உவமை 3: தீய குத்தகைக்காரர்களின் உவமையும், இஸ்லாமின் முன்னறிவிப்பும்

(ரமளான் 2022 தொடர் கட்டுரைகள்)

முந்தைய வேதங்களின் உவமைகளும் இஸ்லாமும்

ரமளான் 2022 ஆண்டின் முந்தைய கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்புக்களில் படிக்கலாம்:

  1. உவமை 1: விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான் - யார் வழியருகே விதைக்கப்பட்டவர்கள்?
  2. உவமை 2: காணாமல் போன ஆடுகளை அல்லாஹ் தேடுவானா? வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பானா?

இந்த மூன்றாவது தொடரில், சௌதி அரேபியாவில் வேலைப் பார்க்கும் என் தம்பி, என்னோடு மொபைளில் தொடர்பு கொண்டு, “தீய குத்தகைக்காரர்கள்” என்ற இயேசுவின் உவமையைக் குறித்து பேசிய உரையாடலை/விவாதத்தை காண்போம்.

குறிப்பு: எனக்கு ஒரு கற்பனைத் தம்பி உண்டு. தம்பியிலும் கற்பனையா? என்று நீங்கள் கேட்கலாம். ஆம், இஸ்லாம் பற்றி என்னோடு காரசாரமாக‌ உரையாடுவதற்கு, எனக்கு எதிராக மல்லுக்கட்டி நிற்பதற்கு ஒரு தம்பியை கற்பனைச் செய்துக்கொண்டேன். அவன் சௌதியில் இஸ்லாமை தழுவியதாக கற்பனை செய்துக்கொண்டு, அவனை முஸ்லிமாக மாற்றியும் விட்டேன். ஒவ்வொரு ஆண்டும் ரமளான் மாதத்தில்  அவனோடு பேசுவதாக தொடர் கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கிறேன். இந்த 2022ம் ஆண்டு எழுதிய‌ முந்தைய இரண்டு கட்டுரைகளை படித்துவிட்டு, எனக்கு அவன் போன் செய்து, விவாதித்ததாக‌ இந்த மூன்றாவது கட்டுரையை அமைத்துள்ளேன். என் தம்பி கற்பனைத் தான், உரையாடலும் கற்பனைத்தான், ஆனால், பேசப்படும் வரிகள் நிஜம்.  இயேசு கூறிய‌ தீய குத்தகைக்காரர்கள் என்ற உவமையை கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய கோணங்களில் ஆராயப்போகிறோம், விவாதிக்கப்போகிறோம் வாருங்கள் தொடங்கலாம்.


தீய குத்தகைக்காரர்களின் உவமையும், இஸ்லாமின் முன்னறிவிப்பும்

(அண்ணன் தம்பி உரையாடல்)

தம்பி, உமருக்கு (எனக்கு) போன் செய்கிறான்... என் மொபைள் அளறுகிறது...

உமர்: ஹலோ தம்பி

தம்பி: அண்ணே, அஸ்ஸலாமு அலைக்கும்

உமர்: வ அலைக்கும் ஸலாம் தம்பி, எப்படி இருக்கிறாய்?

தம்பி: அல்லாஹ்வின் அருளால் நன்றாக இருக்கிறேன், நீங்க எப்படி இருக்கீங்க?

உமர்: கர்த்தரின் கிருபையால், சூப்பராக இருக்கிறேன். என்ன விஷயம்? ரமளான் நோன்பின்  மூன்றாவது நாளிலேயே போன் செய்துட்டியே!

தம்பி: காரணம் இல்லாமல் புகையுமா? உங்க ரெண்டு கட்டுரைகளைப் படித்தேன்! அதான் ஒருமுறை விசாரிக்கலாம் அப்படின்னு போன் செய்தேன்.

உமர்: என் தம்பி, தங்கக்கம்பி, ரொம்ப கோபமாக இருக்கிறான் போல இருக்கு? இயேசுவின் உவமைகளை அடிப்படையாக வைத்து, இஸ்லாம் சம்மந்தப்பட்ட சில விஷயங்களை எழுதலாம் என்று முடிவு செய்திருக்கிறேன், இதுவரை இரண்டு கட்டுரைகளை பதித்தேன். உனக்கு இதில் என்ன சந்தேகம்?

தம்பி: சந்தேகம் எல்லாம் ஒன்றும் இல்லை! இயேசு கூறிய ஒரு குறிப்பிட்ட  உவமையை எடுத்து பேசுவோமா? உங்களுக்கு தெம்பு இருந்தால்!

உமர்: பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி உள்ளது எனக்கு! நீயே ஒரு உவமையை ஆய்வு செய்ய வழி காட்டுகின்றாய்! இதை விட ஒரு பெரிய பாக்கியம் வேண்டுமா! சரி வா, பேசலாம்.

தம்பி: எடுத்துக் கொள்ளுங்கள் மத்தேயு 21:33-44 வரையுள்ள வசனங்களை. அதில் இஸ்லாம் பற்றிய முன்னறிவிப்பு எவ்வளவு தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது என்பதை உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன். 

உமர்: இதோ பேஷா எடுத்துக்கிறேன்,  மத்தேயு 21: 33-44 வரை படிக்கிறேன் கேள்.

மத்தேயு 21: 33-44

33. வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான். 34. கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான். 35. தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப் பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். 36. பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.

37. கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான். 38. தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; 39. அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள். 40. அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார்.

41. அதற்கு அவர்கள்: அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்றகாலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள். 42. இயேசு அவர்களை நோக்கி: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? 43. ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். 44. இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

தம்பி: இதில் இஸ்லாம் பற்றிய முன்னறிவிப்பு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல நடிக்கிறீர்களா?

உமர்: எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லையே! மேலே சொன்ன உவமையில், தோட்டக்காரர் இருக்கிறார், குத்தகைக்கு எடுத்தவர்கள் இருக்கிறார்கள், வேலை ஆட்கள் இருக்கிறார்கள், அந்த தோட்டக்காரனுடைய மகன் இருக்கிறான். இதில் இஸ்லாம் எங்கே வந்தது? 

தம்பி: 43வது வசனத்தைப் படியுங்கள், அதில் இயேசு என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள்:

மத்தேயு 21:43. ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். 

இந்த வசனத்தில் தேவனுடைய ராஜ்ஜியம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு அதற்கேற்ற கனிகளைத் தருகின்ற ஜனங்களுக்கு அதாவது முஸ்லிம்களுக்கு கொடுக்கப்படும் என்று இயேசு தெளிவாக சொல்லி இருக்கிறார்.

உமர்: அப்படியானால் உன்னுடைய விளக்கத்தின்படி “அந்த தோட்டக்காரர்கள் யூதர்கள் “ஆவார்கள் மற்றும் நல்ல கனிகளை கொடுக்கும் அந்த மக்கள் “முஸ்லிம்கள்”, அவர்கள் அப்படித்தானே!

தம்பி: “எஸ்” கரெக்டா சொன்னீங்க! உங்களுக்கு 100 மார்க் தரலாம். 

உமர்: எனக்கு 100 மார்க் கொடுப்பதெல்லாம் அப்புறம் இருக்கட்டும்! முதலில், நீ உவமையை சரியாக‌ படித்தாயா? நீ எதையும் "சாய்ஸ்-Choice" கேள்வியாக விட்டு விடவில்லையல்லவா?

தம்பி: இல்லை! நான் எதையும் விடவில்லை, எல்லாவற்றையும் சரியாகத்தான் படித்தேன்.

உமர்:  அடேய் தம்பி! நான் உன் அண்ணன்டா! என்னிடம் விளையாடாதே!

சரி, சீரியஸாக நான் கேள்வி கேட்கிறேன், அந்த தோட்டகாரன் யார்?

தம்பி: அவர் தான் இறைவன், அந்த தோட்டத்துக்கு சொந்தக்காரன், இந்த உலகத்திற்கு சொந்தக்காரன் அதாவது உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அவன் தான் அல்லாஹ்.

உமர்: இது சரியான பதில். உன்னுடைய இந்த நிலைப்பாட்டிலிருந்து நீ தவறமாட்டாய் அல்லவா?

தம்பி: யாரிடம் என்ன கேள்வி கேட்கிறீர்கள்? நான் ஒரு முஸ்லிம், சொன்ன வார்த்தையை மீற மாட்டேன். 

உமர்: இந்த உவமையில் அந்த தோட்டக்காரன் தன் கனிகளை வாங்கிக்கொண்டு வரும்படி அனுப்பிய ஊழியக்காரர்கள் யார்?

தம்பி: அந்த ஊழியக்காரர்கள் தான் "தீர்க்கதரிசிகள்/நபிகள்" அதாவது யூதர்களை வழி காட்ட அல்லாஹ் அனுப்பிய தீர்க்கதரிசிகள். அவர்களை யூதர்கள் கொலை செய்தார்கள், கல்லெறிந்துக் கொன்றார்கள் என்று இயேசு இங்கு சொல்கிறார், இது கூடவா உங்களுக்கு புரியவில்லை?

உமர்: எனக்கு எல்லாம் புரியுது தம்பி, உனக்கு தான் உண்மையை புரிந்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு அனுபவம் இல்லை.

தம்பி: எனக்கு எல்லாம் தெரியும் விஷயத்துக்கு வாங்க.

உமர்: அந்த தோட்டக்காரர், தன் ஊழியக்காரர்களை அந்த குத்தகைக்காரர்கள் தொடர்ச்சியாக கொன்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றுச் சொல்லி, கடைசியாக தம்முடைய குமாரனை அனுப்பினார். அந்த குமாரன் யார்?

தம்பி: அவரும் ஒரு தீர்க்கதரிசி தான் இதில் என்ன சந்தேகம்? 

உமர்: உனக்கு குமாரனுக்கும் வேலைக்காரர்களுக்கும் வித்தியாசம் தெரியாதா?  ஊழியக்காரர்களை "நபிகள்" என்று சொல்லும்போது, ஏன் அந்த உவமையில் அந்த தோட்டக்காரன் குறைந்தபட்சம் என்னுடைய குமாரனுக்கு அவர்கள் பயப்படுவார்கள் என்று வித்தியாசப்படுத்திச் சொல்கிறார்? ஊழியக்காரன் மற்றும் குமாரன் என்று தெளிவாக வேறுபடுத்திச் சொல்லப்பட்டிருந்தும், எப்படி இந்த வித்தியாசம் உனக்கு தென்படவில்லை தம்பி.

தம்பி: அந்த தோட்டக்காரருக்கு எப்படி குமாரன் இருக்க முடியும்?

உமர்: அதை நீ ஏன் முடிவு செய்கிறாய்? அந்த தோட்டக்காரனுக்கு மகன் இருக்கின்றானா இல்லையா என்று ஆய்வு செய்து சொல் என்று உன்னிடம் யாராவது கேட்டார்களா என்ன? உன்னுடைய வேலை, சொல்லப்பட்ட உவமையை சரியாக புரிந்து கொள்வது தான், அதை விட்டுவிட்டு உன் சொந்த கதையை உவமையில் புகுத்த‌ முயலாதே!

தம்பி: இதனை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்!

உமர்: உன்னிடம் யார் அனுமதி கேட்கிறார்கள் தம்பி? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு சொன்ன உவமை இது. அதை அப்படியே படித்து புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, நீ உன்னுடைய சொந்த கருத்துக்களை அந்த உவமையில் திணிக்க முயலக்கூடாது! "இஸ்லாமிய‌ கண்ணாடியை" கழற்றிவிட்டு, உன் சொந்தப்பார்வையில் படித்துப்பார்.

தம்பி: அப்படியானால்! இந்த உவமையில் வரும் அந்த குமாரன் யார் சொல்லுங்கள் பார்க்கலாம்?

உமர்: சரியாப்போச்சு! விடிய விடிய இராமாயணம் கதை கேட்டுவிட்டு, சீதை ராமனுக்கு என்ன உறவு என்று கேட்டால், "சித்தப்பா" என்று எவனோ சொன்னானாம். அது போல இருக்கிறது உன் கதை. இந்த உவமையில் "குத்தகைக்காரர்கள் என்றால் யூதர்கள் ஆவார்கள் என்றும், தோட்டக்காரன் இறைவன் என்றும் சொல்லும் போது, குமாரனை அவர்களை கொலை செய்தார்கள் என்றால், அந்த குமாரன் யார்?" இயேசுக் கிறிஸ்து அல்லவா? இதுகூடவா உனக்கு புரியவில்லை.

தம்பி: அப்படியானால், கனிகளை சரியாக கொடுக்கும், அந்த தோட்டக்காரனின் நம்பிக்கையின் பாத்திரமான அந்த‌ நல்ல மக்கள் முஸ்லிம்கள் தானே!

உமர்:  இந்த உவமையில் இயேசு தான் குமாரன் என்றுச் சொல்லும் போது, அவருக்கு 600 ஆண்டுகளுக்கு பிறகு வரும் முஸ்லிம்கள் எங்கே வந்தார்கள்! கிறிஸ்தவர்கள் தான் அந்த 'நல்ல கனிகளை கொடுக்கும்' ஜனம் என்று இயேசு இங்கு குறிப்பிடுகின்றார்.

அடுத்த இரண்டு வசனங்களில், யூத தலைவர்கள் தங்களைப் பற்றி தான் இயேசு கூறினார், தங்களிடமிருந்து ராஜ்ஜியத்தை எடுத்து மற்றவர்களிடம் கொடுப்பார் என்று இயேசு கூறுகின்றார் என்றுச் சொல்லி, அவரை பிடிக்க வகை தேடினார்கள் என்று பார்க்கிறோம்.

மத்தேயு 21:45. பிரதான ஆசாரியரும், பரிசேயரும் அவருடைய உவமைகளைக்கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து, 46. அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசி என்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.

இந்த உவமையில், குமாரனுக்கு அந்த குத்தகைக்காரகள் செய்த செயல்தான் முக்கியமானது, இயேசு தாம் எப்படி மரிக்கப்போகிறார் என்பதை முன்கூட்டியே கூறியுள்ளார், மேலும், அந்த தோட்டம் அதன் பிறகு யாரிடம் கொடுக்கப்படும் என்பதை இயேசு இங்கு குறிப்பிடுகின்றார்.

தம்பி: நீங்கள் எவைகளைச் சொன்னாலும் சரி, நான் ஏற்கமாட்டேன், "நல்ல‌ கனிகள் கொடுக்கும் ஜனம் முஸ்லிம்கள் தான்".

உமர்: சரி, உன் விஷயத்துக்கே வருகிறேன், ஒரு பேச்சுக்காக, "அந்த நல்ல கனிகள் கொடுக்கும் ஜனங்கள் முஸ்லிம்கள் தான் என்று எடுத்துக்கொண்டாலும், நீ அந்த தோட்டக்காரனுக்கு குமாரன் இருந்தான் என்று ஒப்புக்கொள்ளவேண்டும்"? இதை ஒப்புக்கொள்கிறாயா?

அந்த குமாரனை யூதர்கள்(குத்தகைக்காரர்கள்‍) கொன்றார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும்? இவ்விரண்டையும் ஒப்புக்கொள்கிறாயா? சொல்!

தம்பி: . . .

உமர்: என்ன, பதில் காணோம் தம்பி... லைன் கட்டாகிவிட்டதா?

தம்பி: இல்லை இல்லை.. நான் லைனில் தான் இருக்கிறேன்.

உமர்: தம்பி, இப்போதாவது உனக்கு புரிகின்றதா? 

உன்னால் பைபிளை மேற்கோள் காட்டி, கிறிஸ்தவத்தை புறக்கணிக்கமுடியாது, இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கமுடியாது. பைபிளைத் தொட்டு, நீ இஸ்லாமை நிலைநாட்டமுடியாது, நீ தோற்றுப்போவாய்.

நீ சொன்ன உவமையைத் தான் நாம் இதுவரை ஆய்வு செய்தோம். அரைகுறையாக படித்துவந்து பேசாதே!  அடுத்த முறை போன் செய்வதற்கு முன்பு, ஒன்றுக்கு பலமுறை பைபிளை படித்து, அதன் பிறகு உன் வாதங்களை வை பார்க்கலாம்.

தம்பி: ஆனால்...இன்னும் ஒரு கேள்வி எனக்கு இருக்கிறது.... ம்ம்ம்ம் வேண்டாம் வேண்டாம்.. அடுத்த முறை போன் செய்கிறேன்... குட்பை.

உமர்: குட் நைட், நல்லா தூங்கு.

இது தாங்க எனக்கும் என் தம்பிக்கும் இடையே நடந்த உரையாடல்.

இன்னொரு உவமையோடு சந்திப்போம்...

தேதி: 4th April 2022


ரமளான் 2022 கட்டுரைகள்

முந்தைய ரமளான் கட்டுரைகள்

உமரின் பக்கம்