2019 கிறிஸ்துமஸ் தொடர் கட்டுரைகள்: ஜிஹாதின் அடிச்சுவடுகளில் சிலுவைப்போர் – ஓர் ஆய்வு

(சரியாக படிக்கப்பட வேண்டிய சரித்திரம்)

கிறிஸ்தவ சபை சரித்திரத்தின் இருண்ட காலம் என்று ஒன்று உண்டென்றால் அது சிலுவைப் போர்களின் காலம் என்று கூறுவார்கள்.  முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் தாங்கமுடியாத துன்பங்களை அனுபவித்த காலம் கிறிஸ்தவ சபையின் இருண்ட காலமல்ல. கிறிஸ்தவர்கள்  தாங்கள் கொண்டிருந்த விசுவாசத்திற்காக தங்கள் தலைகளை வாள்கள் வெட்ட விட்டுக்கொடுத்த போது, அது கிறிஸ்தவ சபையின் இருண்ட காலமல்ல. இயேசு மீது கொண்டிருந்த இறைநம்பிக்கைக்காக மிருகங்களுக்கு இறையாக கிறிஸ்தவர்கள் மாறிய போது, அது கிறிஸ்தவ சபையின் இருண்ட காலமல்ல. 

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், தங்கள் உயிர் எந்நேரமும் எடுக்கப்படும் அபாயம் உண்டு என்ற உணர்வோடு ஆதி கிறிஸ்தவர்கள் வாழ்ந்த காலம் கிறிஸ்தவ சபையின் இருண்ட காலமல்ல. ஆனால், கிறிஸ்தவ சபை போர் புரிந்து மற்றவர்களை கொன்ற போது அது, கிறிஸ்தவ சபையின் இருண்ட காலமாக கருதப்படுகின்றது. எப்படிப்பட்ட சிறப்பு கிறிஸ்தவத்திற்கு கிடைத்தது கவனித்தீர்களா?!?

கிறிஸ்தவர்க‌ள் வலிமையில்லாமல் துன்பப்பட்டபோது அது அவர்களுக்கு பொற்காலம், ஆனால், கிறிஸ்தவர்களின் கை ஓங்கி, அவர்கள் போர் புரிந்த போது, அது இருண்ட காலம். என்னே! ஒரு அழகான முரண்பாடு பாருங்கள்.

2007ம் ஆண்டிலிருந்து நான் கிறிஸ்தவ விசுவாச தற்காப்பு (அபாலஜிடிக்ஸ்) ஊழியத்தை செய்துக்கொண்டு இருக்கிறேன்.  இதுவரையில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றிய அனேக தலைப்புக்களில் ஆய்வு கட்டுரைகளை எழுதியும், மொழியாக்கம் செய்தும் இருக்கிறேன். ஆனால், சிலுவைப்போர்கள் பற்றி அதிகம் எழுதியதில்லை. 

கீழ்கண்ட இரண்டு கட்டுரைகளில் இந்த தலைப்பு பற்றி சில வரிகள் எழுதப்பட்டுள்ளது.

  1. முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)
  2. இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தில் 'ஜிஹாதும் போர்களும்'

இந்த முறை (டிசம்பர் 2019), சிலுவைப் போர்கள் பற்றி சிறிது ஆழமாக எழுதலாம் என்று  முடிவு செய்துள்ளேன்.

இதன் மூலம், சிலுவைப் போர்கள் பற்றிய ஒரு அடிப்படை  விவரம் வாசகர்களுக்கு கிடைக்கும். மேலும், இஸ்லாமிய ஜிஹாத் பற்றியும் தேவையான இடங்களில் கற்றுக்கொள்ளப் போகிறோம்.

இத்தொடர் கட்டுரைகளில் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில்கள் கொடுக்கப்பட உள்ளன.

1) இயேசுவின் போதனைகளுக்கு எதிராக ஏன் கிறிஸ்தவர்கள் சிலுவைப்போர்களை தொடங்கினார்கள்?

2) புனித நகரம் எருசலேமை முஸ்லிம்களிடமிருந்து மீட்பது தான் சிலுவைப்போர்களின் நோக்கமா?

3) சிலுவைப்போர் புரிவதற்கு கிறிஸ்தவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது, இஸ்லாமின் ஜிஹாத் என்றுச் சொல்வது சரியா?

4) மொத்தம் எத்தனை சிலுவைப்போர்கள் நடந்தன? அவைகளின்  விளைவுகள் என்ன?

5) சிலுவைப் போர்களை விமர்சிக்க முஸ்லிம்களுக்கு தகுதி உள்ளதா?

6) இஸ்லாமுக்கு ஜிஹாத், கிறிஸ்தவத்திற்கு சிலுவைப்போர் என்ற ஒப்பீடு சரியானதா?

7) முஸ்லிம்களின் நாடுகள் மீது சிலுவைப்போர்கள் தொடுத்து, ஆக்கிரமித்துக் கொண்டார்கள் கிறிஸ்தவர்கள்! இந்த குற்றச்சாட்டிற்கு என்ன பதில்?

8) சிலுவைப் போராளிகள் வெறும் போர் புரிந்தார்களா? அல்லது வேறு அட்டகாசங்களைச் செய்தார்களா?

9) மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை இவைகள் சிலுவைப்போர் வீரர்களின் நோக்கமாக இருந்ததா?

10) இஸ்லாமிய நபி முஹம்மது முதற்கொண்டு, எத்தனை போர்களை இஸ்லாம் புரிந்துள்ளது? சிலுவைப்போர்கள் எத்தனை நடந்தேறியது? யாருக்கு யார் அயலான்?

11) இன்றைய‌ கிறிஸ்தவர்கள் கடந்த கால‌ சிலுவைப் போர்களை ஆதரிக்கலாமா?

12) இன்று சௌதி அரேபியாவையும், மக்காவையும் ஒரு நாடு பிடித்துக்கொண்டால், தங்கள் புனித நகரை மீட்க முஸ்லிம்கள் ஒன்று கூடி போராடமாட்டார்களா? இது நியாயமென்றால், சிலுவைப் போர்கள் எப்படி அநியாயமாக கருதப்படும்?

13) சிறுவர்களின்  சிலுவைப்போர் (Children’s Crusade) என்பது என்ன?

14) ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெடித்த இந்திய சுதந்திர போராட்டம் போன்றது தானே, சிலுவைப்போர்?

15) கிறிஸ்தவர்கள் நாட்டுக்காக இராணுவத்தில் சேர்ந்து எதிரி நாட்டவர்களோடு சண்டையிடக்கூடாதா?

16) முஸ்லிம்கள் சொல்வது போன்று, கிறிஸ்தவர்கள் நியாயத்தை நிலைநிறுத்த சட்டத்தை கையில் எடுப்பது தவறா?

17) சிலுவைப் போர்கள் ஏன் முடிவடைந்தன? ஆனால் ஏன் ஜிஹாத் தொடர்ந்துக் கொண்டு இருக்கின்றன?

இன்னும் பல கேள்விகளுக்கு இந்த தொடர் கட்டுரைகளில் பதில் கிடைக்கும். 

கடைசியாக, ஒரு விவரத்தை மிகவும் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். “பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்” (மத்தேயு 26:52) என்ற இயேசுவின் வார்த்தைகளை இங்கு நியாபகப்படுத்த விரும்புகிறேன்.  கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் தான் கிறிஸ்தவர்கள், அவரை புறக்கணித்துவிட்டு, தங்களை கிறிஸ்தவர்கள் என்று அடையாளப்படுத்துபவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.

முஸ்லிம்களால் பொய்யாக சொல்லப்படும் சரித்திர விவரங்களை சரி பார்த்து, உண்மையை தமிழ் உலகிற்கு எடுத்துச் சொல்வது தான் என் நோக்கம்.

என்னுடைய நோக்கம் சிலுவைப் போர்களுக்கு வக்காளத்து வாங்குவதல்ல, அதனை விமர்சிக்க முஸ்லிம்களுக்கும், இஸ்லாமுக்கும் என்ன தகுதியுள்ளது என்பதை ஆய்வு செய்வதாகும்.

தேதி: டிசம்பர் 3, 2019


ஜிஹாதின் அடிச்சுவடுகளில் சிலுவைப்போர்கள் - பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்