நீங்கள் எங்கே போகிறீர்கள்?

தான் எங்கே போகப்போகிறேன் என்பதை தெரியாத முஹம்மதுவின் பின்னே போகிறீர்களா?

Where are you going?

ஆசிரியர் : ராபர்ட் ஸீவர்ஸ்

முந்தைய காலங்களை விட, தற்காலத்தில் விலாசம் சரியாக தெரியாத ஊர்களுக்குச் செல்வது மிகவும் சுலபமாகும். புதிய சாதனங்களாகிய ஜிபிஎஸ் (GPS) மற்றும் கூகுள் மேப் (Google Map) போன்றவை நம்முடைய விலாசதேடலை சுலபமாக்கிவிட்டன. பழங்காலங்களில், நாம் சரியான விலாசத்தை சென்றடையவேண்டுமென்றால், அவ்வழிகளை அறிந்து வைத்திருக்கின்ற நபரின் உதவியை நாடவேண்டும்.

இந்த விவரங்களுக்கும் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமுக்கும் என்ன சம்மந்தம்? முஹம்மது மற்றும் இயேசு இவ்விருவரும் தங்களின் உலக வாழ்க்கையின் முடிவுக்கு பிறகு தங்களின் நிலை என்னவாக இருக்கும் என்று சொல்லியுள்ளார்கள்.  இயேசு தம்முடைய வாழ்நாளின் கடைசி வாரத்தில், அனேக கட்டளைகளை சீடர்களுக்கு கொடுத்தார். மேலும் சீடர்கள் உற்சாகம் அடையும் வகையில் இதர முக்கியமான விவரங்களையும் பகிர்ந்துக் கொண்டார். இந்த உரையாடல்களில் அவர் சொன்ன அதிமுக்கியமான விவரம் என்னவென்றால், “தாம் சீடர்களை விட்டுச் செல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது, அதாவது, இயேசு சென்று அவர்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி, அதன் பிறகு அவர்கள் தம்மோடு சொர்க்கத்தில் நிரந்தரமாக தங்கும் படி அழைத்துச் செல்வார்” என்று கூறினார்.

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.  நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். ( யோவான் 14:2-3)

இயேசு முதலாவது சொர்க்கத்திற்குச் சென்று, சீடர்களுக்கு இடத்தை தயார்படுத்துவதாக சொல்கிறார். மேலும், சில ஆண்டுகளுக்கு பிறகு சீடர்கள் கூட அவரோடு அதே சொர்க்கத்தில் இருப்பார்கள் என்றும் வாக்கு கொடுக்கிறார். ஒரு கிறிஸ்தவர் மரித்த பிறகு அவர் சொர்க்கம் செல்வாரா? இதைப் பற்றிய நிச்சயம் அவருக்கு எப்படி வரும்? என்பவைகளைப் பற்றி இன்னொரு கட்டுரையில் ஆய்வு செய்வோம் (எபேசியர் 1:13-14).  

ஆனால், இந்த கட்டுரையின் கருப்பொருள் ‘இயேசு பிதாவோடு சொர்க்கத்தில் இருப்பார் என்றும், அவர் தன்னை பின்பற்றுபவர்களுக்கு இடத்தை ஆயத்தப்படுத்துவார்’ என்றும் அவர் கொடுத்த வாக்கு பற்றியதாகும்.  இயேசு தாம் எங்கே போகிறார் என்று அறிந்திருந்தார் மேலும், அங்கு (சொர்க்கம்) சென்ற பிறகு அவர் என்ன செய்யப்போகிறார் என்றும் அறிந்திருந்தார்.

முஹம்மது தம்முடைய மரணத்திற்கு பிறகு எங்கே போவார் என்று ஏதாவது சொல்லியுள்ளாரா? முஹம்மது மரித்த பிறகு அவர் அல்லாஹ்வோடு இருப்பார் என்று முஹம்மது சொல்லியிருப்பார் என்று பொதுவாக எல்லாரும் நினைத்திருப்பார்கள், ஆனால் அது தவறாகும். முஹம்மது இப்படி சொல்லவில்லை, அவர் வேறுவகையாக சொல்லியுள்ளார்.  முஸ்லிம்கள் அதிகார பூர்வமானதாக நம்பும் புகாரி ஹதீஸில் ஆரம்ப கால முஸ்லிம்களின் மத்தியில் ஒரு உரையாடல் நடக்கிறது. அதாவது, ஒருவர் மரித்துவிடுகிறார் அவர் சொர்க்கத்தில் இருப்பார் என்று சொல்லப்படும் போது, முஹம்மது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.  மேலும், மரணத்திற்கு பிறகு ஒருவருக்கு என்ன நேரிடும் (சொர்க்கமா? நரகமா?) என்பது நமக்கு தெரியாது என்று முஹம்மது கூறுகிறார். மேலும், முஹம்மது “நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது” என்றும் கூறுகிறார். இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸ் ஆகும், இதே விவரத்தை இன்னும் சில ஹதீஸ்களிலும் காணலாம்[1], அந்த ஹதீஸை அடிக்குறிப்பில் படிக்கவும்.

ஒரு அனுபவ சாட்சி புத்தகத்திலிருந்து ஒரு மேற்கோளை இப்போது படியுங்கள்:

”நான் என் தாத்தாவிடம் சென்று, “முஹம்மது மரிக்கும் போது அவர் என்ன கூறினார்?” என்று கேள்வி கேட்டேன். அவர் என்னிடம் முஹம்மது சொன்னவைகளைச் சொன்னார். அதன் பிறகு நான் என் தாத்தாவிடம் “இயேசுவைப் பாருங்கள், தன் பிதாவினிடத்தில் அவர் போவதாகச் சொன்னார், தன்னை பின்பற்றுபவர்களுக்காக இடத்தை ஆயத்தப்படுத்துவதாக அவர் கூறினார், அதன் பிறகு அவர் திரும்பி வந்து தம்முடையவர்களை அழைத்துச் செல்வதாகச் சொன்னார். ஆனால், தாம் எங்கு போகிறோம் என்று முஹம்மதுவிற்கே தெரியவில்லை. இப்போது சொல்லுங்கள், யாரை நீங்கள் பின்பற்றப்போகிறீர்கள்?” என்று கேட்டேன். என் தாத்தா “யாருக்கு தாம் போவது எங்கே என்று தெரிந்திருக்கிறதோ, அவரைத் தான் நான் பின்பற்றப்போகிறேன்” என்றுச் சொன்னார். “நான் சர்சுக்கு இப்போது போகப்போகிறேன்” என்றுச் சொன்னேன். இப்படித் தான் நான் இயேசுவை அறிந்துக் கொண்டேன். [2]

நீங்கள் எங்கே போகப்போகிறீர்கள்? இந்த கேள்வியை இப்படி கேட்டால் தான் சரியாக இருக்கும் – நீங்கள் அங்கே எப்படி போகப்போகிறீர்கள்?  தான் எங்கே போகிறேன் என்று தெரிந்திருக்கின்றவரை (இயேசுவை) நீங்கள் பின்பற்றப்போகிறீர்களா? அல்லது தன்னுடைய பயணம் எங்கே போய் முடியும் என்று தெரியாதவரை (முஹம்மதுவை) பின்பற்றப்போகிறீர்களா?

அடிக்குறிப்புக்கள்:

[1] புகாரி ஹதீஸ் எண்: 1243.

நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா(ரலி) அறிவித்தார். 

வந்த முஹாஜிர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரின் உடல் குளிப்பாட்டப்பட்டு அவரின் ஆடையிலேயே கஃபனிடப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), 'ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறினேன். உடனே, நபி(ஸல்) அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கெப்படித் தெரியும்?' என்று கேட்டார்கள். 

அல்லாஹ்வின்தூதர் அவர்களே! என்னுடைய தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?' என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர் மரணமடைந்துவிட்டார். எனவே, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே விரும்புகிறேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை."  Volume :2 Book :23  (மேலும் பார்க்க ஹதீஸ்கள்: 2687, 3929 & 7003)

[2] Trousdale, Jerry. Miraculous Movements. Nashville, TN: Thomas Nelson, 2012, p79.

ஆங்கில மூலம்: http://unravelingislam.com/blog/?p=394 

ராபர்ட் ஸீவர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்