2015 ரமளான் கடிதம் 11

இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள்

(யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

அன்புள்ள தம்பிக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

உனக்கு சில நாட்களாக உடல் நிலை சரியில்லை என்பதால், நேற்று நீ அம்மாவோடு தொலைபேசியில் பேசும் போது, உனக்காகவும், நீ எல்லா நோன்புகளையும் சிறப்பாக முடிக்கவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டாய் என்று சொன்னார்கள். அம்மா என்னிடம் “நீயும் தம்பியின் நோன்புக்காக ஜெபம் பண்ணு” என்றுச் சொல்லிவிட்டு, என் பதிலை எதிர்ப்பார்க்காமல் நழுவி விட்டார்கள். 

இதை அம்மா என்னிடம் சொல்லும்போது உள்ளுக்குள் எனக்கு சிரிப்பு தான் வந்தது, இருந்தாலும் அதனை நான் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ஆனால், உன்னிடம் நான் தாராளமாக கேள்விகளையும் கேட்கலாம் என்பதால், சில கேள்விகளைக் கேட்கிறேன், அதன் பிறகு இக்கட்டுரையின் தலைப்பிற்குச் செல்கிறேன்.

 உன்னுடைய ஆரோக்கியத்திற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் நான் தினமும் ஜெபிக்கிறேன்.

 ஆனால், நீ அல்லாஹ்விற்காக இருக்கும் நோன்புக்காக, நாங்கள் இயேசுவிடம் பிரார்த்தனை செய்யமுடியுமா? ஒரு வேளை நாங்கள் ஜெபித்தாலும் அது கேட்கப்படுமா?

 ஒரு வேளை அது கேட்கப்பட்டாலும், அதனை உன்னுடைய இறைவனாகிய அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? அவனுடைய ”பிள்ளையை”, சாரி ”அடிமையை” இயேசு சுகப்படுத்தினால், அது அல்லாஹ்விற்கு அவமானமில்லையா?

 இயேசுவிடம் இல்லாமல், அல்லாஹ்விடம் ஜெபிக்கலாம் என்று பார்த்தால், எங்கள் விசுவாசம் தடையாக இருக்கிறது. எம்மதமும் சம்மதம் என்ற நிலைப்பாட்டில் நானில்லை. எங்கள் நிலைப்பாட்டின் படி, நாங்கள் உனக்காக உங்கள் அல்லாஹ்விடம் ஜெபிக்கமுடியாது, ஏனென்றால், நாங்கள் அவனை இறைவன் என்று விசுவாசிப்பதில்லையே! இல்லாத ஒன்றை இருக்கிறது போல தேவன் அழைப்பார் அது வந்துவிடும். ஆனால், இல்லாத அல்லாஹ்விடம் நாங்கள் அழைத்து எப்படி ஜெபிப்பது?

 இப்போது எங்களை என்ன செய்யச் சொல்கிறாய்? நீ வாய் திறந்து என் நோன்புக்காக ஜெபியுங்கள் என்று கேட்டுவிட்டாய், அம்மாவும் சரி என்று சொல்லிவிட்டார்கள். அம்மா கொடுத்த வாக்கை காப்பாற்றுவதா அல்லது தவறுதலாக வாக்கு கொடுத்தபடியினால், அப்படியே இதனை காற்றிலே பறக்கவிட்டுவிடுவதா? 

 நீ நோன்புக்காக ஜெபிக்கச் சொன்னது முதல் தவறு, மகன் என்ன கேட்கிறான் என்று தெரிந்துக் கொள்ளாமல் (தாய் பாசத்தினால்) சரி ஜெபிக்கிறேன் என்று அம்மா சொன்னது இரண்டாவது தவறு. இக்கட்டுரையின் தலைப்பை தொடாமல் இதுவரை மற்ற விஷயங்களை நான் எழுதிக்கொண்டு இருப்பது மூன்றாவது தவறு. கடைசியாக அல்லாஹ் செய்த நான்காவது தவறையும் ஒருமுறையும் படித்துவிடு தம்பி. 

நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். இன்னும் நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர். அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன். மேலும் நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம். (குர்-ஆன் 109:1-6)

தம்பி, இவைகள் என் வார்த்தைகள் அல்ல, இவைகள் அல்லாஹ்வின் வார்த்தைகள். என்னே! வசனங்கள்!!. உனக்கு உன் மார்க்கம் எனக்கு என் மார்க்கம், நமக்குள் ஏன் சண்டை என்ற கோணத்தில் ஒரு அத்தியாயமே அல்லாஹ் இறக்கியிருந்தார், சபாஷ்! ஆனால் என்ன செய்வது, இந்த முழு அத்தியாயமும் இரத்து செய்யப்பட்டுவிட்டதே. இஸ்லாம் தவிர வேறு மார்க்கத்தை அல்லாஹ் அங்கீகரித்துக் கொ(ல்)ள்(ல)ளமாட்டான்.

சரி தம்பி, தலைப்புக்கு வருவோம்.


இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள்

(யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

இஸ்லாமின் இருகண்கள் முஹாஜிர்களும், அன்ஸார்களும் என்று நான் என் முந்தைய கடிதத்தில் எழுதியிருந்தேன்.  முஹம்மது மரித்தவுடன், இவர்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை தெரிவு செய்யவேண்டும் என்று தனித்தனியாக விரும்பினார்கள். முஹாஜிர்களுக்கு தெரிவிக்காமல், அன்ஸார்கள் தலைவரை நியமிக்க கூட்டம் போட்டனர். இதனை முந்தைய கடிதத்தில் பார்த்தோம். 

நம்முடைய கவனத்தை முஹாஜிர்கள் பக்கம் திருப்புவோம். இந்த முஹாஜிர்கள் யார்? இவர்களில் இருந்த முக்கிய நபர்கள் யார்? என்று பார்த்தால், முஹம்மதுவின் சொந்தம் பந்தமெல்லாம் இந்த பக்கத்தில் தான் அதிகமாக ஒட்டிக் கொண்டு இருந்தார்கள். 

இவர்களில் முக்கியமான நான்கு நபர்களைப் பற்றி நாம் பார்ப்போம். இவர்களைத் தான் சுன்னி முஸ்லிம்கள் “நேர் வழி நின்ற கலிஃபாக்கள்” என்று அழைக்கிறார்கள்.

  1. அபூ பக்கர் – முதல் கலிஃபா (முஹம்மதுவின் மாமனார்)
  2. உமர் – இரண்டாம் கலிஃபா (முஹம்மதுவின் மாமனார்)
  3. உஸ்மான் – மூன்றாம் கலிஃபா (முஹம்மது இவருக்கு மாமனார்)
  4. அலி – நான்காம் கலிஃபா (முஹம்மது இவருக்கு மாமனார்)

அபூ பக்கரை தலைவராக நியமிப்பதில், இவர்களிடையே ஒற்றுமை இருந்ததா? 

இப்போது, அபூ பக்கர் தலைவராக நியமிப்பற்கு முன்பாக இருந்த முஸ்லிம்களின் நிலைப்பாட்டை காண்போம்:

1) உமரின் நிலைப்பாடு – அபூ பக்கர் தலைவராக வரவேண்டும்.

2) அலியின் நிலைப்பாடு – தலைவர் பதவிக்கான தகுதி தனக்கு அதிகம் உண்டு.

3) ஜுபைரின் நிலைப்பாடு – அலி தலைவராக வரவேண்டும்.

4) அபூ சுஃப்யானின் நிலைப்பாடு – என் ஜாதிக்காரன் (அலி) தான் தலைவர் ஆகவேண்டும்.

---------------------------------------

தம்பி, நாம் சரித்திர விவரங்களை பார்ப்பதற்கு முன்பாக, ஜுபைர் என்பவரைப் பற்றியும் அபூ சுஃப்யான் என்பவரைப் பற்றியும் சுருக்கமாக காண்போம். 

அல்ஜுபைர் யார்?

இவர் மதிப்புமிக்க ஒரு முஸ்லிமாக இருந்தார், முஹம்மதுவின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். இவர் ஒரு நல்ல இஸ்லாமிய அடியாராக (சீடராக) இருந்தார்.  இது மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட காலத்தில் அலி அவர்களுடன் இணைந்து இவர் ஒரு முக்கியமான செயலை செய்தார். இதனை நேரம் வரும் போது உனக்கு எழுதுவேன்.

அபூ சுஃப்யான் யார்?

இவர் முஹம்மதுவின் மிகப்பெரிய எதிரியாக இருந்தார்.  மக்காவின் ஒரு புகழ்பெற்ற வம்சத்தில் பிறந்த இவர், மக்காவினருக்கு தலைவராக  இருந்தார்.  உஹூத் என்ற போரின் போது, முஸ்லிம்களை தோற்கடித்த மக்காவினரின் படைத்தலைவராக இருந்தவர் இவர் தான். இந்த போரின் போது முஹம்மது அதிகமாக காயப்பட்டார் மேலும் அதிகமாக பயந்துபோய் இருந்தார். இந்த போரில் அனேக முஸ்லிம்களை கொன்று அதனை சுவாரசியமாக  கண்டு களித்தவர் இவர், மேலும் இந்த வெற்றியைப் பற்றி புகழ்ந்துப்பேசி, முஹம்மதுவை ஏளனப்படுத்தினார் அபூ சுஃப்யான்.  ஒரு காலக் கட்டத்தில் இந்த அபூ சுஃப்யானை  கொலை செய்யும் படி முஹம்மது சிலரை அனுப்பினார், ஆனால் அவர்கள் தோல்வியடைந்தார்கள், அபூ சுஃப்யானை  கொலை செய்ய அவர்களால் முடியவில்லை.   அதன் பிறகு முஹம்மது ஒரு வலிமை வாய்ந்த நபராக மாறிவிட்டபிறகு,  அவர் மக்காவை நோக்கி தன் படைகளோடுச் சென்றார்.  இந்த நேரத்தில் அபூ சுஃப்யான் முஹம்மதுவை சந்திக்கச் சென்றார்.  இந்த இடத்தில் அபூ சுஃப்யான் ஒரு முஸ்லிமாக மாற கட்டாயப்படுத்தப்பட்டார், இல்லையானால் அவர் அங்கேயே கொலை செய்யப்பட்டு இருக்கவேண்டும் (ஆரம்பத்தில்  அபூ சுஃப்யானுக்கு  பாதுகாப்பு அளிப்பதாக முஸ்லிம்கள் வாக்கு கொடுத்தனர்,  அதன்பிறகு முஸ்லிம்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டனர், முஹம்மதுவை இவர் சந்திக்கும் நேரத்தில் கொலை செய்யப்படக்கூடும் என்ற சூழ்நிலை நிலவியது).  

இந்த நேரத்தில் தான் திடீரென்று "முஹம்மது ஒரு இறைத்தூதர்" என்று இவர் ஒப்புக்கொண்டார்! புத்தருக்கு போதிமர நிழலில் ஞானம் கிடைத்தமாதிரி, இவருக்கு முஹம்மதுவின் வாளின் நிழலிலே ஞானம் கிடைத்தது. அதாவது தன் உயிருக்கு பயந்து முஹம்மது ஒரு தீர்க்கதரிசி என்று இவர் நம்பினார்.  முஹம்மது மக்காவை முழுவதுமாக கைப்பற்றிக்கொண்ட பிறகு, ஒரு விலை உயர்ந்த பரிசு ஒன்றை முஹம்மது அபூ சுஃப்யானுக்குக் கொடுத்தார்,  இதனால் அனேக இஸ்லாமியர்கள் கோபமும் அடைந்தார்கள்.  மேலும் இவரை கிறிஸ்தவ நகரமாகிய நஜ்ரான் என்ற நகரத்திற்கு பிரதிநிதியாக  முஹம்மது நியமித்தார்.  அபூ சுஃப்யான் தனக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பதை அதிகமாக விரும்பினார்.  அரசியல் அதிகாரம் என்றால் என்ன என்பதை இவர் சரியாக புரிந்துக்கொண்டார், தனக்கும்  தன்  மகன்களுக்கும் இந்த அதிகாரம் "இஸ்லாமிய சமுதாயத்தின்" மூலமாக  கிடைக்கும் என்று இவர் நம்பினார்.

உமரின், ஜுபைரின் மற்றும் அலியின் நிலைப்பாட்டை இந்த தபரி சரித்திரத்திலிருந்து அறிந்துக் கொள்ளலாம்.

தபரியின் சரித்திரம் புத்தகம், வால்யூம் 9 லிருந்து விவரங்கள்:

"இறைத்தூதர் அவர்கள் ரபிவுல் மாதம் இரண்டாம் நாள் திங்கட்கிழமையன்று காலமானார்கள்.  இறைத்தூதர் மரித்த அதே திங்கட்கிழமையன்று அபூ பக்கர் அவர்கள் தலைவராக இருப்பதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது (பக்கம் 184).

உமர் எழுந்து நின்று இவ்விதமாக கூறினார்,  "உங்களில் யார் அபூ பக்கர் அவர்களை விட்டு வேறு பிரிந்துவிட்ட விரும்புகிறீர்கள்? ஆனால், இவருக்குத் தான் இறைத்தூதர் முன்னுரிமை கொடுத்தார்".  நானும் இவருக்கு என் ஆதரவைத் தருகிறேன் என்றார்.  உமருடைய வார்த்தைகளுக்கு  மக்கள் கீழ்படிந்தார்கள், அவர் சொன்னது போலவே செய்தார்கள்.  ஆனால், அன்சாரிகள் அல்லது அங்கிருந்தவர்களில் சிலர் "நாங்கள் அலி அவர்களுக்குத் தவிர வேறு யாருக்கும் எங்கள் ஆதரவை தரமாட்டோம்" என்று கூறினார்கள் (பக்கம் 186).

உமர் அவர்கள் அபூ பக்கர் அவர்களின் கரங்களை உயர்த்திப்பிடித்து, இவ்விதமாக கூறினார்கள், "என் அதிகாரம் உங்களுக்குத் தான், ஆதரவு உங்கள் அதிகாரத்திற்குத் தான்".  இதைக் கண்ட மக்களும் இதே போல தங்கள் ஆதரவை கொடுத்தார்கள். இந்த ஆதரவை உறுதிபடுத்தும்படி கேட்டுக்கொண்ட போது, அலியும் அல்ஜுபைரும்  ஒதுங்கி நின்றுவிட்டார்கள்.  ஜுபைர் தன் வாளை அதன் இடத்திலிருந்து உருவி, இவ்விதமாக கூறினார் "அலி அவர்கள் தலைவர் ஆவதற்கு முழு ஆதரவும் கிடைக்கும் வரை, இந்த வாளை அதன் உறையில் வைக்கமாட்டேன்".  இந்தச் செய்தி அபூ பக்கர் மற்றும் உமர் அவர்களுக்கு எட்டியது. அப்போது உமர் "அவனை  கல்லால் அடித்து, அவன் வாளை அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டு வாருங்கள்" என்று கூறினார் (1). உமர் அங்கு விரைந்துச் சென்று,  ஜுபைரின் வாளை கட்டாயமாக பிடுங்கிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.  மேலும் "விருப்பமிருந்தாலும், இல்லாவிட்டாலும் தங்கள் ஆதரவை அபூ பக்கருக்கு கொடுத்தே ஆகவேண்டும்" என்று உமர் கூறினாராம் (பக்கங்கள் 188, 189).

குறிப்பு 1: அந்த நேரத்தில் ஜுபைர் ஃபாத்திமாவின் வீட்டில் இருந்தார். ஃபாத்திமா அலியின் மனைவியாவார்கள் மற்றும் முஹம்மதுவின் மகள் ஆவார்கள்)

மேற்கண்ட விவரங்களின் சுருக்கம் இது தான்:

அ) உமர் தம் ஆதரவை அபூ பக்கருக்கு கொடுத்தார்

ஆ) அன்ஸார்கள் தங்களுக்கு தலைவர் பதவி வேண்டுமென்று விரும்பினர், ஆனால் அது எடுபடாது என்பதை உணர்ந்த பிறகு, அபூ பக்கர் தலைவராக வரக்கூடாது, அலிக்கு தான் எங்கள் ஆதரவு என்றனர். இதுவும் எடுபடவில்லை.

இ) ஃபாத்திமாவின் விட்டில் நடந்த உரையாடலில், ஜுபைரும், அலியும் அபூ பக்கருக்கு ஆதரவு தர மறுத்துவிட்டனர்.

ஈ) ஜுபைர் தன் வாளை உறுவி, அலிக்கு முழு ஆதரவு கிடைக்கும் வரை நான் சண்டையிடுவேன் என்று ஆவேசமாக கூறினார்.

உ) இதனை அறிந்த உமர், ”ஜுபைரை கல்லால் அடித்து, வாளை பிடுங்குங்கள்” என்றுச் சொன்னார், மேலும் அவரே சென்று வாளை பிடுங்கிக்கொண்டு வந்தார்.

ஊ) விருப்பமிருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆதரவு அபூ பக்கருக்கு தரத்தான் வேண்டும் என்று உமர் சொன்னார். 

அபூ சுஃப்யானின் ஜாதி வெறி:

அபூ பக்கர் கலிஃபாவாக பதவி ஏற்பதைப் பற்றி அபூ சுஃப்யானின் கருத்து என்ன என்பதை தபரி கீழ்கண்ட விதமாக விவரிக்கிறார்.

அபூ சுஃப்யான் அலியிடம் இவ்விதமாக கூறினார், "குறைஷிகளில் மிகவும் தாழ்ந்த வம்சத்திடம் இந்த கலீஃபா பதவி கொடுக்கும் அளவிற்கு  நமக்கு என்ன ஆனது? இறைவனின் பெயரில் சத்தியமிட்டுக் கூறுகிறேன், நீங்கள் விருப்பினால், இந்த இடம் முழுவதும் போர் வீரர்களாலும், குதிரைகளாலும் நிரப்பிவிடுகிறேன்".  இதற்கு அலி பதில் அளித்தார்: "ஓ அபூ சுஃப்யான், நீண்ட காலமாக நீங்கள் இஸ்லாமுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக போர் புரிந்தவராக இருந்தீர், ஆனால் எந்த ஒரு தீயகாரியத்தையும் செய்ய உங்களால் முடியாமல் போனது. இந்த பதவிக்கு தகுதியானவராக அபூ பக்கரை நாங்கள் காண்கிறோம்  (பக்கம் 198)".

இறைத்தூதருக்கு பிறகு, அபூ பக்கர் அந்த பதவியை ஏற்ற போது,  அபூ சுஃப்யான் கூறியதாவது, "நமக்கும் அபூ ஃபசில் வம்சத்தாருக்கும் சம்மந்தமேது?  உண்மையில் இந்த தலைமைத்துவம் அப்த் மனாஃப் வம்சத்திற்கே உரியது". [அபூ சுஃப்யானின் மகன் யாஜித் ஆளுநர் ஆக்கப்பட்டபோது,] அவரிடம் "உம்முடைய மகனிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது" என்று சொல்லப்பட்டது.  இதற்கு அபூ சுஃப் இப்படி பதில் அளித்தார், "அவர் தன் வம்சங்களுக்கிடையே உள்ள உறவை அன்புடன் பெலப்படுத்திக்கொண்டார்" (பக்கம் 199)

அபூ சுஃப்யானுக்கு ”தான்” உயர்ந்த ஜாதி என்ற பெருமை உண்டு, அதை பயன்படுத்திக் கொண்டு, அலியை கெடுக்க பார்த்தார் (அலி பதவி விஷயத்தில் ஏற்கனவே கெடுக்கப்பட்டு இருந்தார் என்பது வேறு விஷயம்).

தேவைப்பட்டால், நான் போர் வீரர்களால் இந்த இடத்தை நிரப்பிவிடுகிறேன், நாம் அபூ பக்கர் மற்றும் உமரிடம் சண்டைபோடலாம் என்றுச் சொன்னார்.  இதனை அலி மறுத்தார், அந்த சமயத்தில் சண்டைபோட அலி தயாராக இல்லை. 

அலியின் நிலைப்பாடு (நான் தான் ஹீரோ மற்றவர்கள் எல்லாம் ஜீரோ):

முஹம்மதுவின் மருமகன் அலி முழு மனதோடு அபூ பக்கர் தலைவராக வரவேண்டும் என்று விரும்பினாரா என்று பார்த்தால், அதுவும் இல்லை. முஹம்மதுவின் குடும்பத்தார் (முஹம்மதுவிற்கு ஆண்வாரிசு இல்லாதபடியினால், ஃபாத்திமாவின் கணவர்) என்ற முறையில் அடுத்த வாரிசு நான் தான் எனக்குத் தான் பதவி என்று விரும்பினார். இதனை அறிந்துக் கொண்ட ஜுபைரும், அபூ சுஃப்யானும், அலி தான் தலைவராக வரவேண்டும் என்று அடம் பிடித்தனர்.

அலியின் இந்த பதவி ஆசை, பல ஆண்டுகள் சாகாமல் இருந்தது. அலி நான்காவது தலைவராக (கலிஃபாவாக) பதவி ஏற்ற சமயம் வரை இந்த ஆசை அவர் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. முதல் மூன்று கலிஃபாக்களைக் காட்டிலும் தனக்குத் தான் தலைவர் ஆவதற்கான தகுதி அதிகம் என்று இவர் கூறியுள்ளார். கட்டாயத்தின் பெயரில் என் ஆதரவை இவர்கள் பெற்றார்கள் என்று முஹம்மதுவின் மருமகன் அலி அவர்கள் குற்றம் சுமத்துகிறார்.

சரித்திர ஆசிரியர் தபரி அவர்களால் பதிவு செய்யப்பட்ட அலி அவர்களின் வார்த்தைகளை இப்போது படிப்போம் (தபரி, வால்யும் 16, பக்கம் 51)

இறைத்தூதர் மரித்துவிட்டார்கள். இஸ்லாமிய சமுதாயத்தின் தலைவர் பதவிக்கு தகுதியானவர் என்னைத் தவிர வேறு யாருமில்லை.  ஆனால், மக்கள் அபூ பக்கர் அவர்களுக்கு தங்கள் ஆதரவை கொடுத்தனர், எனவே, நானும் என் ஆதரவை அபூ பக்கருக்கு கொடுத்தேன். அதன் பிறகு அபூ பக்கர் மரித்துவிட்டார்கள். இப்போது கூட இஸ்லாமிய சமுதாயத்தின் தலைவர் பதவிக்கு தகுதியானவர் என்னைத் தவிர வேறு யாருமில்லை. ஆனால், மக்கள் உமர் அவர்களுக்கு தங்கள் ஆதரவை கொடுத்தார்கள், நானும் அப்படியே செய்தேன். இதன் பிறகு உமர் அவர்களும் மரித்துவிட்டார்கள். இப்போதும் தலைவர் பதவிக்கு என்னைத் தவிர பொறுத்தமானவர் யாருமில்லை. இருந்தபோதிலும் ஆறு வாக்கெடுப்பில் ஒரு வாக்கை போடும்படி மக்கள் எனக்கு அதிகாரம் கொடுத்தனர், மற்றும் உஸ்மான் தங்கள் தலைவராக வரவேண்டும் என்று அவர்கள்  விரும்பி தங்கள் ஆதரவை  கொடுத்தனர், மறுபடியும் நான் என் ஆதரவையும் தரவேண்டியதாக இருந்தது.

இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள், இவைகளுக்கு இடையே ஒருமனத்தை உண்டாக்காத அல்லாஹ்:

தம்பி இதுவரை நாம் கண்ட விவரங்கள் அனைத்தும், இஸ்லாமிய நூல்களிலிருந்து எடுத்தவைகள். இதனை தற்கால இஸ்லாமிய அறிஞர்கள் அறிந்துள்ளார்கள். 

அன்ஸார்கள் இஸ்லாமின் ஒரு கண் என்றால், மேற்கண்ட முஸ்லிம்கள் இஸ்லாமின் இன்னொரு கண். 

இந்த முஹாஜிர்களுக்கு இடையே இப்படிப்பட்ட பதவி ஆசையும், அதிகாரத்திற்காக கொல்லவேண்டும், இரத்தம் சிந்த வேண்டும் என்ற ஆர்வத்தையும் உண்டாக்கியது யார்? 

நல்ல முஸ்லிமும், நல்ல மனிதனும்:

இந்த செயல்களுக்காக, இவர்களை நான் குற்றப்படுத்தமாட்டேன்,  ஏனென்றால், இவர்கள் வெறும் சாதாரண மனிதர்கள் தான். ஆனால், இவர்களை நல்ல மனிதர்களாக  மாற்றாமல் செத்துப்போனது முஹம்மதுவின் முதல் தவறு. 

இவர்கள் ஐந்து வேளை தொழுபவர்கள், தவறாமல் ஜகாத் தருபவர்கள், தவறாமல் நோன்பு இருப்பவர்கள், குர்-ஆனை அதிகமாக மனப்பாடம் செய்தவர்கள், இப்படி இருக்க ”இவர்கள் நல்லவர்கள் இல்லை” என்று எப்படி நீங்கள் சொல்லலாம் என்று என்னிடம் நீ கேட்கலாம்.  ஆனால், தம்பி, மேலே நீ சொன்ன விவரங்கள் அனைத்தும், “நல்ல மனிதர்களுக்கு அடையாளங்கள் அல்ல” அவைகள் “ஒரு பக்தியுள்ள முஸ்லிமுக்கு அடையாளங்கள் ஆகும்”. 

அப்படியானால், “பக்தியுள்ள முஸ்லிம்களை” நாம் “நல்ல மனிதர்கள்” என்றுச் சொல்லக்கூடாதா என்று கேள்வி கேட்டால் “சொல்லக்கூடாது” என்று தான் பதில் சொல்லவேண்டி வருகிறது. இதற்கு ஆதாரம், “முஹம்மதுவின் சஹாபாக்களின் நடபடிகள் தான்”.

புரியவில்லையா? குழப்பமாக இருக்கின்றதா?

பக்தியுள்ள முஸ்லிம் அல்லாஹ்விற்கு 100% கேள்வி கேட்காமல் கீழ்படிய முயற்சி எடுப்பான், இதனை மேற்கண்ட நபர்கள் செய்தார்கள். ஆனால், அவர்கள் தங்கள் சக முஸ்லிம்களை தங்களைப் போலவே நேசிக்கவில்லை. 

இஸ்லாமின் 5 தூண்களும்

மோசேயின் 10 கட்டளைகளும்

இயேசுவின் 2 கட்டளைகளும்

இஸ்லாமின் ஐந்து தூண்களில், ”இதர மனிதர்களை தங்களைப் போல நேசிக்கவேண்டும்” என்ற தூண் (துரும்பு) காணப்படுவது இல்லை. இஸ்லாமின் ஐந்து கடமைகளும் “தனி மனிதனுக்கும் அல்லாஹ்விற்கும் இடையே இருக்கவேண்டிய கடமைகள் போன்றவற்றை மட்டுமே தன்னகத்தே கொண்டுள்ளது”. எனவே, ஒரு முஸ்லிம், இந்த ஐந்து கடமைகளை எப்பாடு பட்டாவது நிறைவேற்ற முயற்சி எடுத்தால், அதுவே அல்லாஹ்வை திருப்தி படுத்தபோதுமான ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறான். 

ஆனால், தன்னோடு இருக்கும் இதர மனிதர்களிடம் காட்டவேண்டிய கடமைகள் அவனுக்கு இரண்டாம் தரமாக தெரிகின்றது. அல்லாஹ்வை முதலாவது திருப்தி படுத்தலாம், அதன் பிறகு மனிதர்களுக்காக வாழலாம் என்ற முடிவை ஒரு முஸ்லிம் எடுக்கிறான்.

இஸ்லாமின் ஐந்து கடமைகளில் மனிதர்களுக்கு முஸ்லிம்கள் செய்யவேண்டிய கடமைகள் காணப்படாததினால், இஸ்லாமிய உலகில் அதிகமாக தீவிரவாத செயல்கள், வன்முறைகள் இடம் பெறுவதைக் காணலாம்.

மோசேயின் 10 கட்டளைகளை நாம் காணும் போது, முதல் நான்கு கட்டளைகள் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே காணப்படவேண்டிய தொழுகையை உறவு முறையை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். மீதமுள்ள ஆறு கட்டளைகள் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்யவேண்டிய கடமைகள் அல்லது ஒழுக்க நெறிமுறைகள் சொல்லப்பட்டு இருக்கும். அதாவது, சமுதாயத்தில் ஒரு மனிதன் எப்படி இன்னொரு மனிதனை பார்க்கவேண்டும், நேசிக்கவேண்டும் போன்றவற்றைப் பற்றியதாக இருக்கும். 

பழைய ஏற்பாட்டின் 10 கட்டளைகள், இஸ்லாமின் 5 கடமைகளைக் காட்டிலும் சிறப்பானதாக காணப்படுகின்றது என்பதை இதன் மூலம் அறியலாம். 

மூன்றாவதாக, இயேசு பழைய ஏற்பாட்டின் அனைத்து கட்டளைகளையும், இரண்டே கட்டளைகளில் சுருக்கிவிட்டார். முதலாவது உன் தேவனிடத்தில் அன்பு கூறு, இரண்டாவது உன்னைப்போல மற்றவனையும் நேசி. இயேசுவின் இந்த இரண்டு கட்டளைகளில் 50% மனிதனுக்கு மனிதன் செய்யவேண்டியவைகளும், 50% மனிதன் இறைவனுக்கு கொடுக்கவேண்டிய தொழுகையையும் சொல்லப்பட்டுள்ளது

மோசேயின் பத்து கட்டளைகளிலும், இயேசுவின் இரண்டு கட்டளைகளிலும் காணப்படும், மனிதனை நேசிக்கும் கட்டளைகள் இஸ்லாமின் ஐந்து கடமைகளில் காணப்படவில்லை. அதனால் தான் முஸ்லிம் சமுதாயத்தில் வன்முறைகள் அதிகம், இதர சமுதாயங்களில் அது குறைவு.

எனவே, சஹாபாக்கள் ஐந்து வேளை தவறாமல் தொழுதுவிட்டு, இதர முஸ்லிம்களை கொல்ல வாளை எடுக்க சபதம் எடுக்கிறார்கள். அதிகாரத்திற்காவும், பணத்திற்காகவும் முஹம்மதுவின் நெருங்கிய தோழர்களையும் வெறுக்க தயங்குவதில்லை.

முடிவுரை:  

உமர் ஜுபைரை உதைக்கச் சொல்கிறார், ஜுபைர் வாளை உறையிலிருந்து எடுத்து, அலிக்கு ஆதரவு முழுவதுமாக கிடைக்கும்வரை உறையிலே திரும்ப போடுவதில்லை என்கிறார். அலி அபூ பக்கருக்கு ஓட்டு போட மறுத்துவிட்டார். அபூ சுப்யானோ ஜாதி வெறி கொண்டு, போருக்கு தயாராகிறார். அபூ பக்கரோ, இந்த தலைவர் பதவி, முஹாஜிர்களுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும், அன்ஸார்களுக்கு கிடைக்கக்கூடாது என்று விரும்புகிறார்.  இத்தனை விஷயங்கள் நடந்துக் கொண்டு இருக்கும் போது, பாவம் அல்லாஹ், கண்களிலிருந்தும் காணாதவராகவும், காதுகள் இருந்தும் கேளாதவராகவும் காணப்படுகிறார்.

இவைகள் எல்லாம், முஹம்மது மரித்தவுடன் நடைபெறுகிறது, பத்து ஆண்டுகளுக்கு பிறகு அல்ல. இவைகள் எல்லாம், இஸ்லாமை தூய வடிவில் கண்ட முஸ்லிம்களால் அரங்கேற்றப்படுகின்றது, 1400 ஆண்டுகள் கழித்த பிறகு, அல்கெய்தா, அல்லது ஐஎஸ் போன்ற தீவிரவாத குழுக்களால் நடைபெறவில்லை என்பதை கவனிக்கவும்.

சஹாபாக்களின் சூடான விஷம் கலந்த செயல்களைப் பார்த்துக்கொண்டு இருந்த இஸ்லாமிய இறையியல் மௌனமாக இருந்துவிட்டது. 23 ஆண்டுகள் வளவளவென்று பேசிய வாயை மூடிக்கொண்டு மூளையில் முடங்கிவிட்டது. இந்த தவறுகளுக்கெல்லாம் தாம் காரணமென்று சாட்சி கொடுத்து மௌனத்தில் இறங்கிவிட்டது இஸ்லாம்.

தம்பி, இதுவரை அபூ பக்கரின் தெரிவு  விஷயத்தில் காணப்பட்ட எதிர்ப்புகளைக் கண்டோம். அடுத்த கடிதத்தில், அபூ பக்கரின் ஆட்சியை அலசுவோம்.

கர்த்தர் உனக்கு உண்மையை காண்கின்ற தெளிவான மனக்கண்களை கொடுக்கவேண்டுமென்று வேண்டுகிறேன்.

உன் நோன்புகள் சிறக்க என் வாழ்த்துதல்கள் (ஜெபங்கள் அல்ல!)

இப்படிக்கு

உன் அண்ணன்

உமர்

தேதி: 4 ஜூலை 2015

இக்கட்டுரைக்கு உதவிய கட்டுரை: இஸ்லாமிய அரச குடும்பம்  - பாகம் 2 - புதிய அரசர்


உமரின் ரமளான் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்