புனித வெள்ளி 2017 – மரணத்திற்கு முன்பு வெளிப்பட்ட இயேசுவின் மன்னிப்பு முஹம்மதுவின் சாப வெறுப்பு
இன்று 2017ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 14ம் தேதி, நான் திருச்சபையில் புனித வெள்ளி செய்தியை கேட்டுக்கொண்டு இருந்தேன். சிலுவையில் இயேசு பேசிய ஏழு வாக்கியங்களிலிருந்து எங்கள் சபையின் சகோதர சகோதரிகள் ஏழு செய்திகளை பகிர்ந்துக்கொண்டு இருந்தார்கள், ஆமாம், இன்று எங்கள் சபை போதகர் செய்தியை கொடுக்கவில்லை, விசுவாசிகளுக்கே அந்த வாய்ப்பை கொடுத்தார். இதில் முதல் வாக்கியமாக “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே (லூக்கா 23:34)” என்ற வார்த்தைகள் பற்றி ஒரு சகோதரி செய்தியைக் கொடுத்தார்கள்.
ஒரு ஆன்மீகத் தலைவர் உயிரோடு இருக்கும் போது செய்த செயல்கள், கொடுத்த கட்டளைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவர் மரிக்கும் போது அவர் வெளிப்படுத்திய செயல்கள், அவர் கொடுத்த கட்டளைகள் இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். இயேசு மரிக்கும் போது கூட தன்னை அந்த நிலைக்கு ஆளாக்கிய எதிரிகளுக்காக ஜெபித்து, அவர்களை மன்னித்தார் என்றுச் சொல்லி, அந்த சகோதரி செய்தியை முடித்தார்கள். இந்த செய்தி முடிந்தவுடன், என் மனதில் உதித்த ஒரு எண்ணம், முஸ்லிம்களின் கண்மணி நாயகம் முஹம்மது மரிக்கும் போது என்ன செய்தார்? அவர் யாரை மன்னித்தார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான்.
மரிக்கும் போது யூத கிறிஸ்தவர்களை சபித்த முஹம்மது:
குர்-ஆனுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் ’அல்லாஹ்வின் வஹி’ என்று நம்பும் புகாரி ஹதீஸில் ஒரு விவரம் கிடைத்தது.
புகாரி எண் 1330:
1330. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, 'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்' என்று கூறினார்கள்.
பயம் மட்டும் இல்லையாயின் நபி(ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.
முஹம்மது தம்முடைய மரணத்தருவாயில் இருக்கும் போது, ’யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக!’ என்று சாபம் கூறியுள்ளார். ஒரு ஆன்மீகத் தலைவர், முஸ்லிம்களின் வழிகாட்டி, இப்படியா சாபத்தைக் கூறுவார்? ஆச்சரியமாக உள்ளது.
இயேசு மரிப்பதற்கு முன்பு தன் எதிரிகளை மன்னித்தார். முஹம்மது மரிப்பதற்கு முன்பு தான் எதிரிகளாக கருதிய யூத கிறிஸ்தவ ஒட்டு மொத்த சமுதாயங்களை சபித்தார். மரிக்கும் போதாவது சமாதானத்துடன் மரிக்கலாம் அல்லவா? இப்படி சாபங்களை கொடுப்பதைவிட்டுவிட்டு கடைசி காலங்களில் சில நல்ல விஷயங்களை தம்முடைய சமுதாயத்துக்கு கொடுத்துவிட்டு, முஸ்லிமல்லாதவர்களை ஆசீர்வதித்துவிட்டு சென்று இருந்திருக்கலாம் அல்லவா?
இவ்விரு தலைவர்களை பின்பற்றும் மக்களின் வாழ்க்கையில் இவைகளின் விளைவு காணப்படுகிறது. இன்றளவும் கிறிஸ்தவர்கள் தங்கள் எதிரிகளை மன்னித்துக்கொண்டு இருக்கிறார்கள், முஸ்லிம்கள் சபித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
1999ம் ஆண்டு தன் கணவனையும், இரண்டு பிள்ளைகளையும் உயிரோடு கொளுத்தியவர்களை மன்னித்தார், கிரஹாம் ஸ்டெயின்ஸ் என்ற கிறிஸ்தவ பெண்மணி (Link1 & Link2). கொலையாளிகளை சபிக்க வாய்ப்பு இருந்தும் அவர்களை சபிக்கவில்லை, இப்பெண்மணி.
ஆனால், முஹம்மதுவோ, இரு சமுதாயங்களை அல்லாஹ் சபிக்கட்டும் என்று சாபம் கூறுகின்றார், இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று மக்கள் எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்?
முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் சபித்துக்கொள்ளும் – முபாஹலா:
யூத கிறிஸ்தவர்களை சபித்தது போதாது என்றுச் சொல்லி, முஸ்லிம்கள் மத்தியில் கருத்துவேறுபாடு ஏற்பட்டால், உடனே இவர் குடும்பத்தை அவரும், அவர் குடும்பத்தை இவரும் சபித்துக்கொள்கிறார்கள், இதற்கு முபாஹலா என்றுப் பெயர்.
பார்க்க: ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை முபாஹலா செய்வதற்கு அழைக்கலாமா?
முஸ்லிம்கள் ஒருவர் மீது ஒருவர் அல்லாஹ்வின் சாபத்தை கூறிக்கொள்ளலாம் என்று மேற்கண்ட கட்டுரையில் பீஜே அவர்கள் குர்-ஆன் ஹதீஸ்கள் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். இது எங்கு போய் முடியும்? ஒரு சமுதாயம் சாபம் தருவதற்கு துடிக்கிறாதே, மன்னிப்பதற்கு மறுக்கிறதே!
குர்-ஆன் சபிக்க அனுமதிக்கிறது
குர்-ஆன் 3:61ம் வசனத்தின் படி, நாம் அல்லாஹ்வின் சாபத்தைக் கூறி சபிக்கலாம் என்று பீஜே விளக்கமளித்துள்ளார்.
பீஜேவின் விளக்கமும் குர்-ஆன் வசனமும்:
இரு தரப்பினருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு முரண்பாடான இரண்டு கருத்துக்களைக் கூறுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். இருவருமே தாங்கள் கூறுவது தான் உண்மை என்று வாதிக்கின்றார்கள். இந்நிலையில் அவர்கள் தங்கள் கூற்றுக்கு உரிய ஆதாரத்துடன் நேரடியாக விவாதிப்பதன் மூலம் எது உண்மை என்பதை நிரூபிக்கலாம்.
இதற்கு வழியில்லாத பட்சத்தில் இரு தரப்பினரும் தங்கள் குடும்பத்துடன் ஒரு சபையில் வந்து, தங்கள் கருத்தைக் கூறி, பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு முபாஹலா என்று பெயர்.
உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டா வாதம் செய்தால் "வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்'' எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 3:61
நாங்கள் பின்பற்றும் பைபிள் இப்படி சாபத்தை கூறுங்கள் என்று கற்றுக்கொடுக்கவில்லை, இயேசுவும் அதனை அனுமதிக்கவில்லை. ஒருவேளை கிறிஸ்தவர்களை “முபாஹலாவிற்கு” முஸ்லிம்கள் அழைத்தால், அதாவது நாங்கள் உங்கள் குடும்பங்களையும், நீங்கள் எங்கள் குடும்பங்களையும் சபிப்பதற்கு ஒன்று கூடுங்கள் என்றுச் சொல்லி முஸ்லிம்கள் அழைப்பு விடுத்தால், கிறிஸ்தவர்கள் இயேசுவின் பெயரில் அவர்களை (முஸ்லிம்களை) ஆசீர்வதிப்பார்களே தவிர சபிக்கமாட்டார்கள். முஸ்லிம்கள் வேண்டுமானாலும், அல்லாஹ்வின் பெயரில் கிறிஸ்தவர்களை சபிக்கட்டும், ஆனால் கிறிஸ்தவர்கள் தேவனின் பெயரில் அவர்களை ஆசீர்வதிப்பார்கள். இப்படி சில முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களை அழைத்தும் இருக்கிறார்கள், ஆனால், கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிள்ளைகள் என்பதை நிருபித்துள்ளனர்.
முஸ்லிம்களை ஆசீர்வதியும் ஆண்டவரே:
இன்று புனித வெள்ளி, இயேசு தம்முடைய மரணத்தின் போதும் மன்னித்த நாள், ஆகையால், கிறிஸ்தவர்களாகிய நாங்கள் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தை இயேசுவின் பெயரில் ஆசீர்வதிக்கிறோம். உலகம் முழுவதும் கிறிஸ்தவ சபைகளை எரிக்கும் முஸ்லிம்களை கர்த்தர் ஆசீர்வதிக்கும் படி ஜெபிக்கிறோம். கிறிஸ்தவர்களை துன்பப்படுத்துகின்ற அனைவரின் மீதும் ஆசீர்வாதத்தை கூறுகிறோம். பிதாவே எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல, எங்கள் கடன்களையும் எங்களுக்கு மன்னியும் என்ற மன்னிப்பு ஜெபத்தை அனுதினமும் செய்கின்ற நாங்கள், இன்று விசேஷித்த விதமாக, எங்களுக்கு விரோதமாக தீமைகளை செய்கின்ற முஸ்லிம்களை, இதர மக்களை நாங்கள் மன்னிக்கிறோம் என்று ஜெபிக்கிறோம்.
முடிவுரை:
எத்தனை நாட்கள் சபித்துக்கொண்டு இருப்பீர்கள்? எத்தனை ஆண்டுகள் சபிப்பீர்கள்? முஸ்லிம்களே, உங்கள் கருத்துக்கு எதிராக பேசும் இன்னொரு முஸ்லிமை சபிக்கும் முபாஹலா போன்ற ”சாபம் தரும் துவா” செய்வதை விட்டுவிட்டு, அவருக்காக ஆசீர்வாத துவா செய்யமாட்டீர்களா? இப்படி செய்வதை குர்-ஆனும் எங்கள் இறைத்தூதரும் அனுமதிக்கமாட்டார் என்றுச் சொல்வீர்களானால், கொஞ்சம் உங்கள் மார்க்க கோட்பாடுகளை சிந்தித்துப் பாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். சத்தியத்தை அறிந்துக்கொள்ளுங்கள், அந்த சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்.
தேதி: ஏப்ரில் 14, 2017