2015 ரமளான் கடிதம் 9
இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?
அன்புள்ள தம்பிக்கு,
உன் அண்ணன் உமர் வாழ்த்துதல் சொல்லி எழுதிக்கொள்வது.
நாம் இந்த ரமளான் மாதம், முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக சுருக்கமாக ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம்.
முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு நடந்த ஒவ்வொரு தீய செயலுக்கும் மனிதன் (சஹாபாக்கள்) காரணமாக இருந்தாலும், தான் உண்டாக்கிய மார்க்கத்தை சரியான வழியில் நடத்திச் செல்லாத அல்லாஹ் தான் முழு பொறுப்பு என்பதை முஸ்லிம்கள் பல்லை கடித்துக் கொண்டாவது அங்கீகரித்தே ஆகவேண்டும்.
முஹம்மது மரித்தவுடன் தன் கடமை இதோடு முடிந்துவிட்டது என்று அல்லாஹ் கருதிவிட்டார் உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அல்லாஹ்விற்கு தலைவலி அன்றிலிருந்து தான் ஆரம்பமானது. முஹம்மது உயிரோடு இருக்கும் போது சுறுசுறுப்பாக வேலை செய்த அல்லாஹ், முஹம்மது மரித்தவுடன் அதிக ஓய்வை எடுத்துக் கொண்டாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
அல்லாஹ் ஓய்வில்லாமல், தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருந்திருக்கவேண்டும்! சஹாபாக்களை வழி நடத்தியிருந்திருக்க வேண்டும்! ஆனால், அல்லாஹ் மிகவும் முக்கியமான காலக்கட்டத்தில், அவரது வழி நடத்துதல் தேவைப்பட்ட நேரத்தில் சஹாபாக்களை சரியாக வழி நடத்த தவறிவிட்டார். உண்மையாகவே அவர்களை இறையில்லா அனாதைகளாக்கி விட்டார்.
நேர்வழிநின்ற கலீபாக்கள்:
தம்பி, இஸ்லாமின் முதல் நான்கு கலிஃபாக்களை “நேர்வழிநின்ற கலீபாக்கள் – ராஷிதூன் கலிஃபாக்கள் (Rightly Guided Caliphs)” என்று அழைக்கிறார்கள். ஆனால், இந்நான்கு கலிஃபாக்களை யார் நேர் வழியில் நடத்தினார்கள்? 23 ஆண்டுகள் வஹியை கொண்டுவந்த ஜிப்ராயீல் இவர்களை நேர் வழியில் நடத்த ஒரு முறையும் வரவில்லை. குர்-ஆனும் இவர்களை நேர் வழியில் நடத்த முடியவில்லை. முஹம்மதுவின் சுன்னாவும் (சொல்லும் செயலும்) இவர்களை நேர் வழி நடத்தவில்லை. அப்படியிருக்கும் போது சுன்னி முஸ்லிம்கள் இவர்களை “நேர் வழியில் நின்ற கலிஃபாக்கள்” என்று எப்படி அழைக்கிறார்கள்?
தம்பி, இந்த தொடர் கடிதங்களில் நாம் நான்கு கலிஃபாக்கள் பற்றிய முக்கியமான விவரங்களைப் பார்க்கப்போகிறோம். கடைசியில் இந்த நான்கு கலிஃபாக்கள் நேர்வழியில் உண்மையாகவே நடத்தப்பட்டார்களா? இல்லையா என்பதை நீயே உலகிற்கு எடுத்துச் சொல்லப்போகிறாய்.
முந்தையை கடிதங்களில், முஹம்மதுவின் மரணத்திற்கு பின்பு, அபூ பக்கர் கலிஃபாவாக தெரிவு செய்யப்பட்டார் என்றும் ஆனால், அவர் ஒருமனதாக அனைவரின் விருப்பத்தின் படி தெரிவு செய்யப்பட்ட தலைவர் அல்ல என்பதைச் சொன்னேன். இந்த கடிதத்தில், அவரை கலிஃபாவாக தெரிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கு பெற்ற முக்கியமான இரண்டு பிரிவினர்களைப் பற்றி கீழ்கண்ட தலைப்புகளில் காண்போம்.
1) முஹாஜிர்கள் மற்றும் அன்ஸார்கள் – இஸ்லாமின் இருகண்கள்
2) குர்-ஆனில் இவர்களை புகழும் அல்லாஹ்
3) சஹாபாக்களின் சகோதர அன்பு மாயம், சுயநலம் உதயம்
4) முடிவுரை
இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?
1) முஹாஜிர்கள் மற்றும் அன்ஸார்கள் – இஸ்லாமின் இருகண்கள்
முஹாஜிர்கள் யார்? அன்ஸார்கள் யார்? என்று உனக்கு தெரிந்து இருக்கும்.
முஹம்மதுவின் இஸ்லாமிய பிரச்சாரத்தின் காரணமாக முஸ்லிம்களாக மாறிய அவரது சொந்தக்காரர்களிலும் மற்றும் மக்காவாசிகளிலும் யார் யாரெல்லாம் இவரோடு ஹிஜ்ரத் செய்து மதினாவிற்கு இடம் பெயர்ந்தார்களோ, அவர்களை இஸ்லாம் முஹாஜிர்கள் என்று அழைக்கிறது. இவர்கள் தங்கள் வீடுகளையும், செல்வங்களையும் விட்டுவிட்டு, தங்கள் விசுவாசத்திற்காக மதினா வந்தவர்கள்.
முஹம்மது மதினா வருவதற்கு காரணமாக இருந்தவர்கள், அன்ஸார்கள் (உதவியாளர்கள்) ஆவார்கள். மதினாவில் முஹம்மதுவிற்கும், முஹாஜிர்ளுக்கும் தங்கள் வீடுகளில் இடம் கொடுத்து, தங்கள் செல்வங்களினாலும், இதர உதவிகளினாலும் ஆதரித்தவர்கள். இவர்களுடைய உதவி எப்படி இருந்தது என்றால், ஒரு அன்ஸார் இறந்துவிட்டால், அவரது சொத்தில் முஹாஜிர்களுக்கு பங்கு (வாரிசு உரிமை) தரப்படுமாம், அவ்வளவு ஆழமாக அழகாக இவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை இருந்தது.
இவ்விரு கூட்டத்தினரும், முஹம்மதுவின் மதினா வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பெறுகிறார்கள். முஹம்மதுவின் போர்களில் பங்கு பெற்று, முஹம்மதுவிற்கு பாதுகாப்பு அளித்து, இஸ்லாமின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் இவ்விரு கூட்டத்தினர்.
2) இவர்களை புகழும் அல்லாஹ்
இவர்களைப் பற்றி குர்-ஆன் சொல்லும் வசனங்களில் ஒரு சிலவற்றையும், ஹதீஸ்களில் சிலவற்றையும் இங்கு தருகிறேன். ஆரம்ப காலத்தில் இவ்விருவருக்கும் இடையே காணப்பட்ட நட்பு போற்றுதலுக்கு உரியது.
இவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறார்:
குர்-ஆன் 9:100. இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
அன்ஸார்களின் உதவி:
குர்-ஆன் 59:9. இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.
அன்ஸாரிகளின் வாரிசாக முஹாஜிர்கள் இருந்தார்கள். இந்த சட்டம் பிறகு மாற்றப்பட்டது.
புகாரி 2292. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
முஹாஜிர்கள் மதீனாவிற்கு வந்தபோது, அன்ஸாரி ஒருவர் இறந்துவிட்டால் அவரின் உறவினர்கள் அன்றி முஹாஜிர் அவருக்கு வாரிசாவார். நபி(ஸல்) அவர்கள் இருவருக்கிடையே ஏற்படுத்திய சகோதரத்துவமே இதற்குக் காரணம். 'மேலும், தாய் தந்தையரும் நெருங்கிய பந்துக்களும்விட்டுச் செல்கிற செல்வத்திலிருந்து (விகிதப்படி பங்கு பெறுகின்ற) வாரிசுகளை நாம் ஒவ்வொருவருக்கும் நிர்ணயித்துள்ளோம்! அவ்வாறே, நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களின் பங்கைக் கொடுத்து விடுங்கள்! நிச்சயமாக, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளானக இருக்கிறான்!" (திருக்குர்ஆன் 04:33) என்ற இறைவசனம் அருளப்பட்டபோது இது மாற்றப்பட்டது. உடன்படிக்கை செய்தவர்களுக்கிடையே வாரிசுரிமை, போய், உதவி புரிதல், ஒத்தாசை செய்தல், அறிவுரை கூறுதல் ஆகியவை தாம் எஞ்சியுள்ளன! உடன்படிக்கை வெசய்தவருக்காக வஸிய்யத் (மரண சாசனத்தின் வாயிலாக சிறிது சொத்தை எழுதி வைப்பது) மட்டும் செய்யலாம்! Volume :2 Book :39
புகாரி 2294. ஆஸிம்(ரஹ்) அறிவித்தார்.
"இஸ்லாத்தில் (மனிதர்களாக) ஏற்படுத்திக் கொள்கிற உறவுமுறை இல்லை!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உங்களுக்குச் செய்தி கிடைத்ததா?' என்று அனஸ்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள், 'என்னுடைய வீட்டில் வைத்து முஹாஜிர்களுக்கும் அன்ஸாரிகளுக்குமிடையே நபி(ஸல்) அவர்கள் உறவுமுறைகளை ஏற்படுத்தினார்களே!" என்று பதிலளித்தார்கள். Volume :2 Book :39
3) சஹாபாக்களின் சகோதர அன்பு மாயம், சுயநலம் உதயம்
முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு, அன்ஸார்கள் ஒன்று கூடி, இஸ்லாமிய தலைவரை தங்கள் வம்சங்களிலிருந்து தெரிந்தெடுத்துக் கொள்ளவேண்டும் என்று முடிவு செய்தனர். அபூ பக்கர், உமர் மற்றும் இதர முஸ்லிம்களுக்கு தெரிவிக்காமல், தலைவரை தெரிவு செய்ய அன்ஸார்கள் கூட்டம் கூடிவிட்டார்கள்.
இதனை அறிந்துக் கொண்ட அபூ பக்கரும், உமரும் அங்கு சென்று மறுப்பு தெரிவித்தனர். இதனால், அன்ஸார்களில் ஒரு தலைவரும், முஹாஜிர்களில் ஒரு தலைவருமாக நியமித்துக் கொள்ளலாம் என்று அன்ஸார்கள் கூறினார்கள். உமர் இதனை ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியாக உமரின் சாதூர்யமான செயலினால், அபூ பக்கர் கலிஃபாவாக நியமிக்கப்பட்டார். வேறு வழியில்லாமல் மற்றும் விருப்பமில்லாமல் அன்ஸார்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதனை நாம் தபரி சரித்திரத்தில் காணலாம். இந்த விவரங்களை ஆதாரங்களோடு விளக்கும் தமிழ் கட்டுரையை இங்கு (இஸ்லாமிய அரச குடும்பம் - பாகம் 2 - புதிய அரசர்) படிக்கவும்.
தம்பி, இந்த நேரத்தில் ஒரு குர்-ஆன் வசனத்தை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன். இவர்களிடையே காணப்பட்ட சகோதர அன்பை உண்டாக்கியது தாம் தான் என்று அல்லாஹ் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்.
குர்ஆன் 8:63 - மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்;மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான் (முஹம்மது ஜான் டிரஸ்ட் குர்ஆன் தமிழாக்கம்)
உலகத்திலுள்ள அனைத்து செல்வங்களை கொடுத்தாலும், முஸ்லிம்களிடையே “அல்லாஹ் உண்டாக்கிய பிணைப்பு போன்றதொரு பிணைப்பை உண்டாக்க முடியாதாம்”. ஆனால், அது ஏன் இப்படி சுயநலமாக மாறிவிட்டது?
சுயநலம் உதயம்:
அன்ஸார்களும், முஹாஜிர்களும் இஸ்லாமின் இருகண்கள் போன்றவர்கள். இவர்களுக்கு குர்-ஆன் என்னும் ஞானப்பால் 23 ஆண்டுகள் புகட்டப்பட்டது. முஹம்மதுவின் சொல்லும் செயலும் அவர்களின் சரீரங்களுக்கு ஊட்டச் சத்துக்களைப் போல வலிமையை கொடுத்தது. குர்-ஆனும் முஹம்மதுவின் சுன்னாவும் முஹம்மது உயிரோடு இருக்கும் போது சரியாக வேலை செய்தது. ஆனால், அவர் மரித்த அதே நாள், நாற்காலிக்கு சண்டை போட அந்த ஞானப்பாலின் சக்தியும், ஊட்டச்சத்தும் இஸ்லாமுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்துவிட்டது.
இரண்டு கண்களில், ஏதாவது ஒன்றை பிடுங்கிவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டால், எந்த கண்ணை பிடுங்குவது? வலது கண்ணையா இடது கண்ணையா? இரண்டும் முக்கியம் தான். முஹம்மது உயிரோடு இருந்த போது, இந்த கேள்வியை கேட்டு இருந்தால் அவர் என்ன பதில் சொல்லியிருப்பார்?
அல்லாஹ் குர்-ஆனில் சொல்கிறான் ’உலகத்தின் அனைத்து செல்வங்களை செலவிட்டாலும், இப்படிப்பட்ட பிணைப்பை உண்டாக்கமுடியாது, ஆனால், முஹம்மது மரித்த நாள், அற்பமான ஒரு பதவிக்காக, உலகத்தின் ஒரு சிறிய நிலப்பரப்பை ஆளுவதற்காக, இவர்கள் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர், தலைவர்களை சுயமாக நியமித்துக் கொள்ள முடிவு செய்துவிட்டார்கள்’. அல்லாஹ்வின் வார்த்தை பொய்த்துவிட்டது. முஹம்மதுவின் சரீரத்தை பூமிக்குள் புதைப்பதற்கு முன்பே, முஹாஜிர்களும், அன்ஸார்களும், இஸ்லாமை புதைத்துவிட்டார்கள்.
தம்பி, இப்போது சில கேள்விகள் உன் மததில் எழவேண்டுமே!
அ) தங்கள் சொத்துக்களில் பாதியை அப்படியே, மக்கா முஸ்லிம்களுக்கு தாராளமாக கொடுத்த அன்ஸார்களின் அன்பும், ஆதரவும் இப்போது எங்கு சென்றுவிட்டது?
ஆ) இவர்கள் மத்தியிலே இருந்த சகோதர அன்பு முஹம்மது மரித்த அதே நாள் மரித்துவிட்டதா?
இ) அன்ஸார்களுக்கு தலைவர் பதவி சென்றுவிடக்கூடாது என்று அபூ பக்கரும், உமரும் விரும்பியதின் காரணமென்ன? முஹாஜிர்களுக்கு தெரியாமல், தலைவர்களை தெரிவு செய்ய, அன்ஸார்கள் முடிவு செய்ய காரணமென்ன?
ஈ) அல்லாஹ்வின் வார்த்தை ஏன் இவர்களிடத்தில் தோல்வி அடைந்தது? குர்-ஆன் 8:63 சொல்வது வெறும் பேச்சுக்குத்தானா?
உ) குர்-ஆனின் இறையியல், ஆரம்ப கால முஸ்லிம்கள் மத்தியிலே அன்பை உண்டாக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்த ஒன்றாக காணப்படவில்லையே!
ஊ) இவர்கள் முஹம்மதுவை காணாமல் விசுவாசித்தவர்கள் அல்ல. இவர்கள் முஹம்மதுவை மிகவும் நெருக்கமாக கண்டவர்கள், அவரோடு பேசியர்கள், அவரைத் தொட்டுப்பார்த்தவர்கள், அவரின் மூச்சுக்காற்றின் வெப்பத்தின் அளவு எவ்வளவு என்று கேட்டாலும் உடனே பதில் தரக்கூடிய அளவிற்கு நெருக்கமானவர்கள். இவர்களிடம் காணப்பட்ட சுயநலம் முஸ்லிமல்லாதவர்களிடம் கூட காணப்படாது என்று எண்ணத்தோன்றுகிறது. உலகத்தின் கடைசி நபியோடு வாழ்ந்தவர்களிடம் உயர்ந்த தரத்தை உலக மக்கள் எதிர்ப்பார்ப்பது தவறா?
4) முடிவுரை (அல்லாஹ் நீ எங்கே இருந்தாய்!):
அற்பமான பதவிக்காக, அதிகாரத்திற்காக இவர்கள் சண்டையிட்டு கொண்டு இருக்கும் போது, அல்லாஹ் எங்கே சென்றுவிட்டார்? ஒரே ஒரு முறை காபிரியேல் தூதனை அனுப்பி ஒரு நிமிடத்தில் அவர்கள் கூடியிருந்த அறையில் காணப்பட்டு அல்லது ஒரு அற்புதம் செய்து, அவர்களை ஒன்று கூட்டி இருந்திருக்கலாம் அல்லவா அல்லாஹ்?
முஹம்மது மரித்ததும், அல்லாஹ் உலக தோற்றத்திற்கு முன்பிலிருந்து எழுதி வைத்திருந்த அனைத்து காரியங்களும் முடிந்துவிட்டது என்று நினைத்துவிட்டாரா? இஸ்லாமின் ஒரு கண், இன்னொரு கண்ணை வெறுத்துவிட்டதே!
முஹம்மதுவிற்காக அவரது மனைவிகள் மற்றும் அவரை நேசிக்கும் இதர மக்கள் திருப்தியாக கூட அழுது இருந்திருக்கமாட்டார்கள், அதற்குள் சண்டையும், சச்சரவும், பயமுறுத்தல்களும், சுயநலமும் சஹாபாக்களின் வாழ்விலே காணப்பட்டது.
இதற்கு காரணம் யார்? இவ்வளவு காரியங்கள் நடக்கும் என்று தெரிந்திருந்தும், எந்த ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், தன் நபி மௌனமாக மரித்துவிட ஏன் அல்லாஹ் அனுமதிக்கவேண்டும்! அல்லாஹ்வின் வார்த்தைகள் அடங்கிய குர்-ஆன் இந்த சஹாபாக்களின் உள்ளத்தில் மனப்பாடமாக பதிந்து இருந்து என்ன பிரயோஜனம்? ஆறு ஆயிரத்துக்கும் அதிகமான வசனங்களை மனப்பாடம் செய்த மனங்களிலிருந்து இவர்களை எச்சரிக்கை செய்ய ஒரு வசனம் கூட இவர்கள் ஞாபகத்துக்கு வரவில்லையா? ஒருவேளை இவர்களுக்கு ஞாபகம் வந்த குர்-ஆன் வசனங்கள், வன்முறையை தூண்டும் வசனங்களாக இருந்ததினால் தான் இவர்கள் இப்படி நடந்துக் கொண்டார்களா?
அன்றும் சரி, இன்றும் சரி இஸ்லாமிய இறையியல் மக்களை ஒன்று படுத்தாது, அவர்கள் மனதளவில் மாற்றமடைய உதவி புரியாது என்பது தான் நிஜம். இதனை அறிய நாளை காலை வெளிவரும் இஸ்லாமிய நாட்டு செய்திகளை படித்துப் பாருங்கள். ஒரே குர்-ஆனை நாங்கள் படிக்கிறோம் என்றுச் சொல்லுகின்ற சுன்னி முஸ்லிம்கள் ஷியா முஸ்லிம்களின் மசூதிகளில் வெடிகுண்டு வைக்கிறார்கள்.
முஹம்மது உயிரோடு இருக்கும் போது அண்ணன் தம்பிகளாக இருந்தவர்கள், அவர் மரித்த பிறகு ஓணாய்களைப்போல சண்டையிட்டுக் கொண்டது ஏன்? இதற்கான இரகசியம் ஒருவேளை நமக்கு குர்-ஆனில் காணப்படுமா?
இந்த கடிதத்தில், இஸ்லாமின் இரண்டு கண்கள் எப்படி ஒன்றையொன்று மோதிக்கொண்டது என்பதைக் கண்டோம். அடுத்த கடித்ததில், அபூ பக்கர் தலைவராக வருதை, அதே குழுவில் இருந்தவர்களாகிய அலியும், இதர மக்களும் விரும்பினார்களா என்பதைக் காண்போம். இஸ்லாமின் ஆரம்பகாலத்தை தோண்டத் தோண்ட மரித்த சடலங்கள் வெளியே வந்துக்கொண்டே இருக்கின்றன.
தம்பி, உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.
இப்படிக்கு
உன் அண்ணன்
உமர்