ரமளான் நாள் 25

ஆபிரகாமின் குர்பானியும் இயேசுக் கிறிஸ்துவும்

['அன்புள்ள தம்பிக்கு' உமர் எழுதிய முந்தைய கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும்] 

அன்புள்ள தம்பிக்கு,

உனக்கு சமாதானம் உண்டாகட்டும்.

தம்பி, உன் பதில் கடிதங்களை பார்க்கும் போது உன் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு வருவதை உணர்கிறேன், எனக்கு மிகவும் சந்தோஷமாகவுள்ளது. எம்மை படைத்த நாயன் அவருடைய தூதர்கள் (மலக்குகள்) முன் உன் மனந்திரும்புதலை எதிர்பார்த்து எப்படி காத்திருப்பார் என்பதை சற்று சிந்தித்துப் பார். 

இந்த கடிதத்தில் ஆபிரகாம் (இப்ராஹிம்) கொடுத்த குர்பானி பற்றி உன்னுடன் உரையாட விரும்புகிறேன்.

1) ஆபிரகாமும் குர்பானியும்

ஆபிரகாமின் மனைவி தனது முதிர்வயதில் இறைவனின் வார்த்தையின் படி குழந்தையை பெற்றெடுக்கிறாள். அந்த குடும்பத்தில் ஏற்பட்ட சந்தோஷத்தை வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாது. காலங்கள் உருண்டோடின. இந்த விசுவாசத்தின் தந்தைக்கு இறைவன் ஒரு சோதனையை வைக்கிறார். அதாவது தன் உயிரிலும் மேலாக நேசித்த தன் அன்பு மகனை தனக்காக குர்பானி (பலி) கொடுக்குமாறு இறைவன் கட்டளையிடுகிறார். 

இறைவனின் மேல் முழு நம்பிக்கை வைத்திருந்த ஆபிரகாம், தன் உயிருக்குயிரான மகனைவிடவும் அதிகமாக இறைவனை தான் நேசிக்கிறேன் என்பதை உறுதிப்படுத்த மகனை பலி (குர்பான்) கொடுக்க ஆயத்தமாகிறான். கத்தியை ஓங்கும் போது, இறைவன் ஆபிரகாமை தடுத்து ஒரு ஆட்டை கொடுத்து தன் மகனுக்கு பதிலாக அந்த ஆட்டை  பலியிடுமாறு கூறுகிறான்.

தம்பி, நீ பலியை பற்றி படித்த பாடங்களை மறந்திருக்க வாய்ப்பில்லை. என்றாலும் இன்னும் நீ குர்பானி ஹகீகா போன்ற பேர்களில் பலி கொடுத்துகொண்டுதான் இருக்கிறாய். உன் இஸ்லாமிய நண்பர்களிடம் இதற்கு நீ விளக்கம் கேட்டால். "ஆபிரகாமின் மேற்கண்ட நிகழ்ச்சியை கூறி, மேலும் முஹம்மது நபி சொன்னார் நாங்கள் செய்கிறோம்" என்று அவர்கள் சொல்வார்கள். ஆனால், அதன் அர்த்தம் அவர்களுக்கு தெரிவதில்லை. இந்த பலிகளை செலுத்தி வெறுமனே இறைச்சி சாப்பிடுவது மட்டும் தான் அவர்களுக்கு தெரியும். ஆபிரகாமின் மகனை பலியிடுவதிலிருந்து தடுத்த இறைவன் அப்படியே விட்டிருக்கலாம், ஆனால், ஒரு ஆட்டை காண்பித்து, அவனுக்கு பதிலாக இந்த ஆட்டை குர்பானி கொடு  என்று ஏன் கூறவேண்டும்? 

2) இறைவனிடம் நெருங்குவதற்கான வழி எது?

பலிகளை நாங்கள் எதற்காக கொடுக்கிறோம்? இறைவன் இதில் எங்களுக்கு கற்பிக்கும் படிப்பினை என்ன? பலிகொடுக்கும் முறை எங்கு தோன்றியது. முந்தைய நபிமார்கள் எதற்காக கொடுத்தார்கள்? எனும் கேள்விகளை கேட்டால் "அல்லாஹ் மட்டும்  தான் அறிவான்" எங்களுக்கு தெரியாது. முஹம்மது நபி சொன்னதை நாங்கள் செய்வோம் என்பதுதான் இஸ்லாமியரின் பதிலாக இருக்கும். ஆனால் நீ அப்படி தக்லீது (கண்மூடித்தனமாக பின்பற்றுதல்) செய்ய மாட்டாய் என்று நினைக்கிறேன்.

குர்-ஆனில் கீழ்கண்ட விதமான ஒரு வசனம் உள்ளது:

நம்பிக்கைகொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! (குர்ஆன் 5:35 பீஜே குர்ஆன்)

இந்த மொழிபெயர்ப்பை வாசித்துவிட்டு வஸீலா எனும் வார்த்தையை தமிழ் அகராதியில் தேடினேன் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அப்துல் ஹமீத் பாகவியின் தமிழ் குர்ஆனை எடுத்து பார்த்தேன்.

"நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். அவனிடம் செல்வதற்குரிய வழியைத் தேடிக் கொள்ளுங்கள்." (5:35 அப்துல் ஹமீத் பாகவி குர்ஆன்)

இப்பொழுதுதான் புரிந்தது. அதாவது விசுவாசிகளே! இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். அவர்பால் நெருங்குவதற்குரிய வழியை தேடிக் கொள்ளுங்கள் என்று தான் இந்த வசனம் சொல்கிறது.

தம்பி, குர்ஆன் இறைவனிடம் நெருங்குவதற்குரிய வழியை தேடிக் கொள்ளுங்கள் என்று சொன்னாலும். இஸ்லாமிய போதனை மனிதன் இறைவனை நெருங்கமுடியாது என்றுதான் போதிக்கிறது. மேலும் இறைவனை நெருங்குகிற வழியை குர்ஆனோ ஹதீஸ்களோ தெளிவாக காட்டவில்லை எனும் உண்மையை நீ அறியவேண்டும். அப்படியானால் குர்ஆனில் ஏதும் சந்தேகம் வந்தால் வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் கேட்குமாறுதானே குர்ஆன் சொல்கிறது. 

3) உலகம் முழுவதுக்கும் ஒரே குர்பான்(பலி)

தம்பி, நான் உனக்கு எழுதும் கடிதங்களை உனது இஸ்லாமிய நண்பர்களும் வாசிப்பதாக, நீ எனக்கு எழுதிய ஒரு பதில் கடிதத்தில் இகுறிப்பிட்டிருந்தாய். அதனால் இறைவனை கிட்டிச்சேறும் வழியை அவர்களுக்கு புரியும் தமிழிலேயே எழுதுகிறேன். 

ஆதம் அவர்களும் அவ்வா (ஏவாள்) அவர்களும் இறைவனோடு மிகவும் நெருங்கிய உறவு வைத்திருந்தனர். அதனை தகப்பன் பிள்ளைகள் உறவோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். இறைவன் அவர்களுக்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்திருந்ததோடு ஒரு கட்டளையையும் போட்டிருந்தான். அதாவது தோட்டத்திலுள்ள சகல மரங்களின் கனிகளையும் புசிக்கலாம் ஆனால் தோட்டத்தின் நடுவிலுள்ள நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை மாத்திரம் சாப்பிட வேண்டாம் என்பதாகும். ஆதம் அவ்வா இருவரும் ஆடைகள் அணிந்திருக்க வில்லை. அது அவர்களுக்கு வெட்கமாக இருக்கவில்லை.

  • ஒரு நாள் சைத்தான் ஏவாள் அவர்களிடம் வந்து இறைவன் இந்த தோட்டத்திலுள்ள எந்தவொரு மரத்தின் கனியையும் சாப்பிடவேண்டாம் என்று சொன்னாரா? என்று கேட்டான். அதற்கு ஏவாள் அவர்கள் "இல்லை இந்த ஒரு மரத்தின் கனியை மாத்திரம் சாப்பிடவோ தொடவோ வேண்டாம் என்றார்" என்று பதிலளித்தார். "அந்த மரத்தின் கனியை சாப்பிட்டால் நீங்களும் இறைவனைப்போன்று மாறிவிடுவீர்கள்; என்று ஆசைக்காட்டினான் சைத்தான். அவனின் ஆசைவார்த்தைகளுக்கு வஞ்சிக்கப்பட்ட ஏவாள் அவர்கள் தடைசெய்யப்பட்ட மரத்தின் கனியைச் சாப்பிட்டு தன் கணவருக்கும் கொடுத்தார்கள்.  
  • இறைவன் அவர்களோடு உறவாட வந்தபோது அவர்கள் இருவரும் ஒளிந்துக் கொண்டார்கள். "ஆதம் நீ எங்கே இருக்கிறாய்" என்று இறைவன் கேட்க " நாங்கள் ஆடையில்லாமல் இருக்கிறோம் உம்முடைய சந்நிதிக்கு வர முடியாமலிருக்கிறோம்" என்று ஆதம் பதிலளித்தார். "நீங்கள் நிர்வாணமாயிருப்பதை எப்படி அறிந்துகொண்டீர்கள்" என்று இறைவன் கேட்டு, நான் புசிக்காதீர்கள் என்றுச் சொன்ன மரத்தின் கனிகளை புசித்திர்களா? என்று கேட்டார். 
  • • உலகத்தின் முதல் மனிதர்கள் இருவரும் இறைகட்டளையை மீறியது அவர்களுக்கும் முழு உலகத்துக்கும் பாவமாக கருதப்பட்டது. இறைவனோடு மனிதனுக்கிருந்த உறவு உடைந்தது. அதன் பிறகு பிறக்கின்ற ஒவ்வொரு பிள்ளையும் பாவத்திலேயே பிறக்கின்றது. இறைவனோடு சரியான உறவு இருந்தபோது சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருந்த ஆதமின் குடும்பம் பிரச்சினைகளையும் துன்பங்களையும் சந்திக்க நேர்ந்தது. 

இன்று நம்மில் பலருக்கு குர்பான் (பலியிடுதல்) என்றால் என்னவென்றே தெரியாது. வெறுமனே மாட்டை அறுத்து சாப்பிடுவது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் குர்பான் என்பது பாவ நிவாரணப் பலியாகும். குர்பான் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்பது மனித

சரித்திரத்தை சரியாக அறிந்த யாவருக்கும் புரியும்.

இறைவனின் திட்டம் மனிதனின் பாவத்தை மன்னிப்பது மாத்திரமல்ல உடைந்த உறவை மீண்டும் புதுப்பிப்பதாகும். அதாவது இறைவன் மனிதனை படைத்தது தன்னோடு உறவாடுவதற்காகவேயாகும். இதுவே உண்மையான தொழுகையாகும். 

• ஒரு நபருக்கு ஒரு குர்பான். 

• ஒரு குடும்பத்திற்கு ஒரு குர்பான். 

• ஒரு சமுதாயத்திற்கு ஒரு குர்பான். 

• கடைசியாக முழு உலகுக்கும் ஒரு குர்பான்.

தம்முடைய முந்தைய நபிகள் முலமாக பலியைப் பற்றி அனேக கட்டளைகளை இறைவன் கொடுத்துள்ளார், அதனை ஈஸா அல்-மஸீஹ் மூலமாக  முற்றுப்புள்ளி வைத்தார். இனி தனி மனிதனுக்காகவும், குடும்பத்துக்காகவும் பலியிடவேண்டிய அவசியமில்லை.  முழு உலகத்துக்கும் குர்பானி செலித்தியாகிவிட்டது.

என் அன்பு தம்பி,

முழு உலகத்திற்காக இறைவன் கொடுத்த குர்பான் தான் "இறைவனிடம் மனிதர்கள் நெருங்குவதற்கான வழியாகும்". 

இறைவன் தனது வார்த்தையை (கலிமா) மரியம் மூலமாக உலகிற்கு வெளிப்படுத்தினார். இவ்வுலகில் வாழும்போது இறை வார்த்தைக்கு இடப்பட்ட பேர் ஈஸா அல் மஸீஹ் என்பதாகும். பாவமறியா பரிசுத்தரான ஈஸா அல்-மஸீஹ் முழு உலகிற்கும்  பாவதோஷம் நீங்க பலியானார் (குர்பானானார்).

எவனொருவன் தன் பாவத்திற்காக ஈஸா அல்-மஸீஹ் குர்பானானார் என்பதை நம்பிக்கை கொள்கிறானோ அவன் வாழ்க்கையில் இறைவனோடுள்ள உறவு புதுபிக்கப்படுகிறது. அவன் ஆதமைப் போன்று அல்லாஹ்வோடு பேசும்; பாக்கியத்தை பெறுகிறான்.

தம்பி நீ மீண்டும் இந்த பாக்கியத்தை பெறவேண்டும் என்றுதான் நான் இத்தனை கடிதங்களை உனக்கு எழுதுகிறேன். யோவான் 3:16 உனக்காகவும் உனது இஸ்லாமிய நண்பர்களுக்காகவும் தான் எனும் உண்மையை எந்தவொரு சக்தியாலும் மாற்ற முடியாது. 

அடுத்த கடிதத்தில் தொடர்வோம்.

இப்படிக்கு, உன் சகோதரன்

தமிழ் கிறிஸ்தவன்

மூலம்

உமரின் ரமளான் மாத தொடர் கட்டுரைகள்