யார் எங்கே போகிறார்கள்? முஹம்மதுவின் முடிவு அவருக்குத் தெரியுமா?

Who is Going Where?

எல்லா மார்க்கங்களிலும் அதிகமாக விவாதிக்கப்படும் ஒரு தலைப்பு உண்டு, அது ‘மனிதனின் முடிவு’ பற்றியதாகும். அதாவது ஒரு மனிதன் மரித்த பிறகு அவனுக்கு என்ன நடக்கும்? என்பது தான் முக்கியமான தலைப்பு. மரித்த பிறகு நாம் இறைவனோடு இருப்போமா? ”ஆம்” என்பது நம் பதிலானால், எந்த சூழ்நிலைகளில் நம்மை இறைவன் சொர்க்கத்தில் அனுமதிப்பார்? என்பது அடுத்த முக்கியமான கேள்வி. 

என்னுடைய முந்தைய கட்டுரையில், இஸ்லாம் போதிக்கும் முஹம்மதுவின் முடிவும், கிறிஸ்தவம் போதிக்கும் இயேசுவின் முடிவும் எப்படி இருந்தது என்பதைப் பற்றி சிந்தித்தோம். இந்த தற்போதைய கட்டுரையில் அதே விவரத்தை இன்னும் ஆழமாக பார்க்கப் போகிறோம். 

குர்-ஆனின் கீழ்கண்ட வசனம், முஹம்மதுவிற்கு அவரது எதிர்காலம் பற்றிய நிச்சயம் இருந்ததில்லை என்றுச் சொல்கிறது:

46:9. “(இறை) தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன், எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை” என்று (நபியே!) நீர் கூறும். (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

முஹம்மதுவிற்கு அவரது எதிர்காலம் பற்றிய நிச்சயம் இல்லை என்ற விவரம் முஸ்லிம்களை கலங்கச்செய்கிறது. ஏனென்றால், முஹம்மதுவிற்கு தன் எதிர் காலம் தெரியாத போது, அவரை பின்பற்றும் முஸ்லிம்களுக்கு தங்கள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை எப்படி வரும்? மேற்கண்ட குர்-ஆன் வசனத்தில் இப்படிப்பட்ட பிரச்சனை இருப்பதினால், தற்கால இஸ்லாமிய அறிஞர்கள், இந்த குர்-ஆன் வசனத்திற்கு வேறு விதமாக விளக்கம் கொடுக்கிறார்கள். அதாவது, குர்-ஆன் 46:9ம் வசனம் முஹம்மதுவின் உலக வாழ்க்கைப் பற்றி பேசுகின்றது, அவர் மரித்த பிறகு இறைவனிடம் செல்லும் வாழ்வு பற்றி பேசவில்லை என்று விளக்கம் கொடுக்கிறார்கள்.

முஸ்லிம்கள் அதிகார பூர்வமானதாக நம்பும் புகாரி ஹதீஸில் ஆரம்ப கால முஸ்லிம்களின் மத்தியில் ஒரு உரையாடல் நடக்கிறது. அதாவது, ஒருவர் மரித்துவிடுகிறார் அவர் சொர்க்கத்தில் இருப்பார் என்று சொல்லப்படும் போது, முஹம்மது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.  மேலும், மரணத்திற்கு பிறகு ஒருவருக்கு என்ன நேரிடும் (சொர்க்கமா? நரகமா?) என்பது நமக்கு தெரியாது என்று முஹம்மது கூறுகிறார். மேலும், முஹம்மது “நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது” என்றும் கூறுகிறார். இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸ் ஆகும், இதே விவரத்தை இன்னும் சில ஹதீஸ்களிலும் காணலாம்.[1]

சில இஸ்லாமிய அறிஞர்கள் இந்த ஹதீஸ் சொல்வதை மறைக்க விரும்புகிறார்கள், எனவே அதற்கு எதிராக விளக்கமளிக்கிறார்கள். அதாவது, மரணத்திற்கு பிறகு தனக்கு என்ன நடக்கும் என்று முஹம்மதுவிற்கு நன்றாகத் தெரியும் என்றுச் சொல்கிறார்கள். தங்களின் இந்த புதிய விளக்கத்திற்கு ஆதரவாக பல சப்பைக் கட்டு காரணங்களை அவர்கள் கூறுகிறார்கள்.  மேலே கண்ட ஹதீஸையும், குர்-ஆனின் வசனத்தையும் பார்க்கும் போது, இவ்விரண்டும், முஹம்மதுவின் பூமிக்குரிய வாழ்வு பற்றிச் சொல்லாமல், அவரது மரணத்திற்கு பிறகு நடக்கும் விவரம் பற்றிச் சொல்வதை கவனிக்க முடியும்.  முஹம்மதுவின் முடிவு பற்றிய இந்த தர்ம சங்கடமான நிலையை சமாளிப்பதற்காக, அனேக இஸ்லாமியர்கள் பலவாறு முயற்சி எடுக்கிறார்கள். ஆனால், பஸ்ஸாம் ஜவாதி என்பவர் வேறு வழியில்லாமல், கீழ்கண்ட விதமாக விளக்கம் அளிக்கிறார். இதன் மூலம், அவர் தனக்கு தானே குழியை தோண்டிக்கொள்கிறார்:

”. . . என்னைப் பொருத்தமட்டில், இந்த புகாரி ஹதீஸ் சொல்லும் விவரங்களின் பின்னணியை கவனிக்கும் போது,  இறைத்தூதருக்கு (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) தன் மரணத்திற்கு பிறகு தனக்கு என்ன நடக்கும் என்று தெரியாது என்று தெரிகிறது“[2].

இஸ்லாமிய இறையியல் என்னும் கண்ணாடியின் வழியாக பார்த்தால், முஹம்மது கடைசியாக எங்கு போய் சேருவார் என்பது நிச்சயமில்லாத ஒன்றாக இருக்கிறது. மேற்கண்ட குர்-ஆன் வசனம் மற்றும் ஹதீஸை நாம் ஆழமாக ஆய்வு செய்தால், முஹம்மதுவிற்கு தன் இரட்சிப்பு பற்றிய நிச்சயம் இல்லை என்பது தெளிவாக புரியும். 

ஆனால், இயேசு தம்மைப் பற்றி என்ன சொன்னார் என்பதைப் பற்றி நான் ஏற்கனவே என் முந்தைய கட்டுரையில் விளக்கியுள்ளேன் (யோவான் 11:25). இது முஹம்மதுவிற்கு நேர் எதிராக உள்ளது. மேலும் இயேசு எங்கே போகப்போகிறார் என்பதைப் பற்றி அவர் கூறியதையும் நாம் பார்த்தோம் (யோவான் 14:2-3, 16:28). நாம் எப்போதும் செய்வது போலவே, இப்போதும் கூட அதிகமாக பயணிக்காத பாதையை நாம் கடப்போம் வருகிறீர்களா? அதாவது இயேசுவைப் பற்றியும், அவரது முடிவு  பற்றியும் இஸ்லாம் என்ன போதிக்கிறது என்பதை ஆய்வு செய்வோம்.

இஸ்லாமிலே முஹம்மதுவின் முடிவு நம்பிக்கையற்ற நிலையில் காணப்படுகிறது, இதே போல, இஸ்லாமில் இயேசுவின் நிலைமையும் இருக்கவேண்டும் என்று முஸ்லிம்கள் எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால், அது தான் இல்லை. குர்-ஆன் இயேசுவின் எதிர்காலம் பற்றி வேறு வகையாகச் சொல்கிறது.

இயேசுவைப் பற்றி குர்-ஆனில் அனேக வசனங்களை காணலாம். இயேசுவைப் பற்றிய முதலாவது வசனத்தில் அவர் மறு உலகத்தில் கண்ணியமிக்கவராக இருப்பார் என்று அல்லாஹ் குர்-ஆனில் சொல்கிறான்.

குர்-ஆன் 3:45 

மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

இஸ்லாமிய ஆரம்பகால விரிவுரையாளராகிய இப்னு கதீர் என்பவர், இவ்வசனத்தை விளக்கும் போது, ஒரு படி மேலே சென்று, மறு உலகத்தில் இயேசு அல்லாஹ்விற்கு நெருக்கமானவராக இருப்பார் என்றும், அப்போது இயேசு தன்னை பின்பற்றியவர்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார் என்றும் விளக்கமளிக்கிறார்.

இதுமட்டுமல்ல, இன்னொரு இடத்தில் ”இயேசு சொர்க்கத்தில் இருப்பர்” என்று குர்-ஆன் மிகவும் தெளிவாகச் சொல்கிறது. 

குர்-ஆன் 3:55

“ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!

இயேசுவின் வேலை பூமியில் முடிந்துவிட்டால், அவரை தன்னளவில் அதாவது சொர்க்கத்திற்கு அல்லாஹ் எடுத்துக் கொள்வார் என்று மேற்கண்ட குர்-ஆன் வசனம் இயேசுவின் முடிவு பற்றி தெள்ளத்தெளிவாகச் சொல்கிறது. இந்த குர்-ஆன் வசனத்திற்கு இந்த விளக்கத்தை விட வேறு விளக்கத்தை யாராலும் கொடுக்கமுடியாது. இயேசுவைப் பற்றி இந்த வசனம் சொல்லும் அல்லாஹ்வின் திட்டத்தை ஹதீஸ்களிலும் காணலாம். இஸ்லாமிய அறிஞர்கள் எப்படிப்பட்ட வாய் ஜாலங்கள் காட்டினாலும், இந்த வசனத்திற்கு அவர்கள் வேறு விளக்கம் கொடுக்கமுடியாது. முஸ்லிம்களின் மற்றும் முஹம்மதுவின் எதிர்காலம் நம்பிக்கையற்ற ஒன்றாக ஆபத்தில் மாட்டிக்கொண்டு இருக்கிறது என்றுச் சொல்லும் அதே குர்-ஆன், இயேசுவின் எதிர்காலம் பற்றி மிகவும் தெளிவாக உள்ளது. இயேசுவின் எதிர்காலம் என்ன என்பதை குர்-ஆன் சொல்லிவிட்டது, அதைப் பற்றி எந்த ஒரு குழப்பமும் இல்லை. அணு அளவு சந்தேகமின்றி இயேசு சொர்க்கத்தில் இருப்பார் என்பது தான் குர்-ஆனின் சாட்சி.

இப்போது சுருக்கத்தைக் காண்போம். முஹம்மதுவின் முடிவு பற்றி இஸ்லாமிய நூல்கள் குழப்பமான விவரங்களைத் தருகின்றன. மேலும், முஹம்மதுவிற்கு தன் எதிர்காலம் என்னவாகும் என்று தெரியாது என்று குர்-ஆன் சொல்கிறது. ஆனால், அதே இஸ்லாமிய நூல்கள், இயேசு சொர்க்கத்தில் இருப்பார் என்று தெளிவாகச் சொல்கிறது. இவ்விவரம் முஸ்லிம்களின் கண்களை திறந்து சத்தியத்தை காணச் செய்யும் விவரமாகும்.  குர்-ஆன் ”தீர்க்கதரிசிகள்” என்று அழைக்கும் இவ்விருவரில், முஸ்லிமாக நீங்கள் யாரை பின்பற்ற முடிவு எடுக்கப்போகிறீர்கள்? தன் எதிர் காலம் என்னவென்றே தெரியாத முஹம்மதுவையா? அல்லது இயேசுவையா? சிந்தியுங்கள்.

குறிப்பு: குர்-ஆன் வசனங்கள் அனைத்தும் டாக்டர் முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.

அடிக்குறிப்புக்கள்

[1] புகாரி ஹதீஸ் எண்:1243 

1243. நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா(ரலி) அறிவித்தார். வந்த முஹாஜிர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரின் உடல் குளிப்பாட்டப்பட்டு அவரின் ஆடையிலேயே கஃபனிடப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), 'ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறினேன். உடனே, நபி(ஸல்) அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கெப்படித் தெரியும்?' என்று கேட்டார்கள். 

அல்லாஹ்வின்தூதர் அவர்களே! என்னுடைய தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?' என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர் மரணமடைந்துவிட்டார். எனவே, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே விரும்புகிறேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை."  Volume :2 Book :23  (மேலும் பார்க்க ஹதீஸ்கள்: 2687, 3929 & 7003)

[2] www.call-to-monotheism.com/was_prophet_muhammad_uncertain_of_his_own_salvation_

ஆங்கில மூலம்: http://unravelingislam.com/blog/?p=476 

ராபர்ட் ஸீவர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்