ஆபேலின் கொலையும் குர்-ஆனின் (யூத பாரம்பரிய) மூலமும் - குர்-ஆன் 5:31-32
சுருக்கம்:
முஹம்மது இதர நூல்களிலிருந்து பல விவரங்களை எடுத்து குர்-ஆனில் பதிவு செய்துள்ளார். இந்த கட்டுரையில் யூத நூல்களில் வரும் ஒரு நிகழ்ச்சியை முஹம்மது எப்படி குர்-ஆனில் புகுத்தியுள்ளார் என்பதை மட்டுமே காண்போம்.
அறிமுகம்:
பல மூலங்களின் கலவையாக முஹம்மது இஸ்லாமை உருவாக்கினார். அதாவது, யூத, கிறிஸ்தவ, சேபியன், பல தெய்வ வழிபாடுகள் மற்றும் தன் சொந்த இறையியல் கோட்பாடுகளை ஒன்றாக கலந்து அவர் இஸ்லாமை உருவாக்கினார். குர்-ஆனை மேலோட்டமாக ஆய்வு செய்யும் போது பளிச்சென்று தெரியும் ஒரு மூலம், யூத மார்க்கமாகும். இந்த கட்டுரையில் ஆபேலின் மரணம் பற்றிய ஒரு யூத நிகழ்ச்சியை ஆய்வு செய்வோம்.
யூத மார்க்கம் பற்றி முஹம்மதுவிற்கு பல விவரங்கள் தெரிந்து இருந்தது. ஹிஜாஜ் முழுவதும் யூத குடியிருப்புக்கள் இருந்தன. இவர்கள் தங்கள் உழவுத்தொழிலுக்கும், கைவினை பொருட்களுக்கும் புகழ்பெற்றவர்களாக திகழ்ந்தனர். முஹம்மது தமது வாலிப வயதில் செய்த வியாபார பயணங்களின் போது, இவர்களோடு அவருக்கு பல தொடர்புகள் உண்டாகியிருக்கவேண்டும். அதன் பிறகு, யாத்ரீப் (மதினா) பட்டணத்தில் வாழ்ந்த யூதர்களோடு இவருக்கு தொடர்பு உண்டானது. இவரது போதனைகளைக் கேட்டு சில யூதர்கள் முஸ்லிம்களாக மாறினார்கள், மேலும் இரண்டு/மூன்று யூதப்பெண்களை முஹம்மது திருமணமும் செய்துக் கொண்டார். இப்னு இஷாம் தம்முடைய ‘முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றில்’ முஹம்மதுவிற்கும் யூதர்களுக்கு இடையே நடைப்பெற்ற உரையாடல்களை பதிவு செய்துள்ளார்.
பைபிளின் பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளை குர்-ஆன் அடிக்கடி மறுபதிவு செய்கிறது. பொதுவாக ஒரு கதை பலரின் வாய் வழியாக சொல்லிக்கொண்டே செல்லப்படும் போது, அது மாறிக்கொண்டே இருக்கும். முதலில் அக்கதை சொல்லப்பட்ட விவரங்களில் சில கூட்டல் கழித்தல்கள் வந்துவிடும். இதைத் தான் குர்-ஆனிலும் காணமுடியும். பழைய ஏற்பாட்டில் வரும் நிகழ்ச்சிகள் சிறு மாறுதல்களுடன் குர்-ஆனில் காணப்படுவதற்கும் இது தான் காரணம். தாம் சந்தித்த யூதர்களிடமிருந்து பல கதைகளை அவர் வாய் வழியே கேட்டு இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. முஹம்மது யூதர்கள் வழியாக அவர்களின் நம்பிக்கைகள் பற்றியும், உவமைகள், எடுத்துக்காட்டுக்கள், மத போதனைகள் (மித்ராஷ், மிஷ்னாஹ்) என்று பலவற்றை கேட்டு இருந்திருப்பார். முஹம்மது கேட்டவைகள் காலப்போக்கில் சில நிகழ்ச்சிகள் அவரது மனதில் மறக்கப்படாமல் இருந்திருக்கும், சில நிகழ்ச்சிகள் மறக்கப்பட்டு விட்டிருக்கும். கடைசியாக, அவர் வெளிப்பாடுகளை சொல்லும் போது, சில கதைகளில் மாற்றங்கள் சேர்க்கப்பட்டு இருந்தன, சில கதைகள் முஹம்மதுவின் இறையியல் சூழ்நிலைக்கு ஏற்ப திருத்தப்பட்டு இருந்தன.
குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட கதைகளில், ஏன் இப்படிப்பட்ட மாற்றங்கள் காணப்படுகின்றன என்று பார்க்கும் போது, ஒரு மனிதன் வாய் வழியாக சொல்லப்படும் விவரங்களை காதுவழியாக கேட்டு, அவைகளின் மூல புத்தகங்களை படிக்காமல், நிகழ்ச்சிகளை பதிவு செய்தால், குர்-ஆனில் உள்ளது போல மாற்றத்தோடு தான் காணப்படும், ஒரிஜினல் போல காணப்படாது. யூதர்கள் மேற்கோள் காட்டும் புத்தகங்களை நேரடியாக படித்து தெரிந்துக்கொள்ளும் அளவிற்கு படிப்பறிவில்லாத முஹம்மதுவினால், தான் ”வெளிப்பாடுகள்” என்றுச் சொல்லும் விவரங்களை எப்படி சரி பார்க்கமுடியும்?
மூலங்கள்:
இதன் அடிப்படையில், ஒரு முக்கியமான நிகழ்ச்சி குர்-ஆன் ஸூரா 5:27-32 வசனங்களில் காணலாம். இந்த குர்-ஆன் பகுதியானது காயீன் மற்றும் ஆபேல் கதைப் பற்றி விவரிக்கிறது. ஆரம்பத்தில் தோராவும், குர்-ஆனும் ஒரே மாதிரியான விவரங்களை விவரித்தாலும், குர்-ஆனின் 31வது வசனத்தில் குர்-ஆன் ஒரு மாற்றமான கதையைச் சொல்கிறது.
குர்-ஆன் 5:31. பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார்.
குர்-ஆன் 5:31 சொல்லும் விவரம் தோராவில் இல்லை, ஆனால், இதற்கு இணையான விவரம் யூதர்களின் கட்டுக்கதைகள் அடங்கிய தொகுப்புக்களில் காணப்படுகிறது.
குர்-ஆனில் கண்ட அந்த நிகழ்ச்சி, யூதர்களின் பிர்கே ரபி எலியேஜர் நூலில் கீழ்கண்டவாறு உள்ளது:
ஆதாமும் அவரோடு கூட இருந்தவர்கள், கொலை செய்யப்பட்ட ஆபேலுக்காக அழுதுக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு அந்த சடலத்தை என்ன செய்வதென்று அப்போது தெரியாமல் இருந்தது. அந்த நேரத்தில் ஒரு காகம் வந்தது, இன்னொரு காகம் மரித்து இருந்தது. அந்த காகம், பூமியை தன் கால்களால் கீறி பள்ளம் உண்டாக்கி, அதில் மரித்த காகத்தை போட்டு மூடியது. இதனை கண்ட ஆதாம், “நானும் மரித்த சடலத்தை அந்த காகம் செய்தது போலவே பூமியை தோண்டி புதைப்பேன்” என்றுச் சொல்லி, ஆபேலின் உடலை புதைத்தார்.
Adam and his companion sat weeping and mourning for him (Abel) and did not know what to do with him as burial was unknown to them. Then came a raven, whose companion was dead, took its body, scratched in the earth, and hid it before their eyes; then said Adam, "I shall do as this raven has done", and at once he took Abel's corpse, dug in the earth and hid it. [Geiger, Judaism and Islam, p. 80, as quoted in Gilchrist, Muhammad and the Religion of Islam, p. 205, 206].].
குர்-ஆன் மற்றும் பிர்கே நூலில் சொல்லப்பட்ட விவரங்களை பார்த்தால், இவ்விரண்டுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை கண்டுக்கொள்ளலாம். குர்-ஆனின் படி ஆபேலின் சடலத்தை காயின் புதைத்தான், பிர்கே நூலில் படி, ஆதாம் புதைத்தான், இது தான் வித்தியாசம்.
குர்-ஆனின் அடுத்த வசனம் (5:32) இன்னொரு விவரத்தை நிருபிக்கிறது. அதாவது, முஹம்மதுவின் வெளிப்பாடுகள், பிர்கே என்ற ஒரே நூலிலிருந்து மட்டுமல்ல, பைபிள், யூத பாரம்பரிய நூல்களாகிய மித்ரஷ், மிஸ்னாஹ், பலதெய்வ வழிப்பாட்டு முறைகள் போன்றவற்றிலிருந்து வந்துள்ளது என்பதை அறியலாம்.
குர்-ஆன் 5:32. இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
மேற்கண்ட வசனத்தை மேலோட்டமாக பார்த்தால், குர்-ஆன் 5:31 மற்றும் 5:32க்கு இடையே எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்பது போல தெரியும். ஒரு மனிதனின் வாழ்வு அல்லது மரணம், எப்படி ஒட்டு மொத்த மனித இனத்தின் இரட்சிப்புக்கு அல்லது அழிவுக்கு காரணமாக இருக்கிறது என்பதை குர்-ஆன் விளக்கவில்லை. ஆனால், இன்னொரு யூத பாரம்பரிய நூலாகிய மிஷ்னாஹ் சன்ஹெட்ரின் (Mishnah Sanhedrin)ஐ கவனித்தால், குர்-ஆன் 5:31க்கும், 5:32க்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை கண்டுபிடிக்க முடியும். இந்த யூத நூல் என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள்:
காயின் தன் சகோதரனை கொன்ற விஷயத்தில், “உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது” என்று சொல்லப்பட்டதை காணமுடியும் (ஆதி 4:10). இந்த இடத்தில் இரத்தம் என்று ஒருமையில் சொல்லப்படாமல், இரத்தங்கள் என்று மூல மொழியில் பன்மையில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, ஆபேலின் இரத்தமும், அவன் மூலமாக உருவாக இருக்கும் சந்ததியின் இரத்தங்களும் கூப்பிடுகிறது என்று அர்த்தமாகிறது. இதன் மூலம் அறிவது என்ன? மனிதன் ஒருவனாக படைக்கப்பட்டான், ஆகையால், எவன் ஒருவன் இன்னொரு தனி மனிதனை கொல்கிறானோ, அவன் அந்த மனிதனின் முழு இனத்தை கொன்றுவிட்டதாக ஆகிறது. ஆனால், எவன் ஒருவன் இன்னொருவனை வாழ வைக்கிறானோ, அவன் முழு இனத்தை வாழவைப்பதாக கருதப்படுகிறது. (மிஷ்னாஹ் சன்ஹெட்ரின் 4:5)
இந்த பகுதி மிஷ்னாஹ் பாரம்பரிய நூலில் 4:5ல் காணப்படுகிறது. மிஷ்னாஹ் என்பது தோராவிற்காக யூத ரபிக்கள் எழுதிய விளக்கவுரைகளாகும். ஒரு யூத ரபி எழுதிய விளக்கவுரை எப்படி குர்-ஆனில் புகுந்துவிட்டது? அதுவும் அல்லாஹ்வின் வார்த்தையாக புகுந்துவிட்டது? இந்த கேள்விக்கு பதில் மிகவும் சுலபமானது, முஹம்மது இப்படிப்பட்ட விவரங்களை, போதனைகளை யூதர்களிடமிருந்து கேட்டு இருந்திருக்கின்றார், அதன் பிற்கு இவைகள் தான் “அல்லாஹ்வின் வஹி/வெளிப்பாடுகள்” என்று குர்-ஆனில் புகுத்திவிட்டார்.
ஆதியாகமம் 4:10ல் வரும் வார்த்தை பன்மையாக இருக்கிறது என்பதை அறிந்துக்கொண்ட ஒரு யூத ரபி தன் சொந்த விளக்கத்தை கொடுத்திருந்தார். ஆபேலை கொன்றவன் ஆபேலின் வம்சத்தை முழுவதும் கொன்றுவிட்டான் என்று தான் விளக்கவுரையில் எழுதிவிட்டான். இதே போல, ஒருவனை வாழவைத்தவன், அவன் மூலமாக பிறக்கும் முழு மக்கட்தொகையையும் வாழவைத்துவிட்டான் என்றும் விளக்கம் கொடுத்துவிட்டான். இந்த விளக்கத்தை அறிந்துக்கொண்ட முஹம்மது, இது தோராவில் உள்ளதா? அல்லது ரபிக்கள் எழுதிய விளக்கவுரை மிஷ்னாஹ்வில் எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்யாமல், இதுதான் அல்லாஹ்வின் நித்தியமான வார்த்தையென்று குர்-ஆனில் புகுத்திவிட்டார். சிறிது சிந்தித்துப்பாருங்கள்! ஒரு யூத ரபியின் சொந்த கருத்து, உலகமெல்லாம் முஸ்லிம்கள் படிக்கும் குர்-ஆனின் அழிவில்லாத வார்த்தைகளாகிவிட்டது.
முடிவுரை:
முஹம்மதுவிற்கு எப்படி வெளிப்பாடுகள் வந்துள்ளன என்பதை சுருக்கமாக இச்சிறிய கட்டுரை எடுத்துக்காட்டுகிறது. காயீனின் கொலை விஷயத்தில், முஹம்மது பல ஆண்டுகளுக்கு முன்பு கேள்விப்பட்டு இருந்த விவரம் ஞாபகத்தில் இருந்தது அவருக்கு கைகொடுத்தது, ஆனால் கடைசியில் அவரை ஏமாற்றிவிட்டது. எது ஆதாரபூர்வமான விவரம், எது பொய்யான விவரம் என்ற பரிசோதனையில் குர்-ஆன் தோற்றுவிட்டது. மற்றவர்களின் மார்க்க விளக்கங்கள் தன் சொந்த வசனங்கள் என்று குர்-ஆன் பதிவு செய்து தவறிவிட்டது. எது காரணமாக இருந்தாலும், தான் கேள்விபட்டு இருந்த ஒரு யூதர்களின் விளக்கத்தை வேதம் என்று நம்பி, அதை குர்-ஆனில் புகுத்திவிட்டார். தான் சொல்லும் இந்த விவரம் எந்த விளக்கவுரையில் இருக்கிறது என்று முஹம்மதுவிற்கு சிறிது தெரிந்திருந்தாலும், இதனை அவர் சேர்க்காமல் இருந்திருப்பார்.
இக்கட்டுரையில் பார்த்தது போல, குர்-ஆனில் காணப்படும் பல விவரங்கள் பைபிளிலிருந்தும் இதர கட்டுக்கதைகளிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றுச் சொல்வார்களே, அது போல, ஒரு உதாரணத்தை மட்டுமே இந்த கட்டுரையில் எடுத்துக்காட்டியுள்ளேன். ஆம், யூத பாரம்பரியங்களுக்கு முஹம்மதுவும், குர்-ஆனும், இஸ்லாமும் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள் என்றுச் சொல்வதில் தவறில்லை.
ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Quran/Sources/cain.html
அடிக்குறிப்புக்கள்:
[1] பிர்கே ரபி எலியேஜர் (Pirke Rabbi Eliezer):
ஜுடைகா கலைக்களஞ்சியம் இந்த ”பிர்கே ரபி எலியேஜர்” தொகுப்பு ஒரு கட்டுக்கதை தொகுப்பு என்றுச் சொல்கிறது. இதற்கு கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ரபி எலியேஜர் தான் ஆசிரியர் என்றும், ஆனால் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இது எழுத்துவடிவில் தொகுத்தார்கள் எனவும் கூறுகிறது. இது குர்-ஆனுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதென்று, கிறிஸ்தவ ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். குர்-ஆன் பிர்கே நூலைக் காட்டிலும் முந்தையது மேலும், பிர்கே நூலிலிருந்து குர்-ஆன் நேரடி மேற்கோள் காட்டவில்லை. முஹம்மதுவின் காலத்துக்கு முன்பே, பிர்கே வாய் வழியாக பல நூற்றாண்டுகளாக உலாவிய கதை நூலாகும், மேலும் இந்த விவரங்கள் தல்மூத் மற்றும் மித்ராஷ் போன்ற யூத நூல்களிலும் காணப்படுகிறது. யூத ரபிகள் காலங்காலமாக சொல்லிக்கொண்டு வந்த பாரம்பரியங்களின் தொகுப்பு பிர்கே என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை மேலும் யூதர்களிடையே இப்படிப்பட்ட கதைகள் மிகவும் புகழ்பெற்றவை. தோரா அல்லது தல்மூத் நூல்களுக்கு எழுதப்பட்ட விளக்கவுரைகளாக யூதர்கள் இவைகளை கருதுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட விவரத்தை சில உதாரணங்களைக் கொண்டு விளக்க இந்நூல்கள் யூதர்களிடையே பயன்படுத்தப்பட்டன. இன்று நாம் விளக்கவுரைகள் (காமண்டரி) என்றுச் சொல்கிறோமே, அது போல அல்லாமல், இவைகள் வேறு வகையான விளக்கவுரைகளாக இருக்கின்றன.
குர்-ஆனின் மூலம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள்