அரபி குர்ஆனில் மிக எச்சரிக்கையுடன் ஓதவேண்டிய இடங்கள்: பாகம் 1 - பிழையானதும், சரியானதும்
(அப்துல் ஹமீது பாகவி மற்றும் சிராஜுத்தீன் நூரி தமிழாக்க விளக்கங்களின் ஆய்வுகள்)
முன்னுரை:
அனேக தமிழ் குர்ஆன் மொழியாக்கங்கள் நம்மிடம் உள்ளன. இணையத்திலும் குறைந்தபட்சம் எனக்குத் தெரிந்து ஐந்து குர்ஆன் தமிழாக்கங்களை நாம் படிக்கமுடியும் (நான்கு தமிழாக்கங்கள்: http://www.tamililquran.com/ & பீஜே தமிழாக்கம்: https://www.tamilquran.in ).
இணையத்தில் (Aug 2021ல்) கிடைக்காத இன்னொரு தமிழாக்கத்தை இன்று ஆய்வு செய்யப்போகிறோம். அதன் விவரங்கள் இங்கே:
- குர்ஆன் தமிழாக்கம்: தர்ஜமா அல்குர்ஆனில் கரீம் (ஆயத்துக்கள் இறக்கப்பட்ட காரணங்களுடன்)
- மொழிப்பெயர்ப்பாசிரியர்: மௌலவி அல்ஹாஜ் A. முஹம்மது சிராஜுத்தீன் நூரி (திண்டுக்கல்)
- பதிப்பு: 19வது பதிப்பு, ஏப்ரில் 2015
இனி “நூரி தமிழாக்கம்” என்று இதனை சுருக்கமாகவும் செல்லமாகவும் நாம் அழைப்போம். இந்த தமிழாக்கத்தின் 11 மற்றும் 12வது பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் சில விவரங்களை நாம் ஆய்வு செய்யப்போகிறோம்.
1) நூரி தமிழாக்கம் பக்கம் XI: மிக எச்சரிக்கையுடன் ஓத வேண்டிய இடங்கள்
பக்கம் XI(11)ஐ படம் பிடித்து இங்கு தருகிறேன்.
நூரி தமிழாக்கம் பக்கம் XI:
மிக எச்சரிக்கையுடன் ஓத வேண்டிய இடங்கள்
திருக்குர்ஆனை ஓதும்போது, ஜபர், ஜேர், பேஷ் முதலிய குறிகள் மாறுபட ஓதினால், பொருள்பேதமேற்படுகிறது. குறிப்பாக கீழே கண்டபடி, 20 இடங்களில் குறிகளைச் சிறிது மாற்றி ஓதினாலும் முரண்பட்ட பொருளைக் கொடுத்துவிடுகின்றது. உதாரணமாக, அன் அம்த்த (நீ அருள் புரிந்தாய்) என்றிருப்பதை அன் அம்த்து என்று ஓதினால் (நான் அருள் புரிந்தேன் என்று) நேர் முரணான பொருள் ஏற்படுகின்றது. இந்த இடங்களில் கவனித்து ஓதுவது அவசியம்.
படம் 1: சிராஜுத்தீன் நூரி தமிழாக்கம், பக்கம் XI
2) அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்: "எச்சரிக்கையாக ஓதவேண்டிய இடங்கள்"
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கத்திலும் "எச்சரிக்கையாக ஓதவேண்டிய இடங்கள்" என்றுச் சொல்லி ஒரு பட்டியலை கொடுத்திருக்கிறார்கள்.
இந்த தமிழாக்கம் பக்கம் 20ல், கீழ்கண்ட விவரங்கள் கொடுக்கப்பட்டு, பக்கம் 45ல் ஒரு பட்டியலை கொடுத்திருக்கிறார்கள்.
பக்கம் 20: எச்சரிக்கையாக ஓதவேண்டிய இடங்கள்
குர்ஆனை அரபி மொழியிலேயே ஓதும் போது, அதன் இலக்கண விதிகளை நன்குணர்ந்து ஓதவேண்டியது கடமையாகும். குர்ஆனில் சில இடங்களில் உள்ள குறிகளை ஒரு சிறிது மாற்றினாலும், நேர் முரணான பொருளைத் தருவதாக இருக்கின்றது. அம்மாதிரியான இடங்களில் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென மார்க்க அறிஞர்கள் வகுத்திருக்கிறார்கள். நாம் மிக எச்சரிக்கையுடன் ஓதவேண்டிய அப்படிப்பட்ட இடங்களில் சிலவற்றை தனியே குறிப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
பக்கம் 45: மிக எச்சரிக்கையுடன் ஓதவேண்டிய இடங்களில் சில
படம் 1: அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம், பக்கம் 45
3) ஏன் இந்த எச்சரிக்கை கொடுக்கப்படவேண்டும்?
இது குர்ஆனின் தமிழாக்கம் தானே!, இதில் ஏன் அரபியில் உள்ள எழுத்துக்களில் வரும் சிறிய மாற்றங்களை கவனித்து வாசிக்கச் சொல்கிறார்கள்? என்று பலருக்கு சந்தேகம் வரலாம்.
குர்ஆனை அரபியில் படித்தால் தான் அதிக நன்மை கிடைக்கும் என்று இஸ்லாம் போதிக்கிறது, நம் தாய் மொழியில் புரிந்துக்கொண்டு படித்தாலும், அதிக நன்மையில்லையாம். தெரியாத மொழியில் புரியாமல் படித்தாலும் அதிக நன்மையை அல்லாஹ் கொடுப்பானாம்! ஒரு வகையில் இது அறிவுடமைக்கு எதிராக இருந்தாலும், முஸ்லிம்கள் அரபியில் குர்ஆனை படிப்பதற்கே உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.
எனவே தான், தமிழாக்க குர்ஆன்களிலும், அரபி எழுத்துக்கள் பற்றியும், அவைகளை சரியாக கவனித்து படிக்கவில்லையென்றால், ஏற்படும் 'பொருள் பேதம்' பற்றியும் எழுதி வைத்திருக்கிறார்கள்.
4) முஸ்லிம்கள் அரபி எழுத்துக்களை கூர்ந்து படித்தாலும், அவர்களுக்குத் தான் பொருள் புரியப்போவதில்லையே! பின் ஏன் இந்த எச்சரிக்கை?
இந்த 11வது பக்கத்தில் மொழிப்பெயர்ப்பாளர் நூரி அவர்கள் எழுதியதை படியுங்கள்:
மிக எச்சரிக்கையுடன் ஓத வேண்டிய இடங்கள்
திருக்குர்ஆனை ஓதும்போது, ஜபர், ஜேர், பேஷ் முதலிய குறிகள் மாறுபட ஓதினால், பொருள்பேதமேற்படுகிறது. குறிப்பாக கீழே கண்டபடி, 20 இடங்களில் குறிகளைச் சிறிது மாற்றி ஓதினாலும் முரண்பட்ட பொருளைக் கொடுத்துவிடுகின்றது. உதாரணமாக, அன் அம்த்த (நீ அருள் புரிந்தாய்) என்றிருப்பதை அன் அம்த்து என்று ஓதினால் (நான் அருள் புரிந்தேன் என்று) நேர் முரணான பொருள் ஏற்படுகின்றது. இந்த இடங்களில் கவனித்து ஓதுவது அவசியம்.
மேலும் பாகவி அவர்கள் கொடுத்த எச்சரிக்கை விவரத்தையும் மேலே பாயிண்ட் 2ல் படித்துக்கொள்ளுங்கள்.
அரபி மொழியில் குர்ஆனை படிக்க மட்டுமே கற்றுக்கொள்கிற முஸ்லிம்கள் தான் அதிகம். இமாம்களாகவும் இஸ்லாமிய அறிஞர்களாகவும் இருக்கும் சிலர் மட்டுமே, குர்ஆனை பொருளை அறிந்து படிக்க கற்றுக்கொள்கிறார்கள். இப்படி இருக்கும் போது, "அன் அம்த்த" என்று அவர்கள் படித்தாலும், "அன் அம்த்து" என்று தவறாக படித்தாலும், அவர்களுக்கு ஒன்றுமே புரியப்போவதில்லை.
“அன் அம்த்த - நீ அருள் புரிந்தாய்” அல்லது “அன் அம்த்து - நான் அருள் புரிந்தேன்” என்ற பொருள் அவர்களுக்குத் தெரியப்போவதில்லை. இவர் வீட்டில் அரபியில் படிப்பதை கவனிக்கும் அல்லாஹ்விற்குத் தான், "அடடே இவன் தவறாக ஓதுகின்றானே!" என்று தெரியவரும். படிக்கும் அவருக்கோ, செவிடன் காதில் ஊதிய சங்கு தான் (இப்படி எழுதியதால் என்னை மன்னிக்கவும். இறைவன் நமக்கு கொடுத்த வேதத்தை புரியும் மொழியில் படிப்பதை மட்டுமே ஆதரிப்பவன் நான், அதனால் தான் இப்படி எழுதினேன்). ஒருவேளை ஒரு முஸ்லிம் பொதுவில் இவ்வார்த்தைகளை வாசிக்கும் போதும், அந்த இடத்தில் இருக்கும் இமாம்களுக்கு (அரபியின் பொருள் தெரிந்த இமாம்களுக்கு) மட்டுமே, படிப்பவர் செய்த தவறு தெரியவருமே தவிர, மீதமுள்ள யாருக்குமே பொருள் தெரியாது.
இவைகளை கவனியுங்கள்/சிந்தியுங்கள்:
1) முஸ்லிம்களுக்கு அரபி மொழியை படிக்கவும், புரிந்துக்கொள்ளவும் கற்றுக்கொடுக்காதது முதல் தவறு.
2) அரபி மொழி புரியாதவர்களிடம்/கற்காதவர்களிடம் சென்று, குர்ஆனை அரபியில் படிக்க ஊக்குவிப்பது இரண்டாவது தவறு.
3) இந்த இரண்டு தவறுகளையும் செய்துவிட்டு, குர்ஆன் தமிழாக்கத்தில், மேற்கண்ட விதமாக 'மிகவும் எச்சரிக்கையுடன் ஓதவேண்டிய குர்ஆன் வசனங்கள்’ என்று பட்டியல் கொடுப்பது மூன்றாவது தவறு.
4) பாகவி அவர்கள் "அரபி இலக்கண விதிகளை கடைபிடித்து குர்ஆனை படிக்கவேண்டும்" என்று கூறுகின்றார். ஒரு மொழியின் அர்த்தம் புரியாமல் படிக்கும் போது, சாதாரண முஸ்லிம்கள் இலக்கணத்திற்கு எங்கே போவது?
இதன்படி பார்த்தால், யாருக்கு நீங்கள் இந்த பட்டியலை கொடுத்துள்ளீர்கள்? அரபியில் பொருள் புரியாமல் குர்ஆனை படிக்கும் முஸ்லிம்கள், இந்த 20 இடங்களையும் ஒரு பட்டியலிட்டு வைத்துக்கொண்டு, சரியாக அந்த குறிப்பிட்ட வசனம் வரும் போது பார்த்து சரியாக ஓதவேண்டும். சரி, இப்படி அவர்கள் செய்தாலும், என்ன நன்மை? இந்த 20 இடங்களில் மட்டும் தான், ஒரு முஸ்லிம் பிழையாக ஓதுவாரா என்ன? இல்லையல்லவா?
மொத்தம் 6236 வசனங்கள் உள்ளன, எல்லா இடங்களிலும் சரியாக ஓதவேண்டுமென்றால், ஒரே ஒரு வழி தான் உள்ளது, அது 'அரபியை படிக்கவும், பொருல் கொல்லவும் தெறிந்துக்கொன்டு" குர்ஆனை படிக்க ஆரம்பிக்கவேண்டும்.
[கவனித்தீர்களா? தமிழ் மொழியை படிக்கவும், பொருள் கொள்ளவும் தெரிந்தவர்களால், மேற்கண்ட மூன்று வார்த்தைகளில் உள்ள பிழையை சரியாக கண்டுபிடிக்கமுடியும். படித்த அடுத்த நொடியிலேயே அல்லது படித்துக்கொண்டு இருக்கும் போதே எழுத்து பிழையை கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால், வெறும் தமிழ் மொழி எழுத்துக்களை மட்டுமே கற்றுக்கொண்டு, பொருள் தெரிந்துவைத்துக்கொள்ளாமல், இலக்கணத்தை அறியாமல், மேற்கண்ட பிழையான "வரியை படிக்கும்" நபர்களால் பிழைகளை கண்டுபிடிக்க முடியாது.]
முடிவுரை:
கடைசியாக, என்னத்தான் சொல்ல வருகிறாய்? என்று கேட்டால், 'ஏன் அரபியை பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள்? என்பது தான் கேள்வி'? அறிவுடமைக்கு ஏற்காத செயல்களை செய்வதற்கு ஏன் இவ்வளவு பிடிவாதமாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பது தான் முஸ்லிம்களிடம் கேட்கக்கூடாத கேள்வி.
- நீ அருள் புரிந்தாய் (அன் அம்த்த) => மனிதன் அல்லாஹ்விடம் பேசுவது
- நான் அருள் புரிந்தேன் (அன் அம்த்து) => மனிதன் அல்லாஹ்வாக தன்னை கருதிக்கொண்டு பேசுவது
இரண்டாவது வரியில் உள்ளது, மிகப்பெரிய பாவம்/தவறு ஆகும், அல்லாஹ்விற்கு தன்னை இணையாக வைத்து பேசுவதாகும். எதற்கு இந்த தொல்லைகள் எல்லாம்? ஏன் முஸ்லிம்கள் தங்களை அறியாமல் அல்லாஹ் வெறுக்கும் மிகப்பெரிய 'இணைவைத்தல்' என்ற பாவத்தை செய்ய வழி வகுக்கிறீர்கள்?
அரபி புரிந்தவன் அரபியில் படிக்கட்டும், தமிழ் புரிந்தவன் தமிழில் படிக்கட்டும். அரபியை பொருள் அறிந்து கற்ற திறமையுள்ளவர்கள், அரபியை நன்கு கற்று அரபியில் ஓதட்டுமே! ஏன் இந்த மாய்மாலம்? நானும் அரபியில் குர்ஆனை ஒரு முறை படித்துவிட்டேன் என்று தம்மட்டும் அடிப்பதினால் யாருக்கு என்ன லாபம்? இணை வைத்தல் என்ற பெரும் பாவம் செய்வதைத் தவிர்த்து - வேறு ஏதாவது நன்மையுண்டா?
முஸ்லிம்கள் மீது ஏன் இஸ்லாம் சுமக்கமுடியாத சுமையை சுமத்துகிறது?
சரி, மேற்கண்ட விதமாக, அரபியை நன்கு கற்றுக்கொண்டு, பொருள் தெரிந்து வாசித்தால், இந்த "பெரும்பாவத்திற்கு முஸ்லிம்கள் தூரமாவார்களா"? என்று கேட்டால், "இல்லை" என்பது தான் பதில்.
அடுத்த தொடரில், அந்த இரகசியத்தை நாம் அவிழ்ப்போம்...
சிராஜுத்தீன் நூரி அவர்கள் 'எவைகளை முஸ்லிம்கள் செய்யாமல், தடுக்கப்படவேண்டும்' என்று இந்த விவரத்தை தன் குர்ஆன் தமிழாக்கத்தில் பதித்தாரோ, அதற்கு எதிராக "பல மூல அரபி" குர்ஆன்களை, கிராத்துக்களை முஸ்லிம்கள் உலகளவில் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். அரபியை தாய்மொழியாக கொண்ட முஸ்லிம்கள் கூட படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.. இவைகளை நம்பமாட்டீர்களா?
இதன் அடுத்த தொடர்வரை காத்திருங்களேன். . . .
தேதி: 5 Aug 2021