2016 ரமளான் (3) - நிலமெல்லாம் இரத்தம்

மூலநூல்களை பாராமல் பக்குவமாக புத்தகம் எழுதிய பாரா

(2 - ஆப்ரஹாம் முதல்)

மதிப்பிற்குரிய பாரா அவர்களுக்கு,

உங்களுடைய 'நிலமெல்லாம் இரத்தம்' என்ற புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் காணப்பட்ட தேவையில்லாத மிகைப்படுத்தல் பற்றி நான் என் கருத்தை முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். இப்போது அடுத்த அத்தியாயத்தைப் பற்றி என் கருத்தை முன்வைக்கிறேன்.

உங்களுடைய இரண்டாம் அத்தியாயத்தை படித்துக்கொண்டே இருந்த போது, 'இந்த மனுஷன் இப்படியும் எழுதுவாரா?' என்ற எண்ணம் மனதில் தோன்றியது. 

மூன்று மார்க்கங்களுக்கு சம்மந்தப்பட்ட விவரங்களை எழுதும் பொழுது: 

  • மூல நூல்களில் உள்ளவற்றுக்கு எதிராக எழுதும் தைரியம்  இவருக்கு எப்படி வந்தது? 
  • யாரை திருப்திப்படுத்த இப்படி எழுதுகிறார்? 
  • உண்மைகளை மறைத்து இவ்விதம் எழுதுவதினால் இவருக்கு என்ன லாபம்? போன்ற கேள்விகள் எழும்பின.

ஒரு வேளை நாம் எவைகளை மாற்றி எழுதினாலும் கிறிஸ்தவர்கள் கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற அசட்டு தைரியமா? அல்லது முஸ்லிம்களுக்கு ஆதரவாக எழுதுவதால், ஏதாவது பிரச்சனை வந்தால் முன்வரிசையில் நின்று முஸ்லிம்கள் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையா? எது எப்படியோ, புத்தகம் வெளிவந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.  [அவரது அசட்டு தைரியத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் விதத்தில் தமிழ் கிறிஸ்தவர்களும் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு கேள்வியும் கேட்காமல் இருந்துவிட்டார்கள் என்று நினைக்கும் போது, கிறிஸ்தவர்களை கடிந்துக் கொள்ளவேண்டுமென்று தோன்றுகிறது. இப்படி நான் செய்வதற்கு முன்பாக, முதலாவது என் வீட்டு நிலைக்கண்ணாடி முன் நின்றுக்கொண்டு, என்னை நானே முதலாவது கடிந்துக்கொண்டு, அதன் பிறகு மற்றவர்களிடம் செல்லவேண்டும். என் கண்ணில் உத்திரம் இருக்க அடுத்தவன் கண்ணில் இருக்கும் துரும்பை பார்ப்பானேன்? என் கண்ணில் உள்ள உத்திரத்தை நீக்கும் முயற்சி தான் இது.]

இப்போது பாரா அவர்களின் வரிகளை கவனிப்போம்:

1) கால வரிசையை மாற்றியது ஏன்?

பாரா அவர்கள் எழுதியது:

//அந்தப் பெரியவருக்கு வயது எண்பத்தைந்து. நிறைவாழ்வு வாழ்ந்தவர் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ஒரு குறை இருந்தது. அவருக்குக் குழந்தை இல்லை. அவரது மனைவிக்கும் இது சம்பந்தமாக வருத்தம்தான். ஆனால் வருந்தி என்ன பயன்? அப்படித்தான் விதித்திருக்கிறது போலிருக்கிறது என்று பெரியவர் நினைத்தார்.

ஆனால் அவர் மனைவிக்கு மட்டும் ஒரு யோசனை. ஒருவேளை பிரச்னை தன்னிடம்தான் இருக்குமோ? தன்பொருட்டுத் தன் கணவர் எதற்காக போகிற காலத்தில் வருத்தத்துடன் போகவேண்டும்? தானே இன்னொரு திருமணம் செய்துவைத்துவிட்டால் என்ன என்று நினைத்தான்.

எண்பத்தைந்தெல்லாம் அப்போது ஒரு வயதே அல்ல. ஆகவே அவர் துணிந்து தன் வேலைக்காரியைத் தன் கணவருக்கு இரண்டாந்தாரமாகத் திருமணம் செய்துவைத்தார். சொல்லிவைத்த மாதிரி அந்தப் பெண் உடனே கர்ப்பம் தரித்துவிட்டாள்.//

மேற்கண்ட வரிகளில் பாரா அவர்கள் சொல்லவருவது என்னவென்றால், 

ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிள்ளை இல்லாமல் இருந்ததால், வாரிசுக்காக 'சாராள்' சுயமாக சிந்தித்து, தன் அடிமைப்பெண்ணை ஆபிரகாமுக்கு மனைவியாக கொடுத்தாராம். அப்போது பிறந்த குழந்தை தான் இஸ்மவேல். பைபிள் சொல்வது இதைத்தானே, இதில் என்ன தவறு இருக்கிறது என்று சிலர் கேட்கலாம். இப்படி கேட்பவர்கள் முதலாவது, ஆதியாகமம் புத்தகத்தின் அத்தியாயங்கள் 15,16 & 17ஐ படிக்கவேண்டும்.

இந்த மூல நூலில் சொல்லப்பட்டவைகளுக்கு மாற்றமாக எப்படி நாஜூக்காக பாரா அவர்கள் தில்லுமுல்லு செய்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்கு முன்பாக, அவரது இதர வரிகளையும் ஒரு முறை படித்துவிடுவோம், அப்போது தான் கிளைமாக்ஸ் புரியும்.

பாரா அவர்கள் எழுதியது:

//சந்தோஷம்தான். இந்த வயதில் இப்படியும் விதித்திருக்கிறதே என்கிற சந்தோஷம். ஆனாலும் தன் முதல் மனைவி மூலமாக ஒரு குழந்தை இல்லாத வருத்தமும் இருக்கவே செய்தது. பெரியவருக்கு இப்போது தொண்ணூற்றொன்பது வயது. அவரது மகனுக்கு பன்னிரண்டு வயது. முதல் மனைவிக்கு எண்பத்தொன்பது வயது. இரண்டாவது மனைவியின் வயது அப்போது என்ன என்று சரியாகத் தெரியவில்லை. இத்தனை தள்ளாத காலத்தில் அவரது கனவிலோ, நினைவிலோ ஒருநாள் கடவுள் வந்து பேசினார்.

இதோ பார். உனக்கு இன்னொரு குழந்தை பிறக்கப்போவது உறுதி. அதுவும் இத்தனை நாளாகக் குழந்தை இல்லாத வருத்தத்தை மட்டுமே கருவாகச் சுமந்துகொண்டிருந்த உன் முதல் மனைவி மூலம் அது நடக்கப்போகிறது என்று ஒரு குரல் கேட்டது.

பெரியவரால் இதை நம்ப முடியவில்லை. இதென்ன கூத்து? நானோ தொண்ணூற்றொன்பது வயதுக்கிழவன். என் மனைவிக்கு என்னைவிடப் பத்து வயதுதான் குறைவு. இந்த வயதில் இன்னொரு குழந்தை எப்படி சாத்தியம் என்று அவநம்பிக்கையாகக் கேட்டார்.

அதுசரி. கடவுள் தீர்மானித்துவிட்டால் வயது ஒரு பிரச்னையா என்ன?

சீக்கிரமே அவரது முதல் மனைவி கருவுற்றாள். அடுத்த வருடம் குழந்தையும் பிறந்துவிட்டது. அவருக்கு அப்போது நூறு வயது.//

இப்போது பாரா அவர்கள் செய்த தவறு என்னவென்பதை சுருக்கமாக பார்ப்போம்.

பைபிளில் கொடுக்கப்பட்ட கால வரிசையின் படி:

1) ஆபிரகாம் தனக்கு பிள்ளையில்லை என்று முதலாவது வேண்டுதல் செய்கிறார் (ஆதியாகமம் 15:1-3)

2) இந்த வேண்டுதலுக்கு தேவன் 'உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே, உனக்கு சுதந்திரவாளி' என்று பதில் அளிக்கிறார். அதாவது உனக்கு பிறக்கும் பிள்ளையே உன் சொத்துக்களுக்கு சொந்தக்காரனாக இருப்பான் என்று தேவன் சொன்னார். (ஆதியாகமம் 15:4). இந்த நேரத்தில் ஆபிரகாமுடைய மனைவியாக இருப்பது சாராள் ஆவார்கள். 

3) மேலும் உன் சந்ததி வானத்தின் நட்சத்திரங்களைப் போல அதிகமாக இருப்பார்கள் என்றும் சொல்கிறார், இதை ஆபிரகாம் நம்புகிறார்  (பார்க்க ஆதியாகமம் 15:5,6). பிள்ளை பற்றிய வாக்கை தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த போது, ஆபிரகாமும் சாராளும் கணவன் மனைவியாக இருந்தார்கள். ஆகார் என்பவர் சாராளின் ஒரு அடிமைப்பெண்ணாக இருந்தார்களே தவிர, ஆபிரகாமின் மறுமனையாட்டியாக அப்போது இல்லை.

4) அடுத்ததாக, பிள்ளைக்கான வாக்கை பெற்றுவிட்ட பிறகும், தேவன் பிள்ளையை கொடுக்கும் வரை காத்திராமல், சாராள் அவசரப்பட்டு தன் அடிமைப்பெண்ணை ஆபிரகாமுக்கு மறுமனையாட்டியாக கொடுக்கிறார்.

 5) ஆகாருக்கு ஒரு மகன் பிறந்த பிறகு, 13 ஆண்டுகள் கழித்து மறுபடியும் தேவன் தன் முந்தையை வாக்கை நிறைவேற்றும் காலம் சமீபம் என்பதைச்  சொல்ல ஆபிரகாமிடம் மறுபடியும் வந்து பேசுகிறார். இந்த சந்திப்பு பிள்ளை பற்றி சொல்லப்பட்ட இரண்டாவது சந்திப்பு.

இதைப் பற்றி எழுதும் போது, பாரா அவர்கள் எப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தி, விஷயத்தை திசை திருப்பியிருக்கிறார் என்பதை கவனியுங்கள்:

பாரா அவர்கள் எழுதியது:

//இத்தனை தள்ளாத காலத்தில் அவரது கனவிலோ, நினைவிலோ ஒருநாள் கடவுள் வந்து பேசினார். 

இதோ பார். உனக்கு இன்னொரு குழந்தை பிறக்கப்போவது உறுதி. அதுவும் இத்தனை நாளாகக் குழந்தை இல்லாத வருத்தத்தை மட்டுமே கருவாகச் சுமந்துகொண்டிருந்த உன் முதல் மனைவி மூலம் அது நடக்கப்போகிறது என்று ஒரு குரல் கேட்டது.//

கவனிக்கவும், 13 ஆண்டுகளுக்கு முன்பு, முதல் முறை சாராளுக்கும் உனக்கும் பிள்ளை பிறக்கும் என்றுச் தேவன் சொன்னதை அப்படியே மறைத்து ஏப்பம் விட்டு இருக்கிறார் பாரா அவர்கள்.

"இதோ பார். உனக்கு இன்னொரு குழந்தை பிறக்கப்போவது உறுதி" என்று எழுதுவதிலிருந்து, "முதல் குழந்தை பிறந்தது கூட என் வாக்கினால் தான் என்று தேவன் சொன்னதாக" பாராவின் புத்தகத்தை படிப்பவர்கள் புரிந்துக் கொள்ளவேண்டுமென்று பாரா மனப்பால் குடித்துவிட்டார்.

"இப்போது கொடுக்கப்போகும் பிள்ளை உன் முதல் மனைவிக்கு பிறக்கும் என்று" தேவன் சொன்னதாக எழுதுகிறார். ஆனால், 13 ஆண்டுகளுக்கு முன்பாக பிள்ளைப் பற்றிய வாக்கும், வானத்து நட்சத்திரங்கள் போல ஆபிரகாமின் சந்ததி இருக்கும் என்று சொன்ன வாக்கும், ஆரகாமின் முதல் மனைவி சாராள் இருக்கும் போது சொன்னது தான். இவைகளை வாசகர்கள் புரிந்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நாஜுக்காக மாற்றி சொல்லியுள்ளார். 

பாராவின் இன்னொரு தைரியம் என்னவென்றால், அவர் எழுதிக்கொண்டு இருந்த தொடர் குமுதம் ரிப்போர்ட்டர் என்ற பத்திரிக்கையாகும். எத்தனை கிறிஸ்தவர்கள் இப்பத்திரிக்கையை படிக்கிறார்கள்? அப்படி படித்தாலும்,பழைய ஏற்பாட்டில் வரும் ஆபிரகாமின் சாராளின் நிகழ்ச்சிப் பற்றி யார் அக்கரை கொள்வார்கள்? ஒரு வேளை  சில கிறிஸ்தவர்கள் அக்கரை காட்டினாலும், இவரிடம் கேள்வி கேட்க யாரிடம் நேரமிருக்கிறது? ஒரு வேளை சில கிறிஸ்தவர்களிடம் நேரம் இருந்தாலும், இவர்கள் கத்தியை எடுத்தா கேள்வி கேட்கப்போகிறார்கள்? என்ற நம்பிக்கையில் பாரா அவர்கள் பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளில் தன் விருப்பப்படி விளையாடி இருக்கிறார். 

கடந்த 10 ஆண்டுகளாக முஸ்லிம்களின் வரிகளை படித்துக்கொண்டு இருக்கும் என்னைக் கேட்டால், ஒரு முஸ்லிம் எப்படி தில்லுமுல்லு செய்து உண்மையை தன் புத்தகங்களில் மறைப்பாரோ, அதை விட மென்மையாக விளையாடியுள்ளார். இவர் யாரிடமிருந்து கற்றாரோ தெரியவில்லை, அவ்வளவு திறமையாக எழுதியுள்ளார் (அல்லாஹ் நோஸ் த பெஸ்ட்).  ஒரு வேளை  முஸ்லிம்களை திருப்திபடுத்தவேண்டுமென்பதற்காக இப்படி எழுதினாரா?

'ஆபிரகாம், சாராள் மற்றும் ஆகார்' கதையை இவர் இஸ்லாமிய வேதமாகிய குர்-ஆனிலிருந்து படித்திருக்கலாம் அல்லவா என்று என்னிடம் சிலர் கேட்க‌லாம். இதற்கு சாத்தியமில்லை, ஏனென்றால், இவர் மேலே எழுதிய நிகழ்ச்சி முழுவதுமாக பைபிளில் உள்ளது தான், குர்-ஆனுக்கு இப்படியெல்லாம் நிகழ்ச்சிகளை கோர்வையாக சொல்லும் வழக்கமில்லை என்பதை அறியவும், அரைகுறையான விவரங்கள் மட்டும் தான் குர்-ஆனில் காணமுடியும். பைபிளிலிருந்து விவரங்களை எடுத்து, வேண்டுமென்ற திருத்தி எழுதியிருக்கிறார். இந்த தவறை பாரா அவர்கள் தெரிந்தேசெய்துள்ளார்.

இன்னும் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு, இக்கட்டுரையை இப்போதைக்கு முடிக்கிறேன்.

அடுத்தபடியாக, பாரா அவர்கள் இப்படி எழுதுகிறார்:

//அதுவரைக்கும், தன் கணவன் வாரிசில்லாமல் போய்விடக்கூடாதே என்று மட்டுமே நினைத்து வந்த அந்தப் பெண்மணிக்கு, தன் வேலைக்காரி கர்ப்பமானது தெரிந்தது முதல், துக்கமும் பொறாமையும் பொங்கியெழ ஆரம்பித்துவிட்டது. அவளைப் பற்றி அடிக்கடி தன் கணவரிடம் குறை கூற ஆரம்பித்தாள். //

பாரா அவர்கள் உருப்படியாக, பைபிளின் மூன்று அத்தியாயங்களை சுயநினைவோடு படித்தாரா என்ற சந்தேகம் வருகிறது? அல்லது நீண்ட டீவி தொடர் எழுதுவது போல, மனதில் தோன்றியதை எழுதினாரா?

ஆதியாகமம் 16:4ம் வசனம் தெளிவாகச் சொல்கிறது, ஆகார் தான் தாயாக போகிறேன் என்று அறிந்த போது, தனக்கு வாழ்வு கொடுத்த எஜமாட்டியையே அற்பமாக எண்ணினாள். 

அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள். (ஆதியாகமம் 16:4)

ஆனால், பாரா அவர்கள் என்ன எழுதினார்கள்?  “தன் வேலைக்காரி கர்ப்பமானது தெரிந்தது முதல், துக்கமும் பொறாமையும் பொங்கியெழ ஆரம்பித்துவிட்டது. அவளைப் பற்றி அடிக்கடி தன் கணவரிடம் குறை கூற ஆரம்பித்தாள்.”. 

அண்ணே பாரா அவர்களே, ஆதியாயகமம் 16ம் அத்தியாயத்தை படித்தீர்களா? எபிரேய மொழியில் படித்தீர்களா? அல்லது அரபி மொழியில் படித்தீர்களா? என்று நான் கேட்கவில்லை, தமிழில் படித்தீர்களா? என்று தான் கேட்கிறேன். 16ம் அத்தியாயத்தின் 15ம் வசனத்தை படித்த நீர் ஏன் 14ம் வசனத்தை படிக்கவில்லை? ஒருவேளை 14 என்பது உங்களுக்கு பிடிக்காத எண்ணாக இருக்குமோ? 

உருப்படியாக ஒரு வசனத்தை படித்து புரிந்துக்கொண்டு, அது சொன்னது போலவே எழுதத்தெரியாதவர்கள் ஏன் புத்தகம் எழுத வரவேண்டும்?

நடுநிலையோடு எழுதுபவர் எப்படி எழுதவேண்டும்? எப்படி ஆய்வு செய்யவேண்டும்? மூல நூல்களில் சொல்லப்பட்டவைகளை அப்படியே எழுதிவிட்டு, உங்கள் விமர்சனங்களை ஆதாரங்களோடு வைக்கவேண்டும். இப்படி செய்யத்தெரியாதவர்கள் ஏன் மற்ற மார்க்கங்களின் விஷயங்களில் மூக்கை நுழைத்துவிட்டு, அறுபட்டுப்போகவேண்டும்? நடுநிலையோடு எழுதமுடியவில்லையென்றால், பேனாவை கீழே வைத்துவிட்டு, வேறு வேலையை செய்யலாமே. நேர்மையாக பணம் சம்பாதிக்க அனேக வேலைகள் உலகில் உண்டு, முடிந்தால் சௌதி அரேபியாவிற்குச் சென்று ஏதாவது வேலையைத் தேடிக்கொள்ளலாமே!

கதை சுவாரசியமாக இருக்கும் என்பதற்காக இப்படி மாற்றி மறைத்து எழுதினேன் என்றுச் சொல்லாதீர்கள். கிறிஸ்தவ வேதத்தின் விவரங்களை மாற்றி எழுதுவது போல,  இஸ்லாமிய விவரங்களை திருத்தி நிலமெல்லாம் இரத்தம் என்ற புத்தகத்தை நீங்கள் எழுதியிருந்தால், பல ஆண்டுகளுக்கு முன்பே, உங்கள் வீடெல்லாம் இரத்தமாக மாறியிருந்திருக்கும். 

இதோடு நான் என் விமர்சனத்தை முடித்துக் கொள்கிறேன்.

அடுத்த பாகத்தில் இன்னும் இரத்தம் கசியும் . . .