மக்காவின் பிரச்சனை 1

குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?  

முன்னுரை: ”இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல” என்ற தலைப்பில் நாம் அறிமுகத்தை பார்த்துள்ளோம். கீழ்கண்ட அறிமுக கட்டுரையை படிக்காமல், நீங்கள் இதர கட்டுரைகளை படித்தால், நாம் முன்வைக்கும் விவரங்களின் பின்னணி சரியாக விளங்காது.

  1. மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!

மக்காவின் பிரச்சனை 1

சரித்திர ஆசிரியர் டென் கிப்சன் அவர்கள் தம்முடைய “குர்-ஆனிக் ஜியோகிராஃபி” புத்தகத்தில் 16வது அத்தியாயத்தில் கொடுத்துள்ள முதலாவது ஆதாரத்தை பார்ப்போம்.

முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மக்காவின் பெயர் குர்-ஆனில் ஒரே ஒரு முறைத்தான் வருகிறது:

குர்-ஆன் ஸூரா 48:24

48:24. அவனே, மக்காவின் பள்ளத்தாக்கில், அவர்களின் கைகளை உங்களை விட்டும், உங்களின் கைகளை அவர்களை விட்டும் தடுத்தான். அந்நிலையில் அவர்களின் மீது உங்களுக்கு வெற்றியையும் கொடுத்திருந்தான். மேலும், நீங்கள் செய்துகொண்டிருந்தவை அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருந்தான்.(இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

இன்னொரு இடத்தில் ’பக்கா’ என்று வருகிறது:

குர்-ஆன் ஸூரா 3:96

3:96. (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

இந்த மக்காவை குர்-ஆன் விளக்கும்போது “நகரங்களின் தாய்” என்று குறிப்பிடுகிறது. 

6:92. இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.) எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

அரபியில் “உம்முல் குரா – Umm al-Qura” என்ற வார்த்தைகளைத் தான் “நகரங்களின் தாய்” என்று மொழிப் பெயர்த்துள்ளார்கள். நகரங்களின் தாய் என்று குர்-ஆன் சொல்வது “மக்காவைத் தான்” என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கிறார்கள், ஆனால், அதை நிரூபிக்க அவர்களால் முடிவதில்லை. 

ஏழாம் நூற்றாண்டில் முஹம்மது வாழ்ந்த போது, மக்கா ”ஒரு நகரம்” என்ற நிலையிலும் இல்லை, ”நகரங்களுக்கெல்லாம் தாய்” என்ற நிலையிலும் இல்லை. ஒரு நகரத்திற்கான எந்த தகுதியும் மக்காவிற்கு அப்போது இல்லாமல் இருந்தது. அப்படியானால், ஏன் குர்-ஆன் மக்காவை “நகரங்களின் தாய்” என்றுச் சொல்கிறது?  ஒருவேளை குர்-ஆன் சொல்லும் ”உம்முல் குரா” என்பது வேறு ஒரு நகரமாக இருக்குமோ? 

ஜோர்டான் மற்றும் சௌதி அரேபியாவின் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் கூற்று:

குர்-ஆனிக் ஜியோகிரஃபி புத்தகத்தின் ஆசிரியர், டென் கிப்சன் தம் புத்தகத்தில் கீழ்கண்ட விவரங்களைச் சொல்கிறார்:

“2002ம் ஆண்டு, ஜோர்டான் நாட்டில், பெட்ராவில் நடந்த “நெபாடியன்ஸ் ஆய்வுவின் இரண்டாம் மாநாட்டில்” கலந்துக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த மாநாட்டை “அல் ஹுசேன் பின் தலால் பல்கலைக் கழகம்” ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டின் போது, பல முன்னணி ஜோர்டானிய மற்றும் சௌதி அரேபிய தொல்லியல் ஆய்வாளர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த உரையாடலின் போது மக்காவைப் பற்றியும் அதனைச் சுற்றியும் நடந்த தொல்லியல் ஆய்வு பற்றியும் பல கேள்விகள் கேட்டு பதில்களைப் பெற்றேன். தங்கள் பெயர்களை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவர்கள் எனக்கு பதில் அளித்தார்கள். அதாவது “மக்காவைப் பற்றி கி.பி. 900க்கு முன்பாக எந்த ஒரு தொல்லியல் கண்டுபிடிப்புகளும் இல்லை” என்று அவர்கள் பதில் அளித்தார்கள். பண்டைய காலத்தில் இஸ்லாம் உருவான காலத்தில் மக்காவைச் சுற்றி நகர பாதுகாப்பு சுவரும், பெரிய கட்டிடங்களும், தோட்டங்களும், அரச கட்டிடங்களும் கோயில்களும் இருந்தனவா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “தங்கள் தலையை அசைத்து, அந்த மாதிரி எதுவும் அங்கு இருந்ததில்லை" என்றனர்.” (Quranic Geography, பக்கம் 223, அத்தியாயம் CHAPTER SIXTEEN - MECCA & THE HOLY CITY)

ஆங்கிலத்தில் மேற்கோள்:

“In 2002 I had the opportunity to visit the Second Conference on Nabataean Studies held in Petra, Jordan, and organized by the Al Hussein Bin Talal University. During the conference I had occasion to speak with several leading Jordanian and Saudi archeologists. I asked them specifically about the archeological record in and around Mecca. While not wishing to be quoted or named publicly, they admitted that the archeological record at Mecca was basically non-existent before 900 AD. I had expected them to defend the opinion that ancient Mecca was a walled city with houses, gardens, public buildings and temples. They shook their heads and said, “There was nothing like that there.” (Quranic Geography, Page: 223, Chapter: CHAPTER SIXTEEN - MECCA & THE HOLY CITY) [1]

நாம் சிந்திக்கவேண்டிய விஷயங்கள்:

1) குர்-ஆன் மக்காவை ”நகரங்களின் தாய்” என்று அழைக்கிறது.

2) கி.பி. 900க்குள் மக்கா ஒரு நகரம் என்பதற்கான எந்த ஒரு தொல்பொருள் ஆதாரமும் மக்காவில் இது வரை கிடைக்கவில்லை.

3) சௌதி மற்றும் ஜோர்டான் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் படி, கி.பி. 900க்கு முன்பாக மக்கா ஒரு நகரமாக இருந்ததில்லை. 

4) அக்காலத்தில் நகரம் என்பதற்கு சில அடையாளங்கள் இருக்கின்றன, அதாவது நகரத்தைச் சுற்றி பாதுகாப்பு சுவரும்,  அரசு தோட்டங்களும், பெரிய கட்டிடங்களும் இருக்கும், ஆனால், இவைகள் ஒன்றும் முஹம்மதுவின் காலத்திற்கு பின்பும் 270 ஆண்டுவரை (கி.பி. 900 வரை) மக்காவில் இல்லை என்பது ஆய்வின் படி தெரிகின்றது.

5) இப்படி இருந்தும், குர்-ஆன் ஏன் நகரங்களின் தாய் என்று மக்காவை குறிப்பிட்டுச் சொல்கிறது? குர்-ஆன் சொல்வது பொய்யாக இருக்காது, ஏனென்றால், இந்த வசனத்தை கேட்கும் அக்கால மக்கள் ’தாங்கள் இருப்பது ஒரு நகரம் தானே’ அதைத் தானே குர்-ஆன் சொல்கிறது என்று எண்ணியிருப்பார்கள்.

6) குர்-ஆன் குறிப்பிடுவது இன்று நாம் மக்கா என்று அழைக்கும் சௌதியின்  மக்கா இல்லாமல் அது வேறு ஒரு நகரமாக இருந்திருக்கிறது!

7) இதனைத் தான் சரித்திர ஆசிரியர் கிப்சன் ’பெட்ரா நகரம்’ என்றுச் சொல்கிறார்.

முடிவுரை: இது தான் மக்கா மீது சரித்திர ஆசிரியர் கிப்சன் அவர்களுக்கு வந்த முதலாவது சந்தேகம். இதனை படிக்கும் முஸ்லிம்கள் ஆசிரியரின் முடிவை உடனே ஏற்றுக் கொள்ளவேண்டாம், அதற்கு பதிலாக இதைப் பற்றி உங்கள் ஆய்வை தொடருங்கள்.  நாம் பதிக்கப்போகும் அடுத்தடுத்த “மக்கா பிரச்சனைகளை” ஒன்று சேர்த்து பார்க்கும் போது, பிம்பம் மிகவும் பெரியதாகவும், தெளிவாகவும் தெரியவரும். அப்போது நீங்கள் ஒரு முடிவிற்கு வரலாம். 

மக்கா பற்றி ஆசிரியர் முன்வைத்த இரண்டாவது ஆதாரத்தை அடுத்த கட்டுரையில் காண்போம்.

அடிக்குறிப்புகள்:

[1] அமேஜானில் இப்புத்தகத்தை வாங்க: Buy Quranic Geography at Amazon

[2] உபயோகமுள்ள இதர தொடுப்புக்கள்:

இவைகள் குர்-ஆனிக் ஜியோகிராஃபி புத்தகத்தின் ஆதாரங்கள் அல்ல. இணையத்தில் தேடிப்பார்த்ததில் கிடைத்தவைகள்.

  • இந்த தொடுப்பில் இஸ்லாமுக்கு முன்பு இருந்த நகரங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால், அவைகளில் மக்காவின் பெயர் இடம் பெறவில்லை - https://en.wikipedia.org/wiki/Ancient_towns_in_Saudi_Arabia
  • உம்முல் குரா என்பது தமிழ் மக்களிடையேயும் புகழ் பெற்ற வார்த்தைகளாக இருக்கிறது, இதைப் பற்றிய தமிழ் தள தொடுப்புக்கள்:

மக்காவின் பிரச்சனைகள் பற்றிய கட்டுரைகள்
உமரின் இதர கட்டுரைகள்