கேள்வி 5: நான் கிறிஸ்தவத்தை தழுவியுள்ளேன் - உணவு விஷயத்தில் ’ஹலால் ஹராம்’ பற்றி கிறிஸ்தவம் என்ன சொல்கிறது?

(முந்தைய கட்டுரை: கேள்வி 4 - நான் புதிதாக கிறிஸ்தவத்தை தழுவியுள்ளேன். கிறிஸ்தவத்தில் ஹலால், ஹராம் என்பவைகள் உண்டா? நான் எவைகளை பின்பற்ற வேண்டும்? எவைகளை பின்பற்றக்கூடாது?)

இஸ்லாமிய பின்னணியிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டர்களுக்கு வரும் பொதுவான கேள்விகளில் இதுவும் ஒன்று. இதனை கேள்வி என்றுச் சொல்லாமல், சிக்கல் என்றுச் சொல்லலாம். எவைகளை சாப்பிடுவது, எவைகளை விட்டுவிடுவது? சாப்பிடக்கூடாததை சாப்பிட்டுவிட்டால், இறைவன் தண்டித்துவிடுவானோ? என்ற பயம் பொதுவாக வருவதுண்டு. ஒரு மதத்தை பின்பற்றினால், அது நம்முடைய “உணவு, உடை மற்றும் கலாச்சாரத்தை மாற்றவேண்டும்” என்று முஸ்லிம்கள் தவறாக போதிக்கப்பட்டுள்ளார்கள். இதனை விளைவு தான் இப்படிப்பட்ட கேள்விகள் எழுவதற்கு காரணம்.

நீங்கள் முஸ்லிமாக இருந்து, இப்போது இயேசுவை பின்பற்ற முடிவு செய்துள்ளீர்கள். இதனால், உங்களுடைய உணவு பழக்கங்கள், உடைகள், இதர கலாச்சார பழக்கங்கள் மாறுமா? என்று கேள்வி கேட்கிறீர்கள்.  ஒருவர் இயேசுவை பின்பற்ற விரும்பினால், ‘அவர் மனமாற்றம் அடைந்தால் போதும், உணவு மாற்றம், உடைமாற்றம், கலாச்சார  மாற்றம் அடையத்தேவையில்லை’.  இதனை ஒருவரியில் சொன்னால் பயன் தராது, எனவே, கீழ்கண்ட தலைப்புகளில் சிறிது விளக்கிவிடுகிறேன்.

1) உணவு நம்மை இறைவனிடமிருந்து பிரிக்காது

2) கிறிஸ்தவத்தில் உணவில் ஏதாவது கட்டுப்பாடு உண்டா?

3) பழைய ஏற்பாட்டு உணவு கட்டுப்பாடுகளை கிறிஸ்தவர்கள்   பின்பற்றவேண்டுமா?

4) முடிவுரை


1)   உணவு நம்மை இறைவனிடமிருந்து பிரிக்காது

மனிதனை உருவாக்கிய இறைவனுக்கு மனிதனின் உடலில் உணவின் பங்கு என்னவென்று நன்றாகத் தெரியும். சாப்பிடும் உணவு, எங்கு செல்கிறது, எப்படி ஜீரணமாகிறது, உடலுக்கு எப்படி ஊட்டச்சத்து கிடைக்கிறது, கடைசியாக கழிவுப்பொருளாக மாறி எங்கு சென்று வெளியே வருகிறது என்று அனைத்தையும் அறிவான் இறைவன். சாப்பிடும் உணவு ஒரு போதும் தன்னிடமிருந்து மனிதனை பிரிக்காது என்று இறைவன் அறிவான். ஆனால், உலக மதங்களை பார்க்கும் போது, உணவு விஷயத்தில் ஏதோ ஒரு கட்டுப்பாட்டை அவைகள் விதித்துள்ளதை பார்க்கமுடியும். உதாரணத்திற்கு, இந்துக்கள் சில நாட்களில் மாமிசம் உண்ணமாட்டார்கள். இஸ்லாமுக்கு வந்தால், கோழி, ஆடு போன்றவைகளை அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அறுக்கவில்லையென்றால் அதனை சாப்பிடக்கூடது என்ற தடை உள்ளது. அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி, ஒரு மிருகத்தை கொன்றால், அது ஹலால் எனப்படுகின்றது, மற்றவை ஹராம் எனப்படுகின்றது.

இதனால் தான் ஹோட்டல்களில், இதர கடைகளில் ”ஹலால்” என்று எழுதியிருப்பதைக் காணமுடியும்.

ஆரோக்கியத்தைக் கணக்கில் கொண்டு சில உணவுகளை நாம் உண்ணக்கூடாது என்பது உண்மையே, ஆனால், முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அறுப்பதைத் தான் உண்ணவேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

உணவு தேவனையும் மனிதனையும் பிரிக்காது என்று இயேசு தெளிவாகச் சொல்லியுள்ளார்:

15:11  வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். 15:17  வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? 15:18  வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். 15:19  எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். 15:20  இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார். (மத்தேயு 15:11, 17-20)

இவ்வசனங்களில் தீட்டு என்றுச் சொல்வது, தேவனையும் மனிதனையும் பிரிக்கும் தீய செயல்கள் ஆகும். சாப்பிடுவது தீய செயல் அல்ல. திருடுவதும், கொலைசெய்வதும், விபச்சாரம் செய்வதும், தீய சிந்தனைகளில் இருப்பதும், பொய் சொல்வதும் தான் தீய செயல்கள். இவைகள் எங்கேயிருந்து வருகின்றன, அதை கவனித்து சரி செய்துக்கொள்ளுங்கள். வயிற்றுக்குள் போகும் உணவு பற்றி கவலை வேண்டாம் என்று இயேசு ஒரு நல்ல கோட்பாட்டை சொல்லியுள்ளார்.

பொய் மதங்களின் அடையாளங்களில் ஒன்று:

ஒரு குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது என்று ஒரு மதம்  கட்டுப்பாடு விதித்தால், அவர்கள் அம்மத்தின் மூலமாக வியாபாரம் செய்யப் பார்க்கிறார்கள் என்று அர்த்தம் அல்லது மனிதனின் பலவீனத்தை தங்கள் ஆதாயத்துக்காக பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என்று அர்த்தம். பொதுவாக ஒரு சராசரி மனிதனின் பலவீனம் இப்படி இருக்கும். அதாவது ஒரு மதம் என்றுச் சொன்னால், அது கடினமான சட்டங்களை விதிக்கவேண்டும், சாப்பிடுவதில், இறைவனை தொழுதுக்கொள்வதில் சில சடங்காச்சாரங்களை விதிக்கவேண்டும் என்கின்ற தவறான எதிர்ப்பார்ப்பு அவனுக்கு  உள்ளது.

’நீ இந்த குறிப்பிட்ட நாட்களில் மாமிசம் உண்ணக்கூடாது’ அப்போது தான் உன் வேண்டுதல்களை நான் கேட்டு, நன்மை செய்வேன் என்றுச் சொன்னால், மனிதன் நம்புகின்றான். அற்பமான காரியங்களில் தன்னை சங்கடப்படுத்தும் இறைவன்/சாமி தான் சரியான தெய்வம் என்று நம்புகிறான் மனிதன். ஆனால், அதே மனிதனிடம், நீ எந்த ஒரு மத சடங்காச்சாரத்தையும் பின்பற்றத் தேவையில்லை, கர்பூரம், ஊதுவத்தி, மெழுகு வத்திகளை என் சந்நிதிக்கு வந்து கொளுத்த வேண்டியதில்லை,  ஆனால், உண்மையான மனதுடன் என்னை வேண்டினால் போதும், நான் நன்மைச் செய்வேன் என்று இறைவன் சொன்னால், அதே ‘மனிதன்’ நம்பமாட்டான், அதனை சந்தேகிப்பான்.

விடுதலைத் தரும் மதம் தனக்குத் தேவையில்லை என்று மனிதன் தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறான். இது தான் மனிதனின் பலவீனம் அல்லது தவறான எதிர்ப்பார்ப்பு.

இதனால் தான் பொய்யான அல்லது தவறான மதங்களில் அனேக மூட நம்பிக்கைகள், மத சடங்காச்சாரங்கள், உணவுகளில் கட்டுப்பாடுகள், இறைவனை தொழுதுக்கொள்வதில் சில வழிமுறைகள், சட்டங்கள் போன்றவை மனிதர்களால் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது.

மனிதனைப் பார்த்து இறைவன் ‘நீ முழுமனதோடு என்னை தொழுதுக்கொள், எந்த ஒரு சடங்காச்சாரங்களையும் செய்யாதே, அவைகள் எனக்குத் தேவையில்லை’ என்றுச் சொன்னால், முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஆனால், கிறிஸ்தவம் அதனைத் தான் சொல்கிறது. இதனால் தான் ‘கிறிஸ்தவர்கள் விடுதலையானவர்கள்’ என்று நான் சொல்கிறேன்.

ஆக, எந்த ஒரு உணவும் ஒரு போதும் நம்மை இறைவனிடமிருந்து பிரிக்காது.

இக்கேள்வியைக் கேட்டவருக்குச் சொல்லிக்கொள்வது, நீங்கள் கிறிஸ்துவை நம்பியுள்ளீர்கள், உங்களை தேவையில்லாத சட்டத்திட்டங்கள் ஆள இடம் கொடுக்க வேண்டாம். இஸ்லாமில் நீங்கள் இருக்கும் போது கற்றுக் கொண்ட மூட நம்பிக்கைகளை, வெளிப்படையான மத சடங்காச்சாரங்களை நீங்கள் மறக்கவேண்டும்.

(கவனிக்கவும்: ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், புனித வெள்ளிக்கு முன்பாக, 40 நாட்கள் மாமிச உணவு உண்பதில்லை. (ருசியுள்ள உணவு என்பது வெறும் அசைவம் தான் என்று சிலர் எண்ணியுள்ளனர். ஆனால், சைவ உணவையும் சரியாக சமைத்தால் செம ருசியாக இருக்கும் என்பது இன்னொரு ருசியான தகவல்.) இந்த சட்டம், மனிதர்கள் உருவாக்கியவை, இயேசுவோ, அப்போஸ்தலர்களோ,  இப்படி 40 நாட்கள் மாமிசம் உண்ணவேண்டாம் என்றுச் சொன்னதில்லை, புதிய ஏற்பாடும் இதனை அங்கீகரிப்பதில்லை. லெந்து நாட்கள் (Lent days) என்றுச் சொல்லி ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி- மார்ச் மாதங்களில் 40 நாட்கள் இப்படி குறிப்பிட்ட உணவுகளை உண்ணாமல், துக்கங்கொண்டாடுகிறார்கள். இதனால், இறைவனிடம் சேரமுடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள், ஆனால், வேதத்தில் இதற்கு ஆதாரமில்லை).

இறைவனின் அதீத அன்பை பெறுவதற்காக உணவில் கட்டுப்பாடு வேண்டும் என்று நம்புகிறவர்கள், இனி உணவு பற்றி கவலைப்படாமல் இயேசு சொன்ன தீய எண்ணங்கள் தங்கள் உள்ளங்களிலிருந்து வெளியே வருகின்றனவா? என்பதை கவனிக்கவேண்டும். அவைகள் தான் மனிதனையும் இறைவனையும் பிரிக்கிறது, அவைகளை எப்படி தவிர்க்கவேண்டும் என்பதை பார்க்கவேண்டும். ஹலால் உணவு உங்களை இயேசுவிடமிருந்து ஒருபோதும் பிரிக்காது.

2)   கிறிஸ்தவத்தில் உணவில் ஏதாவது கட்டுப்பாடு உண்டா?

மேலே சொன்னது போல, கிறிஸ்தவத்தில் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இல்லை. ஏனென்றால், வாய்க்கு ருசியானவைகளை தவிர்த்தால் ‘இறைவன்’ என்னை நேசிப்பான் என்றுச் சொல்வது, பொய் மார்க்கங்கள் செய்யும் மலைப்பிரசங்கங்கள்.

கிறிஸ்தவம் எதிர்ப்பார்ப்பதெல்லாம், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூரவேண்டும்.  உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூரவேண்டும் என்பவைகளைத் தான் (மத்தேயு 22:37-40).

இதோ ‘இந்த ஒரு குறிப்பிட்ட உணவை, இந்த குறிப்பிட்ட நாட்களில் உண்ணக்கூடாது’ என்ற ஒரு கட்டளையும் கிறிஸ்தவத்தில் இல்லையா? என்று ஆச்சரியமாக சிலர்  கேள்வி கேட்பார்கள்.

இயேசு போதித்த தெளிவான, சிம்பிள் வாழ்க்கை முறையை நாம் சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும். யாரோ ஒருவர் எப்போதும் நம்மீது ஒரு பெரிய கல்லை வைத்து அழுத்திக்கொண்டே இருக்கவேண்டும் என்று முஸ்லிம்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால், இயேசுவோ உங்களை விடுதலையாக்கியுள்ளார், இது தான் கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடு. முஸ்லிம்களையும், இந்துக்களையும் பார்த்து கிறிஸ்தவம் கேட்கும் கேள்வி என்னவென்றால் ‘ஒரு மார்க்கம் என்றால், அது உணவு விஷயத்தில் நிச்சயமாக கட்டுப்பாடு விதித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா?’.

இந்து மற்றும் இஸ்லாமிலிருந்து கிறிஸ்துவை பின்பற்ற விரும்புகிறவர்கள், தாங்கள் எல்லா விஷயங்களிலிருந்தும் விடுதலையான விஷயத்தை புரிந்துக்கொள்ளவேண்டும்.

மருத்துவர்கள் உங்களுடைய உடல் நலத்திற்காக சில உணவுகளை தவிர்த்துவிடுங்கள் என்றுச் சொன்னால், அவ்வுணவுகளை சாப்பிடக்கூடாது. இந்த கட்டுப்பாடு கிறிஸ்தவம் விதித்த ஒன்றல்ல, நம்முடைய உடல் நலத்திற்காக நாம் ஒதுக்கியது. சிலருக்கு பால் பொருட்கள் உடலுக்கு ஏற்காது, சிலருக்கு மாமிசம் ஏற்காது, சிலருக்கு சில காய்கறிகள் ஏற்காது, எனவே, நம் உடல் நலத்துக்கு எது நல்லதோ அதனைச் செய்வோம், தீயதை விட்டுவிடுவோம்.

உணவை நாம் உடல் வளர்ச்சிக்கும், அனுதின வாழ்வுக்கு தேவையான சக்தியை கொடுக்கவுமே சாப்பிடுகிறோம், பக்திக்காக அல்ல.

ஒரு கிறிஸ்தவன் யாருடைய கட்டாயமும் இல்லாமல், சுயமாக ஒரு முடிவு செய்கிறான் என்று வைத்துக்கொள்வோம் அதாவது ‘நான் இனி மாமிசம் உண்ணமாட்டேன்’ என்றுச் சொல்லி, அவன் வாழ்நாளெல்லாம் சாப்பிடாமல் இருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. மனிதன் தன் மனதில் நியமித்தப்படி எதையும் செய்யலாம், இதனை பைபிள் தடை செய்வதில்லை, அது அவன் விருப்பம். ஆனால், இப்படி மாமிசம் சாப்பிடக்கூடாது என்று அவன் மற்றவர்களை கட்டாயப்படுத்தினால் அது தவறான ஒன்றாகும். இதனை பைபிள் ஒருபோதும் அனுமதிக்காது. இதே போல, ஹலால் உணவையோ, இதர உணவையோ உண்ணக்கூடாது என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது.

மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று தற்காலத்தில் இந்தியாவில் சில இந்துக்கள் பிரச்சனையை உண்டாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு முஸ்லிம், கிறிஸ்தவன் மற்றும் நாத்தீகன் எவைகளைச் சாப்பிடவேண்டும், எவைகளை சாப்பிடக்கூடாது என்று கட்டளையிடும் உரிமை இவர்களுக்கு யார் கொடுத்துள்ளார்கள் என்று நாம் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். உனக்கு விருப்பமில்லையென்றால், அதை உன்மட்டும் வைத்துக்கொள், என் மீது திணிக்காதே! என்று எல்லோரும் சொல்கிறோம்.

ஆரோக்கிய முறையில் சமைக்கப்பட்ட மற்றும் உடலுக்கு நன்மை செய்யும் எந்த உணவையும், கிறிஸ்தவன் சாப்பிடலாம். ஒரு கிறிஸ்தவன் முஸ்லிம்களின் ஹோட்டல்களிலும் ஹலால் கறி சாப்பிடலாம், இந்துக்களின் ஹோட்டல்களிலும் கறி சாப்பிடலாம். பியூர் வெஜிடேரியன் ஹோட்டல்களில் சாம்பார் இட்லிக்களை வாங்கி நன்றாக விளாசலாம் (சாம்பார் பக்கெட்டை பக்கத்தில் வைத்துக்கொண்டு). அதே போல, ஒரு கிறிஸ்தவன் நான் இனி மாமிசத்தை சாப்பிடமாட்டேன், மரக்கறிகளை மட்டுமே சாப்பிடுவேன் என்று முடிவு செய்துக்கொண்டு, அப்படியே வாழலாம். எல்லாம் அவனவனுக்கு சம்மந்தப்பட்டது.  சாப்பிடுவதில் எந்த கட்டுப்பாடும் இல்லை.

(ஒரு குட்டி லாஜிக்: அல்லாஹ் இறைவன் இல்லை என்று கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள், அப்படியானால், முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பெயரில் (ஹலால்) அறுக்கும் கறியை வாங்கி ஏன் சாப்பிடுகிறார்கள்? உங்கள் வேதத்தின் படி அல்லாஹ், அந்நிய தெய்வம் அல்லவா? என்று சில முஸ்லிம்கள் கேள்வி கேட்கலாம்.

உங்கள் கேள்வியில் சாரம் இருக்கிறது, ஆனால், லாஜிக் மிஸ்ஸாகிறது. அதாவது, அல்லாஹ் என்ற ஒருவன் உலகில் இல்லை என்பதை நம்புபவன் கிறிஸ்தவன், அப்படி இருக்க, இல்லாத ஒருவன் பெயரைச் சொல்லி, அறுக்கும் கறியை வாங்கி சாப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது. அல்லாஹ் என்பது ஒரு கற்பனைத் தானே! அல்லாஹ் ஒரு கற்பனை என்று நம்புபவன், அவன் பெயரைச் சொல்லி அறுக்கப்படும் மிருகத்திற்கு அல்லாஹ்வின் பாதிப்பு உண்டு என்று நம்புவது எப்படி சரியானதாக இருக்கும்? நிலாவில் வடை சுடும் ஆயாவின் பெயரில் அறுத்தால், அந்த மிருகத்தின் மாமிசத்தை சாப்பிடுபவனுக்கு ஏதாவது நன்மை/தீமை உண்டாகுமா? அதே போலத் தான் கிறிஸ்தவனுக்கும் ஹலால் செய்யப்பட்ட உணவு உண்பது. நிலாவின் ஆயாவும்! குர்-ஆனின் அல்லாஹ்வும் கற்பனையே!)

கடைசியாக, ஒரு ஆலோசனை. கிறிஸ்தவர்கள் உணவு விஷயத்தில் இரண்டு காரியங்களை மட்டும் கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டும். முதலாவதாக, ஒரு ஹோட்டலுக்கு போவதற்கு முன்பு, பாக்கெட்டில் செலவு செய்வதற்கு பணமிருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள், இரண்டாவதாக, உங்கள் உடல் நலத்தை இவ்வுணவு பாதிக்குமா என்பதை மட்டும் பாருங்கள். ஒன்று மட்டும் நிச்சயம், அதாவது உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை ஹலால் உணவு சாப்பிடுவதினால் ஒரு சதவிகிதமும் பாதிக்கப்படாது, எனவே உணவு விஷயத்தில் புகுந்து விளையாடுங்கள்.

பக்தியைப் பொருத்தமட்டில், எந்த உணவாக இருந்தாலும் சரி, அதனை சாப்பிடுவதினால் எந்த தீமையும் இல்லை, சாப்பிடாமல் இருப்பதினால் எந்த நன்மையும் இல்லை.

3)   பழைய ஏற்பாட்டு உணவு கட்டுப்பாடுகளை கிறிஸ்தவர்கள் பின்பற்றவேண்டுமா?

பைபிளில் இரு பிரிவுகள் உள்ளன, பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாட்டில் தேவன் கொடுத்த  சட்டங்களைப் பற்றி அறிந்துக்கொண்டால், மேற்கண்ட கேள்வி எழாது.

1) தேவன் பழைய ஏற்பாட்டு காலத்தில் கொடுத்த சட்டம், யூதர்களுக்கு/இஸ்ரேல் மக்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது.

2) பழைய ஏற்பாட்டுச் சட்டம், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. மேசியா வரும் வரை, அதாவது இயேசு வரும் வரை இஸ்ரேல் மக்கள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்கள். உலகத்தின் முடிவு வரை பின்பற்றக்கூடியவைகள் அல்ல.

3) மேசியா வந்த பிறகு, யூதர்களும் அச்சட்டங்களை பின்பற்றத்தேவையில்லை, அவர்கள் பழைய உடன்படிக்கையிலிருந்து புதிய (இயேசுவின்) உடன்படிக்கைக்கு மாறவேண்டும்.

4) யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட சட்டங்கள், அவர்கள் தேவனுக்கு கீழ்படிந்து வாழ கொடுக்கப்பட்டது. அதன் மூலம், தேவன் தான் கொடுத்த உடன்படிக்கையின் படி, அவர்களை காத்துக்கொள்வார்.

5) அச்சட்டங்கள் மூலமாக, இஸ்ரேல் மக்கள் அக்கால விக்கிர ஆராதனை மக்களோடு ஒப்பிடும் போது, ஒரு வித்தியாசமானவர்களாக காட்டுவதற்கு கொடுக்கப்பட்டது. முக்கியமாக, உணவு, உடை, சுகாதார சட்டங்கள் இந்த வித்தியாசத்தை காட்டுகின்றன.

6) சில சட்டங்கள் புதிய ஏற்பாட்டிலும் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டது, உதாரணத்துக்கு, பத்து கட்டளைகளைச் சொல்லலாம். 

7) அந்த 10 கட்டளைகளையும், இதர நற்செயல்கள் பற்றிய கட்டளைகளையும், இயேசு இரண்டு கட்டளைகளின் மூலமாக  நிறைவேற்ற கிறிஸ்தவர்களுக்கு கட்டளையிட்டார் (மத்தேயு 22:37-40).

8) ஆரோக்கியம், சுகாதாரம் பற்றிய கட்டளைகள் அக்கால சூழ்நிலைகளினால் உண்டாகும் வியாதிகளிலிருந்து யூதர்களை காப்பாற்றிக்கொள்ள கொடுக்கப்பட்டது.

9) அக்கால விக்கிர ஆராதனைகளில் பன்றிகள் பலியிடப்பட்டன, இதர செக்ஸ் செயல்களும் அவ்வாராதனைகளில் செய்யப்பட்டன, பிள்ளைகளை தெய்வங்களுக்கு பலியாக கொடுக்கப்பட்டன. இவைகளைச் செய்யாமல் யூதர்கள் வாழவேண்டுமென்பதால் பல கட்டளைகளை தேவன் அவர்களுக்கு கொடுத்தார். இவைகளில் உணவு சம்மந்தப்பட்ட கட்டளைகளும் உள்ளன.

எனவே, பழைய ஏற்பாட்டு கட்டளைகள் கிறிஸ்தவர்களை கட்டுப்படுத்தாது. அவைகளை நாம் பின்பற்றத் தேவையில்லை.

ஒட்டகம் பழைய ஏற்பாட்டின் படி, தடை செய்யப்பட்டுள்ளது. யாருக்கு தடை செய்யப்பட்டது? யூதர்களுக்கு மட்டுமே.

கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்கத்தக்க ஜீவ ஜந்துக்கள் யாதெனில்: மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசை போடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.  ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். (லேவியராகமம் 11:1-4)

மோசேயின் மூலமாக, ஹராமாக கொடுக்கப்பட்ட ஒட்டகத்தை, முஹம்மது ஹலாலாக மாற்றிவிட்டார். முஸ்லிம்கள் ஒட்டகம் சாப்பிடுகிறார்கள். அதே போல, யூதர்களின் ஓய்வு நாள், சனிக்கிழமை, முஸ்லிம்களின் தொழுகை நாள் வெள்ளிக்கிழமை. இப்படி ஏன் முஸ்லிம்கள், மோசேயின் சட்டத்தை மீறுகிறார்கள் என்று கேட்டால், எங்கள் நபி அதனை ஹலால் ஆக்கிவிட்டார் என்றுச் சொல்வார்கள். அதே போலத்தான், மேசியா கிறிஸ்தவர்களுக்கும் பலவற்றை ஹலாலாக மாற்றியுள்ளார்.

4) முடிவுரை:

இதுவரை கண்டவைகளின் சுருக்கம் இது தான்.

அ) பைபிளின் இறையியல் மிகவும் தெளிவாக எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது. உணவு மனிதனை நல்லவனாக மாற்றாது, கெட்டவனாகவும் மாற்றாது என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்.

ஆ) ’உணவு’ ஒரு அற்புதமான விஷயம். மனிதன் அனுபவிக்கும் அனேக நற்காரியங்களில்  உணவும் ஒன்று. மனதுக்கு பிடித்தமானதை, ஆரோக்கியத்தை கருத்தில் வைத்தவர்களாக, கேள்வி கேட்காமல் சாப்பிடலாம்.  

இ) இஸ்லாமிலிருந்து இரட்சிக்கப்படுபவர்கள், அனைத்து விதமான அடிமைத்தனத்திலிருந்து விடுதலை ஆக்கப்பட்டு இருப்பதினால், உணவை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம்.

ஈ) உடல் ஆரோக்கியத்தின் படி, சில உணவுகளை கிறிஸ்தவர்கள் தவிர்க்கலாம், இது உடல் சம்மந்தப்பட்டது மட்டுமே, விசுவாசத்துக்கும் இதற்கும் சம்மந்தமில்லை.

உ) உணவு விஷயத்தில், சுத்தமுள்ளவனுக்கு எல்லாமே ஹலாலாகத்தான் இருக்கும். அசுத்தமுள்ளவனுக்கு அனைத்தும் ஹராமாகத் தெரியும்.

வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.

இனியும்  ஏன் தயக்கம்! கணினியை லாக் செய்துவிட்டு வெளியே கிளம்புங்கள். கடைத்தெருவுக்குச் சென்று, கண்களில் படும் முதலாவது “அசைவ (Non-Vegetarian)” ஹோட்டலில் நுழைந்து, சூப்பரான உணவுகளை ஆர்டர் செய்து, ஒரு பிடி பிடித்து, பிள்’ஐ கட்டிவிட்டு வீடு வந்து சேருங்கள்.

கேள்வி 4: கிறிஸ்தவத்தில் ஹலால், ஹராம் என்பவைகள் உண்டா?பொருளடக்கம்

கேள்வி 6:

விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டது கிறிஸ்தவர்களுக்கு ஹலாலாகுமா? ஹராமாகுமா?