நாள் 4 - ஜபூர் 22 காட்டும் இறைவழி மஸீஹாவின் மரண துன்பங்கள்

(2024 ரமளான் - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம்)

ரமளான் தியான முந்தைய கட்டுரைகளை படிக்க கீழே சொடுக்கவும்.

  1. நாள் 1 - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : சங்கீதம் காட்டும் சத்திய வழி
  2. நாள் 2 - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : 'தவ்ராத்'ஐ முஸ்லிம்கள் படித்து பாக்கியமுள்ளவர்களாக மாற அல்லாஹ் அழைக்கிறான்
  3. நாள் 3 - சங்கீதம் 1ல் முஹம்மது இல்லை என்பதற்கான நான்கு காரணங்கள்

ஜபூர் (சங்கீதம்) 22ல் உள்ள சில வசனங்களில் பொதிந்திருக்கும் முன்னறிவிப்புக்கள் பற்றி ஆய்வு செய்வோம்.

ஜபூரின் "இயேசுவின் சிலுவை மரணம்" பற்றிய முன்னறிவிப்பு

இயேசு சிலுவையில் அறையப்படவில்லையென்றும், அந்த இடத்தில் அறையப்பட்டவர் வேறு ஒரு நபர் என்றும், இந்த ஆள்மாறாட்டத்தை அல்லாஹ் செய்தான் என்றும் குர்‍ஆன் சொல்கிறது. 

இதே குர்‍ஆன் தான் "தாவூதுக்கு ஜபூரைக் கொடுத்தோம்" என்றும் சொல்கிறது.  தாவூதின் காலம் கி.மு. 1000 ஆகும், அதாவது இயேசுவிற்கு 1000 ஆண்டுகளுக்கு வாழ்ந்த தாவீதுக்கு அல்லாஹ் ஜபூரை கொடுத்தான். அந்த ஜபூரில் பல முன்னறிவிப்புக்கள் மேசியாவை (மஸீஹாவை)ப் பற்றி உள்ளது. அதில் மிகவும் முக்கியமான முன்னறிவிப்பு, மஸீஹாவின் மரணம் பற்றியதாகும். சரி, ஜபூர் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை முதலில் படிப்போம்.

சங்கீதம் 22:1

என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?

இதே வார்த்தைகளைத் தான் இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது மகாசத்தமாய் கூப்பிட்டார்  என்று, ஜபூருக்கு 1000 ஆண்டுகளுக்கு பின்பு வந்த மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்தி நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • மத்தேயு 27:46 & மாற்கு 15:34: அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி)

இயேசு இந்த ஒரு முறை மட்டுமே "என் தேவனே! என் தேவனே!" என்று கூப்பிட்டுள்ளார், மற்ற நேரங்களில் எல்லாம் அவர்:

  • "என் பிதா" (மத்தேயு 26:42) என்றும், 
  • "பிதா" (யோவான் 12:28) என்றும், 
  • இன்னும் "பரமண்டலங்களில் இருக்கிற பிதா"(மத்தேயு 5:48,  லூக்கா 11:13) 

என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

தம் எல்லா வாழ்நாட்களிலும், பிதா என்று அழைத்தவர், இந்த ஒரு முறை மட்டுமே, பிதா தம்மை விட்டு முகத்தை திருப்பிக்கொண்டதை உணர்ந்து, இயேசு "என் தேவனே" என்று கூப்பிட்டுள்ளார். ஏன் பல கோடி உலக மக்கள் இயேசுவை தெய்வமாக வணங்குகிறார்கள்? அப்படி என்ன விசேஷித்த செயலை இந்த சிலுவை மரணம் செய்தது? இந்த சிலுவை நிகழ்ச்சியின் விளைவுகள் உலகில் என்னென்ன நடந்துள்ளது என்பதை முஸ்லிம்கள் கவனிக்கவேண்டும், சிந்திக்கவேண்டும்.

இந்த 22ம் சங்கீதத்தின் அடுத்த முக்கிய வசனம் 8ம் வசனமாகும்.

சங்கீதம் 22:8

22:8. கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள்.

மேசியாவிற்கு நடக்கவிருப்பதை தாவீது முன்னறிவிப்பாக ஜபூரில் சொல்லியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, யூத தலைவர்கள், இயேசு சிலுவையில் தொங்குவதைக் கண்டு, தாங்கள் வெற்றிபெற்றதாக நினைத்து, ஜபூரில் தாவீது சொன்ன அதே வார்த்தைகளை தங்களை அறியாமலேயே சொல்லிவிட்டார்கள், மேசியா பற்றிய தீர்க்கதரிசன வசனங்கள்  அச்சயமத்தில் நிறைவேறிக்கொண்டு இருப்பதை அவர்கள் அறியவில்லை.

மத்தேயு 27:41-43

41. அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம்பண்ணி:

42. மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.

43. தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.

அடுத்தபடியாக, தாவீது ஜபூரில் கூறும் போது:

சங்கீதம் 22:14-15

14. தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.

15. என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.

இவ்வசனங்களை தம்மைப் பற்றித்தான் தாவீது கூறுகின்றார் என்று கூறுவதற்கில்லை.

தாவீதின் காலத்தில், சிலுவையில் அறைந்துக்கொல்லுதல் என்ற தண்டனையில்லை என்பதை நாம் அறியவேண்டும், மேலும், சிலுவையில் அறைப்பட்ட ஒரு மனிதன் படும் துன்பங்களைத் தான் தாவீது 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஜபூரில் முன்னறிவித்துள்ளார்.

மேலும் 16வது வசனத்தில் சொல்லப்பட்ட வரிகளை பார்த்தால், இயேசுவை சிலுவையில் அறையப்படும் போது, நேரடியாக பார்த்தவர் போல தாவீது ஜபூரில் பதிவு செய்துள்ளார், அதாவது "என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்" என்று ஜபூர் பதிவு செய்கிறது.

சங்கீதம் 22:16

16. நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.

கடைசியாக, 18வது வசனத்தில்:

சங்கீதம் 22:18

18. என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.

ஜபூரில் தாவீது பாடிய இந்த பாடலின், இந்த வரிகள் பற்றி 10 நூற்றாண்டுகளாக, யூத தலைவர்களால், இது யாரைக் குறித்து சொல்லப்படுகிறது என்று குழம்பியிருந்தார்கள். தாவீதைப் பற்றியோ, அல்லது இதர தீர்க்கதரிசிகள் பற்றியோ இது போல, ஒருவருடைய உடைகளுக்காக சீட்டு போட்டு, அவைகளை தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டதை யாரும் கேள்விப்படவில்லை. இப்படிப்பட்ட நிகழ்ச்சி எந்த ஒரு தீர்க்கதரிசிக்கும் நடக்கவில்லை.

இதற்கான பதில், மேசியாவை சிலுவையில் அறையப்படும் போது, ரோம இராணுவத்தினர் 'இயேசுவின் உடையின் மேல் சீட்டு போட்டு, அவரது அங்கியை தங்களுக்குள் பகிர்ந்துக்கொண்டாரகள்' என்ற நிகழ்ச்சி நடக்கும் போது தான், எல்லோருக்கும் தாவீதின் ஜபூர் 22:18ம் வசனம் புரிந்தது.

யோவான் 19:23-24

23. போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது.

24. அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள்.

ரோம போர்ச்சேவகர், தங்கள் காலத்துக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த தாவீது மூலமாக இறைவன் ஜபூரில் சொன்ன தீர்க்கதரிசனங்களை "மேற்கண்ட வசனத்தில் நிறைவேற்றிக்கொண்டு இருந்தார்கள்". அவர்களை பொறுத்தமட்டில், ஒரு புதிய துணி(அங்கி) தங்களுக்கு கிடைத்தது, ஆனால், உலகத்துக்கோ, அந்த தருணம் இரட்சிப்பை கொடுக்கும் நுழைவாயிலாக இருந்தது.

இதுவரை பார்த்த சில வசனங்கள் மூலமாக அறிவதென்ன? ஜபூரின் 22ம் பாடல் சொல்லும் மஸீஹா பற்றிய முன்னறிப்பு என்ன? அவரை காயப்படுத்துவார்கள், கைகளிலேயும் கால்களிலும் உறுவகுத்துவார்கள், அவரது உடைகள் மீது சீட்டு போட்டு, பங்கிட்டுக்கொள்வார்கள் என்பதாகும்.

முஸ்லிம்களின் வாதம்: இயேசுவின் இடத்தில் இன்னொருவரை அல்லாஹ் மாற்றினான் என்று முஸ்லிம்கள் கூறுவார்கள். இந்த வாதம் எவ்வளவு பெரிய பாதிப்பை இஸ்லாமுக்கு கொடுக்கும் என்பதை அறிய கீழ்கண்ட கட்டுரையை படிக்கவும்:

முடிவுரை:

ஜபூரை அல்லாஹ் தாவூதுக்கு இறக்கியதாக குர்‍ஆன் சொல்கிறது. அந்த ஜபூரில் என்னவுள்ளது என்பதை அறிய முஸ்லிம்கள் விரும்புவதில்லை, தங்கள் இறைவன் கொண்டுவந்ததையே முஸ்லிம்கள் புறக்கணிக்கிறார்கள். 

இந்த கட்டுரையில், ஜபூர் 22வது அத்தியாயத்தில் உள்ள சில வசனங்களை நாம் பார்த்தோம்.

1000 ஆண்டுகளுக்கு பிறகு மஸீஹாவிற்கு நடக்கும் நிகழ்வுகள் பற்றி தாவூதுக்கு எப்படி தெரியும்? அவைகள் மேசியா பற்றிய தீர்க்கதரிசன வசனங்களே! அவைகள் இயேசுவின் வாழ்வில் துள்ளியமாக நிறைவேறியதை நாம் ஆய்வு செய்துள்ளோம்.

ஜபூரை படிக்க விருப்பமுள்ளவர்கள்: இந்த தொடுப்பை சொடுக்கவும்.

அடுத்த கட்டுரையில், ஜபூர் காட்டும் நேரான வழிகள் பற்றி மேலும் ஆய்வு செய்வோம்...

தேதி: 13th March 2024


ரமளான் 2024 கட்டுரைகள்

உமரின் பக்கம்