குர்‍ஆன் 3:18 - இஸ்லாமின் உண்மையான ஷஹதா எது? முஸ்லிம்கள் ஏன் பாதி ஷஹதாவைச் சொல்கிறார்கள்?

இஸ்லாமின் ஐந்து தூண்களில் முதலாவது தூண், ஷஹதா என்றுச் சொல்லக்கூடிய 'விசுவாச அறிக்கை/சாட்சியம் கூறுதல்/சாட்சிப்பிரமாணம்’ ஆகும். இதனை கலிமா என்றும் கூறுவார்கள்.

ஒருவர் இஸ்லாமை தழுவும் போது, இந்த சாட்சியம் அல்லது ஷஹதாவை கூறவேண்டும், அப்போது தான் அவர் 'இஸ்லாமை ஏற்றதாக கருதப்படும்'.  அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர் என்றும் சாட்சியம் சொன்னால் தான், அவரை முஸ்லிமாக கருதுவார்கள். மேலும், இதனை அவர் அரபியில் சொல்லவேண்டும் அதாவது அரபியில் அறிக்கையிடவேண்டும். 

தமிழில் இதன் பொருளை புரிந்துக்கொண்டாலும், அரபியில் சொன்னால் தான் அல்லாஹ் அங்கீகரிப்பான்.

முஸ்லிம்களின் சிந்தனைக்கு ஒரு கேள்வி: ஒருவர் ஷஹதாவை தமிழிலோ, அல்லது அரபி அல்லாத வேறு மொழியிலோ சொல்லி, இஸ்லாமை ஏற்றதை நான் இதுவரை கண்டதில்லை, வாசகர்கள் யாராவது கண்டிருந்தால், தெரிவிக்கவும். ஒருவர் இஸ்லாமை தழுவும் போது, அரபியில் ஷஹதா சொல்லாமல் தன்னுடைய தாய் மொழியில் சொன்னால், அதனை இஸ்லாம் ஏற்குமா? அவரை முஸ்லிமாக இஸ்லாமிய சமுதாயம் கருதுமா? உலக மக்கள் அனைவருக்காகவும் அல்லாஹ் வகுத்த மார்க்கம் இஸ்லாம் என்று சொல்லும் நீங்கள், தன் தாய் மொழியில் சாட்சி பிரமாணம் சொல்ல அனுமதிப்பதில்லை ஏன்? அப்படியானால், இஸ்லாம் ஒரு அரேபிய மக்களுக்கான மார்க்கமேயன்றி, உலக மார்க்கம் என்று எப்படி சொல்லமுடியும்?

சரி, இப்போது நம்முடைய ஆய்வுக்கு வருவோம்.

இது தான் ஷஹதா: 

  • அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன் மற்றும் முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறுகிறேன்.
  • Arabic Transliteration: "Ashhadu an la ilaha illa 'llah; ashhadu anna Muhammadan rasulu 'llah"
  • English: "I witness that there is no god but Allah, and Muhammad is the messenger of Allah."

இன்று ஒரு சிறிய முஸ்லிம் கூட்டம் இருக்கிறார்கள், இவர்களின் படி, மேலே சொன்ன ஷஹதா என்பது தவறானதாகும், இது ஷிர்க் என்றுச் சொல்லக்கூடிய அளவுக்கு பெரிய பாவமாகும். ஏனென்றால், அல்லாஹ்வோடு சேர்த்து, முஹம்மதுவின் பெயரும் வருவதினால், இது தவறானது என்று கூறுகிறார்கள். முஹம்மது என்பவர் அல்லாஹ்வின் தூதர் தான், ஆனால், 'ஷஹதாவில்' அவரது பெயரை சேர்த்தால், அது ஷிர்க் ஆகிவிடும் என்று கூறுகிறார்கள் இவர்கள்.

கீழ்கண்ட குர்‍ஆன் வசனத்தின் படி, "ஷஹதா" என்பது "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்றுச் சொல்வது மட்டுமே என்று அவர்கள் கூறுகிறார்கள். 

மலக்குகளும், அறிவுரையோரும் எப்படி ஷஹதா சொல்லவேண்டும்? “அவனைத்(அல்லாஹ்வைத்)தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை” என்று சாட்சி கூறவேண்டும். இதோடு கூட வேறு எதையும் சேர்க்கக்கூடாது.

பார்க்க குர்‍ஆன் 3:18. 

குர்‍ஆன் 3:18 அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.

இந்த வசனத்தின்படி, சாட்சியம் கூறும் போது, “முஹம்மதுவையும் சேர்த்துச் சொல்லவேண்டும்” என்ற விவரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

இதே போன்று, "அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை" என்ற சொற்றொடர்கள் இன்னும் சில இடங்களில் குர்‍ஆனில் வருகின்றது.  ஆனால், எந்த ஒரு வசனத்திலும், அதோடுகூட "முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர்" என்று சேர்த்து எங்கும் குர்‍ஆனில் வருவதில்லை.

குர்‍ஆன்  37:35. அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர்.

குர்‍ஆன்  47:19. ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக; இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான்.

மேலும், ஷஹதாவின் இரண்டாவது பாகம், கீழ்கண்ட வசனத்திலிருந்து எடுக்கப்பட்டதென்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். இந்த வசனத்தில் முதலாவது வாக்கியத்தைப் பார்க்கவும்.

குர்‍ஆன்  48:29. முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; . . .  

ஆனால், ஹதீஸ்களில், முஸ்லிம்கள் இன்று கூறுவது போன்று ஷஹதா உள்ளது. 

உண்மையாகவே ஷஹதாவில் முஹம்மதுவின் பெயரை சேர்த்து பயன்படுத்தவேண்டுமென்றால், குர்‍ஆனில் அல்லாஹ் சொல்லியிருக்கவேண்டுமல்லவா? ஒரு வேளை 'எல்லாவற்றையும் குர்‍ஆனில் எழுதியே இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை, நாங்கள் ஹதீஸ்களிலிருந்துகூட எடுத்துக்கொள்வோம்' என்று முஸ்லிம்கள் பதில் சொல்லக்கூடும், இந்த கூற்று உண்மை தான். ஆனால், இஸ்லாமின் முதல் தூண் என்றும், முஸ்லிம்களின் முதல் கடமையென்றும், இஸ்லாமிய மார்க்கத்தை தழுவுகிறவர்களின் முதல் படியென்றும் கூறப்படும் 'சாட்சியம் கூறுதல்' குர்‍ஆனில் இருக்காது, ஆனால், இஸ்லாம் தோன்றி 200 ஆண்டுகளுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட, பல இலட்சக்கணக்கான பொய்கள் கலந்திருக்கும் ஹதீஸ்களிலிருந்து நாங்கள் எடுத்துக்கொள்வோம் என்று முஸ்லிம்கள் சொல்வது, அறிவுடமைக்கும் ஏற்காத ஒன்றாக தெரிகின்றது.

குர்‍ஆனின்படி அல்லாமல், ஹதீஸ்களின்படி ஷஹதா சொல்கிறார்கள் முஸ்லிம்கள்:

முஸ்லிம்கள், குர்‍ஆனிபடி ஷஹதா (சாட்சியம்) கூறவேண்டுமென்றால், வெறும் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று மட்டுமே கூறவேண்டும். ஆனால், அவர்கள் ஹதீஸ்களில் உள்ளது போன்று ஷஹதா கூறுகிறார்கள்.

புகாரி எண்: 8. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாம் ஐந்து தூண்கள்மீது எழுப் பப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழிவது. 2. தொழுகையைக் கடைப்பிடிப்பது. 3. (கடமையானோர்) ஸகாத் (கட்டாய தர்மம்) வழங்குவது. 4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது. 5. ரமளானில் நோன்பு நோற்பது. இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இன்னும் அனேக ஹதீஸ்கள் இதைப் பற்றி கூறுகின்றது.

ஷஹதாவில் ஈசா, சொர்க்கம், நரகம் பற்றியும் வரவேண்டுமா?

இப்போது அதிகாரபூர்வமான "புகாரி மற்றும் முஸ்லிம்" ஹதீஸ்களின் படியுள்ள சாட்சியம் பற்றி பார்ப்போம்.

கீழ்கண்ட ஹதிஸ்களின் படி ஷஹதாவில், அல்லாஹ், முஹம்மது, ஈஸா, சொர்க்கம் மற்றும் நரகம் என்ற ஐந்து காரியங்கள் வரவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இவைகள் பொய்யான ஹதீஸ்கள் என்று யாரும் கூறமாட்டார்கள்.

புகாரி எண் 3435. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன் அவனுக்கு இணை கிடையாது’ என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்’ என்றும் ‘ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்’ என்றும், ‘அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன (யிஆகுக!› என்னும்) ஒரு வார்த்தை(யால் பிறந்தவர்)› என்றும், ‘அவனிடமிருந்து உருவான ஓர் உயிர்’ என்றும், சொர்க்கம் (இருப்பது) உண்மை தான்’ என்றும், நரகம் (இருப்பது) உண்மை தான்’ என்றும், எவர் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகின்றாரோ அவரை அல்லாஹ் அவருடைய செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான்.

இதை உபாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு ஜாபிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘அவரை அல்லாஹ், சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் விரும்பிய வாசல் வழியாக அனுமதிப்பான்” எனறு கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

முஸ்லிம் எண்: 46. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையாளன் யாருமில்லை. முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவேன்; (இறைத் தூதர்) ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய அடிமையின் புதல்வரும் ஆவார்; அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன ("ஆகுக" எனும்) ஒரு வார்த்தை(யில் பிறந்தவர்); அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்; சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை என்றெல்லாம் யார் உறுதிமொழி கூறுகின்றாரோ அவரைச் சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் நாடிய வாசல் வழியாக அல்லாஹ் நுழைவிப்பான்.

இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆனால், (அதன் இறுதியில்) "அவரை அல்லாஹ் அவருடைய செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் நுழைவிப்பான்" என்று இடம்பெற்றுள்ளது. "சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் நாடிய வாசல் வழியாக நுழைவிப்பான்" என்பது இடம்பெறவில்லை.

நன்றாக கவனியுங்கள் புகாரியில் "எவர் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகின்றாரோ" என்றும்,  முஸ்லிம் ஹதீஸில் "யார் உறுதிமொழி கூறுகின்றாரோ" என்றும் வருகிறது. அதாவது, இப்படி உறுதி மொழி எடுக்கும் எவராக இருந்தாலும் சரி, அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துவான் என்று ஹதீஸ்கள் பதிவு செய்கின்றன, அவர்கள் முஸ்லிம்களாகிவிடுகிறார்கள் என்று முஹம்மது சொல்கிறார். இப்படி ஷஹதா சொல்வது ஷிர்க் என்று யாராவது கூறமுடியுமா? இது அங்கீகரிக்கப்படாத ஒன்று என்று கூறமுடியுமா?

இஸ்லாமின் முழுமையான ஷஹதா எது?

நாம் மேலே கண்ட ஹதீஸும் அதிகார பூர்வமானதாகும், இதன் படி முழுமையான (100%) ஷஹதா என்பது, கீழ்கண்ட 7 வகையான வாக்கியங்கள் கொண்டது.

  1. 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன் அவனுக்கு இணை கிடையாது'
  2. 'முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்'
  3. 'ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்'
  4. 'அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன ஒரு வார்த்தை ஈசா ஆவார்'
  5. 'அல்லாஹ்விடமிருந்து உருவான ஓர் உயிர் ஈசா ஆவார்'
  6. 'சொர்க்கம் உண்மை'
  7. 'நரகம் உண்மை'

மேற்கண்ட ஏழு வாக்கியங்கள் கொண்ட ஷஹதா (சாட்சியம்) தான் 100% முழுமையான ஷஹதா. ஆனால், இன்று முஸ்லிம்கள் சொல்லும் ஷஹதா, பாதி ஷஹதா தான், சரியாகச் சொல்லவேண்டுமென்றால், பாதிக்கும் குறைவான ஷஹதா ஆகும். 7 வாக்கியங்களில், 2 வாக்கியங்களைத் தான் இன்று முஸ்லிம்கள் ஷஹதாவாக‌ சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், அதாவது 28.5% ஷஹதாவைத் தான் முஸ்லிம்கள் சொல்கிறார்கள் (100/7x2 = 28.5%).

இது கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமை தழுவுகிறவர்களின் ஷஹதாவா?

மேற்கண்ட ஷஹதா கிறிஸ்தவர்களுக்குத் தான் என்று சில முஸ்லிம்கள் கூறக்கூடும். ஆனால், இது கிறிஸ்தவர்களுக்குத் தான் என்று மேற்கண்ட ஹதிஸ்களும் முஹம்மதுவும் சொல்லவில்லை என்பதை கவனிக்கவேண்டும், இதற்கு எந்த சான்றுமில்லை.  மேலும் எல்லா மக்களையும் உள்ளடக்கும்வகையில் "எவர் இப்படி கூறுகின்றாரோ” என்று ஹதீஸில் தெளிவாக கூறப்பட்டுள்ளதால், இது கிறிஸ்தவர்களுக்கான ஷஹதா இல்லை என்று கூறலாம்.

முடிவுரை: முஸ்லிம்கள் எதை ஷஹதாவாக பயன்படுத்துவது?

இதுவரை நாம் ஆய்வு செய்த விவரங்களிலிருந்து மூன்று வகையான ஷஹதா இருப்பதாக அறிகிறோம்.

ஹதீஸ்கள் சொல்லும் இரண்டாம் வகையான " பாதி ஷஹதாவை" முஸ்லிம்கள் சொல்கிறார்கள், முழுமையான ஷஹதாவை சொல்வதில்லை, அதையும் ஆதார பூர்வமான ஹதீஸ்களே சொல்கின்றன. இந்த முழுமையான ஷஹதா எந்த வகையிலும் குர்‍ஆனின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணானதும் அல்ல. குர்‍ஆனுக்கு முரண்படும் வகையில் முஹம்மது எதையும் போதிக்கமாட்டார் என்று முஸ்லிம்கள் நன்கு அறிவார்கள், சரி தானே! அப்படியானால், ஏன் முழுமையான ஷஹதாவை முஸ்லிம்கள் அறிக்கையிடுவதில்லை?

முழுமையான ஷஹதாவை முஸ்லிம்கள் ஏன் பயன்படுத்துவதில்லை என்ற காரணத்தை கூறுவார்களா? 

குறைந்தபட்சம் குர்‍ஆன் சொல்லும் ஷஹதாவையாவது ஏன் முஸ்லிம்கள் பயன்படுத்துவதில்லை என்ற காரணத்தைச் சொல்வார்களா?

மேலும், ஒரு கேள்வி இன்னும் பதில் அளிக்கப்படாமல் இருக்கிறது. ஆதாம் முதல் முஹம்மது வரை, பல முக்கியமான நபிகளை அல்லாஹ் அனுப்பியிருக்கும் போது, அதாவது இப்றாஹீம், மூஸா, தாவூத், சுலைமான், யஹ்யா போன்ற முக்கியமானவர்கள் இருக்கும் போது, மேற்கண்ட முழுமையான ஷஹதாவில் "ஈசாவிற்கு" மட்டும் ஏன் இடம் கொடுக்கப்பட்டுள்ளது? அப்படியென்ன ஈசா சிறந்தவராக அல்லாஹ்விற்கு தென்பட்டுள்ளார்? ஒருவேளை ஈசா 'அல்லாஹ்வின் வாக்காகவும், அல்லாஹ்வின் ஆன்மாவாகவும்("கலிமதுல்லாஹ் மற்றும் ரூஹ‌ல்லாஹ்")' இருப்பதாலா'?

தேதி: 11th Dec 2021


குர்‍ஆனின் இதர ஆய்வுக் கட்டுரைகள்

குர்‍ஆன் பக்கம்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்