உவமை 8: நீ இறைவனின் இலவச கிருபையை பெற விரும்புகிறாயா? அல்லது உன் அமல்கள் (கந்தைத் துணி, இத்தா துணி) மூலமாக இறைவனின் தரத்தை எட்டிவிடலாமென கனவு காண்கிறாயா?

(ரமளான் 2022 தொடர் கட்டுரைகள்)

முந்தைய வேதங்களின் உவமைகளும் இஸ்லாமும்

ரமளான் 2022 ஆண்டின் முந்தைய கட்டுரைகளை கீழே படிக்கவும்:

முந்தைய ஏழாவது தொடர் கட்டுரையை படித்துவிட்டு, உமரின் தம்பி சௌதியிலிருந்து பல கேள்விகளுடன் மொபைளில் அழைத்து உமருடன் பேசுகின்றான். கிறிஸ்தவத்தின் அடிப்படை சத்தியம் இது தான்: "தேவனுடைய கிருபையால், மனிதன் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்படுகிறான்", இதனை உமரின் தம்பி சவால் செய்கின்றான், மற்றும் மனிதன் நீதியான செயல்களினால் (அமல்களினால்) இரட்சிக்கப்படமுடியும் என்று வாதம் செய்கின்றான்". 

வாருங்கள், அந்த உரையாடலை சிறிது சுவைத்துப் பார்ப்போம்.

இயேசுவின் படி மனிதன் எப்படி நீதிமானாக்கப்படுகிறான்?

கிருபையாலா? (அ) நீதியான செயல்களாலா(அமல்களினாலா)?

உமரின் மொபைளுக்கு தம்பி அழைத்து பேசுகின்றான்.

தம்பி: ஹலோ அண்ணே! அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மது அல்லாஹி வ பரகாதஹூ

உமர்: ஹலோ தம்பி, உன் மீதும் கர்த்தரின் கிருபையும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. 

என்னடா இது, இன்னும் தம்பி அழைக்கவில்லையே! என்று யோசித்துக்கொண்டு இருந்தேன், இதோ ஆலயமணி சாரி மொபைள் மணி அடித்துவிட்டது. சரி, என்ன ஏவுகணைகளை என் மீது வீச தயாராக இருக்கிறாய்?

தம்பி:  என்ன அண்ணே எல்லாம் தெரிந்த நீங்களுமா! ஏவுகணைகள் என்றுச் சொல்லி என் மனதை புண்படுத்திவிட்டீர்கள்!

உமர்:  சாரிடா தம்பி. நான் ‘அந்த’ நோக்கத்தில் சொல்லவில்லை, உன் கேள்விகளை "ஏவுகணைகள்" என்றுச் சொன்னேன், தவறாக நினைக்காதே! எனக்குத் தெரியாதா "முஸ்லிம்கள் மிகவும் நல்லவர்களென்று"? என்னுடைய விமர்சனம் "இஸ்லாமிய‌  இறையியல் மீதும் அல்லாஹ் மீதும் தான், முஸ்லிம்கள் மீதல்ல" இதை நீ நன்றாக அறிவாய்! சக மனிதனை வெறுத்துவிட்டு, ஒரு கிறிஸ்தவன் அப்படி என்ன ஊழியம் செய்துவிடமுடியும்! இயேசுவும் இதனை ஒப்புக்கொள்ளமாட்டார்.

தம்பி:  சரி அண்ணா! என்னுடைய கேள்விகளை இப்போது கேட்கிறேன். என்னுடைய முதலாவது கேள்வி: உங்களுடைய‌ முந்தைய கட்டுரையில், எப்படி நீங்கள் பரிசேயர்களை (யூதர்களை) முஸ்லிம்களோடு ஒப்பிடலாம்?

உமர்: ஏன் ஒப்பிடக்கூடாது? இருவரின் பழக்கங்களும் ஒரே மாதிரியாக இருந்தால், ஒப்பிடக்கூடாதா?  பரிசேயர்களும் தங்கள் சுய நீதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், மக்கள் காணும்படி வெளிப்புற பக்தியை அதிகமாக காட்டிக்கொள்கிறார்கள், அவர்களுக்கு சமமாகவும், அதற்கு மேலாகவும் முஸ்லிம்களின் செயல்களும் இருக்கின்றன என்பதால் தான் ஒப்பிட்டேன். அன்றைக்கு பரிசேயர்கள் என்ன செய்தார்களோ, அதையே இன்று முஸ்லிம்கள் செய்கிறார்கள்! இதனால் தான் ஒப்பிட்டேன்.

இயேசு வாழ்ந்த காலத்தில் ஒருவேளை 'முஸ்லிம்களும்' இருந்திருந்தால், யூதர்கள் அவரிடம் வாங்கிக்கட்டிக்கொண்டது போல, நீங்களும் சரியாக கடிந்துக்கொள்ளப்பட்டு இருந்திருப்பீர்கள்!

தம்பி:  கிறிஸ்தவர்கள் பொதுவில் ஜெபிப்பதில்லையா? ஜெபக்கூட்டங்கள் என்ற பெயரில், பெரிய அளவில் கூட்டங்கள் நடத்துவதில்லையா? 

உமர்: நான் என் கட்டுரையில் கூட்டுத்தொழுகை பற்றி பேசவில்லையே தம்பி. ரமளான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளின் போது, பொது இடங்களில் கூட்டுத்தொழுகை நடத்துவது பற்றி நான் விமர்சிக்கவில்லையே! தனியாக அதிக பக்தியுள்ளவர்களாக காட்டும் படி, பேருந்து நிலையங்களில் மற்ற இடங்களில் தொழுகை நடத்துவதைப் பற்றித் தான் என் கேள்விகள் கேட்டேன்.

தம்பி:  சரி, ஒரு முக்கியமான கேள்விக்கு வருகிறேன்.  பரிசேய‌ன் மற்றும் ஆயக்காரன் உவமையின் படி, "கிறிஸ்தவர்கள் நீதியான செயல்களைச் செய்யத் தேவையில்லையா! உபவாசம் இருக்கத்தேவையில்லையா? தசமபாகம் கொடுக்கத்தேவையில்லையா"? இவைகளைச் செய்யாமல் அந்த ஆயக்காரனைப்போல‌ "என் மீது இரக்கமாக இரும்" என்று ஜெபம் செய்தால் மட்டும் போதுமா?

உமர்: நீ பல கேள்விகளை ஒரே கேள்வியில் கேட்கிறாய். நான் ஒவ்வொரு விவரமாக விவரிக்கிறேன் கேள். அந்த உவமையில் அந்த ஆயக்காரன் (வரி வசூல் செய்பவன்), தன் சுய நீதியை இறைவனுக்கு முன்பாக சொல்லிக்காட்டவில்லை,  ஒரு யூதனாக அவனும் உபவாசம் இருந்திருப்பான், அவனும் தசம பாகம் கொடுத்திருந்திருப்பான். ஆனால், இந்த‌ உவமையில் கவனிக்கவேண்டியது என்னவென்றால், "மனிதர்களாகிய நாம் எவ்வளவு நல்ல செயல்கள், பக்தியான காரியங்கள் (அமல்கள்) செய்தாலும், இறைவனுக்கு முன்பாக வரும் போது, அவனது அருளையும், கிருபையையுமே சார்ந்து இருக்கவேண்டுமே ஒழிய, நாம் "இறைவனின் சமூகத்துக்கு வரும் போது, தொழும்போது" நாம் செய்த நல்ல செயல்களை  சொல்லிக்காட்டக்கூடாது, மேலும் நான் இவனைப்போல இல்லை, அவனைப்போல இல்லை என்று மற்றவர்களோடு ஒப்பிடக்கூடாது".

நாம் செய்கின்ற அனைத்து நீதியான செயல்கள் தேவனுக்கு முன்பாக கந்தைத்துணிகளுக்கு சமமாகும். கீழ்கண்ட வசனத்தில்  ஏசாயா என்ற தீர்க்கதரிசி தம்மையும் சேர்த்துக்கொண்டு, "நாங்கள் அனைவரும்" என்றும், "எங்களுடைய நீதியெல்லாம்" என்றும் சொல்வதைப் பார்:

ஏசாயா 64:6 நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது.

Isaiah 64:6 All of us have become like one who is unclean, and all our righteous acts are like filthy rags; we all shrivel up like a leaf, and like the wind our sins sweep us away.

தமிழில் "கந்தைத் துணி" என்று மொழியாக்கம் செய்யப்பட்ட வார்த்தைகள், எபிரேய மூல மொழியில் "இத்தா பெகெத்(idâ beḡeḏ)" என்ற வார்த்தைகளாகும். அரபியில் "இத்தா காலம்"என்றால் என்னவென்று அனேகருக்கு தெரிந்திருக்கும். இஸ்லாமின் படி "இத்தா காலம்"  என்றால், ஒரு பெண்ணின் கணவன் மரித்துவிட்டாலோ, விவாகரத்து செய்துவிட்டாலோ, உடனே அப்பெண் திருமணம் செய்யாமல், மூன்று மாதங்கள் காத்திருந்து, தனக்கு மாதவிடாய் நடந்தபிறகு திருமணம் செய்யவேண்டும்.

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் பயன்படுத்தும் துணியைத்தான் "இத்தா பெகெத்(idâ beḡeḏ)" என்று எபிரேய மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் படி பார்த்தால், பரிசுத்தரான‌ இறைவனின் பார்வையில், நம்முடைய நீதியான செயல்கள் அனைத்தும், பெண்கள் மாதவிடாய் நேரங்களில் பயன்படுத்தும் 'இரத்தத்தால் தோய்க்கப்பட்ட துணிகளுக்கு சமமாகும்" (கந்தைத் துணி என்று ஏசாயா வசனத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது). இப்படிப்பட்டவைகள் தான் நம்முடைய நீதியான செயல்கள். இவைகளை இறைவனுக்கு முன்பாகச் சொல்லி என்ன பயன்?

ஏசாயா 64:6 பற்றிய எபிரேய வசனத்தையும், இவ்வார்த்தைப் பற்றிய விவரங்களையும் கீழ்கண்ட தொடுப்புக்களில் சொடுக்கி படிக்க்லாம்.

https://www.blueletterbible.org/kjv/isa/64/6/t_conc_743006 

https://www.blueletterbible.org/lexicon/h5708/kjv/wlc/0-1/ 

  • Menstruation
  • filthy rag, stained garment (fig. of best deeds of guilty people)
  • STRONGS H5708:
  • † [עִדָּה] noun feminine menstruation, so Vrss (properly time, period); — plural absolute בֶּגֶד עִדִּים Isaiah 64:5 i.e. stained garment (figurative of best deeds of guilty people; || טָמֵא).

தம்பி:  அப்படியென்றால், கிறிஸ்தவர்கள் செய்யும் நற்செயல்கள் கூட கந்தைத் துணிகளுக்கு சமமா?

உமர்: ஆம், நாம் செய்யும் எல்லா நல்ல செயல்கள் உலகத்துக்கு முன்பாக மேன்மையாக தெரியும், ஆனால், பரிபூரண பரிசுத்தராகிய  தேவனுக்கு முன்பாக, அவைகள் கந்தைத் துணி போன்றதே (மாதவிடாய் நேரத்தில் இரத்தம் கசிந்த‌ நாப்கின் துணி போன்றதே! வாசகர்கள் மன்னிக்கவேண்டும், சில வேளைகளில் இப்படிப்பட்ட ஆய்வு விவரங்களை சொல்லித்தான் ஆகவேண்டும்.)

தம்பி:  ஆக, கிறிஸ்தவர்கள் நற்செயல்கள் செய்யக்கூடாது என்றுச் சொல்லவருகிறீர்களா? அனாதை இல்லங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் போன்றவைகள் மூலமாக கிறிஸ்தவர்கள் நற்செயல்கள் செய்யக்கூடாதா?

உமர்: உனக்கு உண்மை புரியவில்லை தம்பி. இவைகளையெல்லாம் கிறிஸ்தவர்கள் நிச்சயம் செய்யவேண்டும். ஆனால், இவைகளை தேவனுக்கு முன்பாகச் சொல்லி, "இவைகளை நான் செய்வதினால், என்னை பரலோகில் நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்கக்கூடாது, மற்றவர்களோடு தங்கள் நற்செயல்களை ஒப்பிடக்கூடாது, மற்றவர்களை தாழ்வாக பார்க்கக்கூடாது." இதனை நீ புரிந்துக்கொள்ளவேண்டும்.

மனிதன் தேவனின் கிருபையினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றான், அவன் செய்த நற்செயல்களால் அல்ல. இதைத் தான் கீழ்கண்ட வசனங்கள் சொல்கின்றன.

தீத்து 3:5. நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.

எபேசியர் 2:8-10

8. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; 9. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; 10. ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

தம்பி:  கிருபையினால் மனிதன் இரட்சிக்கப்படுகின்றான் என்றுச் சொன்னால், "நற்செயல்களை ஏன் செய்யவேண்டும்"?

உமர்: மேலேயுள்ள 10வது வசனத்தை கவனிக்கவும், "நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்". கிருபையினால் இரட்சிக்கப்பட்டுவிட்ட பிறகு, அதன் வெளிப்பாடாக, நாம் நற்காரியங்களை செய்யவேண்டும், இதைத் தான் நாம் கிறிஸ்தவர்கள் மூலமாக கட்டப்பட்ட‌ மருத்துவ மனைகளாகவும், பள்ளிக்கூடங்களாகவும், சேவை ஊழியங்களாகவும் பார்க்கிறோம்.

தம்பி:  இதனை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டுமென்றால், "கிருபை + நற்காரியங்கள்" இந்த இரண்டையும் செய்தால் தான் மனிதன் இரட்சிக்கப்படமுடியும்? இது சரிதானே?

உமர்: இல்லை, இது தவறு, "கிருபையினால் விசுவாசத்தைக்கொண்டு மனிதன் இரட்சிக்கப்படுகிறான்". இப்படி இரட்சிக்கப்பட்டவர்கள் மூலமாக வெளிப்படும் விளைவு தான் "நற்செயல்கள்", ஆகையால், நற்ச்செயல்கள் மூலமாக இரட்சிக்கப்படுகிறோம் என்றுச் சொல்லக்கூடாது, தேவனுடைய கிருபை மூலமாகத் தான் இரட்சிப்பு உண்டாகிறது. இது சிறிது குழப்பமாக உனக்குத் தெரியும், ஆனால், இது தான் உண்மை.

தம்பி:  யூதர்களும், முஸ்லிம்களும் "தங்கள் நீதியான செயல்களால்" இரட்சிக்கப்படுகிறார்கள் (தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கிறார்கள்), இதே போன்று கிறிஸ்தவர்கள் கிருபையினால் இரட்சிக்கப்படுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாமா? இவ்விரண்டும் உண்மையாக இருக்கலாம் அல்லவா?

உமர்: இது மிகவும் ஆபத்தான முடிவு மற்றும் புரிந்துக்கொள்ளுதல்.

இம்மூவரின் இறைவன் வெவ்வேறானவர்களாக‌ இருந்தால், இதற்கு சாத்தியமுண்டு, ஆனால், பிரச்சனை "இம்மூவர் வணங்கும் இறைவன் ஒருவரே" என்றுச் சொல்வதினால் தான்.

இதனால், ஏதாவது ஒன்று மட்டும் தான் உண்மையாக இருக்கமுடியும். பைபிளின் தேவனை நம்பினால், 'கிருபையால் தான் இரட்சிப்பு' என்பதை ஒப்புக்கொண்டாகவேண்டும். 

யெகோவா தேவன் வேறு, அல்லாஹ் வேறு என்று நம்பினால், நீ முஸ்லிம்களுக்காகச் சொல்வதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால், குர்ஆனின் படி, பைபிளை கொடுத்த இறைவன் தான் குர்‍ஆனையும் கொடுத்தானாம், இது உண்மையென்றால், நீ சொல்வது உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை.

தம்பி:  அப்படியென்றால், முஸ்லிம்கள், தங்கள் நீதியான அமல்களினால் இரட்சிக்கப்படமுடியாது என்றுச் சொல்லவருகிறீர்களா?

உமர்: இப்படி நேரடியாக கேள்வி கேட்டால் எப்படி தம்பி? பைபிளின் படி, இயேசுக் கிறிஸ்துவின் நற்செய்தியின் படி "ஆம், இது தான் உண்மை, நம்முடைய நீதியான செயல்கள் பரிசுத்த தேவனுக்கு முன்பாக கந்தைத்துணிகளுக்கு சமம் என்றால், எப்படி அவருக்கு முன்பாக நம்முடைய கந்தையான செயல்களை நம்பி நாம் நிற்கமுடியும்"? இது யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும்.

தம்பி:  ஒரு முஸ்லிம் செய்யும் அமல்கள் (தொழுகைகள், நற்செயல்கள்) அனைத்தும் வீணா? இதனை எப்படி ஏற்றுக்கொள்வது?

உமர்: சரி, உன் கணக்குப்படியே வருகிறேன். ஒரு முஸ்லிம் அதாவது உன்னைப்போன்ற ஒரு நபர், தன்னுடைய 20வது வயதில், இஸ்லாமை தழுவுகின்றான் என்று வைத்துக்கொள்வோம், அடுத்த 50 ஆண்டுகள் (வயது 70 ஆகும்வரை) அவன், தினமும் ஐந்து வேளை தொழுகை செய்கின்றான், இதர நற்செயல்கள் செய்கின்றான் என்று வைத்துக்கொள்வோம்.

அவனுக்கு 70 வயது முடியும் போது, மரிக்கும் நேரம் அவனுக்கு தெரிந்துவிட்டது, அதாவது தன் உடல் நிலை சரியில்லை, மருத்துவர்களும் நாட்களை குறித்துவிட்டார்கள். இந்த நேரத்தில் அவனிடம் சென்று:

"நீங்கள் கடந்த 50 ஆண்டுகள், அதாவது 50 ஆண்டுகள் * 365  நாட்கள் * 5 முறை = 91,250 முறை தொழுகை செய்திருக்கிறீர்கள். இன்னும் மேலதிக உபரி தொழுகைகள், பண்டிகை கூட்டுத் தொழுகைகளைச் சேர்த்து, ஒரு லட்சம் முறை தொழுதிருக்கிறீர்கள், இன்னும் தானதர்மங்களும், ஜகாத்தும் கொடுத்து இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட நற்செயல்களை அமல்களைச் செய்த நீங்கள் மரிக்கும் போது, "அல்லாஹ் உங்களுக்கு சொர்க்கம் புக அனுமதிப்பான் என்ற நம்பிக்கை" இப்போது உங்களுக்கு உண்டா என்று கேட்டால்? அவருடைய பதில் என்னவாக இருக்கும்?

தம்பி! சொல். இந்த நிலையில் நீ இருந்தால், உன் பதில் என்னவாக இருக்கும்?

தம்பி: இதை நான் எப்படிச் சொல்லமுடியும், இதனை அல்லாஹ் தான் நிர்ணயிப்பான்! என் அமல்கள் (நற்செயல்கள்) என் தீய செயல்களை விட அதிகமாக இருந்தால், சொர்க்கம் தருவான், இல்லையென்றால் இல்லை.

உமர்:  "சொர்க்கத்தின் நிச்சயம்" எப்போது முடிவு செய்யப்படும்? உயிரோடு இருக்கும் போதா? அல்லது மரித்த பிறகா? 

தம்பி: "சொர்க்கத்தின் நிச்சயம்" உயிரோடு இருக்கும் போது முடிவு செய்யப்படாது, மரித்த பிறகு தான் முடிவு செய்யப்படும். அல்லாஹ் எடுக்கும் முடிவை மனிதன் எப்படி முன்கூட்டியே சொல்லமுடியும்?

உமர்: [இது தான் இஸ்லாமில் இருக்கின்ற மிகபெரிய ஓட்டை அல்லது தீமை]

ஒருவேளை, துர்திஷ்டவசமாக, உன் நற்செயல்கள், தீய செயல்களைவிட குறைவாக இருப்பது, மரித்த பிறகு தான் தெரியும் என்றுச் சொன்னால், உனக்கு அதனை சரி செய்ய வாய்ப்பு கிடைக்குமா?

அந்த நேரத்தில் அல்லாஹ் உன்னிடம் "உனக்கு இன்னொரு வாய்ப்பு தருகிறேன், இன்னும் 5 ஆண்டுகள் நான் தருகிறேன், நீ உலகில் சென்று(உயிர் பெற்று), அதிக அமல்களைச் செய்துவிட்டு வா என்று அல்லாஹ் அனுப்புவானா?". அப்படி அனுப்பினாலும், "அந்த ஐந்து ஆண்டுகளில், எப்படி கணக்கு வைத்து, உன் அமல்களை செய்வாய்? அந்த ஐந்தாண்டுகளில் சிந்தையிலும் ஒரு பாவமும் செய்யாமல், நீ வாழ்வாயா"?

தம்பி: இல்லை, இல்லை, இதற்கு வாய்ப்பு இல்லை, ஒரு முறை மரித்தால், கதை அதோடு முடிந்துவிடும். ஒருவேளை நீங்கள் சொல்வது போல நடந்தால், முடிந்தது கதை, "நான் மரித்து உயிர்த்தேன் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு, முன்பை விட இன்னும் அதிக கர்வம் கொண்டு, தீய செயல்களைச் செய்து, இன்னும் அதிகமான பாவங்களை தன் கணக்கில் மனிதன் சேர்த்துக்கொள்வான்" அல்லவா?

உமர்: அப்படியென்றால், உன் அமல்கள்/நீதியான நற்செயல்கள் மீது சார்ந்து வாழ்வது வீண் தானே!  உன் முடிவு என்னவாகும் என்று வாழும் போதே தெரியாமல் பயத்தோடு வாழ்வது மிகவும் மோசமான நிலையல்லவா? “நிச்சயம் இல்லாமல்”, வாழ்ந்து என்ன பயன்? இப்படிப்பட்ட இறையியலை நம்பி வாழ்வது முத்திசாலித்தனமா? தம்பி!

தம்பி: நீங்கள் சொல்வது சரி தான். ஆனால், இதற்கு மாற்று என்ன இருக்கிறது?

உமர்: இதைத் தான் இஸ்லாமிய இறையியலில் உள்ள தவறு என்று நாங்கள் சொல்கிறோம். மனிதனின் நற்செயல்களை கணக்கில் கொண்டு, சொர்க்கம் நிச்சயிக்கப்படுவது என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.  50 ஆண்டுகள் (அ) 70 ஆண்டுகள் (அ) 100 ஆண்டுகள் ஒரு முஸ்லிம் வாழ்ந்தாலும், அவனது அமல்களின் நிலை, அவனை சொர்க்கம் சேர்க்குமா? இந்த நம்பிக்கை முஸ்லிம்களுக்கு உண்டா? 

பங்குச் சந்தையை நம்பி வாழ்ந்தவர்களும் உண்டு, கெட்டுப்போனவர்களும் உண்டு, ஒரு நம்பிக்கையின் பெயரில் கணக்குகள் போட்டு பங்குகள் வாங்குகிறோம். ஆனால், பங்குச் சந்தையை விட மிகவும் மோசமான இறையியலில் இஸ்லாம் உள்ளது. இங்கு கணக்கே நமக்கு தெரிவதில்லை. மரித்த பிறகு தனக்கு என்ன கிடைக்கும் என்று தெரியாத பட்சத்தில் வாழ்வது சரியானதா தம்பி?

இறைவனின் எதிர்ப்பார்க்கும் தரத்தின்படி மனிதன் வாழ்வது என்பது, நடக்காத ஒன்று. இதற்கு ஒரே தீர்வு, அந்த இறைவன் தன் "கிருபையால் மனிதனுக்கு இரட்சிப்பை, சொர்க்கத்திற்குள் நுழையும் வாய்ப்பை இலவசமாக கொடுப்பது தான்". இதைத் தான் கிறிஸ்தவம் "கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;" என்றுச் சொல்கிறது. ஆகையால், கிறிஸ்தவ இறையியலின் படி, மனிதன் தன் நற்செயல்களுக்காக பெருமை அடித்துக்கொள்ளமுடியாது. தன் நீதியான செயல்களால், இயேசு எனக்கு இரட்சிப்பு கொடுத்தார் என்றுச் சொல்லமுடியாது.

தம்பி, நீ இறைவனின் இலவச கிருபையை பெற விரும்புகிறாயா? அல்லது உன் அமல்கள் (கந்தைத் துணி, இத்தா துணி) மூலமாக அந்த இறைவனின் தரத்திற்கு மேலாக எட்டிவிடலாம் என்று நம்புகிறாயா?

தம்பி: அண்ணே! நான் குழம்பியுள்ளேன்! என்னை மறுபடியும் கிறிஸ்தவனாக்க முயலுகின்றீர்கள் போல தெரிகின்றது? 

உமர்: சத்தியத்தை உனக்குச் சொல்லியுள்ளேன், அது உன்னை விடுதலையாக்க நீ அனுமதித்தால், நீ உண்மையாக விடுதலையாவாய்!  இதுவரை நீ செய்த அனைத்து அமல்கள் உனக்கு உதவுமா? அந்த நம்பிக்கை உனக்கு உண்டா?  

தம்பி: போதும் போதும்! என்னை யோசிக்கவிடுங்க! நான் இன்னொரு முறை உங்களை அழைத்து பேசுவேன். குட் நைட்.

உமர்: குட் நைட் தம்பி.

இன்னொரு உவமையோடு சந்திப்போம்.

தேதி: 20th April 2022


ரமளான் 2022 கட்டுரைகள்

முந்தைய ஆண்டுகளின் ரமளான் கட்டுரைகள்

உமரின் பக்கம்