குர்‍ஆன் 21:17 - அல்லாஹ்வின் மனைவியாக மாற ஹூருல் ஈன்கள் / மலக்குகள் அல்லாஹ்வின் இனமா?

இது ஒரு சிறிய குர்‍ஆன் ஆய்வுக் கட்டுரை.

குர்‍ஆன் 21:16,17ம் வசனங்களை வாசியுங்கள்:

1) உண்மையில் ஸூரா 21:17ன் பொருள் என்ன?

முஹம்மது ஜான் தமிழாக்கம்:

21:16. மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்கவில்லை.

21:17. வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்துக்கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்.

முஹம்மது ஜான் தமிழாக்கத்தின் 17வது வசனத்திலிருந்து ஏதாவது புரிகின்றதா? 100% புரியவில்லையல்லவா? மேலும் சில தமிழாக்கங்களை படிப்போம் (21:17):

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

21:17. நாம் வீண் விளையாட்டுக்காரனாக இருந்து விளையாட வேண்டும் என்று நாம் கருதியும் இருந்தால் நம்மிடமுள்ள (நமக்குத் தகுதியான)தை நாம் எடுத்து (விளையாடி)க் கொண்டிருப்போம்.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

21:17. விளையாட்டிற்காக நாம் ஏதேனும் ஒன்றைச் செய்ய நாடியிருந்தால் அதை மட்டுமே நாம் செய்ய வேண்டும் என்றிருந்தால் நம் சார்பாகவே அதனைச் செய்துவிட்டிருப்போம்.

பீஜே தமிழாக்கம்:

21:17. வேடிக்கையை (விளையாட்டை) ஏற்படுத்திக் கொள்வதாக இருந்தால் நம்மிடமிருந்தே அதை ஏற்படுத்தியிருப்போம். நாம் (எதையும்) செய்வோரே. 

மேற்கண்ட 3 தமிழாக்கங்களை படித்த பிறகும், இன்னும் சரியாக புரியவில்லையல்லவா? எதனை அல்லாஹ் “விளையாட்டு” என்றுச் சொல்கிறான்? இதன் பொருள் என்ன? இன்னும் இரண்டு தமிழாக்கத்தை படிப்போம், இப்போது விஷயம் வெளிச்சத்திற்கு வரும்.

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:

21:17. (வீண்) விளையாட்டுக்கென (மனைவி, மக்கள் கொண்ட) எதனையும் ஆக்கிக்கொள்ள நாம் நாடி, (அதை) செய்வோராக நாம் இருந்திருப்பின் நம்மிடத்தில் உள்ளவற்றிலிருந்தே அதை நாம் எடுத்துக் கொண்டிருப்போம்.

முஹம்மது சிராஜுத்தீன் நூரி தமிழாக்கம்:

21:17 (மனைவி மக்கள் கொண்ட)  உல்லாசத்தை எடுத்துக் கொள்ள நாம் நாடி, (அதை) செய்வோராக நாம் இருந்திருப்பின், அதை நம்மிடத்தி(ல் உள்ளவற்றி)லிருந்தே நாம் எடுத்துக் கொண்டிருப்போம்.

இப்போது தான் புரிகின்றது, அல்லாஹ் "விளையாட்டு" "உல்லாசம்" என்றுச் சொன்னது, “மனைவி பிள்ளைகள் கொண்ட வாழ்க்கையை” என்று இப்போது சரியாக புரிகின்றது.

நமக்கு புரியும் வகையில் 21:17ம் வசனத்தை சொல்லவேண்டுமென்றால், 

"நான் குடும்பம் குட்டி (மனைவி பிள்ளைகள்) என்று வாழ விரும்பியிருந்தால், என் இனத்திலிருந்து மனைவியை எடுத்துக்கொண்டு (திருமணம் செய்துக்கொண்டு), பிள்ளைகளை பெற்று இருந்திருப்பேன்".

என்று தமிழாக்கம் செய்யவேண்டும்.

நாம் ஆறு தமிழாக்கங்களில் இந்த குர்‍ஆன் 21:17ம் வசனத்தை படித்திருக்கிறோம். சௌதி தமிழாக்கமும், சிராஜுத்தீன் நூரி அவர்களின் தமிழாக்கமும், (மனைவி மக்கள் என்று) சில விரிவுரை வார்த்தைகளை சேர்த்து எழுதியதால், இவ்வசனத்தின் உண்மை பொருள் புரிகிறது.  

ஆங்கிலத்திலும் சில மொழியாக்கங்களை பார்த்துவிட்டு, ஆய்வை தொடருவோம்.

Hilali & Khan

Had We intended to take a pastime (i.e. a wife or a son, etc.), We could surely have taken it from Us, if We were going to do (that).

Abdullah Yusuf Ali

If it had been Our wish to take (just) a pastime, We should surely have taken it from the things nearest to Us, if We would do (such a thing)!

Hasan al-Fatih  

Had We wished to take to Us an amusement We would have taken it to Us from Ours had We done so.

மேற்கண்ட ஆங்கில மொழியாக்கங்களிலும் நாம் மேலே கண்ட தமிழாக்கங்களில் உள்ளது போன்றே பொருள் வருகிறது.  

இதுவரை பார்த்தவைகள் வெறும் அறிமுகம் தான், இப்போது தான் ஆய்வின் மையத்திற்கு வந்திருக்கிறோம்.

2) அல்லாஹ்வின் இனம் எது?

அல்லாஹ்வின் படைப்புக்கள் பலவகை அவை:

a) ஜின்கள், மலக்குகள்: இவைகள் அல்லாஹ்வை புகழவும், அவரது பணியைச் செய்யவும் படைக்கப்பட்டன.

b) மனித இனம்: ஆதம் தொடங்கி இன்றுவரையுள்ள மனித வர்க்கம்.

c) மிருகங்கள் மச்சங்கள், நுண்ணுயிர்கள்: நிலத்தில் மற்றும் நீரில் வாழும் மிருகங்கள், பறவைகள் போன்றவை. மேலும் மனிதர்களின் கண்களுக்குத் தெரியாத நுண் கிருமிகள் போன்றவைகள்.

d) பூமி மற்றும் இதர கிரகங்கள்: மனிதன் வாழும் பூமி தொடங்கி, இதுவரை மனிதன் கண்டுபிடித்துள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள். இதிலேயே பூமியுள்ள  மரங்கள், மலைகள் கடல்கள் என்று அனைத்தும் இறைவனின் படைப்பே.

e) ஹூருல் ஈன்கள்: அல்லாஹ்வின் சொர்க்கத்தில் முஸ்லிம்களுக்காக படைக்கப்பட்ட சிறப்புமிக்க‌ பெண்கள்.

இவைகளை என் கணக்குப்படி நான் வகைப்படுத்தினேன், முஸ்லிம் அறிஞர்கள் வேறு விதங்களில் இவர்களை வகைப்படுத்தலாம். இக்கட்டுரயின் கேள்வி சரியாக புரியவேண்டுமென்பதற்காக இந்த விவரங்களை நான் கொடுத்தேன்.

இப்பொழுது, 21:17ம் ஆயத்தை இன்னொரு முறை படிப்போம்:

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:

21:17. (வீண்) விளையாட்டுக்கென (மனைவி, மக்கள் கொண்ட) எதனையும் ஆக்கிக்கொள்ள நாம் நாடி, (அதை) செய்வோராக நாம் இருந்திருப்பின் நம்மிடத்தில் உள்ளவற்றிலிருந்தே அதை நாம் எடுத்துக் கொண்டிருப்போம்.

முஹம்மது சிராஜுத்தீன் நூரி தமிழாக்கம்:

21:17 (மனைவி மக்கள் கொண்ட)  உல்லாசத்தை எடுத்துக் கொள்ள நாம் நாடி, (அதை) செய்வோராக நாம் இருந்திருப்பின், அதை நம்மிடத்தி(ல் உள்ளவற்றி)லிருந்தே நாம் எடுத்துக் கொண்டிருப்போம்.

Hilali & Khan

Had We intended to take a pastime (i.e. a wife or a son, etc.), We could surely have taken it from Us, if We were going to do (that).

இந்த மேற்கண்ட மூன்று மொழியாக்கங்களின் படி, அல்லாஹ் தனக்கு ஒரு குடும்பம் (மனைவி பிள்ளைகள்) தேவையென்று அவன் விரும்பியிருந்தால், தான் தன் இனத்திலிருந்து எடுத்துக்கொண்டு இருந்திருப்பான் என்று இவ்வசனம் சொல்கிறது.

கூர்ந்து  கவனிக்கவும்: “தன் இனத்திலிருந்து எடுத்துக்கொள்வான்”  என்று சொல்லும் போது, ஆங்கிலத்தில்:

a) We could surely have taken it from Us . . . (Hilali & Khan)

b) We would have taken it to Us from Ours . . . (Yusuf Ali)

c) We should surely have taken it from the things nearest to Us . . .(Qaribullah & Darwish)

என்று மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில், அல்லாஹ் தான் படைத்தவைகளிலிருந்து எடுத்துக் கொள்வதாகச் சொல்லவில்லை, தன் “இனத்திலிருந்து என்றும், தனக்கு அருகாமையில் உள்ளவைகளிலிருந்தும்” என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதனை தமிழாக்கங்களிலிருந்து பார்க்கும்போது:

  1. நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்
  2. நம்மிடமுள்ள (நமக்குத் தகுதியான)தை நாம் எடுத்து (விளையாடி)க் கொண்டிருப்போம்'
  3. நம் சார்பாகவே அதனைச் செய்துவிட்டிருப்போம்
  4. நம்மிடமிருந்தே அதை ஏற்படுத்தியிருப்போம்
  5. நம்மிடத்தில் உள்ளவற்றிலிருந்தே அதை நாம் எடுத்துக் கொண்டிருப்போம்
  6. அதை நம்மிடத்தி(ல் உள்ளவற்றி)லிருந்தே நாம் எடுத்துக் கொண்டிருப்போம்

அடைப்பிற்குள் () எழுதப்பட்டவைகள் அனைத்தும் தமிழாக்கம் செய்தவர்களின் குறிப்புக்கள் ஆகும். அவைகளையெல்லாம் நீக்கிவிட்டு, மூல அரபியில் உள்ள பொருளைப் பார்த்தோமானால், "அல்லாஹ் தன்னிடமிருந்து" யாரையாவது எடுத்துக்கொண்டு மனைவியாக்கி இருந்திருப்பான் என்று பொருள் வருகின்றது.

கட்டுரையின் கடைசிக்கு வந்துவிட்டோம், சுருக்கமாக ஒரு உதாரணத்தைச் சொல்லிவிட்டு, முடிவுரைக்குச் சென்றுவிடுவோம்.

செல்வந்தரின் உதாரணம்: ஒரு மிகப்பெரிய செல்வந்தர், பிரம்மச்சாரியாக இருந்து நூற்றுக்கணக்கான அநாதை பிள்ளைகளை எடுத்து வளர்த்து வருகின்றார் என்று வைத்துக்கொள்வோம். ஒருமுறை அவரிடம் "உங்களுக்கு பிள்ளைகள் என்றால் விருப்பம் என்று தெரிகின்றது, ஏன் நீங்கள் திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது" என்று கேட்டால், அவர் "நான் நினைத்துயிருந்தால் என் (இனத்திலேயே) சொந்தத்திலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு பிள்ளைகள் பெற்று மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்,  எனக்கு பெண் கொடுக்கவும் சொந்தங்கள் இருக்கிறார்கள். ஆனால் அதை நான் செய்யாமல், அநாதை பிள்ளைகளை எடுத்து வளர்க்கிறேன், இதுவே அதிக மகிழ்ச்சியைத் தருகிறது" என்று பதில் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

இந்த செல்வந்தன் சொன்னதில் எந்த தவறும் இல்லை, இப்படி நற்காரியங்கள் செய்யும் பலபேரை நாம் கண்டும் இருந்திருப்போம்.

ஆனால், அல்லாஹ் இந்த செல்வந்தன் போல குர்‍ஆன் 21:17ல் சொன்னதில் தான் மிகப் பெரிய  தவறு உள்ளது.  அல்லாஹ்வின் இவ்வசனத்தை சரியாக புரிந்துக்கொண்டவர்கள், மொழியாக்கம் செய்யும் போது "மனைவி பிள்ளைகள்" என்று அடைப்பிற்குள் எழுதியுள்ளார்கள்.  அதனை புரிந்துக்கொண்டும், இவ்வசனத்தில் உள்ள பிரச்சனையையும் புரிந்துக்கொண்டவர்கள் "மனைவி பிள்ளைகள்" என்று வெளிப்படையாகச் சொல்லாமல், தங்களால் முடிந்த வரை வசனத்தை குழப்பமாக மொழியாக்கம் செய்ய முயன்றுள்ளார்கள்.

3) பிரச்சனை என்ன? அல்லாஹ்வின் படைப்புக்களில் 'எது அல்லாஹ்வின் இனம்'?

அல்லாஹ்வின் படைப்புக்களில் "மலக்குக்கள்/ஜின்கள் இனம்", "மனித இனம்", "மிருகங்களின் இனம்", "பூமி/கிரகங்கள்/மரம்/மலை" மற்றும் "ஹூருல் ஈன்கள்" என்று கண்டோம். இவைகளிலிருந்து எவைகளை அல்லாஹ் தன் மனைவியாக (ஆம், மனைவியாக) எடுத்துக்கொள்வான் (குர்‍ஆன் 21:17ன் படி) அவன் நினைத்திருந்தால்?

அல்லாஹ்விற்கு மனைவியாகும் தகுதி மனித இன பெண்களுக்கு இல்லை:

மனிதர்களில் ஒரு பெண்ணை அல்லாஹ் திருமணம் செய்யமுடியாது ஏனென்றால், நாம் அவனது அடிமைகள், அவனுக்கு மனைவியாகும் தகுதி மனித இனத்திற்கு இல்லை. இதனை சரியாக புரிந்துக்கொண்டதால் தான் தமிழாக்கம் செய்தவர்கள் "நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே " என்றும், "நம்மிடமுள்ள (நமக்குத் தகுதியான)தை " என்றும், முஹம்மது ஜான் மற்றும் பாகவி தமிழாக்கங்கள் 'தகுதியுள்ளவர்களிடமிருந்தே" என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள்.  [அடேங்கப்பா! குர்‍ஆனை மொழியாக்கம் செய்யும் போது, இவைகளையெல்லாம் கவனிக்கவேண்டுமே! இல்லையென்றால், மிகப்பெரிய பிரச்சனையாகிவிடுமே என்ற எண்ணம் வருகின்றதல்லவா! ஆமாம், மொழியாக்கம் என்றால் என்ன சும்மாவா? ஒவ்வொரு வசனத்தை தொடும் போது, ஒட்டுமொத்த குர்‍ஆனையும், இஸ்லாமிய இறையியலையும் மனதில் வைத்துக்கொண்டு தான் மொழியாக்கம் செய்யவேண்டும், இல்லையென்றால், இஸ்லாமிய அஸ்திபாரமே ஆட்டம் காணும். இவ்வளவு எச்சரிக்கையாக இருந்தும், அடிக்கடி குர்‍ஆன் தர்ம சங்கடங்களில், பிரச்சனைகளில் மாட்டிக்கொள்வது தான், குர்‍ஆனின் அழகான‌ சிறப்பம்சம்]

அல்லாஹ்விற்கு மனைவியாகும் தகுதி கிரகங்களுக்கும், மிருகங்களுக்கும் உண்டா?

மனிதர்களுக்கே தகுதி இல்லையென்று இருக்கும் போது, எப்படி கிரகங்களுக்கும், மிருகங்களுக்கும் தகுதி வந்துவிடும், எனவே இவைகளும் டெபாசிட்டை இழந்துவிடுவார்கள்.

அல்லாஹ்விற்கு மனைவியாகும் தகுதி மலக்குகள்/ஜின்களுக்கு உண்டா?

தேவதூதர்கள் (மலக்குகள்) ஆண்களா பெண்களா என்று எனக்குத் தெரியாது. மேலும் ஜின்களில் பெண்களும், ஆண்களும் உண்டு என்று கேள்விபட்டு இருக்கிறேன். ஆனால், அல்லாஹ் இவர்களில் யாரையாவது தன் மனைவியாக எடுத்துக்கொண்டு விளையாடுவானா? இவர்களை தம் இனமாக எடுத்துக்கொள்வானா?   இதற்கு முஸ்லிம் அறிஞர்கள் தான் பதில் சொல்லவேண்டும்.

அல்லாஹ்வின் மனைவியாகும் தகுதி ஹூருல் ஈன்களுக்கு உண்டா?

ஒருவழியாக நாம் வரவேண்டிய இலக்கிற்கு வந்துவிட்டேன் என்று  நினைக்கிறேன். இந்த இடத்திற்கு உங்களை அழைத்துவருவதற்குத் தான் இவ்வளவு நேரம் சுற்றி வளைத்து உங்களை அழைத்துவந்தேன். 

ஹூருல் ஈன்கள் என்றுச் சொன்னவுடன், முஸ்லிம் ஆண்களின், இமாம்களின், அறிஞர்களின் நாவில் எச்சில் ஊறும் (ஆம், நான் எச்சிலைத் தான் சொன்னேன், நீங்கள் வேறு ஏதாவது நினைத்துக்கொள்ளாதீர்கள்). சொர்க்கத்தில் முஸ்லிம் ஆண்களுக்குக் கிடைக்கும் ஹூருல் ஈன்கள் பற்றி பலவாறு இமாம்கள் விளக்கியிருப்பார்கள், இதனை வயதுக்கு வந்த ஒவ்வொரு முஸ்லிமும் அறிவான். ஹூருல் ஈன்கள் பற்றி குர்‍ஆனும் ஹதிஸ்களும் என்ன சொல்லியுள்ளார்கள் என்ற சிறு குறிப்பு இக்கட்டுரையின் அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

த‌ஃப்ஸீர் ஜலலைன் : குர்‍ஆன் 21:17

ஜலலைன் என்ற இஸ்லாமிய அறிஞரை இஸ்லாமிய உலகம் நன்கு அறியும். அவர் குர்‍ஆன் 21:17வது வசனத்திற்கு கொடுத்த விளக்கத்தில் என்ன சொல்லியுள்ளார் என்பதை படிக்கவும்:

Tafsir jalalayn

Had We desired to find some diversion, that which provides diversion, in the way of a partner or a child, We would have found it with Ourselves, from among the beautiful-eyed houris or angels, were We to do [so]. But We did not do so, thus We never desired it.

அல்லாஹ் தனக்கு மனைவியோ பிள்ளையோ தேவையென்றால், "அழகான கண்களையுடைய‌ ஹூருல் ஈன்களிலிருந்தும் அல்லது தேவதூதர்களிலிருந்தும்" எடுத்துக்கொண்டு இருந்திருப்பானாம்.

குர்‍ஆன் 21:17ஐ பற்றிய நம்முடைய கேள்விகள்:

1) ஸூரா 21:17ல் ஒரு பிரச்சனை உள்ளது என்பதை முஸ்லிம்கள் அறிஞர்கள் நன்றாக புரிந்துக்கொண்டுள்ளார்கள் என்பதை மட்டும் காணமுடிகின்றது.

2) ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான மொழியாக்கம் செய்துள்ளார்கள்.

3) அல்லாஹ்விற்கு இணை வைப்பதற்கான எல்லா வகையான அடித்தளத்தை இவ்வசனம் முன்மொழிகின்றது.

4) இவ்வசனத்தை மொழியாக்கம் செய்ய முயலும் முஸ்லிம்களுகு அனேக கேள்விகள் எழுகின்றன. எப்படி அல்லாஹ் ஒரு மனிதனைப்போல 'நான் நினைத்திருந்தால் என் இனத்திலிருந்தே ஒரு மனைவியை/வாரிசை' எடுத்துக்கொள்ளமுடியும் என்று சொல்லமுடியும்?

5) அல்லாஹ் எதனை தன் இனம் என்றுச் சொல்கின்றான்? அல்லாஹ் தனித்தவன், அவனுக்கு இணை யாருமில்லையல்லவா? அவன் எப்படி தனக்கு ஒரு மனைவியை எடுத்துக்கொள்ளமுடியும்?

6) குறைந்தபட்சம் தான் படைத்த அனைத்தும் அல்லது மனித இனமாவது தன் பிள்ளைகள் என்று சொல்லியிருந்தால், இவ்வசனத்திற்கு 'இஸ்லாமிய இறையியலுக்கு முரணில்லாமல் பொருள்' கொடுத்துவிடலாம். ஆனால், மனித இனமே தன் பிள்ளைகள் ஆகமுடியாது, வெறும் அடிமைகள் தான் என்று இஸ்லாம் சொல்லும் போது, இவ்வசனத்திற்கு பொருள் கொடுப்பதில் மிகபெரிய  சிக்கல் உள்ளதல்லவா?

7) எனவே, சிலர் 'தனக்கு தகுதியானவைகளிலிருந்து' என்று மொழியாக்கம் செய்கிறார்கள். இதுவே ஒரு மிகபெரிய ஷிர்க் என்ற பெரும்பாவமாகும். எது அல்லாஹ்விற்கு தகுதியாக முடியும்? மலக்குகளும், ஜின்களும், மனித இனமும், ஹுருல் ஈன்கள் என்ற பெண்களும் எப்படி அல்லாஹ்விற்கு தகுதியானவர்களாக ஆகமுடியும்?

8) இஸ்லாமிய அறிஞர் ஜலலைன், மலக்குகள், ஹூருல் ஈன்கள் என்றுச் சொல்லி, "அல்லாஹ்விற்கு மனைவியை கற்பித்துவிட்டார்", அவர் என்ன செய்யமுடியும், அவ்வசனத்தை கவனித்தால் இப்படித் தான் அவரால் விளக்கம் அளிக்கமுடியும்!

9) இதுமட்டுமல்ல, ஒரு மனிதன் சொல்வது போன்று, அல்லாஹ் 'நான் நினைத்திருந்தால், இப்படி கல்யாணம் செய்து செட்டில் ஆகியிருப்பேன், பிள்ளைகளை பெற்று இருந்திருப்பேன், இருந்தாலும் நான் செய்யவில்லை' என்றுச் சொல்வது, குர்‍ஆனின் தெய்வீகத்தின் மீது சந்தேகம் வருகிறது. குறைந்தபட்சம் இந்த வசனத்தில் மனித கையோ வார்த்தைகளோ விளையாடிவிட்டதோ!

10) இதைத் தான் அல்லாஹ் 'நான் விளையாட நினைத்திருந்தால், டைம்பாஸுக்காக உலகை படைப்பதாக நினைந்திருந்தால், ஒரு வேடிக்கையாக நினைத்திருந்தால், என்னிடமுள்ள படைப்புக்களில் அதாவது மலக்குகள், ஹூருல் ஈன்களிலிருந்து ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து குடும்பம் நடத்தியிருந்திருப்பேன்' என்றுச் சொல்கிறான். இதுவா இறை வார்த்தை? முஸ்லிம்களே விளக்குங்கள்.

முடிவுரை:

இந்த ஆய்வில் நான் எந்த ஒரு முடிவுக்கும் வராமல், அதனை வாசகர்களிடம் கொடுக்கிறேன். தமிழிலும், ஆங்கிலத்திலும் பல மொழியாக்கங்களை கொடுத்து, ஒரு சிறிய ஆய்வைச் செய்து, இஸ்லாமிய விளக்கவுரையையும் மேற்கோள் காட்டி, முடிவை உங்களிடம் கொடுத்துள்ளேன்.

நான் செய்தது தவறான ஆய்வு என்று சொல்ல விரும்பும் முஸ்லிம்கள், அறிஞர்கள் கீழ்கண்ட சுருக்கமான கேள்விகளுக்கு பதில்களைத் தாருங்கள்.

1) ஸூரா 21:17 சொல்லும் விவரத்தை சுருக்கமாக விளக்குங்கள்.

2) அல்லாஹ்வின் இனம் எது?

3) அல்லாஹ்விற்கு தகுதியானவைகளிலிருந்து என்று தமிழாக்கம் செய்தவர்கள்  சொல்ல வருவது என்ன?

4) அல்லாஹ்விற்கு தகுதியானவர்கள் என்றுச் சொல்வதே மிகப்பெரிய ஷிர்க அல்லவா?

5) எல்லா தமிழாக்கங்களும் இந்த வசனத்திற்குச் சொன்ன விளக்கம் சரியானதா?

6) இஸ்லாமிய அறிஞர் ஜலலைன் குறிப்பிட்ட மலக்குகள், ஹூருல் ஈன்கள் அல்லாஹ்வை திருமணம் செய்துக்கொள்ள தகுதியானவர்களா? அல்லது அல்லாஹ்விற்கு பிள்ளைகளாவதற்கு தகுதியானவர்களா? முஸ்லிம்கள் விளக்கட்டும்.

பீஜே அவர்களுக்கு பரிசு: நான் பீஜே அவர்களுக்கு, ஆன்சரிங் இஸ்லாம் கட்டுரைகளுக்கு அவர் வீடியோ பதில் கொடுத்தால், பரிசு கொடுப்பதாக கூறியிருந்தேன் (இங்கு படிக்கவும்). இக்‌கட்டுரை, அவரது ஆய்வுப் பசிக்கு தீணி போடும் என்று நம்புகிறேன், பீஜே அவர்கள் இந்த கட்டுரைக்கு பதில் கொடுக்க முயலலாம்.

அடிக்குறிப்புக்கள்:

[1] ஹூருல் ஈன்கள்  - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்  - www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/ramalan2012day8.html

[2] ஹூருல் ஈன்கள் பற்றி சில குறிப்புக்கள்: குர்-ஆன் 44:54, 55:70, 72, 52:20 & ஸஹீஹ் புகாரி எண் 2799

சொர்க்கவாசியான பெண் உலகத்தாரை எட்டிப்பார்த்தால், வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்

அல்லாஹ்விற்காக ஜிஹாத் போர் புரிந்து அதில் மரித்தால், அவர்களுக்கு அனேக பெண்கள் (72) தருவதாக முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இது தவிர சாதாரண நல்ல முஸ்லிம்களுக்கும் சொர்க்கத்தில் ஹூருல் ஈன்கள் என்ற பெண்கள் கிடைப்பார்கள் என்று குர்-ஆனும் சொல்கிறது.  இந்தப் பெண்களில் ஒருத்தி, உலகத்தாரை எட்டிப்பார்த்தால், வானத்திற்கும் பூமிக்கும் இடையே பிரகாசம் வந்துவிடுமாம். இவ்வளவு மேன்மை அந்த பெண்களின் கண்களில் இருக்கிறது என்று முஹம்மது கூறியுள்ளார்.

குர்-ஆன் 44:54, 55:70, 72, 52:20 & ஸஹீஹ் புகாரி எண் 2799 & 3254

44:54. இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.

55:70. அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.

55:72. ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.

52:20. அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.

ஸஹீஹ் புகாரி எண் 2799

2796. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.  என அனஸ்(ரலி) அறிவித்தார். Volume :3 Book :56

'ஹூருல் ஈன்' எனப்படும் பெண்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும்

மனிதர்கள் அதிக சிவப்பாக/வெள்ளையாக இருந்தால், அவர்களின் கைகளில், கால்களில் இருக்கும் நரம்புகளை நாம் ஓரளவிற்கு காணமுடியும். இது இயற்கை. ஒரு பெண்ணின் காலில் உள்ள  எலுப்புக்குள் இருக்கும் மஜ்ஜை கூட வெளியே தெரியும் அளவிற்கு அவள் வெள்ளை வெளேரென்று இருந்தால் எப்படி இருக்கும்?  இப்படிப்பட்ட பெண்களை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு சொர்க்கத்தில் தருவதாக, இஸ்லாமிய தீர்க்கதரிசி ஆசை வார்த்தைகள் சொல்லி முஸ்லிம்களை மயக்கியுள்ளார். இப்படிப்பட்ட வர்ணனையை சிறிய வயதிலிருந்து கேட்டுக் கேட்டு முஸ்லிம் ஆண்கள் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டு, சாகத்துணிந்து, செத்து, மற்றவர்களை சாகடித்து, இஸ்லாமிய சொர்க்கத்தில் நுழைய பயணச்சீட்டு வாங்க முயற்சி எடுக்கிறார்கள். இந்த போதனையைச் செய்யும் வேதமும், தீர்க்கதரிசியும் உண்மையான மார்க்கத்தை பின்பற்றுபவர்களாக இருக்கமுடியுமா? நிச்சயமாக இல்லை. 

ஸஹீஹ் புகாரி எண் 3254

3254. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பெளர்ணமி இரவின் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின்தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர்கள், வானத்தில் நன்கு ஒளி வீசிப் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே பரஸ்பர வெறுப்போ, பொறாமையோ இருக்காது. ஒவ்வொரு மனிதருக்கும் 'ஹூருல் ஈன்' எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும்.  

தேதி: ஜூலை 18, 2021


இதர குர்‍ஆன் ஆய்வுக் காட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்