இஸ்லாமிய அகராதி > அ வார்த்தைகள்

அல் (Al)

இந்த "அல்" வார்த்தையானது ஆங்கிலத்தில் உள்ள "the" என்ற வார்த்தைக்கு சமமானதாகும் (definite article - 'the' - குறிப்பு பெயர்சொல்லின் அடையாளம்). அரபி எழுத்தாளர்கள் அரபி பெயர்களை வித்தியாசமாக எழுதுவதினால் அனேக முறை மக்கள் இந்த வார்த்தையினால் குழப்பமடைவது உண்டு, அதாவது நாம் ஏற்கனவே படித்த பெயர் இது தானா அல்லது வேறு பெயரா என்ற குழப்பம் வருவதுண்டு. 

இவ்வார்த்தைப் பற்றிய சில விவரங்களை சரியாக புரிந்துக்கொண்டால் இதில் குழப்படைவதற்கு ஒன்றுமில்லை. 

இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் மற்றும் குர்-ஆன் விரிவுரையாளர் "தபரி" என்பவரை சில அரபி எழுத்தாளர்கள் "அல்-தபரி (Al-Tabari)" என்று எழுதுவார்கள், வேறு சிலர் "அத்-தபரி (at-Tabari)" என்று எழுதுவார்கள். இதே போல அல்லாஹ்விற்கு உள்ள பெயர்களை எழுதும் போது கூட:

  • சிலர் ---> அல்-ரஹ்மான், அல்-ஸமி, அல்-ஷகூர், அல்-நூர் ... என்று எழுதுவார்கள். 
  • வேறு சிலர் ---> அர்-ரஹ்மான், அஸ்-ஸமி, அஷ்-ஷகூர், அந்-நூர் ... என்று எழுதுவார்கள்.

அரபி மொழியில் உள்ள எழுத்துக்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன: 1) சந்திர எழுத்துக்கள் 2) சூரிய எழுத்துக்கள்.

  • க, ம, ப. . . போன்ற எழுத்துக்கள் சந்திர எழுத்துக்கள் ஆகும்.
  • த, ந, ச. . . போன்ற எழுத்துக்கள் சூரிய எழுத்துக்கள் ஆகும்.

(சந்திர/சூரிய எழுத்துக்கள் அனைத்தையும் பற்றி அறிய இந்த விகிபிடியா தொடுப்பை சொடுக்கவும்.)

சந்திர எழுத்துக்களுக்கு முன்பாக "அல்" வந்தால், அந்த எழுத்துக்களை தெளிவாக உச்சரிக்க முடியும், அப்படிப்பட்ட எழுத்துக்களை சந்திர எழுத்துக்கள் என்றுச் சொல்வார்கள். 

உதாரணத்திற்கு:

கமர் (நிலா) என்ற சொல்லை எடுத்துக்கொள்ளலாம். இவ்வார்த்தைக்கு முன்பு அல் என்று சேர்த்து வாசிக்க முடியும் - அல்-கமர் (அந்த நிலா). 

இதே போல, பலத் (balad - நாடு) என்ற வார்த்தையும் அல்-பலத் (அந்த நாடு) என்று வாசிக்கமுடியும். ஆனால், ஒரு வார்த்தை சூரிய எழுத்துடன் ஆரம்பித்தால், அதனை "அல்" என்ற வார்த்தையைச் சேர்த்து "அல்" என்றே உச்சரிக்க முடியாது. அதற்கு பதிலாக, "அல்" என்பதில் உள்ள "ல்" என்பதை நீக்கிவிட்டு, அவ்வார்த்தையின் முதல் எழுத்தை போட்டு வாசிக்க முடியும். 

உதாரணத்திற்கு:

ஷம்ஸ் (சூரியன் என்பது இதன் பொருள்) என்ற சொல்லுடன் "அல்-ஷம்ஸ்" என்று எழுதினால், அதனை அப்படியே வாசிக்கமுடியாது. எனவே, அதனை "அஷ்-ஷம்ஸ்" (அந்த சூரியன்) என்று வாசிக்க வேண்டும் (கவனிக்கவும்: ல் என்பதை நீக்கிவிட்டு ஷ் என்பதை சேர்த்துள்ளோம்) எழுதும் போது அல்-ஷம்ஸ் என்று (அ) அஷ்-ஷம்ஸ் என்று எழுதினாலும், அதனை அஷ்-ஷம்ஸ் என்றே வாசிக்கவேண்டும்.

எனவே அரபி எழுத்தாளர்கள் தங்கள் விருப்பப்படி "அல்-தபரி" என்றோ (எழுத்தின் படி எழுதுவது) அல்லது "அத்-தபரி" என்றோ (உச்சரிப்பின் படி எழுதுவது) எழுதுவார்கள், எப்படி எழுதினாலும் தவறில்லை. ஆனால், வாசகர்கள் படிக்கும் போது, சந்திர சூரிய எழுத்துக்களை கவனத்தில் கொண்டு படிக்கவேண்டும். 

அரபி மொழி தெரியாதவர்களுக்கு உதவியாக இருக்கும்படியாக, எழுத்தாளர்கள் எழுதும் போது உச்சரிப்பின் படி வார்த்தைகளை எழுதினால் நன்றாக இருக்கும் என்பது எங்களது கருத்து.