2016 பக்ரீத் – 3: கியாமத் நாளின் சுமை பரிமாற்றங்கள் பற்றி பிஜே
முன்னுக்கு பின் முரணாக போதிக்கும் குர்-ஆன் வசனங்களை பக்ரீத் தொடரின் இரண்டாம் பாகத்தில் ஆய்வு செய்தோம்,
தற்போதைய கட்டுரையில், குர்-ஆன் 16:25ம் வசனத்திற்கு பிஜே அவர்கள் கொடுத்த விளக்கத்தை ஆய்வு செய்வோம்.
1) குர்-ஆன் 16:25ம் வசனமும் பிஜேயின் விளக்கமும்.
முஸ்லிம்களை வழிகெடுக்கும் நபர்கள் தங்கள் சுமைகளோடு கூட, அவர்கள் வழிகெடுத்தவர்களின் சுமைகளையும் சுமப்பார்கள் என்று குர்-ஆன் 16:25 & 29:13ல் அல்லாஹ் கூறுகின்றான்.
பிஜே தமிழாக்கம்
குர்-ஆன் 16:25 & 29:12,13
16: 25. கியாமத் நாளில்1 முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக(இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது.254
29:12. "எங்கள் வழியைப் பின்பற்றுங்கள்! உங்கள் தவறுகளை நாங்கள் சுமந்து கொள்கிறோம்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் நம்பிக்கை கொண்டோரிடம் கூறுகின்றனர். அவர்களின் குற்றங்களில் எதையும் இவர்கள் சுமப்போராக இல்லை. அவர்கள் பொய்யர்கள்.
29:13. அவர்கள் தமது சுமைகளையும், தமது சுமைகளுடன் வேறு சில சுமைகளையும் சுமப்பார்கள்.254 அவர்கள் இட்டுக்கட்டியது பற்றி கியாமத் நாளில்1 விசாரிக்கப்படுவார்கள்.
இவ்வசனத்தை (16:25) அப்துல் ஹமீது பாகவி அவர்கள் எப்படி தமிழாக்கம் செய்துள்ளார்கள் என்பதை கவனிக்கவும். இவர் அடைப்பிற்குள் ”(இவ்வாறு இருவரின் பாவச்சுமையை)” என்று எழுதியவைகள் குர்-ஆனில் இல்லையென்றாலும், அர்த்தம் அப்படித் தான் வருகின்றது, அதாவது அவர்கள் “இருவரின் சுமைகளையும் சுமப்பார்கள்”. இஸ்லாமை விட்டு வெளியேறச் செய்கிறவர்களுக்கு இரட்டை தண்டனை கொடுக்கப்படும் என்ற எச்சரிக்கையை அழுத்தம் திருத்தமாக அல்லாஹ் இங்கு கொடுப்பதாக அறிகிறோம்.
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
16:25. மறுமை நாளில் தங்கள் பாவச்சுமையை இவர்கள் சுமப்பதுடன், அறிவின்றி இவர்கள் வழிகெடுத்த மற்றவர்களின் பாவச்சுமையையும் இவர்களே சுமப்பார்கள். (இவ்வாறு இருவரின் பாவச்சுமையை) இவர்களே சுமப்பது மிகக் கெட்டதல்லவா?
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:
16:25. கியாம நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும்; மேலும் அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழி கெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்); இவர்கள் (சுமக்கும்) சுமை மிகவும் கெட்டதல்லவா?.
இப்போது பிஜே அவர்கள் இவ்வசனத்திற்கு கொடுத்த விளக்கம் 254ஐ படிப்போம்.
254. பிறரது சுமையைச் சுமக்க முடியுமா?
கியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) என்று இவ்வசனங்களில் (16:25, 29:13) கூறப்படுகிறது.
ஆனால் ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்று 2:134, 2:141, 2:281, 2:286, 3:25, 3:161, 4:111, 6:31, 6:164, 7:39, 7:96, 9:82, 9:95, 10:8, 10:52, 17:15, 35:18, 39:7, 39:24, 39:48, 39:51, 40:17, 45:22, 52:21, 53:38, 74:38 ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட வசனம் இந்த அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்று கருத முடியாது.
ஏனெனில் ஒருவன் பிறரை வழிகெடுத்தால் வழிகெடுக்கப்பட்டவனின் சுமையைச் சுமந்து தான் ஆக வேண்டும். இது பிறர் பாவத்தைச் சுமப்பதல்ல. வழிகெடுத்த பாவத்தைச் சுமப்பது தான்.
265வது குறிப்பையும் காண்க!
மேற்கண்ட விளக்கத்தின் கடைசி பத்தியிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா?
- வழிகெடுத்தவன் வழிகெடுக்கப்பட்டவனின் சுமையை சுமந்து தான் ஆகவேண்டும்.
- இது பிறர் பாவத்தைச் சுமப்பதல்ல. வழிகெடுத்த பாவத்தைச் சுமப்பது தான்.
இந்த இடத்தில் பிஜே அவர்கள் தம் பாணியில் குழப்புவதை காணலாம். இவர் குர்-ஆனின் முரண்பட்ட விவரங்களிலிருந்து அல்லாஹ்வை காப்பாற்ற முயற்சி எடுத்துள்ளார். இந்த முயற்சி வெற்றிப்பெறுமா?
2) வழிகெடுத்த பாவம் யாருடைய கணக்கில் வருகிறது
பிஜே அவர்கள் தம் குர்-ஆன் விளக்கத்தில் பல விஷயங்களை பக்கம் பக்கமாக விளக்கியுள்ளார். ஆனால், குர்-ஆனின் முரண்பாடு தெளிவாகத் தெரியும் இந்த அடிப்படை வசனத்துக்கு விளக்கம் எழுதும் போது மட்டும், அமைதியாக நான்கு வரிகளை எழுதிவிட்டு, கைகழுவிவிட்டார். குர்-ஆன் 16:25ஐ பற்றியும், 29:12,13 வசனங்கள் பற்றியும் இன்னும் பல விவரங்களை இவர் தெளிவாக விளக்கி இருந்திருக்கலாம். (அடுத்த குர்-ஆன் பதிப்பில் இவ்விளக்க குறிப்பில் இன்னும் பல விவரங்களை பிஜே சேர்ப்பார் அல்லது மொத்தமாக மாற்றி எழுதுவார் என்று எதிர்ப்பார்க்கலாம்).
பிஜேயின் விளக்கம்: ”ஏனெனில் ஒருவன் பிறரை வழிகெடுத்தால் வழிகெடுக்கப்பட்டவனின் சுமையைச் சுமந்து தான் ஆக வேண்டும். இது பிறர் பாவத்தைச் சுமப்பதல்ல. வழிகெடுத்த பாவத்தைச் சுமப்பது தான்.”
முதல் வாக்கியத்தை படிக்கும் போது, ”வழி கெடுத்தவன், யாரை வழி கெடுத்தானோ அவன் சுமைகளையும் சுமந்துத்தான் ஆகவேண்டும்” என்று பிஜே சொல்கிறார் என்று புரிகின்றது. ஆனால், இரண்டாவது வாக்கியத்தை படிக்கும் போது, ”இது பிறர் பாவத்தை சுமப்பது ஆகாது, வழிகெடுத்த பாவத்தை சுமப்பது ஆகும்” என்று முரண்பட்டுச் சொல்கின்றார். இதனை அவர் தெளிவாக மற்றவர்களுக்கு புரியும் படி எழுதியிருக்கலாம்.
பிஜே அவர்களின் இந்த விளக்கத்தை நான் எப்படி புரிந்துக்கொண்டேன் என்பதை இப்போது விளக்குகிறேன். என் புரிதல் தவறாக இருந்தால், அதனை முஸ்லிம்கள் ஆதாரங்களோடு சுட்டிக்காட்டலாம்.
உதாரணம்:
அமர் என்பவன், உஸ்மான் என்பவனை வழி கெடுத்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். அதாவது உஸ்மான் இஸ்லாமை புறக்கணிக்கும் படி செய்துவிட்டான். இதன் படி பார்த்தால், அமர் என்பவன் ’வழிகெடுத்த பாவம்’ செய்தவன் ஆகின்றான்.
கியாமத் நாளில், குர்-ஆனின் படி, அமர் என்பவன் தன் பாவ சுமைகளை சுமக்கவேண்டும், அதோடு கூட, உஸ்மான் என்பவனின் பாவங்களையும் சுமக்கவேண்டும். இதைத் தான் குர்-ஆனும் சொல்கிறது, பிஜே அவர்களும் சொல்கிறார்கள். ஆனால், மக்கள் குர்-ஆனின் முரண்பாட்டை கண்டுக்கொள்ளக்கூடாது என்பதற்காக, தம் விளக்கத்தில் ” இது பிறர் பாவத்தைச் சுமப்பதல்ல. வழிகெடுத்த பாவத்தைச் சுமப்பது தான்.” என்று எழுதுகிறார். இவரது விளக்கத்தில் “பிறர்” என்று இவர் குறிப்பிடம் இடத்தில் “உஸ்மான்” வரமாட்டானா? ஒருவர் இன்னொருவரின் பாவத்தை சுமக்கிறார் என்றுச் சொன்னாலும், அல்லது ஒருவர் ஓராயிரம் பேர்களின் பாவங்களை சுமக்கிறார் என்றுச் சொன்னாலும், அடிப்படையில் ”ஒருவர் இன்னொருவரின் பாவத்தை சுமப்பது” என்ற கோட்பாடு தான்.
ஒருவரின் சுமையை எடுத்து அடுத்தவன் மீது போடும் குர்-ஆனின் வசனத்தையும், மற்றும் பிஜே அவர்களின் விளக்கத்தையும் சரியாக புரிந்துக்கொள்ள கீழ்கண்ட அட்டவணை உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அமர் | உஸ்மான் |
---|---|
1. இஸ்லாமை புறக்கணித்த பாவம் (காஃபிர்) | 1. இஸ்லாமை புறக்கணித்த பாவம் (அமரின் தாவாவினால், இஸ்லாமை புறக்கணித்தான்) |
2. இதர பாவங்கள் | 2. இதர பாவங்கள் |
3. உஸ்மானை வழிகெடுத்த பாவம் |
அமரின் 100% சதவிகித சுமையை மூன்று வகையாக பிரிக்கலாம்.
- முதலாவது சுமை - இஸ்லாமை புறக்கணித்த பாவம் (காஃபிர்)
- இரண்டாவது சுமை - ’இதர பொதுவான பாவங்கள்’
- மூன்றாவது சுமை - ‘உஸ்மானை வழிகெடுத்த பாவம்’ ஆகும். பொதுவாக நாம் கவனித்தால், இந்த பாவமும் ‘அமரின் பட்டியலிலேயே’ சேர்க்கப்படும். இதை அவன் சுமந்தே ஆக வேண்டும்.
குர்-ஆன் 16:25 & 29:13ன் படி, அமர் தன் 100% சுமையை (3 வகையான சுமையை) சுமக்கவேண்டும். அதோடு கூட, உஸ்மான் இஸ்லாமை விட்டு வெளியேறும் படி அமர் செய்தபடியினால், உஸ்மானின் பாவங்களையும் சுமக்கவேண்டும் (மேற்கண்ட அட்டவணையை பார்க்கவும்).
குர்-ஆனின் படி, கியாமத் நாளில் மேற்கண்ட அட்டவணை இப்படியாக மாறிவிடும். உஸ்மானின் சுமைகள் அமரின் பட்டியலோடு சேர்ந்துவிடும். இதைத் தான் குர்-ஆன் தெளிவாகச் சொல்கிறது, மற்றும் பிஜே அவர்களின் விளக்கமும் மழுப்பி சொல்கிறது.
அமர் | உஸ்மான் |
---|---|
1. இஸ்லாமை புறக்கணித்த பாவம் (காஃபிர்) | இவரது 2 சுமைகள் அமரின் பட்டியலில் சேர்ந்துவிட்டது) |
2. இதர பாவங்கள் | |
3. உஸ்மானை வழிகெடுத்த பாவம் | |
4. உஸ்மான் - இஸ்லாமை புறக்கணித்த பாவம் (அமரின் தாவாவினால், இஸ்லாமை புறக்கணித்தான்) | |
5. உஸ்மானின் இதர பாவங்கள் |
பல கோடி மதிப்பு பெரும் கேள்வி: மேற்கண்ட பட்டியலை கவனிக்கும் போது, உஸ்மானின் சுமைகள் அனைத்தும் அமரின் பட்டியலில் (முதுகில்) சுமத்தப்படுவதினால், உஸ்மானின் பட்டியல் சுமைகளில்லாத சுத்தப்பட்டியலாக மாறிவிடுகின்றது. ஆக, குர்-ஆனின் படி பார்த்தால், கியாமத் நாளில், உஸ்மானிடம் ஒரு பாவமும் இல்லாதபடியினால், அவனை அல்லாஹ் சொர்க்கத்திற்கு அனுப்பவேண்டும்? இது உண்மையா? இதற்கு முஸ்லிம்கள் தான் பதில் சொல்லவேண்டும்.
”இல்லை இல்லை, உஸ்மானின் பாவங்கள் அவனோடு கூட இருக்கும், அவன் இஸ்லாமை புறக்கணித்தபடியால், அவன் நரகத்திற்குச் செல்வான்” என்று முஸ்லிம்கள் சொன்னால், குர்-ஆனின் வசனங்கள் சொல்லும் விவரங்கள் அனைத்தும் பொய் என்று நீங்கள் சொல்வதாக அமையும்.
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
16:25. மறுமை நாளில் தங்கள் பாவச்சுமையை இவர்கள் சுமப்பதுடன், அறிவின்றி இவர்கள் வழிகெடுத்த மற்றவர்களின் பாவச்சுமையையும் இவர்களே சுமப்பார்கள். (இவ்வாறு இருவரின் பாவச்சுமையை) இவர்களே சுமப்பது மிகக் கெட்டதல்லவா?
இருவரின் பாவங்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்று குர்-ஆன் சொல்கிறது. உஸ்மானை வழிகெடுத்த பாவத்தை அமர் சுமப்பது உண்மையானால், உஸ்மானை விடுதலை செய்வது தானே சரியானதாக இருக்கும்! முஸ்லிம்களே! மேற்கொண்டு ஆய்வு செய்து உங்கள் முடிவைச் சொல்லுங்கள்.
முடிவுரை:
இந்த தொடரில், பிஜே அவர்களின் விளக்கத்தை ஆய்வு செய்தோம், ஆனால், அவரது விளக்கத்தில் சரியான தெளிவு இல்லை. குர்-ஆன் தெளிவாக சொல்லும் ஒரு வசனத்துக்கு குழப்பம் வரும்படி பிஜே அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள். எனினும், குர்-ஆனின் முரண்பாட்டை மறைப்பதற்காக, பிஜே எடுத்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. பிஜே அவர்கள் என்ன தான் முயற்சி எடுத்தாலும், ”ஒருவரின் பாவத்தை இன்னொருவர்” சுமக்கமுடியும், கியாமத் நாளில் அதனை நானே செய்வேன் என்று அல்லாஹ் அழுத்தமாகச் சொல்லுவது இவரால் மறைக்கமுடியவில்லை.
குர்-ஆன் சொல்வது உண்மையென்று நாம் நம்பினால், வழிகெடுக்கப்பட்டவனின் சுமைகள் இடமாற்றம் செய்யப்படுவதால், அவன் சொர்க்கத்திற்கு தகுதியானவனாக மாறுகின்றான். கியாமத் நாளின் சுமை இடமாற்றத்தில் இப்படிப்பட்ட அனேக சிக்கல்கள் உள்ளன. அவைகளை முஸ்லிம்கள் தீர்த்துவைப்பார்கள் என்று நாம் எதிர்ப்பார்க்கலாம்.
அடுத்த தொடரில், அல்லாஹ் எப்படி ஒருவரின் சுமையை எடுத்து இன்னொருவரின் முதுகின் மீது சுமத்திவிடுகின்றார் என்பதை ஹதீஸ்களின் உதவி கொண்டு பார்ப்போம். மேலும், யாருடைய சுமையை அவன் இடமாற்றம் செய்கின்றானோ, அந்த மனிதன் சொர்க்கத்திற்கு தகுதியானவனாக மாறிவிடுகின்றான். இரட்டை சுமைகள் சுமக்கப்பட்டவன் நரகம் செல்கின்றான். இதன் படி பார்த்தால், மேற்கண்ட உதாரணத்தில் கண்ட உஸ்மான், அல்லாஹ்வினால் சொர்க்கத்திற்கு அனுமதிக்கப்படவேண்டும்.