ஆபிரகாம் ஆகாரோடு விபச்சாரம் புரிந்தாரா? (ஆதியாகமம் 16:1 - 4)?

இல்லை, ஆபிரகாம் ஆகாரோடு விபச்சாரம் செய்யவில்லை, இஸ்மவேல் ஒரு தவறான முறையில் பிறந்தவர் அல்ல.

இதற்கு கீழ்கண்ட காரணங்களை சான்றுகளாகச் சொல்லமுடியும்:

1) அக்காலத்தில் வைப்பாட்டிகள் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்:

நாம் பேசிக்கொண்டு இருக்கும் நபர் ஆபிரகாம், இன்றிலிருந்து 4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நபராவார். அக்காலத்தில் பலதாரமணம் அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதனால் தான் "ஆகாரோடு சேர்ந்து குடும்பம் நடத்தி, ஆபிரகாமுக்கு சந்ததியை உண்டாக்கவேண்டும் என்ற ஐடியா சாராளுக்கு வந்தது". அதனால், ஆபிரகாம் அந்த காலத்தில் இருந்த வழக்கத்தின்படியே நடந்துக்கொண்டார், அது அப்போது தவறான செயல் அல்ல.

தேவன் கூட அதனை தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், தாம் அற்புதமாக செய்ய இருந்த ஒரு செயலுக்காக காத்திருக்காமல், சாராள் செய்த தவறை அவர் அனுமதித்து சாராளுக்கு ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்துவிட்டார். ஆகாருக்கு இஸ்மவேல் பிறந்த பிறகு, அந்த பாடத்தை சரியாக கற்றுக்கொண்டார் சாராள். 

2) ஆகாரும் பெருமைக்கொண்டார்: 

தம்முடைய எஜமானுக்கு மனைவியாக அல்லது வைப்பாட்டியாக  வருவதைப் பற்றி ஆகாரும் பெருமையடைந்தார். அவர் தடை ஒன்றும் செய்யவில்லை, ஒரு வீட்டில் அடிமையாக இருப்பதைவிட, இது மேலானது என்று அவர் கருதினார். மேலும் அந்தச் செயல் அக்கால சமுதாயத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்தது.

அதன் பிறகு தனக்கு பிள்ளை பிறந்தவுடன், தன் எஜமாட்டியை ஏளனமாக பார்த்ததற்கான கூலியை ஆகார் பெற்றார். ஆகார், பாவம்! தான் ஏறிவந்த படியை தானே அறியாமையில் தள்ளிவிட முயன்றார், அதற்கான பலனை அனுபவித்தார்.

ஆதியாகமம் 16 : 4-6

4. அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்.

5. அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள்.

6. அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்.

குறிப்பு: மனைவிக்கும் வைப்பாட்டிக்கும் இருக்கும் வித்தியாசத்தை இங்கு கவனிக்கலாம். ஆகார் தாம் எங்கிருந்து இந்த நிலைக்கு வந்தோம் என்பதை மறந்து செயல்பட்டார், ஆபிரகாமோ மனிததன்மையையே மறந்தார். இன்று நாம் வாழும் சூழ்நிலையை கணக்கில் கொண்டால், ஆகாரிடம் நான் பேசி, இப்படி நடக்காத பார்த்துக்கொள்ளும்படி நான் செய்கிறேன், நான் பார்த்துக்கொள்கிறேன், இனி இப்படி நடக்காது என்று சாராளிடம் சொல்லாமல், “உன் அடிமை உன் இஷ்டம்” என்று சொல்லி மனுஷன் ஜகா வாங்கிவிட்டார். என்ன ஆம்பளைங்களோ!

இன்னொரு முக்கியமான விஷயம், பழைய ஏற்பாட்டின் படி ஒரு அடிமையை திருமணம் செய்துக்கொண்டு அவளோடு குடும்பம் நடத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால், எந்த ஒரு இடத்திலும், "அடிமைப்பெண்களிடம் திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொள்வது" தடுக்கப்பட்டதாகும், பெரும் பாவமாகும்.

3) இஸ்லாமில் விபச்சாரம்/கற்பழிப்பு: 

மேலே சொன்னதற்கு எதிராக இஸ்லாம் கட்டளையிடுகிறது. குர்‍ஆன் மற்றும் முஹம்மதுவின் படி, ஒரு முஸ்லிம் தன் அடிமைப்பெண்களிடம் திருமணம் புரியாமல், உடலுறவு கொள்ளலாம். இதனை அல்லாஹ்வே அனுமதிக்கிறான், ஆனால் யெகோவா தேவன் இதனை அனுமதிப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

குர்‍ஆன் 23:6. ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

குர்‍ஆன் 4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

இதுவரை பார்த்த விவரங்களின்படி, ஆபிரகாம் அக்கால வழக்கத்தின்படியே நடந்துக்கொண்டார், அவர் விபச்சாரம் செய்யவில்லை. ஆனால், குர்‍ஆன் முஸ்லிம்களை விபச்சரம் செய்ய அனுமதிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.


இதர பைபிள் விரிவுரை கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்