ரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்?

['அன்புள்ள தம்பிக்கு' உமர் எழுதிய முந்தைய கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும்]

அன்புள்ள தம்பி,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

உன் கடிதம் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நீ திறந்த மனதுடன் என் கடிதங்களை படித்து, திறந்த மனதுடன் பதில் எழுதுகிறபடியால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

உன் கடிதத்தில் சில முக்கியமான கீழ்கண்ட கேள்விகளை கேட்டு இருந்தாய்:

  1. தேவன் தம் வார்த்தையை தீர்க்கதரிசிகள் மூலம் இறக்கினார், பைபிளில் தேவ‌னுடைய‌ வார்த்தை எபிரேயம், கிரேக்கம் ம‌ற்றும் சிறிது அராமிக் மொழியிலும் உள்ள‌து. தேவன் இறக்கிய வார்த்தைகளில் உள்ள உண்மை அர்தத்தை அறிந்துக்கொள்ள வேண்டுமானால், அம்மொழியில் (எபிரேய, கிரேக்க) படித்தால் தானே புரியும். தமிழில் படித்தால் எப்படி புரியும்?
  2. மேலும் வெளிப்படுத்தின விசேஷம் 1:3ம் வசனத்தில், " இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள் " என்று உள்ளது, அதாவது வாசிப்பவனும், கேட்பவனும், கீழ்படிகிறவனும் பாக்கியவான். இறைவன் எந்த மொழியில் இறக்கினானோ அதே மொழியில் வாசிப்பதும்,கேட்பதும் பாக்கியமாக பைபிள் கருதுகிறது அல்லவா?
  3. ஆக, பைபிளே இப்படி சொல்லும்போது, குர்‍ஆனை அரபியில் படித்தல் எப்படி செல்லாததாக ஆகும். ஏன் நீங்கள் இஸ்லாமை குற்றப்படுத்துகிறீர்கள்?

உன் கேள்விகளை மேலோட்டமாக படித்தால், நீ சொன்ன விவரங்களில் நியாயம் இருக்கிறது என்று சொல்லத்தோன்றும், ஆனால், அவைகளை சிறிது ஆராய்ந்து பார்த்தால், உன் கேள்விகளில் உள்ள அறியாமை வெளிப்படும். இப்போது அவைகளை சுருக்கமாக விளக்குகிறேன்.

பைபிளின் தேவன் தன் தீர்க்கதரிசிகள் மூலமாக பேசும் போது, அவர்கள் பேசிய மொழியிலேயே பேசினார். அந்த தீர்க்கதரிசிகளுக்கு விவரம் புரிந்தால் தான் அவர்கள் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். அவர்கள் எபிரேய, கிரேக்க மற்றும் அராமிக் மொழியில் அதனை மக்களிடம் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

மூலமொழியில் படித்தால் தான்  உண்மை அர்த்தம் விளங்கும், மொழியாக்கங்களில் படித்தல் அதன் அர்த்தம் பாதிக்கப்படும் என்பது உன் கேள்வி. உன்னுடைய கேள்வி சரியான கேள்வி தான். மேலும் நாம் ஆய்வு செய்வதற்கு முன்பாக,  ஒரு சில உதாரணங்களை உனக்கு நான் காட்ட விரும்புகிறேன்.

கீழ்கண்ட இரண்டு வசனங்களை நான் மூலத்தில் கொடுத்துள்ளேன், அவைகளை படித்துப் பார்த்து, உனக்கு முழுவதுமாக புரிகின்றதா என்று பார்.

ஆங்கிலத்தில் உள்ள Transliterationஐ நீ படிக்கலாம்.

Transliteration:  Houtōs gar ēgapēsen ho Theos ton kosmon, hōste ton Huion ton monogenē edōken, hina pas ho pisteuōn eis Auton mē apolētai all᾽ echē zōēn aiōnion.
Transliteration: Qāla 'Innamā 'Anā Rasūlu Rabbiki Li'haba Laki Ghulāmāan Zakīyāan

உனக்கு இவ்விரு வசனங்களின் பொருள் மிகவும் ஆழமாக புரிந்ததா? ஏனென்றால், இவைகள் மூல மொழிகளில் உள்ளன. உனக்கு தேவையானால், மூல  மொழி எழுத்துக்களிலேயே தருகிறேன், கீழே உள்ளவற்றை படித்துப்பார்.

Greek:  Οὕτως γὰρ ἠγάπησεν ὁ Θεὸς τὸν κόσμον, ὥστε τὸν Υἱὸν τὸν μονογενῆ ἔδωκεν, ἵνα πᾶς ὁ πιστεύων εἰς Αὐτὸν μὴ ἀπόληται ἀλλ᾽ ἔχῃ ζωὴν αἰώνιον.
قَالَ إِنَّمَا أَنَا رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَامًا زَكِيًّاِ :Arabic

நீ மூலமொழியில் படித்தாலும் உனக்கு புரியாது, அதனுடைய டிரான்ஸ்லிடெரேஷனில் படித்தாலும் புரியாது.

ஆனால், உன்னுடைய முதல் கேள்வி என்னவாக இருந்தது?  இறைவன் இறக்கிய மூல மொழியில் படித்தால் தானே பொருள் சரியாக புரியும்? என்பதாகும். ஆனால், மேலேயுள்ள இரண்டு வசனங்களை நீ மூல மொழியில் படித்தாய் ஆனால், உனக்கு 1% சதவிகிதமும் புரியவில்லை.

மூல மொழியில் படித்தால் உண்மை பொருள் புரியும் என்பது ஒரு புறமிருக்க, முதலாவது நமக்கு அந்த மொழி தெரிந்து இருக்கவேண்டும் என்பது அடிப்படை தேவையாகும். எனக்கு எபிரேய மொழி தெரியாது, கிரேக்க மொழியும் தெரியாது. நான் சங்கீதம் 1 (அ) 23 மற்றும் இயேசுவின் மலைப்பிரசங்கத்தை எபிரேய மற்றும் கிரேக்க மொழியின் டிரான்ஸ்லிடெரஷனில் படித்தல் அதனால் என்ன பயன் கிடைக்கும்?

எனக்கு, கர்த்தர் சொன்ன வசனத்தின் பொருள் 100% புரியவேண்டும் என்பதற்காக நான் இப்போது உட்கார்ந்துக்கொண்டு, எபிரேயம் மற்றும் கிரேக்க மொழியை கற்கமுடியாது, ஒருவேளை எனக்கு நேரமும், திறமை இருந்து கற்றுக்கொண்டாலும், உலகத்தின் எல்லா மக்களும் மூல மொழிகளை கற்றுக்கொண்டு வேதங்களை படித்தால் தான் அந்த வேதங்களை கொடுத்த இறைவன் அங்கீகரிப்பான் என்பது தவறான கோட்பாடாகும்.

சங்கீதம் 1:1,2 வசனங்கள் எனக்கு தமிழ் மொழியிலேயே 100% புரிந்துவிட்டது, இதை புரிந்துக்கொள்ள நான் ஏன் மூல மொழிக்குபோகவேண்டும், அது வீணான காரியமாகும்:

சங்கீதம் 1:1,2 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

மேலும் இயேசுவின் மலைப்பிரசங்கத்தில் உள்ள சாராம்சம் எனக்கு தமிழிலேயே நன்றாக புரிந்துவிடுகிறது, நான் ஏன் கிரேக்க மொழியில் அவைகளை படிக்க முயற்சி எடுக்கவேண்டும்?

மத்தேயு 5:7,8 இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

வேதபண்டிதர்கள் அல்லது பைபிள் ஆய்வு செய்பவர்கள் தங்களின் ஆய்விற்கு உபயோகமாக இருக்கும் என்பதற்காக மூல மொழியை கற்று அவர்கள் அதன்  அடிப்படையில் தங்கள் ஆய்வை செய்யலாம். இப்படிப்பட்டவர்களுக்கு  மூல மொழியை கற்பது உபயோகமாக இருக்குமே ஒழிய, சாதாரண மக்களுக்கு மூல மொழியில் படிப்பது அவசியமற்றவது, இது சாத்தியமும் இல்லாதது. இறைவன் மூல மொழியில் படித்தால் தான் அங்கீகரிப்பேன் என்றுச் சொன்னால், அவன் உண்மையான இறைவனே இல்லை.

இரண்டாவதாக, நீ வெளி 1:3ம் வசனத்தை குறிப்பிட்டு, அதில் இருக்கும் வாசிக்கிறவனும், கேட்கிறவனும் பாக்கியான் என்ற சொற்றொடரை குறிப்பிட்டு உன் புரிந்துக்கொள்ளுதலை வெளிப்படுத்தியிருந்தாய்.

நீ புரிந்துக்கொண்டது போல, கிரேக்க அல்லது எபிரேய மொழியில் படித்தால் தான், கேட்டால் தான் பாக்கியவான் என்று தேவன் கூறவில்லை. ஏனென்றால், அப்படி செய்வது உண்மையாக இருந்திருந்தால், கடந்த 2000 ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் பின்பற்றி இருந்திருப்பார்கள், ஆனால், அப்படி யாரும் செய்யவில்லை, அதாவது எல்லாரும் கிரேக்க மற்றும் எபிரேய மொழியை கற்றுக்கொண்டு வந்திருப்பார்கள், வேதபண்டிதர்கள் தவிர மற்ற யாரும் இபப்டி செய்யவில்லை. மேலும், அதே வசனத்தில் "கைக்கொள்கிறவனும்" என்ற சொற்றொடர் இருப்பதையும் காணவும். ஒருவருக்கு புரியவில்லையானால் எப்படி அவன் அவைகளை கைக்கொள்ளமுடியும்? ஒருவன் கீழ்படியவேண்டும் என்றுச் சொன்னால், அவனுக்கு முதலாவது புரியவேண்டும். ஒருவனுக்கு புரியவேண்டுமென்றால், அவனுக்கு புரியும் மொழியில் அவனுக்கு சொல்லவேண்டும்.

ஆக,  வெளி 1:3ல் சொல்லப்பட்ட விவரத்தின் படி, கிறிஸ்தவர்கள் எபிரேய மற்றும் கிரேக்க மொழியில் இயந்திரங்களைப் போல, படிக்கவேண்டும், கேட்கவேண்டும் என்று சொல்லப்பட்ட கட்டளையில்லை. கேட்பது நமக்கு புரியும் மொழியில் இருக்கவேண்டும், படிப்பது நமக்கு புரியும் மொழியில் இருக்கவேண்டும், அப்போது தான் படித்தவைகளுக்கு கீழ்படியமுடியும். ஆக, உன் புரிதல் தவறாக உள்ளது தம்பி.

நான் அடிக்கடி கேள்விபடுகின்ற விவரம் என்னவென்றால், குர்‍ஆனை அரபியில் படிக்கும் ஒவ்வொரு எழுத்துக்கும் அல்லாஹ் நன்மைகளை தருவார் என்பதாகும்.  இது மிகவும் தவறான ஒன்றாகும், ஒரு மனிதனுக்கு தான் படிப்பதே தனக்கு புரியாது என்று இருக்கும் போது இறைவன் எப்படி நன்மைகளை தருவான், இது அறிவுடையோருக்கு ஏற்றது அல்ல. ஒருவேளை அரபி தெரிந்தவர்கள் குர்‍ஆனை அரபியில் படிக்கும் போது ஒவ்வொரு எழுத்துக்கும் அல்லாஹ் நன்மைகளை தருவான் என்று சொன்னால், ஒரு பேச்சுக்காகவாவது ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அரபியே தெரியாமல் ஒரு இயந்திரம் போல படித்துக்கொண்டே போனால், அல்லாஹ் நன்மைகளை தருவான் என்பது ஏமாற்றுவேலையாகும்.

மேலும், அரபியில் குர்‍ஆனை புரியாமல் படிப்பதற்கும், அதே குர்‍ஆனை நமக்கு புரியும் மொழியில் படிப்பதற்கும் அல்லாஹ் எப்படி நன்மைகளை தருவான் என்று கேள்வி கேட்டால், இரண்டிற்கும் நன்மைகள் உண்டு, ஆனால், அரபியில் படிப்பதற்கு (புரியாமல் படித்தாலும்) அதிக நன்மையை அல்லாஹ் கொடுப்பான் என்றுச் சொல்வார்கள். தமிழாக்கத்தில் குர்‍ஆனை படித்து புரிந்துக்கொள்ளவேண்டும் என்று ஆர்வம் இருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட விளக்கங்கள் தடைக்கற்களாக மாறிவிடுகின்றன.

தம்பி அதிகமாக எழுதிவிட்டேன், உன்னுடைய அடுத்த கடிதத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.

இப்படிக்கு, உன் சகோதரன்

தமிழ் கிறிஸ்தவன்.

மூலம்

உமரின் ரமளான் மாத தொடர் கட்டுரைகள்