கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1 - குர்‍ஆன் ஒரு சிறு குறிப்பு

எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு. (புலம்பல் 2:19)

1) நடைமுறை எடுத்துக்காட்டுகள் 

என் நண்பராக இருக்கும் ஒரு கிறிஸ்தவ போதகர் ஒரு நாள் என்னிடம் வந்து, "இஸ்லாம் பற்றி சிறிது விளக்கமுடியுமா?" என்று கேட்டார். அவரிடம் நான், "ஏன் இப்படி திடீரென்று கேட்கிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர், "என் சபையில் சில விசுவாசிகளுக்கு இஸ்லாமியர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். இந்த இஸ்லாமியர்கள் கேட்கும் சில கேள்விகளை அப்படியே வந்து என்னிடம் விசுவாசிகள் கேட்கிறார்கள்". ஆகையால், இஸ்லாம் பற்றி தெரிந்து வைத்துக்கொண்டால் நல்லது என்று நினைத்து உங்களிடம் வந்தேன் என்று கூறினார். 

இன்னொரு முறை நானும் என் சபையில் இருக்கும் இன்னொரு சகோதரரும் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். அப்போது திடீரென்று அந்த சகோதரர், குர்‍ஆனின் அல்லாஹ்வும், நம்முடைய யெகோவா தேவனும் ஒன்று (இருவரும் ஒருவரே) என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள் இது உண்மையா? என்று என்னிடம் கேட்டார். 

எங்கள் சபையில் இருக்கும் ஒரு சகோதரி ஒரு கடைக்குச் சென்றார்கள், அந்த கடைக்காரர் ஒரு இஸ்லாமியர். இந்தச் சகோதரி ஒரு கிறிஸ்தவர் என்பதை அறிந்த அவர், அந்த சகோதரியிடம் சில நிமிடங்கள் பேசினார் மற்றும் சில இஸ்லாமிய புத்தகங்கள் கொடுத்தார். அந்த சகோதரி அந்த புத்தகங்கள் அனைத்தையும் கொண்டு வந்து என்னிடத்தில் கொடுத்துவிட்டார்கள். 

என் கிறிஸ்தவ நண்பர் மூலம் அறிந்த இன்னொரு விவரம் என்னவென்றால், கல்லூரிகளில் படிக்கும் கிறிஸ்தவ பெண் பிள்ளைகளிடம், அதே கல்லூரியில் படிக்கும் இஸ்லாமிய ஆண்கள் பேச்சு கொடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் கிறிஸ்தவம் பற்றி பேசி, அவர்களை குழப்புகிறார்கள். இதனால் குழப்பமடைந்த அந்த சகோதரிகள், குடும்ப நபர்களிடம் அல்லது தாங்கள் செல்லும் சபை போதகர்களிடம் இஸ்லாம் பற்றியும், கிறிஸ்தவம் பற்றியும் கேள்விகளை கேட்கிறார்கள் என்பதை அறிந்தேன். 

ஆக, கிறிஸ்தவ பெற்றோர்கள் முக்கியமாக கிறிஸ்தவப் போதகர்கள் இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்ளவேண்டிய கால கட்டத்தில் இருக்கிறார்கள்.

2) கிறிஸ்தவ போதகர்களும் ஞானமும்: 

ஒரு கால கட்டத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளும், சபை போதகர்களும் புது மொழிகளை கற்று, பைபிளை அந்த மொழிகளில் மொழிப்பெயர்க்கும் பொறுப்பை ஏற்று அயராது உழைத்தார்கள். இரவு பகல் என்று பாராமல் பல ஆண்டுகள் உழைத்து புதிய மொழிகளில் பைபிளை மொழியாக்கம் செய்து மக்கள் தங்கள் சொந்த மொழியில் தேவனுடைய வார்த்தையை படிக்க உதவினார்கள். அவர்களின் உழைப்பினாலே, நூற்றுக்கணக்கான மொழிகளில் பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்டது. 

ஆனால், இன்றுள்ள ஊழியர்களுக்கு உள்ள ஒரு பொறுப்பு என்னவென்றால், பைபிளை மட்டும் கற்று தங்கள் சபை அங்கத்தினர்களுக்கு பரலோக மன்னாவை கொடுப்பதோடு மட்டும் நின்று விடாமல், இஸ்லாம் போன்ற மதங்கள் பற்றி அறிந்துக்கொண்டு தங்களிடம் சபை விசுவாசிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்களை தரவேண்டும் என்பது தான். 

ஒவ்வொரு கிறிஸ்தவ போதகரும் உலகத்தில் இரண்டாவது மிகப்பெரிய மதமாக உள்ள இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும். இஸ்லாமியர்கள் தீர்க்கதரிசி என்று நம்பும் முஹம்மது பற்றி அறிந்துக்கொள்ளவேண்டும். இஸ்லாமியர்களின் வேதமாகிய "குர்‍ஆனை"ப் பற்றியும் அறிந்துக்கொள்ளவேண்டும். 

ஒரு போதகர் இஸ்லாம் பற்றி அறிந்துக்கொண்டால், அந்த சபையே இஸ்லாம் பற்றி அறிந்துக்கொண்டதற்கு சமமாகும். தற்காலத்தில் சபை போதர்களிடம் விசுவாசிகள் ஞானத்தை தேடுகிறார்கள். வேதமும் இதனை நமக்குச் சொல்லவில்லையா?

மல்கியா 2: 7 ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன். 

நீதிமொழிகள் 24:14 அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண்போகாது. 

ஓசியா 4:6 என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; …..

தங்கள் சபை போதகருக்கு எல்லாமே தெரிந்து இருக்கவேண்டும் என்று விசுவாசிகள் எண்ணுகின்றார்கள். தங்கள் சபை போதகர் ஒரு நடமாடும் நூல்நிலையம் என்றும், ஒரு கலைக் களஞ்சியம் என்றும் எண்ணுகிறார்கள். (அனேக கிறிஸ்தவ போதகர்கள் நடமாடும் நூல் நிலையங்களாக திகழ்வதையும் நாம் காணமுடிகிறது.) இதனால் அனேக கேள்விகளைக் கொண்டு சபைப் போதகரை துளைத்துவிடுகிறார்கள். 

இதர உலக விவரங்கள் பற்றி தெரியாமல் இருந்தாலும் பரவாயில்லை, ஆனால், இஸ்லாம் பற்றி ஒவ்வொரு கிறிஸ்தவ போதகருக்கு ஓரளவாவது தெரிந்து இருக்கவேண்டும் என்பது என் கருத்து. 

இந்த "கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின்" என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள், கிறிஸ்தவ போதகர்களுக்கு இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவை தரும் என்ற நோக்கில், கேள்வி பதில் கோணத்தில் எழுதப்படுகிறது. 

தொடர்ச்சியாக நிறுத்தாமல் நூற்றுக்கணக்கான பத்திகள் மூலம் விவரங்களைச் சொல்லாமல், ஒரு கிறிஸ்தவ போதகரும், நானும் உரையாடியது போல இந்த கட்டுரைகள் வடிவமைக்கப்படுகிறது. இவைகள் கிறிஸ்தவ உலகிற்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். 


கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் – பாகம் 1

(குர்‍ஆன் ஒரு சிறு குறிப்பு)

[ஒரு கிறிஸ்தவ போதகரின் சபையிலிருந்த ஒரு விசுவாசி சில நாட்களாக சபைக்கு வரவில்லை. என்ன ஆனது என்று தெரிந்துக்கொள்ள அந்த விசுவாசிக்கு போன் செய்து பேசும் போது, அந்த விசுவாசி அனேக இஸ்லாமிய கேள்விகளை கேட்பதாக தெரிந்தது. அந்த விசுவாசிக்கு யாரோ இஸ்லாம் பற்றிய அறிவை புகட்டியுள்ளார்கள் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. அந்த போதகரிடம் இப்போது நாம் உரையாடுவோம்]

கிறிஸ்தவ போதகர்: பிரதர் வணக்கம். 

உமர்: வணக்கம் பாஸ்டர். எப்படி இருக்கீங்க? 

கிறிஸ்தவ போதகர்: கர்த்தரின் கிருபையால் சுகமா இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க? 

உமர்: நானும் கர்த்தரின் கிருபையால் சுகமாக இருக்கிறேன். திடீரென்று வந்திருக்கீங்க? என்ன விஷயம் சொல்லுங்க? 

கிறிஸ்தவ போதகர்: "இஸ்லாம் பற்றிய ஒரு நாள் செமினார்" நடக்குது, வந்து பாருங்க என்று நீங்க ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கீங்க. நான் தான் ஏதோ ஒரு காரணம் சொல்லி வராமல் இருந்தேன். ஆனால், இப்போ அதுக்கு நேரம் வந்திருக்கு. ஆதனால் தான் உங்ககிட்டே வந்து பேசிட்டு போகலாம் என்று வந்தேன். 

உமர்: அப்படியா! ரொம்ப சந்தோஷமான விஷயம் தான். ஆனால், இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்ள இந்த‌ ஆர்வ‌ம் எப்ப‌டி திடீரென்று வ‌ந்துச்சு? 

கிறிஸ்தவ போதகர்: எங்க சபை விசுவாசி ஒருத்தர், அனேக இஸ்லாம் பற்றிய கேள்வியை கேட்கிறார், முஹம்மது கடைசி தீர்க்கதரிசியா என்று கேட்கிறார்? இயேசு இறைவனா அல்லது ஒரு தீர்க்கதரிசியா? என்று கேட்கிறார். நமக்கு பைபிள் பற்றி மட்டுமே தெரியும், இஸ்லாம் பற்றி ஒன்றுமே தெரியாது மட்டுமல்ல, கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாமுக்கும் இடையே இருக்கும் அடிப்படை ஒற்றுமைகள்/வித்தியாசங்கள் கூட தெரியாது. இப்படி இருக்கும் போது எப்படி நான் பதில் சொல்றது? அதனால் தான் உங்ககிட்டே வந்தேன். 

உமர்: இப்போ எனக்கு புரியுது. உங்க‌ கேள்விக‌ள் என்ன‌ கேளுங்க‌? 

கிறிஸ்தவ போதகர்: என்னுடைய முதல் கேள்வி, இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்ள நான் எந்த புத்தகத்தை படிக்கவேண்டும்? முஸ்லிம்கள் தங்கள் வேதம் என்றுச் சொல்லும் "குர்‍ஆனை" படித்தால் போதுமா? 

உமர்: நீங்க இஸ்லாமை அறிந்துக்கொள்ள உங்களுக்கு "குர்‍ஆன்" மட்டும் உதவாது. குர்‍ஆனை மட்டும் நீங்க படித்தால் குழப்பத்தைத் தவிர வேறு ஒன்றும் வராது. இஸ்லாமை பற்றி அறிந்துக்கொள்ள குர்‍ஆனை மட்டும் நாம் படித்தால், நாம் உயிரற்ற ஒரு சடலத்தோடு பேச முயற்சிப்பதற்கு சமமாகும். ஒரு சடலம் பார்ப்பதற்கு எந்த ஒரு குறையும் இல்லாமல், கண் காது மூக்கு என்று எல்லா பாகங்களை கொண்டாதாக‌ இருந்தாலும், உயிர் இல்லையானால் என்ன உபயோகம். அது போலத் தான் வெறும் குர்‍ஆனை படித்தால் நீங்கள் இஸ்லாமை முழுவதுமாக அறிந்துக்கொள்ள முடியாது. 

கிறிஸ்தவ போதகர்: ஏன் அப்படி? கிறிஸ்தவம் பற்றி ஒருவர் அறிய, புதிய ஏற்பாட்டை தொடர்ச்சியாக படித்தால் போதுமே, பெரும்பான்மையான‌ எல்லா விவ‌ர‌ங்களையும் அறிந்துக்கொள்ளலாம். அது போல‌, குர்‍ஆனை ப‌டித்தால் இஸ்லாம் ப‌ற்றி அறிந்துக்கொள்ள‌முடியாதா? 

உமர்: முடியாது. நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை தொழுதுக்கொள்கிறீங்கள் என்று ஒரு முஸ்லிமிடம் கேட்டுப்பாருங்க. அவர் ஐந்து முறை என்று பதில் சொல்லுவார். ஆனால், குர்‍ஆனில் இந்த ஐந்துமுறை தொழவேண்டும் என்று எங்கு சொல்லப்பட்டுள்ளது என்று கேளுங்க. அவரால் குர்‍ஆனைக் கொண்டு மட்டும் பதில் சொல்லமுடியாது. இப்படி அடிப்படை இஸ்லாமிய கோட்பாடுகள், இஸ்லாமிய சட்டங்கள், தொழுகை நடத்தவேண்டிய முறைகள் போன்ற விவரங்களை நாம் குர்‍ஆனில் காணமுடியாது. 

கிறிஸ்தவ போதகர்: அப்படியானால், குர்‍ஆனை மட்டும் படித்தால் நாம் இஸ்லாம் பற்றி முழுவதுமாக அறிந்துக்கொள்ள முடியாது என்கிறீர்கள். ஏன் இந்த நிலை? 

உமர்: நாம் பைபிளில் படிப்பது போல, நிகழ்ச்சிகள் கோர்வையாக குர்‍ஆனில் சொல்லப்படவில்லை. 

குர்‍ஆனில்:

1) ஆங்காங்கே விவரங்கள் சொல்லப்பட்டுள்ளது.

2) ஒரு கோர்வையாக விவரங்கள் வரிசையாக சொல்லப்படவில்லை.

3) குர்‍ஆனில் பைபிளிலிருந்து சில நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது, அப்படி சொல்லப்பட்ட நிகழ்ச்சிகள் கூட முழுவதுமாக சொல்லப்படாமல் பாதி விவரங்கள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.

4) இந்த நிகழ்ச்சிகளை முழுவதுமாக அறிந்துக்கொள்ள பைபிளை படித்தால் மட்டுமே புரிந்துக்கொள்ளமுடியும்.

5) "குர்‍ஆன் வசனங்கள்" சொல்லப்பட்ட பின்னணி குர்‍ஆனில் சொல்லப்படவில்லை.

6) இஸ்லாமிய தீர்க்கதரிசியாகிய முஹம்மது பற்றிய‌ பற்றிய விவரங்களை கூட நாம் முழுவதுமாக குர்‍ஆனில் காணமுடியாது.

இப்ப‌டி சொல்லிகொண்டே போக‌லாம். ஆகையால், இஸ்லாம் பற்றிய 50 சதவிகித அறிவு கூட நமக்கு குர்‍ஆனை மட்டும் படித்தால் கிடைக்காது. 

கிறிஸ்தவ போதகர்: அப்படியானால், இஸ்லாமை அறிந்துக்கொள்ள என்ன தான் வழி? வேறு ஏதாவது புத்தகம் உண்டா? 

உமர்: உண்டு. குர்‍ஆனுக்கு உயிர் ஊட்டும் புத்தகங்கள் இஸ்லாமில் உண்டு. அவைகளை கீழ்கண்டவாறு பிரிக்கலாம்:

1) ஹதீஸ்கள் (முஹம்மது பேசியவைகளும், செய்தவைகளும்)

2) முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்

3) இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய "குர்‍ஆன் விரிவுரைகள் (தப்ஸீர்கள்)".

இவைகள் அனைத்தையும் படித்தால் தான், நாம் ஓரளவிற்கு இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்ள முடியும். 

கிறிஸ்தவ போதகர்: என்னது ஓரளவிற்கு தான் அறிந்துக்கொள்ள முடியுமா? முழுவதுமாக அறிந்துக்கொள்ள முடியாதா? 

உமர்: இஸ்லாம் வந்து 1400 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது, இன்னும் இஸ்லாமியர்களே இஸ்லாமை முழுவதுமாக அறிந்துக்கொள்ளவில்லை, நீங்க அவ்வளவு சீக்கிரமாக அறிந்துக்கொள்ள முடியுமா என்ன? 

தமிழ் நாட்டிலே பாருங்க. நாங்க தான் உண்மையான முஸ்லீம்கள் என்று ஒரு குழு சொல்லும், இன்னொரு குழு நாங்க தான் உண்மையான முஸ்லீம்கள் என்றுச் சொல்லும். இந்த ஹதீஸ் தவறு என்று ஒரு குழு சொல்லும், இல்லை இல்லை அது சரியான ஹதீஸ் என்று இன்னொரு குழு சொல்லும். 

ஆகவே, இஸ்லாம் பற்றி 100% அறிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை மட்டும் விட்டுடுங்க. ஆனால், கிறிஸ்தவர்களாகிய நாம் இஸ்லாம் பற்றி தேவையான அளவிற்கு மட்டும் அறிந்துக்கொண்டால் போதும். 

கிறிஸ்தவ போதகர்: குர்‍ஆன், ஹதீஸ்கள், சரித்திர நூல்கள், குர்‍ஆன் விரிவுரைகள் என்று அனேக புத்தகங்களை படிப்பதைக் காட்டிலும், தற்காலத்தில் ஒரு சில இஸ்லாமியர்கள் எழுதிய புத்தகங்களை நாம் படித்தால் இஸ்லாம் பற்றி முழுவதுமாக அறிந்துக்கொள்ள முடியாதா? 

உமர்: உங்களிடம் ஒரு நூறு ரூபாய் நோட்டு உள்ளதா? அந்த நோட்டில் ஒரு பக்கம் பிரிண்ட் உள்ளதா அல்லது இரண்டு பக்கமும் பிரிண்ட் உள்ளதா? இரண்டு பக்கமும் பிரிண்ட் இருந்தால் தான் அது செல்லுபடியாகும். ஒரு பக்கம் மட்டும் பிரிண்ட்டான ரூபாய் நோட்டுக்களை அரசாங்கம் "கள்ள நோட்டுக்கள்" என்றுச் சொல்லும், அது செல்லுபடியாகாது. 

அதுபோல, இஸ்லாமியர்கள் எழுதும் புத்தகங்களை மட்டும் நீங்கள் படித்தால், நீங்கள் இஸ்லாமின் ஒரு பக்கத்தை மட்டுமே அறிய முடியும். இஸ்லாமின் இன்னொரு பக்கத்தை அறிய முடியாது. இஸ்லாமின் இரண்டு பக்கத்தையும் அறியவேண்டுமென்றால் குர்‍ஆன், ஹதீஸ்கள் இஸ்லாமிய சரித்திர நூல்கள் போன்ற மூல நூல்களை படிக்கவேண்டும். இஸ்லாமியர்கள் எழுதிய நூல்களையும், இஸ்லாமியரல்லாதவர்கள் எழுதிய இஸ்லாம் பற்றிய நூல்களையும் படிக்கவேண்டும். அப்போது தான் முழு இஸ்லாம் பற்றி அறிய முடியும். 

கிறிஸ்தவ போதகர்: ஓ.. அப்படியா. இன்றே நான் ஒரு குர்‍ஆனையும், ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறையும் வாங்கி படிக்க ஆரம்பிக்கிறேன். ஆனால், முதலில் நான் எதனை படிப்பது? குர்‍ஆனை முதலாவது படிக்கவேண்டாம் என்றுச் சொல்கிறீர்கள். அப்படியானால், நான் ஹதீஸ்களை முதலாவது படிக்கட்டுமா? 

உமர்: நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். புதிய ஏற்பாட்டிலிருக்கும் "அப்போஸ்தலர் நடபடிகள்" புத்தகத்தையோ, அல்லது நம்முடைய நான்கு சுவிசேஷங்கள் அல்லாத இதர புத்தகங்களையோ முதன் முதலாக ஒரு நபர் படித்தால், கிறிஸ்தவம் பற்றி, இயேசுக் கிறிஸ்து பற்றி எவ்வளவு விவரங்களை அறிந்துக் கொள்வார்? 

கிறிஸ்தவ போதகர்: புதிய ஏற்பாட்டிலிலுள்ள சுவிசேஷங்களை முதலாவது படிக்காமல், இயேசுப் பற்றியும், அவரது செய்திகளைப் பற்றியும் படிக்காமல் ஒரு புதிய நபர், இதர புத்தகங்களை படிப்பாரானால், அவரால் கிறிஸ்தவத்தை முழுவதுமாக அறிந்துக்கொள்ளமாட்டார், அதற்கு பதிலாக அதிகமாக குழம்பிப் போவார். ஏனென்றால், சுவிசேஷங்கள் இதர புத்தகங்களை படிப்பதற்கு, புரிந்துக்கொள்வதற்கு அஸ்திபாரங்களாக இருக்கின்றன. இதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆகையால், என்னை கேட்டால், முதலாவது ஒரு சுவிசேஷத்தையாவது படிக்கணும் பிறகு அப்போஸ்தலர் நடபடிகளை படிக்கணும், பிறகு தான் இதர கடிதங்களை/புத்தகங்களை படிக்கணும், அப்போது தான் கோர்வையாக எல்லாம் புரியும். 

உமர்: ரொம்ப சரியாகச் சொன்னீங்க. இயேசுவை முதலாவது அறிந்துக் கொள்ளாமல், இயேசுவின் வாழ்க்கை, அவரது வார்த்தைகளை அறிந்துக்கொள்ளாமல் கிறிஸ்தவத்தை அறிந்துக்கொள்ள முயற்சி எடுப்பது, சரியானது அல்ல. 

கிறிஸ்தவ போதகர்: அதனால் தான் நாம் மற்றவர்களுக்கு நற்செய்தியை கூறும் போது சுவிசேஷ நூல்களை முதலாவது படிக்கக் கொடுக்கிறோம். 

உமர்: இதே போலத் தான், இஸ்லாம் பற்றி அறிய நாம் முதலாவது "முஹம்மதுவை" அறிய வேண்டும். முஹம்மது தான் இஸ்லாம், முஹம்மதுவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் தான் இஸ்லாமுக்கு அஸ்திபாரம். முஹம்மதுவின் வாழ்க்கை குர்‍ஆனின் விரிவுரையாக உள்ளது. (Muhammad's life is the commentary of the Quran). 

  • முஹம்மது எங்கே பிறந்தார்?
  • எப்படி வளர்ந்தார்?
  • அவர் தன்னை இஸ்லாமிய தீர்க்கதரிசி என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட காலத்திற்கு முன்பு எப்படி வாழ்ந்தார்?
  • தான் ஒர் நபி (தீர்க்கதரிசி) என்று சொல்லிக்கொண்ட பிறகு அவரது வாழ்க்கை எப்படி இருந்தது?
  • அவரது இஸ்லாமிய பிரச்சாரம் எப்படி இருந்தது?
  • அவருடைய அன்றைய இஸ்லாமிய பிரச்சாரத்திற்கு எதிரிகளாக இருந்தவர்கள் என்ன செய்தார்கள்?
  • அவர்கள் மூலமாக முஹம்மது சந்தித்த சவால்கள், பிரச்சனைகள் என்னென்ன?
  • முஹம்மது ஏன் மக்காவை விட்டு மதினாவிற்கு இடம் பெயர்ந்தார்?
  • நான் தான் இஸ்லாமிய நபி என்று அவர் சொல்லிக்கொண்ட பிறகு கூட, ஏன் அனேக ஆண்டுகள் இஸ்லாமியர்கள் எருசலேமை நோக்கி நமாஜ் செய்தார்கள்?
  • பின்பு எந்த கால கட்டத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் திசை (கிப்லா) , எருசலேமிலிருந்து மக்காவிற்கு மாறியது?
  • மதினாவில் அவரது ஆரம்பகால வாழ்க்கை எப்படி இருந்தது?
  • முஹம்மது எப்படி யுத்தங்கள் செய்தார்?
  • அவர் யுத்தங்கள் செய்வதற்கான காரணங்கள் என்னென்ன?
  • அவருக்கும் யூதர்களுக்கும்/கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட உரையாடல்கள் என்னென்ன?
  • ஆரம்ப காலத்தில் யூதர்கள்/கிறிஸ்தவர்கள் பற்றி அவர் கூறியவைகள் யாவை?
  • கடைசி காலத்தில் இவர்களைப் பற்றிய அவரது நோக்கம் எப்படி மாறியது?
  • அவரது கடைசி காலம் எப்படி இருந்தது?
  • அவர் எப்போது மரித்தார் - எப்படி மரித்தார்?

போன்ற இந்த கேள்விகளுக்கான விடைகளை நாம் தெரிந்துக்கொண்டு அதன் பிறகு குர்‍ஆனையும், ஹதீஸ்களையும் படிக்கும் போது, நமக்கு இஸ்லாம் பற்றிய அறிவு சரியான முறையில் கிடைக்கும், மற்றும் குழப்பம் நீங்கும். முஹம்மதுவின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளுக்கும், குர்‍ஆனின் வசனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே, குர்‍ஆனை அறிவதற்கு முன்பு, நாம் முஹம்மதுவை அறிய வேண்டும். 

ஆகையால், முதலாவது முஹம்மதுவை அறிந்துக்கொள்ளுங்கள், இரண்டாவதாக, குர்‍ஆனையும் ஹதீஸ்களையும், இதர இஸ்லாமிய விரிவுரைகளையும், மற்றும் இஸ்லாமியர்கள் எழுதும் புத்தகங்களையும் படியுங்கள். அப்போது தான் சரியான முறைப்படி நாம் இஸ்லாமை அறிய முடியும். ஹதீஸ்களிலும் விவரங்கள் ஒரு கோர்வையாக சொல்லப்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது. எனவே, முதலாவது முஹம்மதுவின் வாழ்க்கை சரிதையை படிக்கவேண்டும். 

கிறிஸ்தவ போதகர்: கிறிஸ்தவத்தின் மூலைக்கல் இயேசு, அது போல இஸ்லாமின் மூலைக்கல் முஹம்மது. எனவே, இவ்விரு மார்க்கங்களை கற்க முதலாவது அதன் ஸ்தாபகர்களைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். இப்போது எனக்கு புரியுது. 

உமர்: இப்போது சரியாக நீங்க புரிஞ்சுக்கிட்டீங்க. 

கிறிஸ்தவ போதகர்: நான் இப்போது ஒரு தனிப்பட்ட கேள்வியை கேட்பேன், கோபித்துக் கொள்ளமாட்டீங்களே! 

உமர்: கேளுங்க, இதுல கோபித்துக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லை. 

கிறிஸ்தவ போதகர்: நீங்க கடந்த சில ஆண்டுகளாக, இஸ்லாம் பற்றிய கட்டுரைகளை தமிழில் எழுதுவதாகவும், இதர கிறிஸ்தவர்களின் உதவியோடு ஆங்கில கட்டுரைகளை மொழிப்பெயர்த்து தமிழில் பதிப்பதாகவும் கேள்விப்பட்டேன். மட்டுமல்ல, ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழில் ஒரு பிரிவு இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். இப்போது என் கேள்வி என்னவென்றால், இஸ்லாம் பற்றி அறிய முதலாவது முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு, பிறகு குர்‍ஆன், ஹதீஸ்கள், குர்‍ஆன் விரிவுரைகள், மற்ற இஸ்லாமியர்களின் புத்தகங்களை படித்தால் போதும் என்றுச் சொன்னீங்க. அப்படியானால், நீங்கள் எழுதும் கட்டுரைகளை படிப்பதினால், இஸ்லாமைப் பற்றி வேறு எவைகளை நாம் அறிந்துக்கொள்ள முடியும். இஸ்லாமிய மூல நூல்களே நமக்கு இஸ்லாம் பற்றிச் சொல்லித் தரும் போது, நாங்கள் ஏன் உங்கள் கட்டுரைகளை படிக்கவேண்டும்? 

உமர்: சரியான கேள்வியைத் தான் கேட்டு இருக்கீங்க. நான் ஏற்கனவே சொன்னது போல, இஸ்லாம் என்னும் ரூபாய் நோட்டுக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒரு பக்கத்தை அறிய இஸ்லாமியர்கள் எழுதும் நூல்கள் நமக்கு உதவும். இஸ்லாமில் உள்ள நல்ல விஷயங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் இஸ்லாமியர்கள் எழுதுவார்கள். எங்க மார்க்கம் இப்படி, எங்க மார்க்கம் அப்படி, எங்க நபி இப்படிப்பட்டவர், அப்படிப்பட்டவர் என்று சொல்லுவாங்க, மற்றும் எழுதுவாங்க. ஆனால், இஸ்லாமின் கொடூர முகத்தை அவர்கள் மறைத்துவிடுவார்கள். முஹம்மதுவின் வாழ்க்கையில் நடந்த சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் சில கீழ்தரமான நிகழ்ச்சிகள் பற்றி நம்மிடம் சொல்லவே மாட்டார்கள். அப்படி யாராவது கேட்டுவிட்டாலும், அதற்கு சப்பை கட்டு கட்டி, நம்மை குழப்பி அவைகளை மறுத்துவிடுவார்கள். 

எனவே, முதலாவதாக, எங்களுடைய அல்லது இஸ்லாமியரல்லாதவர்களுடைய கட்டுரைகள், "இஸ்லாமில் இருக்கும் கேள்விகள் கேட்கப்படவேண்டிய விவரங்கள்" பற்றிய அறிவைத் தருகின்றன. எனவே, இஸ்லாமிய நாணயத்தின் மறுபக்கத்தை அறிய நம்முடைய கட்டுரைகள் உதவும். 

உதாரணத்திற்கு: 

முஹம்மதுவின் இராணுவ பலம் அதிகரித்த போது, மற்ற நாட்டு மன்னர்களுக்கு "இஸ்லாமை தழுவும் படி முஹம்மது கடிதங்கள்" எழுதினார். அதாவது, "இஸ்லாமை ஏற்கிறாயா அல்லது என் இராணுவத்தால் மடிந்து சாகிறாயா" என்று கேட்டு, பயப்படவைத்து இஸ்லாமுக்கு அழைத்தார். 

இந்த விவரங்களை நம்முடைய இஸ்லாமிய நண்பர்கள் அறிஞர்கள் நம்மிடம் கூற மாட்டார்கள், அப்படி கூறினாலும், உண்மையை மறைத்து பொய்யைச் சொல்வார்கள். இவைகளை மக்கள் அறியும்படி வெளியே கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம். 

இன்னொரு உதாரணத்தைச் சொல்லட்டும்: பீஜே போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் இயேசு இறைமகனா என்ற ஒரு புத்தகத்தை எழுதினார். அதில் தனக்கு வந்த பாணியில் பைபிள் மீதும், இயேசு கிறிஸ்து மீதும் பொய்களை அள்ளி வீசினார். இவைகளை படிக்கும் கிறிஸ்தவர்கள் குழம்பிவிடுகின்றனர். எனவே, நாங்கள் அவருக்கு பைபிளின் துணைக்கொண்டு பதில்கள் மறுப்புக்கள் எழுதுகிறோம். அவர் மட்டும் எங்கள் கட்டுரைக்கு பதில் சொல்லாமல் இருக்கிறார். 

இப்படி இஸ்லாமியர்கள் இஸ்லாம் பற்றி, முஹம்மது பற்றி வெளியே சொல்ல வெட்கப்படும் விவரங்களை நாம் மக்களின் முன் வைக்கிறோம். கிறிஸ்தவம் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புக்களை கொடுக்கிறோம். சராசரி கிறிஸ்தவர்களிடம், அதிகம் அறியாதவர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்களை குழப்பும் இஸ்லாமியர்களுக்கு பதில்கள் மறுப்புக்கள் எழுதுகிறோம். இதனால் கிறிஸ்தவர்கள் இஸ்லாம் பற்றியும் அறிந்துக்கொள்வார்கள், அதே நேரத்தில் கிறிஸ்தவம் பற்றியும் அதிகமாக அறிந்துக்கொள்வார்கள். 

ஆக, எங்கள் கட்டுரைகள் இஸ்லாமின் இன்னொரு முகத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும். அப்போது தான் உண்மை இஸ்லாமை உங்களைப் போன்ற கிறிஸ்தவ போதகர்கள், விசுவாசிகள் அறிந்துக்கொள்ள முடியும். எவனை விழுங்கலாம் என்று பிசாசானவன் வகை தேடி சுற்றித் திரிகிறான். அவனுடைய வலையில் கிறிஸ்தவர்கள் விழக்கூடாது என்ற எண்ணத்தில் இதனை செய்கிறோம். 

எங்கள் கட்டுரைகள் மூலமாக உங்கள் நேரம் கூட மிச்சமாகும் . 

கிறிஸ்தவ போதகர்: இப்போது எனக்கு நன்றாக புரிகிறது. ஆனால், எங்கள் நேரம் மிச்சமாகும் என்று சொல்கிறீர்களே, அது எப்படி? 

உமர்: உங்கள் நேரம் எப்படி மிச்சமாகும் என்பதை இப்போது நான் விளக்குகிறேன். உங்க சபையில் இருக்கும் ஒரு விசுவாசிக்கு யாரோ இஸ்லாம் பற்றி கூறியதாகவும், அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள் தேவை என்பதாலும் தான் நீங்கள் இப்போது என்னோடு உரையாடிக்கொண்டு இருக்கீங்க இல்லையா? 

கிறிஸ்தவ போதகர்: ஆமாம். 

உமர்: எங்களைப்போல இஸ்லாம் பற்றி ஏற்கனவே அறிந்தவர்களிடம் வராமல், நீங்களாகவே இஸ்லாம் பற்றி ஆராய ஆரம்பித்தால், நீங்கள் அனேக புத்தகங்களை படிக்கனும், நூற்றுக்கணக்கான மணி நேரங்களை செலவிடனும், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றிய புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று தேடி அலையனும். குர்‍ஆனையும், விரிவுரைகளையும், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறையும் படித்து புரிந்துக்கொள்ளனும், இதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதற்கு இடையில் உங்கள் சொந்த வேலைகளையும் பார்க்கனும், சபையை கவனித்துக் கொள்ளனும். 

இன்னும் சொல்லவேண்டுமென்றால், அனேக இஸ்லாமிய நூல்கள் இன்னும் தமிழில் மொழிப்பெயர்க்கப் படவில்லை. அவைகளில் சில நூல்கள் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன, சில நூல்கள் இன்னும் அரபி மொழியிலேயே உள்ளது. இந்த நூல்கள் எங்கே கிடைக்கும் என்று நீங்கள் தேடனும். அரபி மொழி தெரியாமல் திகைக்கனும். 

இஸ்லாம் ஒரு கடல் போன்றது, அதில் இஸ்லாமிய அறிஞர்கள் மிகப்பெரிய திமிங்கிலங்கள் போல உலா வருகிறார்கள். ஏதாவது ஒரு சின்ன மீன் கிடைத்தால், உடனே அதனை விழுங்கிவிடுவார்கள். 

உங்கள் விசுவாசி கேட்கும் நான்கு கேள்விகளுக்கு பதிலை நீங்கள் தேடி கண்டுபிடித்து அவருக்கு சொல்வதற்கு உங்களுக்கு நான்கு ஆண்டுகளாகும். 

ஆனால், இஸ்லாமிய பின்னணியிலிருந்து வந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட‌ எங்களைப் போன்றவர்கள் பல ஆண்டுகளாக இஸ்லாமை கற்றுக்கொண்டு இருக்கிறோம், இன்றும் கூட ஒவ்வொரு நாளும் இஸ்லாமை தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்கிறோம். பல இஸ்லாமிய நூல்களை படிக்கிறோம், ஆங்கிலத்திலும் படிக்கிறோம். அரபியிலும் படிக்கிறோம் அல்லது அரபி தெரிந்த கிறிஸ்தவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்கிறோம். உலகத்தில் நடக்கின்ற "இஸ்லாம் கிறிஸ்தவ" விவாதங்களை பார்க்கிறோம், படிக்கிறோம். இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளாகிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அனேக ஆண்டுகள் ஊழியம் செய்து அதன் மூலம் பெற்ற அறிவை புத்தகங்களாக நம்முடைய கரங்களில் கொடுத்துச் சென்ற அனேக கிறிஸ்தவ போதகர்கள், மிஷனரிகள் வாழ்க்கையை படிக்கிறோம். அவர்கள் சந்தித்த இஸ்லாமிய சவால்களை அறிந்துக்கொள்கிறோம். 

ஆகவே, ஆயிரக்கணக்கான மணி நேரங்கள் இனி நீங்கள் செலவிடவேண்டாம், அவைகளை நாங்கள் ஏற்கனவே செலவிட்டுவிட்டோம். ஆகையால், நாங்கள் கற்றுகொண்ட விவரங்களை உங்களுக்கு சொல்லிவிட்டால் போதும், உங்களின் பல ஆண்டுகள் மிச்சமாகும். ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் ஒதுக்கி ஒரு மாதம் ஆராய்ச்சி செய்து கற்றுக்கொள்ள வேண்டிய இஸ்லாம் பற்றிய விவரங்களை, எங்கள் ஓரிரு கட்டுரைகளை படித்தால் நீங்கள் அறிந்துக்கொள்ளலாம். ஆகையால், உங்கள் நேரம் அதிகமாக மிச்சமாகும். மற்றும் மூல ஆதாரங்களை நாங்கள் தருவதினால், எங்கள் விவரங்களில் உள்ள நம்பகத்தன்மைய நீங்களே சரி பார்த்துக்கொள்ளலாம். நாங்கள் பதில்கள் எழுதும் போது, குர்‍ஆனில் இந்த அதிகாரம், இந்த வசனம் என்று எண்கள் குறிப்பிட்டு எழுதுகிறோம், ஹதீஸ்களின் எண்களை தருகிறோம், குர்‍ஆன் விரிவுரையாளர்களின் இணைய தள தொடுப்புக்களைத் தருகிறோம். இப்படி ஆதாரங்களை தருவதினால், நீங்கள் அவைகளை சரி பார்த்து தெரிந்துக்கொள்ள வாய்ப்பு உண்டாகும். 

கிறிஸ்தவ போதகர்: நீங்க சொல்வது உண்மை தான். இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்ள மணிக்கணக்கில் என்னால் நூலகத்தில் உட்கார்ந்து படிக்கமுடியாது. என் சபையில் இருக்கிற 500க்கும் அதிகமான விசுவாசிகளின் தேவைகளை சந்திப்பதற்கும், இன்னும் கிளைச் சபைகளை கவனித்துக்கொள்வதற்குமே எனக்கு நேரம் போதவில்லை. இப்படி இருக்கும் போது, எப்படி நான் இஸ்லாமை முழுவதுமாக அறிய முடியும்? 

உமர்: ஆகையால் தான் சொல்கிறேன், ஒரு கோர்வையாக மற்றும் முக்கியமான விவரங்களை மட்டும் நீங்கள் அறிந்துக்கொண்டால் போதும். உங்க சபையில் உள்ள ஆர்வமுள்ள 10 விசுவாசிகளுக்கு மட்டும் இஸ்லாம் பற்றி கற்றுக்கொடுத்தால் போதும், அவர்கள் உங்கள் முழு சபைக்குமே உதவியாக இருப்பார்கள். உங்களுக்கு விருப்பமிருந்தால் சொல்லுங்க, நாங்கள் மாதாமாதம் நடத்தும் "இஸ்லாமை அறிவோம்" வகுப்புகளில் உங்கள் விசிவாசிகளுக்கும் பயிற்சி அளிக்கிறோம், கற்றுக்கொடுக்கிறோம். பிறகு அவர்கள் உங்கள் சபையின் தேவையை பூர்த்தி செய்வார்கள். 

கிறிஸ்தவ போதகர்: ஓஹோ.. இது நல்ல ஆலோசனையாக இருக்கிறதே... நிச்சயமாக நான் எங்கள் சபை விசுவாசிகளுக்கு இதைப் பற்றிச் சொல்லி உங்கள் வகுப்புகளுக்கு அனுப்புகிறேன். இன்னும் முக்கியமாக, நீங்க ஒரு முறை எங்க சபைக்கு வரணும், ஒரு மணி நேரம் உங்களிடம் எங்க விசுவாசிகள் தங்கள் சந்தேகங்களை கேட்பாங்க. அப்போ நீங்க ஒரு முன்னுரையை கொடுத்தால் போதும் மிகவும் உதவியாக இருக்கும். 

உமர்: கண்டிப்பாக நாங்க வருகிறோம். என்னோடு கூட இன்னும் அனேக கிறிஸ்தவ போதகர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள். நாங்க குழுவாக வருவோம். 

கிறிஸ்தவ போதகர்: உங்களிடம் பேசியதிலே ரொம்ப மகிழ்ச்சி. இப்போது தான் இஸ்லாம் பற்றிய ஒரு மிகப்பெரிய பிக்சர் கிடைச்சுது. இனி தான் என் தனிப்பட்ட பயணத்தை நான் தொடரனும். எனக்கும் தனிப்பட்ட விதத்தில் இஸ்லாம் பற்றி அறியணும் என்ற ஆர்வம் வந்திருக்கு. உங்களை நான் அடுத்த வாரம் சந்திக்கிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் விடைபெறுவதற்கு முன்பு ஒரு சின்ன ஜெபத்தை செய்வோமா? 

உமர்: கண்டிப்பாக செய்வோம். 

[இருவரும் சில நிமிடங்கள் ஜெபித்து விட்டு, விடைப்பெற்றுக்கொண்டு சென்றார்கள்.] 

இக்கட்டுரையின் அடுத்த பாகத்தில் ..."அந்த போதகரின் சபையில் ஒரு கூடுகை நடத்தப்படுகிறது.. அதில் விசுவாசிகள் கேட்கும் சில அடைப்படை கேள்விகளுக்கு பதில்கள் கொடுக்கப்படுகிறது".... 

கர்த்தருக்கு சித்தமானால், அந்த கூடுகையில் என் நண்பர்களோடு உங்களை சந்திக்கிறேன்...

குர்‍ஆன் பற்றிய இதர தமிழ் கட்டுரைகள்:

1) வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல் 
2) ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! 
3) குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் 
4) குர்‍ஆன் பாதுகாக்கப்பட்டதா? 
5) பல விதமான அரபி குர்‍ஆன்கள் (THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR'AN) 
6) ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌ 
7) விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்? 
8) இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம் 
9) அரபி குர்‍ஆனின் தாறுமாறான மேற்கோள்கள்? 

சமர்கண்ட் மூல குர்‍ஆன் (MSSவுடன்) இன்றைய குர்‍ஆன் (1924 எகிப்திய வெளியீடு) ஒப்பீடு 
10) பின் இணைப்பு A - பாகம் 1 (Appendix A1) 
11) பின் இணைப்பு A - பாகம் 2 (Appendix A2) 
12) பின் இணைப்பு A - பாகம் 3 (Appendix A3) 
13) பின் இணைப்பு A - பாகம் 4 (Appendix A4)

மூலம்: http://isakoran.blogspot.in/2011/08/1.html

கிறிஸ்தவ சபையே! விழிமின் எழுமின் தொடர் கட்டுரைகள்