இதையும் நான் கவனிக்கவில்லையே!

உமர்: தம்பி, உன் சந்தேகம் தீர்ந்ததா?

முதலாவதாக, மூஸாவோடு அல்லாஹ் பேசுவதாக வரும் வசனம், மூஸாவோடு மட்டுமே அல்லாஹ் பேசியதாக சொல்லப்படவில்லை, நீங்களாகவே கற்பனை செய்துக்கொண்ட வியாக்கீனம் அது. (4:164)

இரண்டாவதாக, சில நபிகளோடு அல்லாஹ் நேரடியாக பேசியும் உள்ளான் (குர்‍ஆன் 2:253)

மூன்றாவதாக, ஈஸாவோடு அல்லாஹ் நேரடியாக பேசியதாக குர்‍ஆன் வசனம் சொல்கிறது (3:55, 5:114, 115)

அல்லாஹ் ஆதாமோடும், ஏவாளோடும் நேரடியாக பேசியுள்ளான். அவ்வளவு ஏன் இப்லீஸிடமும் அல்லாஹ் நேரடியாக பேசியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக, புகாரி ஹதீஸின் படி, முஹம்மதுவும், அல்லாஹ் பேசியுள்ளான்.

தம்பி: ரொம்ப நன்றி அண்ணா, நாம் பிறகு பேசுவோம், குட் நைட்

உமர்: குட் நைட் தம்பி.

கிறிஸ்தவர்கள் கவனத்திற்கு:

பைபிளின் படி, அல்லாஹ் மெய்யான தேவனில்லை, மேலும் முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாவார்.  குர்‍ஆன் என்பது நம்முடைய பரிசுத்த வேதாகமத்தின் தேவன் கொடுத்த வெளிப்பாடு அல்ல. குர்‍ஆனில் இயேசுவோடு அல்லாஹ் பேசுவதாக வரும் வசனங்கள் அனைத்தும் பொய்யாகும், அவைகள் சரித்திரத்தில் நடக்கவில்லை. மேலும், முஹம்மது செய்த வின்வெளிப் பயணம், மற்றும் அவர் அல்லாஹ்விடம் பேசியதெல்லாம் கட்டுக்கதையாகும். முஸ்லிம்கள் தங்கள் வேதத்தையும் சரியாக படித்து புரிந்துக்கொள்வதில்லை என்பதை அவர்களுக்கு விளக்கவே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. எந்த வசனமாக இருந்தாலும், அது என்ன சொல்கிறது? அது என்ன சொல்லவில்லை என்பதை? முஸ்லிம்கள் புரிந்துக்கொண்டு படிக்கவேண்டும் என்பதற்காக இச்சிறிய கட்டுரை எழுதப்பட்டுள்ளது.


உமரின் கட்டுரைகள் பக்கம்

குர்-ஆன் ஆய்வு கட்டுரைகள் பக்கம்