சவக்கடல் சுருள்கள் – இஸ்லாத்திற்கு வரமா? அல்லது சாபமா?

முந்தைய கட்டுரைகள்: 

  1. சவக்கடல் சுருள்கள் அறிமுகம்
  2. சவக்கடல் சுருள்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
  3. சவக்கடல் சுருள்களின் காலவரிசை 1947 லிருந்து 1967 வரை
  4. சவக்கடல் குகைகள் 1-3ல் கிடைத்த சுருள்கள்
  5. சவக்கடல் குகைகள் 4-5ல் கிடைத்த சுருள்கள்
  6. சவக்கடல் குகைகள் 6-11ல் கிடைத்த சுருள்கள்
  7. சவக்கடல் சுருள்கள் – கிறிஸ்தவத்திற்கு அமிர்தமா அல்லது நஞ்சா?

நான் சவக்கடல் சுருள்கள் பற்றிய இந்த தொடர் கட்டுரைகளை எழுதுவதற்கு முக்கியமான காரணம் முஸ்லிம் அறிஞர்களின் விமர்சனமாகும். சவக்கடல் சுருள்கள் இஸ்லாமை ஆதரிக்கின்றது என்றும், கிறிஸ்தவத்தை எதிர்க்கின்றது என்றும் அவர்கள் புரளியை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களில் ஒரு முஸ்லிம் அறிஞர் திரு பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஆவார்கள். இவரது விமர்சனத்திற்கு அடுத்தடுத்த தொடர்களில் பதில் தரப்படுகின்றது. 

இந்த தொடரில், இஸ்லாமுக்கு சவக்கடல் சுருள்களினால் பயன் உண்டா? எந்த வகையில் சவக்கடல் இஸ்லாமுக்கு சம்மந்தப்படுகின்றது என்பதை கேள்வி பதில் வடிவில் சுருக்கமாக காண்போம். 

கேள்வி 1: சவக்கடல் சுருள்கள் இஸ்லாமை உறுதிப்படுத்துகிறது என்கிறார்களே! இது உண்மையா?

பதில் 1: இது பொய்யாகும். இஸ்லாம் கி.பி. 7ம் நூற்றாண்டில் வந்தது, சவக்கடல் சுருள்கள் கி. மு. 2 லிருந்து கி.பி. 1 நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்ட யூத சுருள்கள். ஐஸன்மேன் என்ற ஒரு அறிஞர் ‘சவக்கடல் சுருள்கள் இஸ்லாமை உறுதிப்படுத்துகிறது’ என்று கூறினார். ஆனால், அவர் எந்த கோணத்தில் அவ்வாக்கியத்தைச் சொன்னார்? அவரின் ஆய்வு என்ன? அவரின் ஆய்வு இஸ்லாமை எப்படி இடித்துப்போகின்றது என்பதை அடுத்த இரண்டு தொடரில் எழுதுகிறேன். அவைகளை படித்த பிறகு முஸ்லிம் நிச்சயமாக தங்கள் தவறான கருத்துக்கு வருந்துவார்கள்.

கேள்வி 2: சவக்கடல் சுருள்களில் முஹம்மது பற்றிய தீர்க்கதரிசனம் உண்டு என்கிறார்களே!

பதில் 2: சவக்கடல் சுருள்களில் முஹம்மது பற்றிய எந்த ஒரு குறிப்பும் இல்லை. சவக்கடல் சுருள்களில் பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் உண்டு, மேலும் எஸ்ஸீன்ஸ் என்ற யூத பிரிவினர் தங்களுக்காக எழுதிக்கொண்ட இதர புத்தகங்களும் உள்ளன. ஆனால், முஹம்மது பற்றிய எந்த ஒரு துப்பும் அவைகளில் இல்லை. தற்போது, சவக்கடல் சுருள்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, ஆய்வு செய்ய விரும்புவர்கள் தாராளமாக செய்யலாம். 

கேள்வி 3: அப்போஸ்தலர் பவுலடியார் தான் கிறிஸ்தவத்தை உருவாக்கினார், இயேசு அல்ல என்று சவக்கடல் சுருள்கள் சொல்கிறதாமே!

பதில் 3: இதனை எங்கு படித்தீர்கள்? எந்த சுருளில் படித்தீர்கள்? நம்மிடம் இருக்கும் பைபிளில் உள்ள பழைய ஏற்பாட்டு புத்தகங்கள், சவக்கடல் சுருள்களிலும் கிடைத்துள்ளது. மேலும், புதிய ஏற்பாட்டு புத்தகங்களில் ஒரு புத்தகம் கூட சவக்கடல் சுருள்களில் கிடைக்கவில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. முதலாவதாக, கும்ரான் பகுதியில் வாழ்ந்தவர்கள் யூதர்கள் ஆவார்கள், அதுவும் அதிகமாக கட்டுப்பாடு உள்ள எஸ்ஸீன்ஸ் என்றுச் சொல்லக்கூடிய யூதர்கள் ஆவார்கள். இவர்களிடம் பழைய ஏற்பாட்டு நூல்கள், அவைகளின் விரிவுரைகள் இருந்தன. கி.பி. 68ம் ஆண்டு எருசலேம் ரோமர்களால் அழிக்கப்பட்ட போது இவர்களும் அழிந்துவிட்டார்கள். இக்காலக்கட்டத்தில் புதிய ஏற்பாட்டு நூல்கள் கடிதங்கள் எழுதப்பட்டு, திருச்சபைகளில் வாசிக்கப்பட்டுக்கொண்டு இருந்தது. இந்த கும்ரான் யூத பிரிவினர், தங்களுக்காக மேசியா வருவார் என்று காத்துக்கொண்டு இருந்தார்களே தவிர, கிறிஸ்தவம் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. 

நான் மேலே குறிப்பிட்டது போல, பேராசியர் ஐஸன்மேன் என்ற அறிஞர் ஒரு புதிய புனைகருத்தை (ஊகக்கருத்து - Theory) முன்மொழிந்தார். அது ஆதாரமற்றது என்று உலக அறிஞர்கள் புறக்கணித்துவிட்டார்கள். 

நம் இஸ்லாமிய சகோதரர்களின் சந்தேகத்தை தீர்க்கும் வண்ணமாக, பேராசிரியர் ஐஸன்மேனின் அந்த புதிய தியரி என்ன? அதனால் இஸ்லாமுக்கு என்ன நன்மை? அல்லது என்ன தீமை? போன்றவற்றை அடுத்த இரண்டு தொடரில் பார்ப்போம். முஸ்லிம்கள் திரு ஐஸன்மேனை இஸ்லாமுக்கு ஆதாரமாக காட்டுவது, தங்கள் கால்களில் இருக்கும் செருப்பை கழற்றி தாங்களே அடித்துக்கொள்வதற்கு சமம் என்பதை அப்போது புரிந்துக்கொள்வார்கள். 

கேள்வி 4: பழைய ஏற்பாட்டின் மூல நூல்கள் பற்றிய முஸ்லிம்களின் விமர்சனத்தை சவக்கடல் சுருள்கள் எப்படி சந்திக்கிறது?

பதில் 4: 1947 வரை  நாம் பயன்படுத்திய பழைய ஏற்பாட்டின் மூல நூல்களின் காலக்கட்டம் கி.பி. 9-10ம் நூற்றாண்டுகளாகும். இதனை முஸ்லிம்கள் ஒரு விமர்சனமாக முன்வைத்தார்கள். உங்கள் பழைய ஏற்பாட்டு மூல நூல் பிரதிகள் கி.பி. 9-10க்கு சம்மந்தப்பட்டது, ஒவ்வொரு முறை கைகளினால் பிரதிகள் எழுதப்படும் போது, அனேக பிழைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். இயேசுவின் காலத்தில் அல்லது அவருக்கு முன்பு வாசிக்கப்பட்ட பழைய ஏற்பாடு எங்கே? உங்களிடம் கி.மு.க்கு சம்மந்தப்பட்ட மூல நூல்கள் உண்டா? என்று முஸ்லிம்கள் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆனால், 1947ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட சவக்கடல் சுருள்கள், மேற்கண்ட விமர்சனத்துக்கு சாவு மணி அடித்துவிட்டது.  சவக்கடல் சுருள்களின் காலக்கட்டம் கி.மு. 2 லிருந்து  கி.பி. 1ம் நூற்றாண்டுவரையானதாகும்.  இதுமட்டுமல்ல, நம்மிடமுள்ள பழைய ஏற்பாட்டோடு, சவக்கடல் சுருள்களை ஒப்பிட்டுப் பார்த்த ஆய்வாளர்கள் வாயடைத்துவிட்டார்கள். ஓராயிரம் ஆண்டுகள் பிரதி மேல் பிரதி எடுத்தாலும், ஒரு சில எழுத்துப்பிழை தவிர வேறு எந்த ஒரு கோட்பாட்டு வித்தியாசம் இல்லாமல் பழைய ஏற்பாடு இருப்பது, ஆச்சரியமே! என்று கூறுகிறார்கள். 

இனி முஸ்லிம்கள் மேற்கண்ட விமர்சனத்தை இன்னும் சொல்லமாட்டார்கள் என்று நம்புகிறேன்.  

கேள்வி 5: சில சவக்கடல் சுருள்களை வெளியிடாமல் பல ஆண்டுகள் ஆய்வாளர்கள் தாமதித்தது ஏன்? இதிலிருந்து கிறிஸ்தவர்கள் ஏதையோ மறைக்கிறார்கள் என்று தெரிகின்றதல்லவா?

பதில் 5: இந்த கேள்வியில் உண்மையில்லை. சவக்கடல் சுருள்கள் அனைத்தும் 1947ம் ஆண்டு முதல் 1956ம் ஆண்டுவரை கண்டெடுக்கப்பட்டது. இஸ்ரேல் ஒரு நாடாக அறியப்பட்ட காலக்கட்டம் அது, யுத்தச் சூழலும்  அரசியலில் நிலையற்ற தன்மையிருந்த காலம் அது. இது மட்டுமல்லாமல் சவக்கடல் சுருள்களின் ஆய்வுக்குழுவின் முதல் இரண்டுத் தலைவர்கள் திடீரென்று மரித்துவிட்டார்கள் (Roland de Vaux and Perre Benoit).  சவக்கடல் சுருள்களை ஆய்வு செய்துக்கொண்டு இருந்த ஆய்வாளர்கள், தங்கள் வேலையை முழுவதுமாக முடிப்பதற்குள் மரித்துவிட்டார்கள் (Patrick Skehan, Yigael Yadin and Jean Starky). அச்சுருள்கள் பலர் கைகளுக்கு இடம் மாறியது. கும்ரான் குகைகள் ஜோர்டானுக்கு சொந்தமாக அறியப்பட்டிருந்தது, ஆறு நாள் போருக்கு பிறகு இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.முதன் முதலாக சவக்கடல் சுருள்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை ஜோர்டன் அரசாங்கமே அமைத்தது. மேலும், இக்குழுவில் இருந்த பல அறிஞர்கள், இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவாக்கப்படக்கூடாது என்று விரும்பியவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆய்வாளர்கள் சிலர் ஆய்வு செய்யாமல், நிலைவையில் போட்டு விட்டார்கள். 4ம் குகையில் கிடைத்த சில சுருள்கள் தவிர மீதமுள்ள குகைகளில் கிடைத்த சுருள்கள் வெளியிடப்பட்டாகிவிட்டது. 1990ம் ஆண்டுக்கு பிறகு, 4ம் குகை சுருல்கள் கூட வெளியிடப்பட்டாகிவிட்டது.  

இப்போது நம் முன் நிற்கும் கேள்விகள் இவைகளாகும். 1990க்கு பிறகு அனைத்து சுருள்களும் வெளியிடப்பட்டு விட்டது. அவைகளின் முழு ஆங்கில மொழியாக்கமும் வெளியிடப்பட்டு விட்டது. கிறிஸ்தவ சபை சவக்கடல் சுருள்களின் உண்மையை உலகிற்கு தெரிவிக்க பயப்படுகின்றது என்று  1990க்கு முன்பு வரை குற்றம் சாட்டியவர்கள் இப்போது, தங்கள் ஆய்வை செய்யட்டும். சவக்கடல் சுருள்களின் ஆய்வில் ஈடுபட்டு இருந்தவர்களில் மதசார்பற்ற ஆய்வாளர்கள், கிறிஸ்தவ ஆய்வாளர்கள், யுத ஆய்வாளர்கள் என்று அனைத்து தர ஆய்வாளர்களும் இருந்தனர். 

பேராசிரியர் ஐஸன்மேன் போன்றவர்களும் பலவாறு அடாவடி அறிக்கைகளை வெளியிட்டனர். ஆனால், 90க்கு பிறகு அதுவரை வெளியிடாமல் இருந்த சுருள்கள் வெளியிட்ட பிறகு அமைதியாக இருந்துவிட்டனர். 

கிறிஸ்தவ சபையோ, யூத சமுதாயமோ சவக்கடல் சுருள்களில் எதையும் மறைக்கவில்லை. தங்களுக்கு கிடைத்த பொக்கிஷங்களை ஏன் அவர்கள் மறைப்பார்கள்? அந்த சுருள்கள் பல நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்படுகின்றது. இந்த இணைய தள காலத்தில் எல்லோரும் அவைகளை பார்க்கவேண்டுமென்பதற்காக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இனியும், கிறிஸ்தவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்றுச் சொல்வது அறிவுடமையுள்ளவர்களுக்கு தகாது. 

கேள்வி 6: பழைய ஏற்பாட்டில் எங்கள் முஹம்மது பற்றிய அறிவிப்புக்கள் இருந்தன, அதனை கிறிஸ்தவர்கள் மாற்றிவிட்டார்கள் என்ற வாதத்தின் நிலை என்ன?

பதில் 6: இயேசுவின் காலத்துக்கு முன்பு இருந்த பழைய ஏற்பாட்டில் முஹம்மது பற்றிய அறிவிப்புக்கள் இருந்தன என்றும், அவைகளை யூதர்களும் கிறிஸ்தவர்களும் மாற்றிவிட்டார்கள் என்ற ஒரு பொய்யான தகவலை முஸ்லிம்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.  இவர்களின் இந்த பொய்யை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது சவக்கடல் சுருள்கள். கி.பி. 9/10ம் நூற்றாண்டுக்கு சம்மந்தப்பட்ட சுருள்களோடு, இயேசுவிற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டு சவக்கடல் சுருள்களை ஒப்பிட்டுப் பார்த்த போது, முஸ்லிம்கள் சொல்வது போல எதுவும் நடக்கவில்லையென்பது தெளிவாகத் தெரிகின்றது. அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட சுருள்களை ஒப்பிட்டுப் பார்த்த போது, எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருப்பது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

முஸ்லிம்களில் யாராவது இந்த ஆய்வை செய்ய விரும்பினால், அவர்களுக்கு வாசல் (சவால்) திறந்தேயுள்ளது. ஆய்வை செய்ய தைரியமுள்ளவர்கள் முயன்று பார்க்கட்டும், அவர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சும் என்பதில் சந்தேகமில்லை. முஹம்மது பழைய ஏற்பாட்டில் முன்னறிவிக்கப்பட்டுள்ளார் என்றுச் சொல்வது, தற்காலத்தில் ஏற்புடையது அல்ல. 

கேள்வி 7: குர்-ஆன் சொல்லும் இஸ்லாம் மார்க்கமும் சவக்கடல் சுருள்களின் சொந்தக்காரர்களான அந்த யூத பிரிவினரின் மார்க்கமும் ஒன்று தானே? சவக்கடல் சுருள்கள் இஸ்லாமை உறுதிச் செய்கிறது என்பது உண்மை தானே!

பதில் 7: குர்-ஆன் சொல்லும் இஸ்லாமும், சவக்கடல் சுருள்கள் சொல்லும் மார்க்கமும் ஒன்றல்ல. இவ்விரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் உள்ளன. அறியாமையில் பேசும் முஸ்லிம்கள் மட்டுமே, இப்படி இவ்விரண்டும் ஒன்று என்றுச் சொல்வார்கள். உதாரணத்திற்கு, இவ்விரண்டிற்கும் இடையே இருக்கும் சில வித்தியாசங்களைப் பார்ப்போம். அதன் பின்பு, கும்ரான் குகைவாசிகளின் மார்க்கமும், இஸ்லாமிய மார்க்கமும் குறைந்தபட்சம் மேலோட்டமாகவாவது ஒன்றுபடுகின்றதா என்பதை முஸ்லிம்களே முடிவு செய்யட்டும்.

வித்தியாசம் 1: கும்ரான் பகுதி யூத பிரிவினர்களிடம் ‘ஆசாரியத்துவம்’ என்ற ஊழியத்திற்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. அதாவது அவர்கள் தங்களை ’ஆசாரியர்களின் குமாரர்கள்’ என்று அழைத்துக்கொண்டனர். அதாவது பழைய ஏற்பாட்டில் இஸ்ரேலில் இருந்த 12 பிரிவுகளில் ‘லேவி’ என்ற ஒரு வம்சத்திற்கு தேவன், தேவாலயத்தில் ஆசாரிய ஊழியம் செய்யும் படி அனுமதித்தார். அந்த லேவியர்கள் தான் இவர்கள். இஸ்லாமில் இப்படிப்பட்ட ஒரு வகை உண்டா? ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே மசூதிக்குள் ஊழியம்  (இமாம்) செய்யவேண்டும் என்ற சட்டமுண்டா? 

வித்தியாசம் 2: இந்த கும்ரான் வாசிகள் ‘உலகில் நடக்கும் நல்லவைகளுக்கு தேவன் காரணம் என்றும், தீயவைகளுக்கு சாத்தான் (பெலியல்) காரணம் என்றும்’ நம்புகிறார்கள். ஆனால், இஸ்லாமின் படி, உலகில் நடக்கும் நல்லவைகளுக்கும், தீயவைகளுக்கும் அல்லாஹ் தான் காரணம் ஆவான். அப்படியானால், கும்ரான் வாசிகளும், குர்-ஆன் வாசிகளும் எப்படி ஒன்றானவர்களாக இருக்கமுடியும்? இவ்விருவரின் அடிப்படை நம்பிக்கையே எதிர்மறையாக இருக்கும்  போது, கும்ரான் வாசிகள் இஸ்லாமை உறுதிப்படுத்துகிறார்கள் என்றுச் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?

வித்தியாசம் 3: கும்ரான் வாசிகள் சூரிய காலண்டரை (சோலார் காலண்டர்) பயன்படுத்தியவர்களாக இருந்தார்கள், முஸ்லிம்களோ சந்திர காலண்டரை (லூனார் காலண்டர்) பயன்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். முஸ்லிம்கள் இதுவரை பின்பற்றிய நாட்கணக்கு தவறானது என்று கருதி, இனி சோலார் காலண்டரை பின்பற்றுவார்களா?

வித்தியாசம் 4: கும்ரான்வாசிகள் விவாகரத்து செய்வது ஹராம் என்று கருதினார்கள், மேலும் இராஜாவைத் தவிர மற்ற மக்கள் ஒரே மனைவியை உடையவனாக இருக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள். ஆனால், இஸ்லாமில் ஒவ்வொரு முஸ்லிமும் நான்கு மனைவிகள் வரை திருமணம் செய்யலாம் (பல தாரமணம்) என்ற சட்டம் உள்ளது. சவக்கடல் சுருள்கள் இஸ்லாமை உறுதி செய்தால், என்ன நடக்கும் என்று இப்போது சிந்தித்துப் பாருங்கள் முஸ்லிம்களே! முஹம்மது தவிர மீதமுள்ள அனைத்து பலதார மணம் புரிந்த அனைவரும் பெரும்பாவம் (ஷிர்க்) செய்தவர்களாவார்கள். அதாவது முஹம்மதுவின் தோழர்களாகிய அனைவரும் பெரும்பாவிகள் என்று ஏற்றுக்கொள்ள தயாராக முஸ்லிம்கள் இருக்கிறார்களா?

வித்தியாசம் 5: கும்ரான் வாசிகள் தாங்கள் குழுவாக உட்கார்ந்து திராட்சை ரசம் குடிப்பவர்களாக இருந்தார்கள். முஹம்மது தம்முடைய தோழர்களுடன் சேர்ந்து திராட்சை ரசம் குடிப்பவராக இருந்தாரா?

வித்தியாசம் 6: கும்ரான் வாசிகள் ‘சத்தியம்’ செய்வதை ஆதரிக்கவில்லை. அதாவது ஒருவர் தங்களுடைய பிரிவில் சேரும் போது மட்டுமே அவர் சத்தியம் செய்யவேண்டும், அதன் பிறகு மரிக்கும் வரை சத்தியம் செய்யக்கூடாது. ஆனால், இஸ்லாமில் சத்தியம் செய்வது, சாபம் இடுவதும் அனுதின வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிறது. அனேக முறை அல்லாஹ்வே சத்தியம் செய்கின்றவனாக இருக்கிறான். 

இப்படி அனேக வித்தியாசங்களை காட்டலாம். ஒருபோதும் கும்ரான்வாசிகள் குர்-ஆனை உறுதிச்செய்யவில்லை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், சவக்கடல் சுருள்கள் இஸ்லாமுக்கு ஒரு வரமல்ல, அது ஒரு சாபமாகும். எனவே இஸ்லாமுக்கு சாகா வரம் வேண்டுமென்பவர்கள் சவக்கடல் சுருள்கள் பக்கம் வராமல் இருப்பார்களாக! இதனை அறிந்துக்கொள்ளாமல் சில முஸ்லிம் அறிஞர்கள் தங்கள் தலையில் மட்டுமல்ல, அல்லாஹ்வின் தலையிலும் மண்ணை வாரி போடுகிறார்கள்.

இதைப் பற்றி மேலும் அதிகபடியான விவரங்களை அடுத்த இரண்டு அத்தியாயங்களில் காண்போம்.

தேதி: 2nd Nov 2016


’சவக்கடல் சுருள்கள்’ பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்