முஸ்லிம்களே, முழு சத்தியத்தை அறிந்துக் கொண்டு, இரட்சிக்கப்படுங்கள்

ஆசிரியர்: ராபர்ட் ஸீவர்ஸ்

இந்த மாதம் புனித வெள்ளி மற்றும் இயேசு உயிர்த்தெழுந்த நாட்களை நினைவுக்கூறும் மாதமாக இருக்கின்றது. இந்நாட்களில் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமுக்கு இடையே காணப்படும் எதிர்மறை இறையியல் விவரங்களை அலசுவதை சில நாட்கள் தள்ளிப்போடலாம் என்று விரும்புகிறேன். இதற்கு பதிலாக, என் கவனத்தை ஒரு முக்கியமான விஷயத்தின் பக்கம் திருப்பலாம் என்று விரும்புகிறேன். அது என்னவென்றால், "உண்மைய தவறாக புரிந்துக்கொள்ளுதல்" என்ற ஒரு விஷயம் தான் அது.  முக்கியமாக, முஸ்லிம்கள் இப்படிப்பட்ட தவறான எண்ணங்களுக்குள் அடிக்கடி விழுந்துவிடுகிறார்கள். இவர்கள் மட்டுமல்ல, நாத்தீகர்களும், அறியொணாமைக் கொள்கையை பின்பற்றுபவர்களும், சில நேரங்களில் கிறிஸ்தவர்களும் இப்படிப்பட்ட தவறான எண்ணங்களுக்குள் விழுந்துவிடுகின்றனர். இதனை இப்போது விவரமாக காண்போம்.

நாம் அலசப்போகும் விஷயம் என்னவென்றால், "சிலர் சிலரை ஏமாற்றுவதற்கு, உண்மையை (சத்தியத்தை) எப்படி ஆயூதமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்" என்பதைப் பற்றியதாகும் (How TRUTH is often used to deceive). இதைக் கேட்டு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆம், இது உண்மை தான். சிலர் உண்மையை பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள்.  சாத்தான் சில வேளைகளில் நம்மை ஏமாற்றுவதற்கு "சத்தியத்தை/உண்மையை" பயன்படுத்துவான்.  இது உங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தால், தொடர்ந்து படியுங்கள், அப்போது தான் தெளிவு உண்டாகும்.

உதாரணத்திற்கு, ஏதோன் தோட்டத்தில் சாத்தான் என்ன பேசினான்? என்பதை ஒரு முறை கவனித்துப் பாருங்கள் (ஆதியாகமம் 3:5). சாத்தான் ஏவாளிடம் "நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் இருப்பீர்கள்" என்றுச் சொன்னான். இந்த இடத்தில் சாத்தான் சொன்ன வாக்கியத்தில் உள்ள சத்தியத்தைப் பாருங்கள். இந்த வாக்கியத்தை  மேலோட்டமாக பார்க்கும் போது அது உண்மையாக காணப்பட்டாலும், சாத்தான் உண்மையின் ஒரு பாகத்தை மட்டுமே ஏவாளிடம் சொன்னான். தடுக்கப்பட்ட கனியை புசிப்பதினால் ஏற்படும் இதர விளைவுகளைப் பற்றி அவன் சொல்லாமல் மறைத்துவிட்டான். ஆனால், அவன் மறைத்த சத்தியம் மிகவும் முக்கியமானது. சாத்தானின் வாக்கியத்தை முதன் முதலில் மேலோட்டமாக பார்க்கும் போது "அவன் சொல்வது உண்மையானது தான்" என்று எண்ணத்தோன்றும். அவன் சொன்ன சத்தியத்தைக் காட்டிலும் அவன் சொல்லாமல் மறைத்த சத்தியம் தான் மிகவும் முக்கியமானது. 

இது மட்டுமல்ல, வானாந்திரத்திலே, இயேசுவை சோதிக்க முயன்ற சாத்தான் "உண்மையைச் சொல்லியே சோதித்தான்". மத்தேயு 4:3ம் வசனத்தை நாம் படித்தால், அங்கு சாத்தான் இயேசுவை நோக்கி "நீர் தேவகுமாரன் என்றால், இந்த கல்லுகளை ரொட்டிகளாக்கி சாப்பிட்டு, நீர் தேவகுமாரன் என்பதை நிரூபித்துக்கொள்ளும்" என்றுச் சொன்னான். இங்கு கவனிக்கவேண்டிய விஷயம்:

இயேசு தேவகுமாரனா? ஆம், சாத்தான் சொன்னது "உண்மை" இயேசு தேவகுமாரன் தான்.

கல்லுகளை ரொட்டிகளாக மாற்ற இயேசுவிற்கு சக்தி உண்டா? ஆம், இயேசுவிற்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட அப்படிப்பட்ட அற்புதம் செய்யும் வல்லமை உண்டு, இதிலும் சாத்தான் சொன்னது  உண்மை தான்.

நாம் ஆதியாகமத்தில் படித்தது போல, சாத்தான் முன்வைத்த வாக்கியத்தில் அல்லது சவாலில் "உண்மை" இருந்தது, ஆனாலும், அவன் மறைத்த விஷயத்தில் "இன்னும் அதிகமான உண்மை" இருக்கிறது, அதை வேண்டுமென்றே அவன் மறைத்தான்.  

அவன் சொல்லாமல் மறைத்த விஷயம் "இயேசுவிற்கு எல்லா நேரங்களிலும் அற்புதம் செய்யும் வல்லமை உண்டு, ஆனால், அற்புதங்களை அவர் மற்றவர்களுக்காகவே செய்வார், தனக்காக அல்ல" என்பது தான் அது. இயேசுவிடம் இப்படிப்பட்ட கேள்வியை சாத்தான் கேட்டதின் நோக்கம் தெளிவாக  புரிகின்றது. இயேசு தன் தெய்வீகத்தன்மையை நிரூபிப்பதற்கு தனக்குத் தானே அற்புதங்களைச் செய்துக்கொள்ளவில்லையென்றால், அதனைப் பார்க்கும் சாதாரண மக்கள், இயேசுவின் தெய்வீகத்தன்மை மீது சந்தேகம் கொள்ளவேண்டும் என்பதுதான் அவன் நோக்கம். அவனது கேள்விக்குள் மறைந்து இருக்கும் பாவ சிந்தனையை மேலோட்டமாக பார்க்கும் மக்கள் கண்டுபிடிக்கமாட்டார்கள். 

சாத்தான் "பாதி சத்தியத்தை" மட்டுமே பேசிய இந்த  மேற்கண்ட நிகழ்ச்சிகளின் விளைவுகள் என்ன? 

"உண்மையின் ஒரு பாதியை மட்டும் அறிவது மிகவும் ஆபத்தானது" என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். 

உண்மையின் ஒரு பாகத்தை மட்டுமே சொல்லிவிட்டு, அதனால் விளையும் விளைவுகளைச் சொல்லாமல், இதர முக்கியமான விஷயங்களைச் சொல்லாமல் விட்டுவிடுவது என்பது "தவறான எண்ணங்களை உருவாக்கிவிடும்". சத்தியத்தை முழுவதுமாக அறிந்துக்கொள்ளாமல், ஒரு பகுதியை மட்டுமே அறிந்துக்கொண்டு நாம் திருப்தி அடைந்தால், அது பல தீய முடிவுகளை நாம் எடுக்க வழி வகுத்துவிடும். ஆனால், மேலோட்டமாக பார்க்கும் போது நாம் முழுமையான உண்மையின் மீது சார்ந்து தான் முடிவுகளை எடுக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படும், ஆனால், அது ஆபத்தானது, நாம் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பது தான் உண்மை.

இயேசு சிலுவையில் தொங்கும் போது கூட, அவிசுவாசிகள் இப்படிப்பட்ட தவறான எண்ணம் கொண்டு பேசினார்கள். அவர்கள் கீழ்கண்டவாறு பேசினார்கள், பார்க்க மத்தேயு 27:42:

"மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்."

மேற்கண்டவிதமாக அவிசுவாசிகள் பேசியதினால், அவர்கள் சொல்லவந்த விஷயம் இது தான். அதாவது உண்மையாகவே இயேசு தேவகுமாரன் என்றுச் சொன்னால், அவர் இந்த சிலுவையிலிருந்து அற்புதவிதமாக இறங்கி வந்து தன் தெய்வீகத்தன்மையை நிரூபிக்கவேண்டும் என்பதாகும். இப்படி இயேசு செய்யவில்லையென்றால், அவர் தேவகுமாரன் இல்லை என்று மக்கள் எண்ணலாம் என்பது தான்  அவர்களின் நோக்கம். ஆனால், இந்த இடத்தில் அவிசுவாசிகள் நினைப்பதுபோல அல்லாமல், இன்னும் ஆழமாக தேவனின் திட்டம் மனித இனத்தை இரட்சிக்க மறைமுகமாக நடைப்பெற்றுக்கொண்டு இருந்தது, இதனை யாரும் காணவில்லை. 

தேவன் உலக மக்களின் பாவங்களிலிருந்து அவர்களை இரட்சிக்க, அப்பாவங்கள் அனைத்தையும் இயேசுவின் மீது சுமத்தினார். நம் பாவங்களை இயேசு ஏற்றுக்கொண்டார், நம் தண்டனையை அவர் பெற்றார், இதன் மூலம் தேவ நீதி நிறைவேற்றப்பட்டது. இதுமட்டுமல்ல, இயேசு மரித்து உயிர்த்தெழுந்ததினால், இயேசுவின் தெய்வீகத்தன்மை வெளிப்பட்டது. திரு வாரன் வியர்ஸ் என்பவர் சொன்னது போல "உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இயேசு சிலுவையில் தொங்கியது அவர் தேவக்குமாரன் என்பதை நிரூபிக்கிறது" [1].

சில சமயங்களில் நாம் முழு சத்தியத்தை விட்டுவிட்டு, சுலபமாக பாதை மாறிச் சென்றுவிடுகிறோம், முழு உண்மையை புரிந்துக்கொள்ளாமல் முக்கியமானவற்றை விட்டுவிடுகிறோம். அனைத்து சத்தியங்களையும் புரிந்துக்கொள்ளாமல் வாதம் புரிவது மிகவும் ஆபத்தானது, இதனால் குழப்பம் ஏற்படும் மேலும் தவறான முடிவுகளை நாம் எடுத்துவிடுகிறோம். மேலே நாம் கண்ட உதாரணத்தைப் போலவே, முஸ்லிம்களும் பாதி உண்மையை அறிந்துக்கொண்டு, அறியாமையில் தவறாக விவாதம் செய்கிறார்கள். இப்படி அவர்கள் செய்தினால், அவர்கள் மறைமுகமாக, இயேசுவின் தெய்வீகத்தன்மையை அங்கீகரிக்கிறார்கள். ஆனால், மேற்கொண்டு ஆழமாக ஆய்வு செய்ய முஸ்லிம்கள் முன்வருவதில்லை. முஸ்லிம்களின் இப்படிப்பட்ட வாதங்கள் "தர்க்கரீதியான பிழைகள்" என்று அழைக்கப்படுகின்றது. முஸ்லிம்கள் அடிப்படை உண்மைகளை புறக்கணித்துவிட்டுவிட்டு வாதங்களில் ஈடுபடுவதினால், அவர்கள் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.

இயேசு சிலுவையிலிருந்து அற்புதமுறையாக இறங்கிவர அவருக்கு வல்லமை உண்டு, ஆனால், இயேசு இப்படிச் செய்தால், உலக மக்களின் பாவங்களிலிருந்து அவர்களை விடுவிப்பது எப்படி? அவர்கள் தங்கள் பாவங்களிலேயே வாழ்ந்து தேவனின் தண்டனைக்கு ஆளாகிவிடுவார்களே. எனவே தான் அவர் சிலுவையில் மரிக்க தன்னை ஒப்புக்கொடுத்தார். மேலும் இயேசு சிலுவையிலிருந்து இறங்கிவந்திருந்தால், அவர் பிதாவிற்கு கீழ்படியாதவராக காணப்பட்டு இருந்திருப்பார், வேதவாக்கியங்கள் நிறைவேற்றப்படாமல் இருந்திருக்கும் (லூக்கா 24:44). இயேசு சிலுவையில் மரித்தார் என்பதற்கான உண்மை என்னவென்றால், "இயேசு தான் தப்பிக்க தனக்கு வல்லமை இருந்தும் அவர் தன் சுய விருப்பத்தினால் சிலுவைக்குச் சென்றார்" என்பதாகும் (யோவான் 10:17-18).

இந்த உயிர்த்தெழுதலின் நாட்களில், நாம் நினைவு கூறவேண்டிய விஷயம் என்னவென்றால், இயேசு தன்னை காப்பாற்றிக்கொள்ள தனக்கு சக்தி இருந்தபோதிலும் நமக்காக அவமானத்தையும், தண்டனையையும் பெற்றார். நம்மை இரட்சிக்க அவர் சிலுவையில் கடைசி நிமிடம் வரை தொங்கினார், பாடுகளை சகித்தார், நம்மை இரட்சித்தார் என்பதாகும்.

அடிக்குறிப்பு:

[1] The Passion. (2004). Brentwood TN: Integrity Publishers, p245.

ஆங்கில மூலம்:  http://unravelingislam.com/blog/?p=352

தமிழ் மூலம்: http://isakoran.blogspot.in/2014/04/blog-post_17.html

ராபர்ட் ஸீவர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்