மக்காவின் பிரச்சனை 8
குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?
(மக்காவிற்கு அருகில் உள்ளதா? (அ) பெட்ராவிற்கு அருகில் உள்ளதா?)
முன்னுரை:
சரித்திர ஆசிரியர் கிப்சன் அவர்கள் தம்முடைய “குர்-ஆனிக் ஜியோகிரஃபி” என்ற புத்தகத்தில் இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல, அது ஜோர்டானில் உள்ள பெட்ரா ஆகும் என்று கூறுகிறார். அதற்காக குர்-ஆன் மற்றும் இதர இஸ்லாமிய நூல்களிலிருந்தும், தொல்லியல் ஆய்வுகளின் படியும் அனேக ஆதாரங்களை தம் புத்தகத்தில் எழுதியுள்ளார். அவைகளில் சிலவற்றை கீழ்கண்ட கட்டுரைகளில் படிக்கலாம்.
- மக்காவின் பிரச்சனைகள் அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
- மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
- மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
- மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
- மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
- மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
- மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
- மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
மேற்கண்ட கட்டுரைகள் மக்காவை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை. இப்போது நம்முடைய கவனத்தை பெட்ராவின் பக்கம் திருப்புவோம். குர்-ஆனின் புவியியல் விவரங்கள் எப்படி பெட்ராவிற்கு பொருந்துகிறது என்பதை பார்ப்பதற்கு முன்பாக, தற்காலத்தில் பெட்ரா எங்கே உள்ளது, அதன் முக்கியத்துவம் என்னவென்பதை சுருக்கமாக காண்போம். அதன் பிறகு குர்-ஆன் 11:83ம் வசனம் எப்படி பெட்ராவை குறிக்கிறது என்பதைப் பார்ப்போம்.
பெட்ரா – சிறு குறிப்பு:
பெட்ரா என்பது யோர்தானில் அமைந்துள்ள ஒரு வரலாற்று, தொல்பொருளியல் நகர். கிரேக்க மொழியில் பெட்ரா என்றால் கல் என்று அர்த்தம். பெட்ரா அதனுடைய பாறை வெட்டு கட்டடக்கலை மற்றும் நீர்க்குழாய் முறைகளுக்கு புகழ்பெற்றது. இது கி.மு. 3ம் நூற்றாண்டளவில் நபாட்டான் தலைநகராக இருந்தபோது உருவாக்கப்பட்டது. இன்று இது யோர்தானின் சின்னமாகவும் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் இடமாகவும் உள்ளது. பெட்ரா 1985இல் இருந்து யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது. புதிய உலக ஏழு அதிசயங்களில் பெட்ராவும் ஒன்று.[1][2][3][4]
பெட்ராவிற்கும் மக்கா மதினாவிற்கு இடைப்பட்ட தூரம்:
பெட்ராவிற்கும் மக்காவிற்கும் இடையேயுள்ள தூரம் எவ்வளவு என்பதை நாம் அறிந்துக் கொண்டால், நம் கட்டுரைகளை புரிந்துக் கொள்ள உதவியாக இருக்கும். இக்கட்டுரைகள் புவியியல் பற்றிப் பேசுவதால், இந்த தூரக்கணக்கு நமக்கு உதவியாக இருக்கும். இக்கணக்குகளை என்னால் முடிந்த அளவிற்கு சுலபமாக்கியுள்ளேன்.
பெட்ராவிற்கும் மக்காவிற்கும் இடையே 1080 கி.மீ. தூரம் உள்ளது. தரைவழியாகச் சென்றால் இந்த தூரம் இன்னும் அதிகமாக இருக்கும். கூகுள் மூலமாகவே இந்த தூரத்தை கணக்கிட்டுக் கொள்ளலாம். கூகுளில் “distance between mecca and petra” என்று டைப் செய்து பார்த்துக் கொள்ளலாம். இக்கட்டுரையில் தரப்பட்ட தூரம் சம்மந்தப்பட்ட விவரங்கள் இதே வகையில் தான் எடுக்கப்பட்டது (தேதி: 28-Nov-2015).
படம் 1: பெட்ரா மற்றும் மக்காவிற்கு இடையேயுள்ள குறைந்த பட்ச தூரம்
பெட்ராவிற்கும் மதினாவிற்கு இடையே 762 கி.மீ. தூரம் உள்ளது.
படம் 2: பெட்ரா மற்றும் மதினாவிற்கு இடையேயுள்ள குறைந்தபட்ச தூரம்
மேற்கண்ட வரைப்படங்கள் குர்-ஆன் 11:83ஐ புரிந்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
பெட்ராவைப் பற்றி மேலும அறிய இக்கட்டுரையின் கடைசியில் கொடுக்கப்பட்டு இருக்கும் தொடுப்புக்களை சொடுக்கவும். நம்முடைய அடுத்தடுத்த கட்டுரைகளிலும் பெட்ராவைப் பற்றிய இதர வரைபடங்களையும், முக்கியமான விவரங்களையும் காண்போம்.
இப்போது குர்-ஆன் 11:83ஐ ஆய்வு செய்வோம்.
மக்காவிற்கு தர்மசங்கடமாக மாறும் குர்-ஆன் 11:83 வசனம்
இந்த பதினோராவது அத்தியாயம் மக்காவில் இறங்கிய அத்தியாயமாகும். இப்போது இதன் 83வது வசனத்தை மூன்று தமிழாக்கங்களில் படிப்போம்.
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:
11:83. அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன; (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
11:83. (எறியப்பட்ட செங்கல் ஒவ்வொன்றிலும்) உங்கள் இறைவனால் அடையாளமிடப்பட்டிருந்தது. (புரட்டப்பட்ட) அவ்வூர் இவ்வக்கிரமக்காரர்களுக்கு வெகு தூரமுமல்ல; (விரும்பினால் அதனை இவர்கள் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.)
பிஜே தமிழாக்கம்:
11:83: (அவை) உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் (இந்த) அநீதி இழைத்தோருக்குத் தொலைவில் இல்லை.
சோதோம் கொமோராவின் அழிவு:
குர்-ஆன் 11:75-83 வசனங்களில் அல்லாஹ் இப்ராஹீம் (ஆபிரகாம்) பற்றியும், லூத் (லோத்து) பற்றியும் அதன் பிறகு எப்படி லூத் இருந்த ஊர் அழிக்கப்பட்டது என்பதைப் பற்றியும் பேசுகின்றான். இவ்வூர்களின் பெயர்கள் குர்-ஆனில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், பைபிளின் படியும் இதர தொல்லியல் ஆய்வுகளின் படியும், இந்த ஊர்களின் பெயர்கள் “சோதோம்” மற்றும் “கொமோரா” என்று அறியப்பட்டிருக்கின்றன [5].
இவ்வூர்களின் மீது அல்லாஹ் எப்படி அழிவை கொண்டு வந்தான் என்றுச் சொல்லிவிட்டு, இந்த மக்காவில் உள்ள மக்கள் ”அழிக்கப்பட்டிருக்கும் அவ்வூரை” தங்கள் கண்களால் பார்க்கும்படி இந்நாள் வரைக்கும் அவைகள் அப்படியே பாழடைந்துள்ளது என்றும் சொல்கிறான்.
ஆனால், 83ம் வசனத்தை கூர்ந்து கவனித்தால், “பாழாய் போன அவ்வூர், முஹம்மது துன்புறுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்ற இஸ்லாமிய புனித நகரத்திற்கு வெகு தொலைவில் இல்லை” என்று அல்லாஹ் கூறுகின்றான். இவ்வசனத்தின் இந்த கடைசிப் பகுதியைத் தான் நான் இக்கட்டுரையில் ஆய்வு செய்துள்ளேன்.
நான் மேற்கோள் காட்டிய மூன்று தமிழாக்கங்களின் கடைசி பகுதியை இங்கு மறுபடியும் பதிக்கிறேன்.
11:83. . . . . (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை. (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)
11:83. . . . (புரட்டப்பட்ட) அவ்வூர் இவ்வக்கிரமக்காரர்களுக்கு வெகு தூரமுமல்ல; (விரும்பினால் அதனை இவர்கள் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.) (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)
11:83: . . . அவ்வூர் (இந்த) அநீதி இழைத்தோருக்குத் தொலைவில் இல்லை. (பிஜே தமிழாக்கம்)
லூத் வாழ்ந்த ஊர், அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் மக்காவிற்கு அதிக தொலைவில் இல்லை:
குர்-ஆனின் இந்த பதினோராம் அத்தியாயம் மக்காவில் இறக்கப்பட்டது. இவ்வதிகாரத்தில் அல்லாஹ் முஹம்மதுவை துன்புறுத்துகின்ற மக்காவினருக்கு பல அறிவுரைகளை அல்லது நடந்து முடிந்த சரித்திர உதாரணங்களை எடுத்துக் காட்டி எச்சரிக்கை செய்கிறான். சரித்திரத்தை திரும்பிப் பாருங்கள், நான் எப்படி தீமை செய்த ஊர்களை அழித்தேன் என்பதைப் பார்த்து எச்சரிக்கை அடையுங்கள் என்ற தோரணையில் அல்லாஹ் இங்கு பேசுகின்றான். மேலும், நான் ஏற்கனவே அழித்துள்ள ஊர் உங்களுடைய ஊருக்கு அதிக தொலைவில் இல்லை, அது மிகவும் அருகில் உள்ளது. அதனை நீங்கள் சென்று பார்க்க விரும்பினால் பார்க்கலாம் என்பது போல இவ்வசனம் உள்ளது. இவ்வசனத்தை தமிழாக்கம் செய்தவர்கள் கூட இப்படித் தான் பொருள் கொண்டுள்ளார்கள்.
இவ்வசனத்தில் உள்ள பிரச்சனை என்ன? இவ்வசனத்துக்கும் பெட்ராவிற்கும் சம்மந்தமென்ன? இவ்வசனம் எப்படி “இஸ்லாமின் பிறப்பிடம் பெட்ரா” என்பதை நிருபிக்கும்? போன்ற கேள்விகள் வாசகர்களுக்கு எழும். அதற்கான பதிலை இப்போது பார்ப்போம்.
சோதோம் கொமோரா எங்கு உள்ளது?
அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர், லூத் வாழ்ந்த ஊர் ஆகும். இந்த லூத் வாழ்ந்த ஊர் “சோதோம்” ஆகும், அதன் பக்கத்தில் இருக்கும் இன்னொரு ஊர் ”கொமோரா” ஆகும். இந்த இரண்டு ஊர்களும், சவக்கடலுக்கு அருகாமையில் இருப்பதை தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன [6]. ஆபிரகாமும் லோத்துவும் ஒன்றாக வாழ்ந்தவர்கள், ஒரு குறிப்பிட்ட பிரச்சனையின் காரணமாக இருவரும் தனித்தனியாக புரிந்து வாழ்ந்தார்கள். சோதோம் கொமோரா அழிக்கப்பட்டு புகைக்காடாக இருந்த போது, ஆபிரகாம் அதனை தூரத்திலிருந்து பார்த்ததாக பைபிள் கூறுகிறது [6].
சவக்கடல் பகுதி மக்காவிற்கு அருகில் உள்ளதா? அல்லது பெட்ராவிற்கு அருகில் உள்ளதா?
குர்-ஆன் 11:83ன் படி, அல்லாஹ் அழித்த ஊர் (சவக்கடல் சுற்றுப்புறப்பகுதி) இஸ்லாமின் புனித பூமிக்கு தொலையில் இல்லை. அப்படியானால், இஸ்லாமின் புனித பூமி எது? மக்காவா அல்லது பெட்ராவா? இதனை அறிய மக்காவிற்கும் சவக்கடலுக்கும் இடையே உள்ள தூரத்தை நாம் கணக்கிடவேண்டும். அதே போல பெட்ராவிற்கும் சவக்கடலுக்கும் இடையே உள்ள தூரத்தை கணக்கிடவேண்டும்.
படம் 3: மக்காவிற்கும் சவக்கடலுக்கும் இடையே உள்ள தூரம் – 1211 கி.மீ.
படம் 4: பெட்ராவிற்கும் சடக்கடலுக்கும் இடையே உள்ள தூரம் – 137 கி.மீ.
(இந்த தூரங்கள் நேர்க்கோட்டின் படி கணக்கிடப்பட்டுள்ளது, அதாவது இவ்விடங்களுக்கு வானவூர்தியில் சென்றால், மேற்கண்ட தூரம் நமக்கு வரும். தரை வழியில் கணக்கிட்டால், பாலைவனம், மலைகள், காட்டுப்பகுதி என்று பல தடங்கல்களை கடந்துச் சென்றால், தூரம் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதை கவனத்தில் வைக்கவும்.)
இன்னொரு முறை குர்-ஆன் 11:83 வசனத்தின் கடைசி பகுதியைப் படிப்போம்:
11:83. . . . . (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை. (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)
11:83. . . . (புரட்டப்பட்ட) அவ்வூர் இவ்வக்கிரமக்காரர்களுக்கு வெகு தூரமுமல்ல; (விரும்பினால் அதனை இவர்கள் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.) (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)
11:83: . . . அவ்வூர் (இந்த) அநீதி இழைத்தோருக்குத் தொலைவில் இல்லை. (பிஜே தமிழாக்கம்)
மேற்கண்ட பகுதியை படிப்பவர்களின் மனதில் தோன்றும் பிம்பம்/தூரம் என்னவாக இருக்கும்? அல்லாஹ்வால் அழிக்கப்பட்ட ஊர் இஸ்லாமின் புனித பூமிக்கு 1200 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் என்று கருதமுடியுமா? அல்லது இஸ்லாமின் புனித பூமிக்கு 100-200 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் என்று கருதமுடியுமா?
”அவ்வூர் அதிக தொலைவில் இல்லை” என்பது – 1200 கிலோ மீட்டருக்கு பொருந்துகின்றதா? அல்லது 130 கிலோ மீட்டருக்கு பொருந்துகின்றதா?
இரண்டு நாட்கள் பிரயாணமா? அல்லது பன்னிரண்டு நாட்கள் பிரயாணமா?
பெட்ராவிலிருந்து ஒரு குதிரையில் பிராயாணப்பட்டுச் சென்றால், ஒரு நாளுக்கு 100 கிலோமீட்டர் தூரம் கடந்தாலும், சவக்கடல் பகுதியை அடைய (130 கி.மீ. கடக்க) 1-2 நாட்கள் பிடிக்கும். ஆனால், இதே போல, மக்காவிலிருந்து சவக்கடல் பகுதியை அடைய குறைந்த பட்சம் 12 நாட்கள் பிடிக்கும் (100 கி.மீ. * 12 நாட்கள் = 1200 கி.மீ.). மேலும், பாலைவனப் பகுதிகளில், குதிரைகளை விட ஒட்டகப்பிரயாணமே சரியாக இருக்கும். ஒட்டகத்தோடு பிராயாணித்தால் இன்னும் நாட்கள் அதிகமாகும் என்பதை மனதில் வைக்கவும்.[7]
ஒரு ஊரை சென்றடைய 12 நாட்கள் பிடிக்கும் தூரத்தையா அல்லாஹ் “அதிக தொலைவு இல்லை” என்று குர்-ஆன் 11:83ல் சொல்கின்றான்? ஓரிரு நாட்களில் சென்று அடையக்கூடிய ஊரைப் பற்றிச் சொல்லும்போது “அதிக தொலைவு இல்லை” என்றுச் சொல்வது தான் சரியாக இருக்கும். குர்-ஆன் 11:83ஐ மக்காவோடு ஒப்பிடும் போது, அது சாத்தியமில்லாத ஒன்றாக தெரிகின்றது, ஆனால் இதே வசனம் பெட்ராவோடு ஒப்பிடும் போது சரியாக பொருந்துவதை காணமுடியும்.
குர்-ஆன் 11:83ம் வசனம் பெட்ராவில் இறக்கப்பட்டு இருக்கவேண்டும், ஏனென்றால், இவ்வசனத்தின் படி, அல்லாஹ் அழித்த ஊரானது (சவக்கடல் பகுதியானது) பெட்ராவிலிருந்து 137 கிலோ மீட்டர் தூரமிருக்கிறது. முஹம்மது இவ்வசனத்தை சொன்ன போது, அம்மக்களுக்கு தெரிந்த விஷயமாக இது இருந்தபடியினாலும், அப்பகுதி பெட்ராவிற்கு அருகில் இருந்தபடியினாலும், அவர்களுக்கு குர்-ஆனின் எச்சரிக்கை சரியாக புரிந்திருக்கும். எனவே, இவ்வசனத்தில் சொல்லப்பட்ட விவரங்களின் படி, இஸ்லாமிய புனித பூமி பெட்ரா என்று கருதலாம்.
”இஸ்லாமிய புனித பூமி மக்கா ஆகும்” என்றுச் சொல்வது குர்-ஆன் 11:83ம் வசனத்தோடு மோதுவதற்கு சமமாகும்.
ஒரு சராசரி மனிதன் இவ்வசனத்தை படிக்கும் போது, அல்லாஹ் அழித்த ஊரானது இஸ்லாமிய புனித பூமிக்கு அருகில் இருக்கும் இடமாக இருக்கும் என்று தான் கருதுவான்.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கமும் குர்-ஆன் 11:83ம் வசனமும்
இதுவரை மூன்று தமிழாக்கங்களிலிருந்து குர்-ஆன் 11:83ஐ ஆய்வு செய்தோம். IFT தமிழாக்கத்தில் இவ்வசனம் இன்னொரு வகையாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனையும் நாம் ஆய்வு செய்துவிடுவோம். ஒருவேளை IFT யின் குர்-ஆன் தமிழாக்கம் அரபி மூலத்திற்கு அதிக நெருக்கமான தமிழாக்கமாக இருக்குமா? மக்காவிற்கு சாதகமான மொழியாக்கமாக இது இருக்குமா? என்பதை இப்போது பார்ப்போம்.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:
11:83. அக்கற்கள் ஒவ்வொன்றும் உம் இறைவனால் அடையாளம் இடப்பட்டிருந்தது! மேலும் அக்கிரமக்காரர்களுக்கு இது போன்ற தண்டனை தொலைவில் இல்லை!
இந்த தமிழாக்கத்தின் கடைசிப் பகுதியைப் பாருங்கள். “அக்கிரமக்காரர்களுக்கு இது போன்ற தண்டனை தொலைவில் இல்லை” என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. மற்ற தமிழாக்கங்கள், ”அல்லாஹ் அழித்த அந்த ஊர் தொலைவில் இல்லை” என்று சொல்லும் போது, இவர் “ஊர் என்ற இடத்தில் தண்டனை” என்று தமிழாக்கம் செய்துள்ளார்.
அரபி மூலத்தில் “ஊர் என்றும் இல்லை, தண்டனை என்றும் இல்லை” அதற்கு பதிலாக “அது(ஹிய)” என்று தான் உள்ளது [8]. மொழியாக்கம் செய்பவர்கள், தங்களுக்கு தோன்றியபடி மொழியாக்கம் செய்கிறார்கள்.
சரி, விஷயத்துக்கு வருவோம். இந்த தமிழாக்கம் என்னுடைய இந்த கட்டுரையின் கருப்பொருளுக்கு பொருந்தவில்லையே! என்று வாசகர்கள் எண்ணலாம், ஆனால், IFTயின் இந்த தமிழாக்கம் உண்மையில் ”அல்லாஹ்வை பொய்யனாக்குகிறது” என்பதை இப்போது காண்போம்.
தண்டனை வெகுதொலைவில் இல்லை:
இந்த IFTயின் தமிழாக்கத்தின்படி, முஹம்மதுவை துன்புறுத்துகின்ற அக்கிரமக்காரர்களுக்கு, தண்டனை வெகு தொலைவில் இல்லை. அப்படியென்றால், லூத் உடைய ஊரார்களை அல்லாஹ் எப்படி அழித்தானோ, எப்படி வானத்திலிருந்து தண்டனையை இறக்கி அவ்வூரை புரட்டிப்போட்டானோ அதே போல, இம்மக்களையும் அல்லாஹ் புரட்டிப்போடும் தண்டனை வெகு தொலைவில் இல்லை. சீக்கிரத்தில் மக்காவின் மக்களை அல்லாஹ் அழித்துப்போடுவான் என்று இவ்வசனம் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன் படி பார்த்தால், குர்-ஆன் 11:83ம் வசனம் ஒரு “தீர்க்கதரிசனமான” வசனமாகும். முஹம்மதுவை துன்புறுத்துகின்ற மக்காவினரும், மக்கா ஊரும், அல்லாஹ்வால் வானத்திலிருந்து தண்டனை இறக்கப்பட்டு, லூத்துவுடைய ஊரைப் போல அழிக்கப்படும். ஆனால், இந்த வாக்குறுதியை அல்லாஹ் ஏன் நிறைவேற்றவில்லை? மக்காவினரை எப்போது அல்லாஹ் அழித்தான்? மக்காவை குர்-ஆன் 11:83ன் படி அல்லாஹ் எப்போது அழித்தான்?
சுருக்கமாகப் பார்த்தால், குர்-ஆன் 11:83ல் சொல்லப்பட்ட தண்டனை இன்று வரை மக்காவினரின் மீதும், மக்காவின் மீதும் நிறைவேறவில்லை. மக்காவினரில் பலர் முஹம்மதுவோடு சண்டை போட்டு மரித்தார்களே என்று நீங்கள் சொல்லக்கூடும், ஆனால், குர்-ஆன் 11:83 சொல்வது போரில் அவர்களை அழிப்பேன் என்பதுப் பற்றியல்ல. லூத்துடைய ஊரை அழித்தவண்ணமாகவே அழிப்பேன் என்று சொன்னது பற்றியது தான். மேலும், முஹம்மது மக்காவை ஆக்கிரமித்த போது, பெரிய போர் இல்லாமல், இரத்தம் சிந்தாமல் (சிலரை மட்டும் கொன்றார்கள்), மக்காவை ஆக்கிரமித்தார்கள். பெரும்பான்மையான மக்காவினர் கொல்லப்படாமல் காக்கப்பட்டனர். ஆக, குர்-ஆன் 11:83ம் வசனத்தின் வாக்குறுதியை அல்லாஹ் மறந்துவிட்டார் என்றுச் சொல்லலாம்.
இப்போது கீழ்கண்ட இரண்டு தெரிவுகளில், ஒன்றை நாம் தெரிவு செய்யவேண்டும்:
1) IFTயின் தமிழாக்கத்தின் படி, குர்-ஆன் 11:83ல் லூத்துடைய ஊரை அழித்தது போல மக்காவையும் அழிப்பதாக அல்லாஹ் வாக்கு (தீர்க்கதரிசனம்) கொடுத்தான். ஆனால், அல்லாஹ்வின் இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறவில்லை.
2) இதர தமிழாக்கங்களின் படி, அல்லாஹ்வால் அழிக்கப்பட்ட ஊர், மக்காவிற்கு வெகு தொலைவில் இல்லை, இதனால் இஸ்லாமின் புனித பூமி மக்கா இல்லை, அது பெட்ரா ஆகும்.
முஸ்லிம்கள் இவ்விரு தெரிவுகளில் எதனை தெரிவு செய்யப்போகிறார்கள்? இதில் எதனை தெரிவு செய்தாலும், அது மக்காவிற்கும், இஸ்லாமுக்கும் பிரச்சனையாகவே இருக்கிறது என்பதை காணமுடியும். தமிழ் முஸ்லிம்கள் இக்கட்டுரைக்கு பதில் அளித்தால், நான் இக்கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்களை மறுபரிசீலனை செய்வேன்.
அடுத்தடுத்த கட்டுரைகள்:
இந்த கட்டுரையில் ஆய்வு செய்யப்பட்ட குர்-ஆன் 11:83 வசனம் பற்றி சரித்திர ஆசிரியர் கிப்சன் தம்முடைய புத்தகத்தில் குறிப்பிடவில்லை. நான் குர்-ஆன் தமிழாக்கங்களை படிக்கும் போது என் எண்ணத்தில் தட்டிய பொறிதான் இந்த கட்டுரை. நம்முடைய அடுத்தடுத்த கட்டுரைகளில், பெட்ரா பற்றி ஆசிரியர் கிப்சன் முன்வைத்த ஆதாரங்களைப் பார்ப்போம்.
அடிக்குறிப்புக்கள்:
[1] புதிய ஏழு உலக அதிசயங்கள் - https://ta.wikipedia.org/s/mz8
[2] New7Wonders of the World - https://en.wikipedia.org/wiki/New7Wonders_of_the_World
[3] பெட்ரா - https://ta.wikipedia.org/s/dt
[4] Petra - https://en.wikipedia.org/wiki/Petra
[5] 5a) https://en.wikipedia.org/wiki/Sodom_and_Gomorrah,
5b) https://en.wikipedia.org/wiki/Bab_edh-Dhra,
5c) https://en.wikipedia.org/wiki/Numeira
[6] 6a) http://www.christiananswers.net/q-abr/abr-a007.html,
6b) http://www.bibleplaces.com/numeira.htm,
6c) http://www.bibleplaces.com/babedhdhra.htm,
6d) http://www.icr.org/article/have-sodom-gomorrah-been-discovered/
6f) http://www.accuracyingenesis.com/sodom.html
[7] மலைகள் மற்றும் கரடுமுரடாண பாதைகள் போன்றவற்றில் ஒரே வேகத்தில் குதி்ரையில் பிரயாணிக்க முடியாது. சராசரியாக ஒரு நாளுக்கு 100 கிலோ மீட்டர் என்று நாம் கருதலாம். குதிரைகள் ஒரு மணிக்கு 50 கிலோ மீட்டரை விட அதிகமான வேகத்தில் ஓடும் திறனுள்ளது. ஆனால், ஓய்வு இல்லாமல் பல மணி நேரம் அதுவும், கரடுமுரடான பாதையில் ஓடும் போது, வேகமும் குறையும், சோர்வும் உண்டாகும். குதிரயின் உண்மை வேகத்தைப் பற்றி அறிய இந்த தொடுப்பை சொடுக்கவும் - http://www.speedofanimals.com/animals/horse
[8] 11:83 Transliteration - Musawwamatan AAinda rabbika wama hiya mina alththalimeena bibaAAeedin. Hiya