2016 ரமளான் (2) – நிலமெல்லாம் இரத்தம்

’மானுடகுலம்’ என்றால் அதற்கு ‘வெறும் அரபு நாடுகள்’ என்று அர்த்தமாகுமா?

(1. அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்)

அன்புள்ள தம்பிக்கு,

உன் விருப்பத்தின் படியே நான் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தை படிக்க ஆரம்பித்துள்ளேன். உனக்கு எப்படி நன்றி சொல்லவேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. நீ எனக்கு கரும்பு திண்ண கூலி மட்டும் கொடுக்கவில்லை, கரும்பு தோட்டத்தையே என் பெயரில் எழுதிவிட்டாய்.

எழுத்தாளர் பா. ராகவன் அவர்களின் புத்தகத்தை படிக்க என்னை கேட்டுக்கொண்டதற்காக, உன் வாயில் சக்கரையைத் தான் போடவேண்டும். நான் ஏற்கனவே சொன்னது போல, பாரா அவர்களின் புத்தகத்தில் வரும் தற்கால 'இஸ்ரேல் பாலஸ்தீனா' சண்டைப் பற்றி என் கருத்தைச் சொல்லாமல், பைபிள் மற்றும் குர்ஆனில் வரும் உண்மை விவரங்களை மாற்றி அவர் எழுதியிருந்தால், அவைகளுக்கு என் விமர்சனத்தை முன்வைப்பேன்.

அவர் நடுநிலையோடும், உண்மையை மறைக்காமலும் முக்கியமாக வேண்டாத மிகைப்படுத்தல் இல்லாமலும் இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்று நீ சொன்னாய். ஆனால், நான் படித்த முதல் அத்தியாயத்திலேயே சில மிகைப்படுத்தல்களை நான் கண்டு இருக்கிறேன். அதைப் பற்றி இந்த கட்டுரையில் என் விமர்சனங்களை, கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். 

முக்கியமாக, இனி நான் எழுதப்போகும் விமர்சன கட்டுரைகளை உனக்கு எழுதாமல், நேரடியாக பா ராகவன் அவர்களுக்கே எழுதப்போகிறேன். இடையிடையே உனக்கும் (முஸ்லிம்களுக்கும்) பயன்படும் சில கேள்விகளையும், விவரங்களையும் முன்வைப்பேன். நீ உன் பதில்களை முன்வைக்கலாம். நீ இக்கட்டுரைகளை படித்துவிட்டு, பாரா அவர்களுக்கும் அனுப்புவாய் என்று நம்புகிறேன். 


’மானுடகுலம்’ என்றால் அதற்கு ‘வெறும் அரபு நாடுகள்’ என்று அர்த்தமாகுமா?

மதிப்பிற்குரிய பாரா அவர்களே,

உங்களுக்கு என் வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எடுத்த எடுப்பிலேயே ஏன் இந்த வாழ்த்துதல்? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

இஸ்லாமைத்தொட்டு ஒரு புத்தகத்தை எழுதி, முஸ்லிம்களின் மனதில் எரிமலையாய் கடந்த 60 ஆண்டுகளாக எரிந்துக்கொண்டு இருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தின் (இஸ்ரேல் பாலஸ்தீனா பிரச்சனை) அணிவேர் வரைச் சென்று, முஸ்லிம்களிடம் அடிபடாமல் திரும்பி வந்து இருக்கிறீர்கள் என்றால், இது சாதனை இல்லையா? இது உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியல்லவா! அதற்காகத்தான் என் வாழ்த்துதல்களை முதலிலேயே சொல்லிவிட்டேன்.

தற்காலத்தில் இஸ்லாம் பற்றியும், முஹம்மது பற்றியும் யாராவது புத்தகம் எழுதினால், ஒன்று, அவருக்கு மரணம் கிடைக்கும் அல்லது மேன்மை கிடைக்கும். இவ்விரண்டில் ஏதாவது நிச்சயம் கிடைக்கும். உங்களுக்கு முஸ்லிம்கள் மத்தியிலே மேன்மை கிடைத்துள்ளது அப்படியானால், என்ன அர்த்தம்? ஒன்று நீங்கள் எழுதியவைகளை அவர்கள் (முஸ்லிம்கள்) அங்கீகரித்துக் கொண்டு இருக்கவேண்டும், அல்லது அவர்கள் அங்கீகரிக்கும்படியாக நீங்கள் எழுதியிருக்கவேண்டும். 

விஷயத்துக்கு வருகிறேன். உங்களின் நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தை படித்துக்கொண்டு இருக்கிறேன். உங்கள் எழுத்துக்களை படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். உங்கள் வரிகளை நான் பலமுறை ரசித்தும் ருசித்தும் படித்துள்ளேன்.  இந்த முறை, அவைகளை உரசிப்பார்க்க முடிவு செய்திருக்கிறேன், அக்னி பரிட்சை வைக்கப்போகிறேன். நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தில் நீங்கள் பைபிள் மற்றும் குர்ஆன் பற்றிய விவரங்களை எழுதியுள்ளீர்கள். மேலும், பல சரித்திர விவரங்களையும், 20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சனையாகிய இஸ்ரேல் பாலஸ்தீனாவை கையில் எடுத்துக்கொண்டு உங்கள் கருத்தை (ஆய்வை) சொல்லியுள்ளீர்கள். இந்த முறை நான் வெறும் பைபிள் மற்றும் குர்ஆன் பற்றிய உங்களின் கருத்துக்களுக்கு மட்டுமே என் விமர்சனங்களை வைக்கப்போகிறேன், ஏனென்றால், இதர இஸ்ரேல்-பாலஸ்தீனா விவரங்களை சரி பார்க்க எனக்கு நேரம் போதாது, தேவைப்பட்டால் பிறகு பார்க்கலாம்.

ஒரு நடுநிலை எழுத்தாளராக முக்கியமாக, முஸ்லிமல்லாத எழுத்தாளராக இருந்துக்கொண்டு நீங்கள் மாற்று மத வேதங்களில் உள்ள விவரங்களை எழுதியிருக்கிறீர்கள். இதர மார்க்க விஷயங்களையும், வேதங்களையும் ஆய்வு செய்து எழுதுவது என்பது வரவேற்கத்தக்கது, ஆனால் உண்மைக்கு புறம்பாக எழுதுவது என்பது ஆபத்தானதாகும். ஒரு மார்க்க விஷயங்களை மிகைப்படுத்தியும், இன்னொரு மார்க்க விஷயங்களின் உண்மையை மறைத்தும் எழுதுவது என்பது, உங்களைப்போன்ற எழுத்தாளர்களிடம் மக்கள் எதிர்ப்பார்க்காத ஒன்றாகும்.

ஒரு கிறிஸ்தவனாக, உங்களின் நிலமெல்லாம் இரத்தம் என்ற புத்தகத்தை படித்து, என் விமர்சனத்தை முன்வைக்க எனக்கு அனுமதி கொடுப்பீர்கள் என்று நம்புகின்றேன் (நீங்கள் அனுமதி கொடுத்தாலும், முஸ்லிம்கள் கொடுக்கமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்).

நான் உண்மைக்கு புறம்பான ஒன்றையும் எழுதவில்லை என்று நீங்கள் சொல்ல விரும்பினால், என் விமர்சனத்துக்கு பதிலைச் சொல்லும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 'மதிப்பிற்குரிய பாரா அவர்கள்' என்று ஆரம்பத்தில் அழைத்துவிட்டு, இடையில் வந்து மதிப்பு கொடுக்காமல் விமர்சித்தால் எப்படி? என்று கேள்வி கேட்காதீர்கள், ஏனென்றால்,'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!'. நீங்கள் பாராவாக இருந்தாலும் சரி, வேறுயாராக இருந்தாலும் சரி, குற்றம் குற்றமே.

நிலமெல்லம் இரத்தம் அத்தியாயம் 1 “அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்” விமர்சனம் தொடர்கிறது...

’மானுடகுலம்’ என்றால் அதற்கு ‘வெறும் அரபு நாடுகள்’ என்று அர்த்தமாகுமா?

திரு பாரா அவர்களே, முதல் அத்தியாயத்தில் நீங்கள் கீழ்கண்ட விதமாக எழுதியுள்ளீர்கள்.

பாரா அவர்கள் எழுதியது:

//ஒட்டுமொத்த மானுடகுலமே ஒரு தலைவரின் மரணச்செய்தியால் நிலைகுலைந்து போனது உண்மை.

. . .

இது வேறெந்தத் தலைவரின் மரணத்தின்போதும் இதற்குமுன் நடந்திராதது. வருத்தம் இருக்கும். துக்கம் இருக்கும். வாயடைத்துப் போகலாம். "அப்பா, செத்தானே" என்று சந்தோஷம் கூடச் சிலருக்குக் கொப்பளிக்கும். ஆனால் ஒட்டுமொத்த உலகமும் ஒரு சில நிமிடங்களாவது செயலற்றுச் சமைந்து நின்றதில்லை.// (நிலமெல்லாம் இரத்தம் – 1. அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்)

அரஃபாத்தின் மரண செய்தியால், மானுடகுலமே நிலைகுலைந்து போனார்கள் என்று நீங்கள் எழுதியிருப்பது உண்மைக்கு புறம்பானதாகும். ஒரு சின்ன விஷயத்தை மிகைப்படுத்திச் சொன்னதாகும். 

அரஃபாத் என்பவர் பாலஸ்தீனாவின் தலைவர், போராட்ட வீரர், இவர் மரித்த போது, அந்நாட்டவர் நிலைகுலைந்து போனார்கள் என்றுச் சொல்வது சரியானதாக இருக்கும். மேலும், இதர இஸ்லாமிய நாடுகளும் துக்கப்பட்டார்கள், நிலைகுலைந்து போனார்கள் என்றுச் சொல்வதும் சரியானதாகவே இருக்கும். ஏனென்றால், இஸ்ரேல் உருவாக்கப்பட்ட நாள் முதல், இதர இஸ்லாமிய நாடுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாலஸ்தீனாவிற்கு ஆதரவாக இருக்கிறார்கள். மேலும், இதர மேற்கத்திய, ஐரோப்பிய ஆசிய நாடுகளில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருக்கும் சில நாடுகளும் துக்கப்பட்டு இருந்திருப்பார்கள். ஆக, அரஃபாத்தின் மரணம் மேற்கண்ட தலைவர்களுக்கும், மக்களுக்கும் மட்டுமே துக்கத்தை கொடுத்திருக்கும், அவ்வளவு தான்.  தெளிவாக உண்மையைச் சொல்வதை விட்டுவிட்டு, ”மொத்த மானுடகுலம்” இவரது மரணத்தினால் நிலை குலைந்துப்போனது என்றுச் சொல்வது, “கொஞ்சம் அதிகம் தான்”. இப்படிப்பட்ட சின்ன விஷயத்தை மிகைப்படுத்திச் சொல்லவேண்டிய அவசியமென்ன?

மேலும் “ஒட்டுமொத்த உலகமும் ஒரு சில நிமிடங்களாவது செயலற்றுச் சமைந்து நின்றதில்லை”  என்றும் சொல்லியுள்ளீர்கள். 

அரஃபத்துடைய மரணத்திற்காக ஏன் ஒட்டுமொத்த உலகம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நிற்கும்? இவர் பாலஸ்தீனாவின் போராட்ட வீரர், தலைவர் மற்ற நாடுகளுக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம்?

வீரப்பாண்டிய கட்டப்பொம்மன் படத்தின் வசனம் தான் எனக்கு ஞாபகம் வருகிறது. உதாரணத்திற்கு இந்தியாவை எடுத்துக்கொள்வோம். அரஃபாத்துடைய மரணத்தினால் ஒட்டு மொத்த இந்தியா ஒரு நிமிடம் செயலற்று நிற்பதற்கு அரஃபாத், நம் மக்களோடு வயலுக்கு வந்தாரா? நாற்று நட்டாரா? ஏற்றம் இறைத்தாரா? அல்லது, கொஞ்சி விளையாடும் எங்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாரா? மாமனா? மச்சானா? 

அரஃபாத்துடைய கடைசி மரண ஊர்வலத்தை நான் வீடியோவில் பார்த்தேன், பாலஸ்தீனத்தின் மக்கள் துக்கப்பட்டது உண்மை தான், இதர முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் துக்கப்பட்டது உண்மை தான். அதற்காக உலகத்தில் உள்ள 190+ நாடுகளும் நிலைகுலைந்து நின்றது என்றுச் சொல்வது, ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. மேலும், ஆய்வு செய்து புத்தகங்களை எழுதும் உங்களைப் போன்றவர்களின் பேனாவிலிருந்து இப்படிப்பட்ட மிகைப்படுத்தல் வரிகள் வருவது, மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயமாகும்.

திரு எம்ஜிஆர் அவர்களின் கடைசி ஊர்வலத்தை பார்த்திருக்கின்றீர்களா?

நாட்டின் தலைவர்கள் முக்கியமாக மக்களுக்காக வாழும் தலைவர்கள் மரணிக்கும்போது, மக்கள் நிலைகுலைந்துப் போவதை நாம் பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, உலகின் எல்லா நாடுகளிலும் காணலாம். அவ்வளவு ஏன், நம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மரணித்த போது, சென்னையில் மக்கள் கண்ணீர் விட்ட காட்சியை யாராவது மறக்கமுடியுமா? உங்களைப்போன்ற எழுத்தாளர்களின் வரிகளால் அதனை மறைக்கத்தான் முடியுமா? எத்தனை இலட்சங்கள் சென்னையில் கூடிவிட்டார்கள். புரட்சித் தலைவரின் இறுதி ஊர்வலத்தை, அரஃபாத்தின் இறுதி ஊர்வலத்தோடு ஒப்பிட்டுப்பாருங்கள், அப்போது வித்தியாசம் புரியும். நான் மிகைப்படுத்தி எழுதினால் யார் கேட்பார்கள் என்ற குறுகிய எண்ணத்தில் நீங்கள் இப்படி எழுதுவது, ஒரு எழுத்தாளருக்கு அழகல்ல. இவர் நடிகர், அவர் போராட்ட வீரர் என்று வித்தியாசம் காணவேண்டாம். புரட்சித் தலைவரும் நடிகராக இருந்து, முதலமைச்சர் ஆனவர் தான், மக்களுக்கு சேவை செய்தவர் தான், மக்களுக்காக வாழ்ந்தவர் தான்.  இன்னு்ம் நம் முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்களின் இறுதி ஊர்வலத்தையும் பாருங்கள் மக்கள் அலையென கடந்துவந்தார்கள். 

அரஃபாத்திற்காக மக்கள் சிந்திய கண்ணீர் மற்றும் அவர்களின் அழுகையின் சத்தம் இராணுவ வீரர்களையும் ஒரு நிமிடம் அசைத்துவிட்டது என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. செண்டிமெண்டுக்கு யார் உருகமாட்டார்கள், இதற்கு இராணுவ வீரர்கள் ஒரு விதிவிலக்கா. எம்ஜிஆருக்காக மக்கள் கண்ணீர் விட்டு அழுதுக்கொண்டு இருக்கும் போது, எம்ஜியாரை நேசித்த இராணுவ வீரர்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால், ஒரு நிமிடமாவது கண்கலங்கமாட்டார்களா? இப்படியெல்லாம் நடக்காது என்று உங்களால் உறுதியாக கூறமுடியுமா?

உலகிலேயே எப்போதும் நடக்காத நிகழ்ச்சி நடந்தது மாதிரியும், அரஃபாத் என்பவரே உலக கதாநாயகர் மாதிரியும் நீங்கள் எழுதியிருப்பது கொஞ்சம் அல்ல, அதிகப்பிரசங்கித்தனமாகும். மக்கள் எண்ணிக்கையை வைத்து ஒருவரின் நிலையை எப்போதும் நாம் எடைப்போடமுடியாது, எடைப்போடவும் கூடாது. 

ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் அகராதியில் “உலகம் என்ற வார்த்தைக்கு அரபு நாடுகள் அல்லது இஸ்லாமிய நாடுகள் மட்டும் தான்” என்று பொருள் உள்ளதா? உங்களை பொருத்தமட்டில் முஸ்லிம் நாடுகள் நான் உலகம், முஸ்லிம் மக்கள் தான் ஒட்டுமொத்த மானுடகுலம். உலகில் உள்ள மீதமுள்ள நாடுகள் அனைத்தும் நாடுகளே அல்ல என்று நீங்கள் எண்ணிவிட்டீர்களா? 

பாரா அவர்கள் எழுதியது:

//அராஃபத் என்றொரு தலைவனைக் கொடுத்தது. இன்னொரு ஐம்பதாண்டு காலத்துக்கு, அவர் இடைவிடாத போராட்டங்களை நடத்திவந்தார். முதலில் ஆயுதப்போராட்டம். பிறகு, அமைதிப் போராட்டம்.. . .//

முதலாவது அவர் ஆயுதப்போராட்டம் செய்தார், பிறகு அமைதிப்போராட்டம் செய்தார் என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள்.  அரஃபாத் அமைதிப்போராட்டம் செய்தாரா? அரஃபாத் எப்போது எந்தெந்த வகையில் அமைதிப்போராட்டம் செய்தார் என்பதை பட்டியலிட்டுக் காட்டமுடியுமா? அறிந்துக் கொள்ளவேண்டுமென்று நான் ஆவலாக உள்ளேன்.

அடுத்ததாக, உலக நாடுகளின் தலைவர்கள் அரஃபாத்தின் மரணத்தின் போது என்ன சொன்னார்கள் என்பதையும் காண்போம். உங்கள் எழுத்துப்படி, ஒட்டுமொத்த உலகம் அப்படியே ஸ்தம்பித்துப்போனது.  ஆனால், பல நாடுகளின் தலைவர்கள் கருத்துப்படி, அரஃபாத் மரித்ததினால் இனி இஸ்ரேல் பாலஸ்தீனா நாடுகளுக்கிடையே அமைதி உண்டாகும் என்பதாகும். அமைதி உண்டாவதற்கான வாய்ப்புக்கள் கையில் இருந்தபோதிலும், அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், அரஃபாத் வேண்மென்றே இஸ்ரேலுடன் சண்டைபோட்டுக்கொண்டே இருந்தார் என்று அவர்கள் சொல்லியுள்ளார்கள். 

கீழ்கண்ட இரண்டு தொடுப்புக்களையும் படித்துப் பாருங்கள். இவைகளிலிருந்து சில கருத்துக்களை மட்டும் நான் கீழே தருகிறேன்.

Arafat's death: Global reaction in quotes

World leaders have been sending their condolences following the death of Palestinian leader Yasser Arafat. Below are some of the tributes and reflections.

Many of them express the hope for further efforts to achieve peace in the Middle East.

For nearly four decades, he expressed and symbolised in his person the national aspirations of the Palestinian people.

Now that he is gone, both Israelis and Palestinians, and the friends of both peoples throughout the world, must make even greater efforts to bring about the peaceful realisation of the Palestinian right of self-determination.

UN Secretary General Kofi Annan

The people of Pakistan, and indeed the entire Muslim world, is in deep shock at the passing away of Mr Arafat, who tirelessly struggled throughout his life for the attainment of the rights of the Palestinian nation and for securing an independent state for them.

Pakistani President Pervez Musharraf

மூலம்: http://news.bbc.co.uk/2/hi/middle_east/4001697.stm

பாகிஸ்தான் ஜனாதிபதி சொன்னது போலத்தான், நீங்கள் எழுதியிருக்கவேண்டும், அதாவது இவரது மரணத்தினால் ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகள் அதிர்ச்சி அடைந்தார்கள் என்பது தான் உகந்ததாக இருக்கும். இதை விட்டுவிட்டு, உலகமே அதிர்ச்சிக்குள்ளாகியது என்று நீங்கள் எழுதியது டூ மச் (too much).

I think history will judge him very harshly for not having seized the opportunity in the year 2000 (at US-brokered peace talks) to embrace the offer that was very courageously made by the then Israeli Prime Minister Ehud Barak, that involved the Israelis agreeing to about 90% of what the Palestinians wanted.

Australian Prime Minister John Howard

I regret that in 2000 he missed the opportunity to bring that nation into being.

[I pray] for the day when the dreams of the Palestinian people for a state and a better life will be realised in a just and lasting peace.

Former US President Bill Clinton

மேலும் இந்த தொடுப்பையும் படிக்கவும்: http://www.voanews.com/content/a-13-2004-11-11-voa76-67483947/281662.html

முடிவுரை:

மதிப்பிற்குரிய பாரா அவர்களே, இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனைச் செய்துக்கொண்டு, நீங்கள் அதிகமாக மிகைப்படுத்திச் எழுதியுள்ளீர்கள். அரஃபாத் தன் நாட்டிற்காக தன் முழு வாழ்வையும் அர்ப்பணித்தவர் என்பதில் சந்தேகமில்லை. கவனிக்கவும், தன் நாட்டிற்காக மட்டுமே பாடுபட்டார், அவர் இதர நாடுகளுக்காக பாடுபடவில்லை. அவர் உலக நாடுகள் அனைத்தின் மக்களுக்காகவும் உழைத்திருக்கவேண்டும் என்று நான் சொல்லவரவில்லை.  ஒரு நாட்டிற்காக உழைத்தவரை எடுத்துக்கொண்டு, உலகத்திற்கே இரட்சகராக வந்தவர் போல ஏன் பில்டப் கொடுக்கிறீர்கள் என்பது தான் என் கேள்வி. பாலஸ்தீனாவிற்கு அடுத்தபடியாக, இதர இஸ்லாமிய நாடுகள் அவருக்காக துக்கப்பட்டார்கள் அவ்வளவு தான். ஒட்டு மொத்த உலகமே அரஃபாத்துக்காக துக்கப்பட்டது என்று நீங்கள் சொல்வதை, ஒருவேளை அரஃபாத் கேட்டிருந்தால், அவரே சிரித்திருந்திருப்பார் உங்களைப் பார்த்து கேலியாக.